Published:Updated:

விஜய் மேனேஜர், `மாஸ்டர்' இணை தயாரிப்பாளர்... வெளியேற்றப்பட்டாரா ஜெகதீஷ்?

விஜய், ஜெகதீஷ்
விஜய், ஜெகதீஷ்

கொரோனாயும் தாண்டி சோஷியல் மீடியாவில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது விஜய் - ஜெகதீஷ் செய்தி. நடிகர் விஜய்யின் மேனேஜரும் `மாஸ்டர்' படத்தின் இணைத் தயாரிப்பாளருமான ஜெகதீஷ் பழனிசாமி தற்போது விஜய்யுடன் இல்லை, விஜய் அவரை நீக்கிவிட்டார் என்பதுதான் அந்தப் பரபரப்பு செய்தி.

ஜெகதீஷைப் பற்றி பல கிசுகிசு டைப் செய்திகள் பரவியிருப்பதோடு அதில் ஒன்றாக நடிகர் `ஜெயம்' ரவிக்கும் மேனேஜராக இணைந்ததால் விஜய், ஜெகதீஷை நீக்கிவிட்டார் என்கிறார்கள் சிலர். இந்தச் செய்திகள் உண்மையா என விசாரித்தோம். இதற்கு முன் யார் இந்த ஜெகதீஷ் பழனிசாமி, விஜய்யின் மேனேஜராக இவர் எப்படி வந்தார்?

ஜெகதீஷ் பழனிசாமி பயோ!

ஜெகதீஷ் கோவையைச் சேர்ந்தவர். பி.எஸ்.ஜி கல்லூரியில் இன்ஜினீயரிங் முடித்தவர். சோஷியல் மீடியாவில் குறிப்பாக ட்விட்டரில் அதிக ஈடுபாடு கொண்ட ஜெகதீஷ், சோஷியல் மீடியா புரமோஷன் வேலைகள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டினார். சோஷியல் மீடியா மூலமாகவே இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமாருடன் நட்பானார் ஜெகதீஷ். இருவரும் நல்ல நண்பர்களானதோடு ஜி.வி.பிரகாஷின் மேனேஜராகவும் மாறினார். இதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் தொடர்புகளை வளர்த்துக்கொண்டு உயர ஆரம்பித்தார் ஜெகதீஷ்.

Samantha, Jagadish
Samantha, Jagadish

2013-ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அட்லி இயக்கிய ராஜா ராணி படத்துக்கு இசையமைத்தார் ஜி.வி.பிரகாஷ். இந்த நேரத்தில் முருகதாஸ், அட்லி என இருவரின் நட்புமே ஜெகதீஷ்க்கு கிடைத்தது. இதேநேரத்தில் நடிகர் விஜய்யின் `தலைவா' படத்துக்கும் இசையமைப்பாளர் ஆனார் ஜி.வி. அப்போதுதான் நடிகர் விஜய்யுடன் பேசிப்பழகும் வாய்ப்பு ஜெகதீஷ்க்கு கிடைத்தது. `தலைவா' நேரத்தில், போட்டி நடிகர்களுடன் ஒப்பிடும்போது தன்னுடையே இமேஜ் தொடர்ந்து ட்விட்டரில் டேமேஜ் ஆக்கப்படுவதை மிகவும் வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்த விஜய், இதுகுறித்து ஒரு மீட்டிங்கில் சொல்ல அப்போதுதான் ஜெகதீஷ் உள்ளே வந்திருக்கிறார். 2013-ம் ஆண்டு `தலைவா' படம் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோதே ட்விட்டரில் ActorVijay என்கிற பெயரில் விஜய்க்கென தனிப்பக்கம் ஆரம்பித்தார் ஜெகதீஷ். விஜய்க்கென சோஷியல் மீடியாவில் ஒரு டீமை உருவாக்கி வேலை செய்ய ஆரம்பித்தார் ஜெகதீஷ். ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து நடிகர் விஜய்யை ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வைத்தார்.

`என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பு ரசிகர்களுக்கு' என விஜய் ட்விட்டரில் சொல்லும் பதில்கள் எல்லாம் டிரெண்டாக ஆரம்பித்தன. தொடர்ந்து விஜய் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள், மற்ற நடிகர்களுடனான செஃல்பிகள் என இந்தப் பக்கத்தை ஆக்டிவாகவே வைத்திருந்து ட்விட்டரில் விஜய்க்கான தனி ரசிகர்கூட்டத்தைக் கூட்டும் முயற்சிகளில் வெற்றிகண்டது ஜெகதீஷ் அண்ட் டீம். போட்டி நடிகர்களுக்கு இணையாக ட்விட்டரில் விஜய்க்கும் ஆதரவு அதிகரித்தது. இதில் இம்ப்ரஸ் ஆன விஜய், ஜெகதீஷை நிரந்தரமாகத் தன்னுடைய டீமில் இணைத்துக்கொண்டார்.

Vijay, Atlee, GV Prakash, Jagadish
Vijay, Atlee, GV Prakash, Jagadish

ஜெகதீஷ், நடிகர் விஜய்யின் சோஷியல் மீடியா பொறுப்பாளராக இருந்த அதேநேரம் சமந்தா உள்ளிட்ட சிலநடிகைகளுக்கு மேனேஜராகவும் இருந்தார். இப்போதும் இயக்குநர் அட்லி, நடிகைகள் சமந்தா, ராஷ்மிகா மந்தனா, மாளவிகா மோகனன், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருக்கு ஜெகதீஷ்தான் மேனேஜர்.

சோஷியல் மீடியா இன்சார்ஜாக இருந்து பிறகு, தன்னுடைய மேனேஜராக உயர்ந்த ஜெகதீஷை `மாஸ்டர்' படத்தின் இணைத் தயாரிப்பாளராக உயர்த்தி பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தார் விஜய். `மாஸ்டர்' இசைவெளியீட்டு விழாவின்போதுகூட ஜெகதீஷை மிகவும் பாராட்டிப் பேசியிருந்தார் விஜய்.

Vijay, Jagadish
Vijay, Jagadish

இசைவெளியீட்டு விழாவில் குளறுபடிகளா?

இப்போது 'மாஸ்டர்' வெளியீட்டு விழாவில் சில குளறுபடிகள் நடந்ததாகவும், அதைப்பற்றி `மாஸ்டர்' படத்தின் தயாரிப்பளர் சேவியர் பிரிட்டோ விஜய்யிடம் சொன்னதாகவும் அதனால் நடிகர் விஜய், ஜெகதீஷை தன்னுடைய டீமில் இருந்து நீக்கிவிட்டதாகவும் செய்திகள் பரவியிருக்கின்றன. இதுதொடர்பாக ஜெகதீஷ்க்கு நெருக்கமான சில நண்பர்களிடம் பேசினோம். ``இது முழுக்க முழுக்கப் பொய்யான செய்தி. ஜெகதீஷூடன் பர்சனலாக இருக்கும் முரண்களை வைத்துக்கொண்டு இப்படிச் செய்தி பரப்புகிறார்கள். ஜெகதீஷைப் பற்றி இப்படிச் செய்திகள் வருவது இது முதல்முறையல்ல. தொடர்ந்து அவரைப்பற்றி நெகட்டிவ் செய்திகள் பரவுகின்றன. ஜெகதீஷ் விஜய் சாருடன்தான் இருக்கிறார். இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் தளபதி விஜய்யுடன் ஜெகதீஷைப் பார்ப்பீர்கள்'' என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு