Published:Updated:

பிரஷாந்த் நடிக்கவிருக்கும் `அந்தாதுன்' ரீமேக்கை இயக்கும் ஜிவிஎம்!

ஶ்ரீராம் ராகவன் இயக்கிய பாலிவுட் படமான `அந்தாதுன்', மூன்று தேசிய விருதுகளைப் பெற்றிருந்தது. ஆயுஷ்மன் குரானா நடிப்பில் வெளியான இப்படம், பலராலும் பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில், படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரஷாந்தின் தந்தையான தியாகராஜன் பெற்றிருக்கிறார்.

Prashanth
Prashanth

90-கள் முழுக்க தமிழ் சினிமாவில் கதக்களி ஆடிக்கொண்டிருந்தவர் பிரஷாந்த். அந்தக் காலகட்டத்தில் இவர் நடித்த அனைத்துப் படமும் மாஸ் ஹிட்டடித்தன. மக்கள் இவரை செல்லமாக `டாப் ஸ்டார்' என்றும் அழைத்தனர். அதன் பிறகு சின்ன பிரேக் விழ, நடிக்கும் படங்கள் அனைத்தும் தோல்வியையே தழுவியது. `மறுபடியும் பழைய பன்னீர் செல்வமா வரணும்' என்று ஆசைப்பட்ட அவரின் தந்தை தியாகராஜன், `அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரஷாந்த்தை நடிக்க வைப்பதாகத் தெரிவித்திருந்தார். பொதுவாக, பிரஷாந்த் மியூஸிக்கின் மீதும், பியானோ மீதும் அதிக பிரியமுடையவர் என்பதால் இந்தக் கதாபாத்திரத்துக்கு தன் மகனே சரியாக இருப்பார் என்று கூறினார் தியாகராஜன்.

Gautham Menon
Gautham Menon

இந்நிலையில், பல்வேறு இயக்குநர்களிடம் அவர்களது வெர்ஷனைக் கேட்டு வாங்கியிருக்கிறார். எதிலும் திருப்தியடையாத தியாகராஜன், இப்படத்தை கௌதம் மேனனே இயக்கலாம் என்று முடிவெடுத்து அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. பல வருடங்களாக இழுத்தடித்த `எனை நோக்கி பாயும் தோட்டா', வரும் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகிறது என்று அறிவித்திருந்தனர்.

விக்ரமின் கால்ஷீட் கிடைத்தால் `துருவ நட்சத்திரம்' படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் முடிவடைந்து, அதுவும் ரிலீஸுக்கு ரெடியாகிவிடும். இதற்கிடையே `அந்தாதுன்' படத்தின் ரீமேக்கையும் கௌதம் மேனனே இயக்குவதாகப் பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கின்றன. எல்லாம் சுமுகமாக முடிந்தால் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.