Published:Updated:

`` `4ஜி’க்கு அடுத்து இன்னொரு படம் பண்ணலாம்னு சொல்லியிருந்தேன்... ஆனா அருண்?!’’ - ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ், அருண்
ஜி.வி.பிரகாஷ், அருண்

``அருண் பிரசாத் என்கிற அவரோட பெயரை சினிமாவுக்காக வெங்கட் பக்கர்னு மாற்றியிருந்தார். போன வாரம் பேசும்போது, ‘என்னோட ஒரிஜினல் பெயரையே சினிமாவுக்கும் யூஸ் பண்ணிக்கலாம்னு இருக்கேன். வெங்கட் பக்கர்னு இனிமேல் யூஸ் பண்ண மாட்டேன்’னு சொன்னார்.’’

பல கனவுகளோடு சினிமாத்துறைக்குள் நுழைபவர்களுக்கு, உதவி இயக்குநராக வேலைபார்த்து, இயக்குநராக முதல் படம் கிடைக்கப் போராடி, பின்னர் படத்தை எடுத்து, அதை வெற்றிகரமாக ரிலீஸ் செய்து, திரையில் எழுத்து - இயக்கம் என தன் பெயரைப் பார்ப்பதே பெரும் சாதனைதான். இந்தச் சாதனையின் கடைசிப் படி வரை ஏறிய அருண் பிரசாத் என்கிற இளைஞர், அதை அனுபவிக்காமலேயே இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டார். இயக்குநர் ஷங்கரிடம் ’ஐ’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அருண், ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் ‘4ஜி’ படத்தின் இயக்குநர். சினிமாவுக்காக வெங்கட் பக்கர் எனப் பெயரை மாற்றியிருந்தார். இந்நிலையில், இன்று காலை மேட்டுப்பாளையத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அருண் இயக்கிய '4ஜி' படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷிடம் பேசினோம்.

அருண் பிரசாத் உங்களுக்கு எப்படி அறிமுகமானார்?

4ஜி
4ஜி

’’நான் நடிகனானதுக்குப் பிறகு, எனக்கு கதை சொல்ல நினைக்கும் புதிய இயக்குநர்கள், அவங்களோட கதையின் சுருக்கத்தை மெயில்ல அனுப்புவாங்க. அப்படி ஒரு நாள், ’4ஜி’ படத்தோட கதைச் சுருக்கத்தை அருண் எனக்கு அனுப்பியிருந்தார். ஃபேண்டஸி கதை... படித்ததும் பிடிச்சிருந்தது. ஆனால், அப்போ நான் அருண்கிட்ட எதுவும் பேசிக்கலை. ஒரு நாள், தயாரிப்பாளர் சிவி.குமார் கிட்ட இருந்து போன் வந்தது. ’ஒரு கதை இருக்கு பண்ணலாமா’னு கேட்டுட்டு அருணோட கதையை அனுப்பினார். ’நான் ஏற்கெனவே இந்தக் கதையை படிச்சிருக்கேன். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. பண்ணிக்கலாம்’னு சொன்னேன். உடனே அருண் என்னை வந்து சந்திச்சு முழுக் கதையையும் சொன்னார். கதையைக் கேட்டு முடிச்சவுடனே நடிக்கிறதுக்கு ஓகே சொல்லிட்டேன்.’’

அருண் பிரசாத் எப்படிப்பட்டவர்..?

’’பழகுறதுக்கு ரொம்பவே இனிமையானவர். ஷூட்டிங் ஸ்பாட்ல யார்கிட்டயும் கத்திக்கூட பேச மாட்டார். அவ்ளோ அமைதியா வேலை வாங்குவார். அவரோட வொர்க்கைப் பார்த்துட்டு பெரிய ஆளா வருவார்னு நினைச்சேன். ’4ஜி’ படம் ரிலீஸானதும் இன்னொரு படம் பண்ணலாம்னும் அருண்கிட்ட சொல்லியிருந்தேன். ஆனா, இப்படி ஆகும்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கவேயில்ல. அருண் என்கிட்ட மட்டுமில்லம, நான் வேலைபார்த்த மற்ற இயக்குநர்கள்கிட்டயும் ரொம்ப நட்பா இருந்தார். ’செம’ பட இயக்குநர் வள்ளிகாந்தில் இருந்து ‘சர்வம் தாளமயம்’ பட இயக்குநர் ராஜீவ் மேனன் சார் வரைக்கும் அருணுக்கு பல நண்பர்கள் உண்டு.’’

அருண் பிரசாத்திடம் சமீபத்தில் பேசினீர்களா..?

அருண் பிரசாத் என்கிற வெங்கட் பக்கர்
அருண் பிரசாத் என்கிற வெங்கட் பக்கர்

’’ஒரு வாரத்துக்கு முன்னாடிகூட நாங்க பேசிக்கிட்டோம். ’4ஜி’ படத்துல என்னோட போர்ஷன் ஃபுல்லா எப்பவோ முடிஞ்சிடுச்சு. அதனால, அடுத்து என்ன வொர்க் இருக்குனு பேசிக்கிட்டோம். ‘இன்னும் ஒரு நாள் மட்டும் மற்ற கேரக்டர்களுக்கு ஷூட்டிங் இருக்கு. லாக்டெளன் முடிஞ்சதுக்கு அப்புறம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்’னு சொன்னார். இந்தப் படத்துல சி.ஜி போர்ஷன் அதிகமா இருக்கும். அதனாலதான், ஷூட்டிங் முன்னாடியே முடிஞ்சிட்டாலும், சி.ஜி வொர்க்ல அருண் பிஸியா இருந்தார். அருண் பிரசாத் என்கிற அவரோட பெயரை சினிமாவுக்காக வெங்கட் பக்கர்னு மாற்றியிருந்தார். போன வாரம் பேசும்போது, ‘என்னோட ஒரிஜினல் பெயரையே சினிமாவுக்கும் யூஸ் பண்ணிக்கலாம்னு இருக்கேன். வெங்கட் பக்கர்னு இனிமேல் யூஸ் பண்ண மாட்டேன்’னு சொன்னார். இனி என் வாழ்க்கைல நான் ரொம்பவே மிஸ் பண்ணப்போற ஆளா அருண் இருப்பார். ரெஸ்ட் இன் பீஸ் அருண்.’’

அடுத்த கட்டுரைக்கு