```ஜிப்ஸி' பார்த்த நிறைய பேர் காஸ்ட்யூம்களையும் பாராட்டிகிட்டு வர்றாங்க. ரொம்ப பளிச்சுன்னோ எவ்விதமான செயற்கைத்தனமோ இல்லாமல் இயல்பா இருந்ததுனு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என உற்சாக மோடில் இருக்கிறார் `ஜிப்ஸி'யின் ஆடை வடிவமைப்பாளர் திரிபுரசுந்தரி.

ஜிப்ஸியை ஜிப்ஸியாகவே காட்டியதற்குப் பின்னாலுள்ள மெனக்கெடல்களையும் சுவாரஸ்யமான அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
`ஜிப்ஸி' படத்துக்காக உங்களை எப்படித் தயார் செஞ்சுகிட்டீங்க?

```ஜிப்ஸி' படத்துக்காக இயக்குநர் ராஜுமுருகன் இந்தியா முழுக்க பயணம் பண்ணினார். இந்தப் படத்துக்காக நான் அவரை சந்திச்சபோது, இந்தியா முழுக்க ஜிப்ஸிக்கள் எல்லாம் எந்தெந்த மாதிரி இருக்காங்கன்னு அவரே நிறைய புகைப்பட ரெஃபரன்ஸ்களைக் கொடுத்தார். பிறகு, என்னுடைய அப்பாகிட்ட நிறைய புத்தகங்கள் இருக்கு. அதில் ஜிப்ஸி, பயணங்கள் தொடர்பான புத்தகங்களைத் தேடிப் பார்த்து, படிச்சு குறிப்புகள் எடுத்து, கூடவே என்னுடைய கற்பனையையும் சேர்த்து உருவாக்கினதுதான் `ஜிப்ஸி' படங்களின் காஸ்ட்யூம்கள்.
ஜீவாவுக்கு முதன்முறையா அந்த ஜிப்ஸி காஸ்ட்யூமைப் போட்டு பார்க்கும்போதே எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. ஜிப்ஸியின் ஒரு காஸ்ட்யூம்லயே கிட்டத்தட்ட பத்து வகையான துணி இருக்கும். அதைக் கவனிச்சு பார்த்தீங்கன்னா தெரியும். அதேமாதிரி, ஜிப்ஸிங்கிறவன் வாழ்க்கையில் எந்தவொரு இலக்கும் இல்லாமல் சந்தோஷமா வாழ்ற ஒருத்தன். அவனுடைய மனநிலையை பிரதிபலிக்க துணிகள் எல்லாமே பளிச்சுன்னு இருக்கணும்ங்கிறதுல ரொம்பவே கவனமா இருந்தோம்.
நாம என்னதான் புதுமுயற்சிகள் பண்ணினாலும் ஒரு ஆர்ட்டிஸ்ட் அதை அனுமதிக்கும்போதுதான், நமக்கு இன்னும் ஆர்வம் வரும். அந்த வகையில ஜீவா சார் கதையோடு நல்லா பொருந்திப்போய் அவரும் ரெஃபரன்ஸ்கள் கொடுத்தார். இதெல்லாம் சேர்ந்துதான் காஸ்ட்யூம்கள் இவ்வளவு அழகா வந்துருக்குன்னு சொல்லுவேன்."
உடைகள் தவிர்த்து, ஆபரணங்களும் அழகா இருந்ததே... அவற்றை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?

நிலையான ஒரு இடம் இல்லாமல், பாட்டு பாடிக்கிட்டு இயற்கையோடு இசைஞ்சு இயல்பா வாழ்பவன் அப்படிங்கறதை சொல்றதுக்காக செயற்கையான புல்லில் செஞ்ச பெண்டன்ட்டும், மோதிரமும் படத்தின் முதல்பாதி முழுக்க கையில் போட்டிருப்பான் ஜிப்ஸி. அதேபோல், மரத்தில் செஞ்ச கிட்டாரும், மோதிரமும் அவனுடன் எப்பவுமே இருக்கும். காம்பஸ், குதிரை இப்படி எல்லாமே கலந்த ஒரு ஆளா இருக்கான்றதை சொல்ல, டாட்டூல ஸ்டார்ஸ் கொண்டு வந்தோம்.
ராஜுமுருகன் சார் பாடகர் பாப் மார்லியோட ஃபோட்டோஸ் காட்டி `இந்த மாதிரி வேணும்'னு சொல்லியிருந்தார். அவருடைய டிரெஸ்ஸிங் ஸ்டைல் ஒரு முறையா இருக்காது. ஆனாலும், அது ஒரு அழகு. அவருக்கு நல்லா பொருந்திப்போகும். அவர் லுக்கையும் கலந்து இந்த ஜிப்ஸிக்கு கொண்டு வந்தோம்."
முதல் பாதியில கலர்ஃபுல்லா வந்த ஜிப்ஸி கதாபாத்திரத்தோட காஸ்ட்யூம் இரண்டாம் பாதியில வேற மாதிரி முழுசா மாறியிருக்குமே?

"ஆமா. முதல்பாதியில கலர்ஃபுல்லா இருக்க ஜிப்ஸிக்கு இரண்டாம் பாதி முழுக்க நகைகள் குறைச்சு, சட்டைகள் மட்டும்தான் கொடுத்திருப்போம். நம்ம வாழ்க்கையில சந்தோஷம், பொறுப்பு எதுவும் இல்லாதபோது ஒருவித மனநிலையில இருப்போம். அதுதான் முதல்பாதியில ஜிப்ஸில பிரதிபலிச்சிருக்கும். ஆனா, இரண்டாம் பாதியில அவனுக்குனு ஒரு பொறுப்பு இருக்கும். விதவிதமா கலர் கலரா டிரெஸ் பண்ணிக்கக்கூடிய மனநிலையிலையும் அவன் இருக்க மாட்டான். பொதுவா, நாம உடுத்தற உடையில நம்ம மனநிலை பிரதிபலிக்கும். அந்தக் காரணம்தான்.
`ஜிப்ஸி' கதாபாத்திரம் தவிர மற்ற கதாபாத்திரங்களுக்கான காஸ்ட்யூம்?

"ஜிப்ஸி தவிர சீனியர் ஜிப்ஸி, குட்டி வயசு ஜிப்ஸி, ஹீரோயின், அவங்க அப்பா கதாபாத்திரம், இரண்டாம் பாதியில வர சகா மாதிரி முக்கியமான கதாபாத்திரங்கள் எல்லாருக்குமே நான்தான் காஸ்ட்யூம் டிசைன் பண்ணினேன். அந்த கதாபாத்திரங்கள் எல்லாம் நாம நிறைய சந்திச்ச கதாபாத்திரங்களா இருந்ததாலே டிசைன் பண்றது ஈஸியா முடிஞ்சுடுச்சு."
காஸ்ட்யூம் டிசைனரா சினிமாவுக்குள் வந்த கதை?

"என்னுடைய குடும்பமே சினிமாவுடன் தொடர்புடைய குடும்பம்தான். அதனாலேயே, சினிமா மேல் எனக்கு எப்பவுமே ஆர்வம் இருந்தது. காஸ்ட்யூம் டிசைனிங்கும் எனக்கு ஆர்வம் இருக்க துறைங்கிறதால் அதுக்குள்ளே வந்துட்டேன். 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'சவாலே சமாளி'ங்கிற படங்கள் பண்ணியிருக்கேன். ரம்யா பாண்டியன் என்னுடைய தங்கச்சிதான். அவங்க மூலம்தான் ராஜுமுருகன் சார் எனக்கு அறிமுகம் ஆனார். அப்படித்தான் `ஜிப்ஸி'க்குள்ளயும் வந்தேன். ரம்யாவுக்கும் பர்சனலா நிறைய காஸ்ட்யூம்ஸ் டிசைன் பண்ணியிருக்கேன். அடுத்து ஒரு பெரிய புராஜெக்ட்ல கமிட் ஆகிருக்கேன். அதுபத்தின அறிவிப்பு சீக்கிரமே வரும்."