Published:Updated:

அடுத்த நேரடி ரிலீஸ்... விஜய் சேதுபதியின் `ரணசிங்கம்' படத்தை வாங்கிவிட்டதா அமேஸான்?

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்

அமேஸான் நிறுவனம் க/பெ ரணசிங்கம் படத்தை நேரடி ஓ.டி.டி ரிலீஸுக்கு வாங்கிவிட்டதாகச் செய்திகள் உலவுகின்றன. உண்மையில், அமேஸான் நிறுவனம் இப்படத்துக்கான ஒப்பந்தத்தை இறுதிசெய்துவிட்டதா?

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் படம், `க/பெ ரணசிங்கம்'. இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில்தான் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த டீஸரை இதுவரை பார்த்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தை அமேஸான் நிறுவனம் நேரடி ஓ.டி.டி ரிலீஸுக்கு வாங்கிவிட்டதாகவும், விரைவில் ப்ரைமில் பார்க்கலாம் எனவும் செய்திகள் பரவுகின்றன. உண்மை என்ன என விசாரித்தோம்.

விருமாண்டியுடன் விஜய்சேதுபதி
விருமாண்டியுடன் விஜய்சேதுபதி

`அறம்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்திருக்கும் கேஜேஆர் ஸ்டூடியோஸின் தயாரிப்புதான், `க/பெ ரணசிங்கம்'. இப்படத்தை விருமாண்டி எனும் அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் செல்வாவிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். அதன்பிறகு, `அறம்' படத்தில் கோபி நயினாரிடம் உதவி இயக்குநராகவும், அடுத்து நயன்தாரா நடித்த `ஐரா' படத்திலும் பணியாற்றினார் விருமாண்டி. அந்த நேரத்தில்தான் கேஜேஆர் தயாரிப்பு நிறுவனத்துடன் நட்பாகி, `க/பெ ரணசிங்கம்' படத்தின் கதையைச் சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார்.

முதலில் நயன்தாரா நடிப்பதற்காகத்தான் கதை கேட்டிருக்கிறார்கள். ஆனால், முழுக்க முழுக்க கிராமத்துப் பெண்ணாக நயன்தாரா பொருத்தமாக இருக்க மாட்டார் என முடிவெடுக்கப்பட்டு, ஸ்டார்காஸ்ட் மாற்றப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டே முடிந்துவிட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யலாம் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில்தான் கொரோனா வந்துவிட எல்லாம் தள்ளிப்போனது. ராமநாதபுரத்தில் பல ஆண்டுகளாக நிலவும் தண்ணீர் பிரச்னையைப் பற்றி பேசும் படம்தான் இது. ராமநாதபுரத்தில் எப்படி தண்ணீர் இல்லாமல்போனது, விவசாயம் எப்படி அழிக்கப்பட்டது, இதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்பதைப் பற்றி பேசுகிறது `க/பெ ரணசிங்கம்'.

Vijay Sethupathi, Aishwarya Rajesh
Vijay Sethupathi, Aishwarya Rajesh

இதில், கணவர் ரணசிங்கமாக விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். `அரியநாச்சி' என்கிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். அரியநாச்சி என்பது ராமநாதபுரத்தில் மக்கள் வழிபடும் சாமியின் பெயர். விஜய்சேதுபதியைவிடவும் படத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம்தான். இது தவிர முக்கியமான கேரக்டரில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் நடித்திருக்கிறார். படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் வைரமுத்து, ஒளிப்பதிவு ஏகாம்பரம், சண்டை பீட்டர் ஹெய்ன் என மிகவும் அனுபவம் வாய்ந்த டீமைக் கொண்டதுதான் `க/பெ ரணசிங்கம்'.

கொரோனா லாக்டௌன் முடிந்ததும், ஜூலை ஆகஸ்ட்டில் இந்தப் படத்தை திரைக்குக் கொண்டுவரலாம் எனத் திட்டமிடப்பட்ட நிலையில்தான், அமேஸான் நிறுவனம் நேரடி ஓ.டி.டி ரிலீஸுக்கு படத்தை வாங்கிவிட்டதாகச் செய்திகள் உலவுகின்றன. உண்மையில், அமேஸான் நிறுவனம் இப்படத்துக்கான ஒப்பந்தத்தை இறுதிசெய்துவிட்டதாகவே சொல்கிறார்கள். ஆனால், நேரடி ஓ.டி.டி ரிலீஸ் என்பதற்கான முடிவு மட்டும் இன்னும் எடுக்கப்படவில்லை என்கிறார்கள். அதாவது, `ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை வரை பொறுத்திருக்கலாம். நிலைமை சரியாகவில்லை என்றால், அமேஸானில் நேரடியாக ரிலீஸ் செய்யலாம்' எனத் தயாரிப்பு நிறுவனத்திடம் விஜய் சேதுபதி சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் விருமாண்டியிடம் பேசினோம்.

``அமேஸான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடப்பது உண்மை. ஆனால், நேரடி ஓ.டி.டி ரிலீஸுக்கான பேச்சுகள் நடக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை 80 சதவிகித படம் நேரடியாக ஓ.டி.டி-யில் ரிலீஸ் ஆகாது. தியேட்டர்களில்தான் முதலில் ரிலீஸாகும். தயாரிப்பாளரும் தியேட்டர் ரிலீஸ்தான் எனச் சொல்லியிருக்கிறார்'' என்றார்.

K/P RANASINGAM
K/P RANASINGAM

நேரடி ஓ.டி.டி ரிலீஸ் என்றால், `க/பெ ரணசிங்கம்' படத்தை 7-8 கோடி ரூபாய் வரைக்கும் வாங்க அமேஸான் நிறுவனம் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. தியேட்டர் ரிலீஸுக்குப் பிறகு என்றால், இதன் விலை அப்படியே பாதியாகக் குறையும் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு