Published:Updated:

சினிமா ஹீரோயிசக் கலாசாரம் சமூகத்தில் வன்முறையை ஊக்குவிக்கிறதா?- ஓர் உளவியல் பார்வை #NoMoreStress

Rajini
Rajini

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முறையும் அவன் சார்ந்த சமூகத்தின் பிம்பமாகவே இருக்கிறது. இப்படி இருப்பதற்கான காரணம், மிரர் நியூரான் (Mirror Neuron) எனப்படும் ஒருவகை நியூரான்.

தன்னுடைய கதையோ புதினமோ, ஓவியமோ திரைப்படமோ சமூகத்தில் ஒரு சிறிய தாக்கத்தையாவது ஏற்படுத்த வேண்டுமென்ற இலக்கு, பல படைப்பாளிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஒரு நிழற்படத்தால் போர் நின்றது, ஒரு நாடகத்தால் தலைவர்கள் உருவானது, ஒரு புத்தகத்தால் பேச்சாளர்கள் வெளிப்பட்டது எனக் கலை வடிவங்கள் வரலாற்றை புரட்டிப்போட்டிருக்கின்றன. இது, திரைத்துறைக்கும் நிச்சயம் பொருந்தும்.

Pariyerum Perumal
Pariyerum Perumal

பாரதிராஜாவின் 'கருத்தம்மா' திரைப்படத்துக்குப் பிறகுதான் பெண் சிசுக்கொலை விஷயத்தில் அரசு தனிக்கவனம் செலுத்தியது. சமீபத்தில் வெளியான 'காலா', 'பரியேறும் பெருமாள்' போன்ற திரைப்படங்கள் சமூகத்தில் பெரும்பாலானோரை தீண்டாமை குறித்து சிந்திக்கவைத்து விவாதிக்கவும் வைத்தன. திரைத்துறையில் உள்ள பலர் முதலமைச்சர்களாகவும் உருவாக்கப்பட்டனர். ஆனால், எவ்வகைத் தாக்கத்துக்கும் இருமுனைகள் இருப்பதுபோல, சினிமா ஏற்படுத்தும் தாக்கத்துக்கும் மற்றொரு பக்கம் இருக்கிறது.

பெண்களுக்கெதிரான வன்முறை, பாலியல் குற்றங்கள், துரத்தித் துரத்தி காதலிப்பது, ஆயுதக் கவர்ச்சி போன்ற பல குற்றங்களுக்கான உளவியலைக் கட்டமைப்பதில் சினிமாவுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. சில நேரங்களில், சினிமாவே அதற்கு முழுமுதற் காரணமாகவும் இருந்திருக்கிறது, இருக்கிறது.

Ajun Reddy
Ajun Reddy

உதாரணமாக, 'எதிர்நீச்சல்' படத்தை எடுத்துக்கொள்வோம். தன் இலக்கை நோக்கி செல்லும் ஒருவனின் தீவிரம், அதற்காக அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் ஏராளம். அவன் எதிர்கொண்ட தடைகள், வலிகள், அவமானங்கள் என எல்லாம் காட்டப்பட்டு, இறுதியில் அவன் எப்படி தன் இலக்கை அடைகிறான், வெற்றி பெறுகிறான் என்பது குறித்த படம் அது. பார்வையாளர்களுக்கு மன ஊக்கம் தரும் இந்தப் படத்தின் முதல் பாதியில், படத்தின் நாயகியை துரத்தித் துரத்தி காதலிப்பார் நாயகன். இந்தப் படத்திலிருந்து எந்தக் கருத்தை எடுத்துக்கொள்வது என்பதில்தான் உளவியல் சிக்கல் ஏற்படுகிறது.

மனிதனின் அடிப்படைப் பண்புகளில் மிக முக்கியமானது, சூழலைப் பார்த்து அதற்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்வதே. 'பக்கத்து வீட்டுக்காரர் பெரிய விலைகொடுத்து ஒரு பொருளை வாங்கும்போது, அதைத் தானும் வாங்க வேண்டும்' என சிலர் நினைப்பதுண்டு. அந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்கும் பள்ளியிலோ அதற்கு நிகரான பள்ளியிலோ தன் குழந்தையையும் சேர்க்க நினைப்பது என ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முறையும் அவன் சார்ந்த சமூகத்தின் பிம்பமாகவே இருக்கிறது. இதுபோன்ற நிலைக்குக் காரணம், `மிரர் நியூரான்' (Mirror Neuron) எனப்படும் ஒருவகை நரம்பு செல்களே.

Kuruvi
Kuruvi

இந்தப் பண்பு, நாம் திரையில் பார்க்கும் நாயகன் அல்லது நாயகி ஒரு செயலைச் செய்யும்போது, இன்னும் அதீதமான செயலாக்கம் பெறும். உளவியல்துறை இதைத்தான், 'மாடலிங்' (Modelling) என்கிறது. யாரைப் பார்த்து நாம் ஒரு செயலைச் செய்கிறோமோ அவர் நமக்கு 'மாடல்' (Model). மாடலாக இருப்பவர்கள் அம்மா, அப்பா, ஆசிரியர்கள், நண்பர்கள், குடும்பத்தார் என யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சினிமாவைப் பார்க்கும்போது, அந்த நடிகர் அல்லது நடிகை மாடலாகிவிடுகிறார். இப்போது சிக்கல் என்னவென்றால், அந்த மாடல் செய்யும் எதை நாம் எடுத்துக்கொள்கிறோம், ஏன் எடுத்துக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.

இதுகுறித்து மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம் கேட்டபோது, "இது மனநிலையில் இருக்கும் முதிர்ச்சி அளவைப் பொறுத்து வரக்கூடியது. ஒரு முக்கியமான புரிந்துணர்வு இங்கே தேவைப்படுகிறது. நாம் திரையில் பார்க்கும் எல்லோரும் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிப்பவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 'போலீஸாக நடிக்கச் சொன்னால், போலீஸாகவே நடிப்பார்கள். திருடனாக, கொள்ளைக்காரனாக நடிக்கச் சொன்னால், அந்த கேரக்டராகவே மாறிவிடுவார்கள். அப்போதுதான், அவர் நடிகர்' என்கிற சாதாரண அடிப்படைப் புரிந்துணர்வு வேண்டும். இது வயது ஆக ஆக இந்த விஷயம் புரியும் என்றாலும் அந்தப் புரிந்துணர்வை ஏற்படுத்த நாம் என்ன செய்தோம் என்பதில்தான் பெற்றோரின் முதிர்ச்சி இருக்கிறது" என்றார்.

Mangatha
Mangatha

தொடர்ந்து அவர்...

"ஒரு சினிமாவை குடும்பத்துடன் பார்த்தால், அந்தப் படத்தைப் பற்றி வீட்டில் உள்ள எல்லோரும் விவாதிக்க வேண்டும். 'ஹீரோ என்ன நல்லது பண்றார்?', 'அதுல ஊக்கம் தர்றது எது?' என எல்லாவற்றையும் பேச வேண்டும். அதேவேளையில், ஹீரோ ஒரு தவறு செய்தால், அதைப் பற்றியும் பேச வேண்டும். ஹீரோ ஹீரோயினை அடித்தால்,'அதை ஏன் செய்தார்? படத்தில் அந்தக் காட்சி என்ன கண்ணோட்டத்தில் காட்டப்படுகிறது' என்பது பற்றியும் பேச வேண்டும். 'ஒரு பெண்ணை அடிப்பது ஹீரோயிசமா, ஆண்மையா, உரிமையா, காதலா' என்று விவாதித்து, அதுபோன்ற விஷயங்கள் தவறு என்பதைப் புரியவைத்து, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இப்படித்தான் இளம் வயதினரின் மனநிலையைப் பக்குவப்படுத்தமுடியும்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில், அவரவர் விருப்பப்படி தொலைக்காட்சி, கணினி, கைப்பேசியில் சினிமா பார்க்கிறார்கள். இந்தச் சூழலில், தன் பிள்ளை என்ன திரைப்படம் பார்க்கிறது என்று பெற்றோருக்குத் தெரியாது. எனவே, நாம் எல்லாவற்றையும் தடுத்துவிட முடியாது. ஏனென்றால், இப்போது சென்சார்கூட திரையரங்குகளுக்கு மட்டும்தான் என்றாகிவிட்டது. அதீத வன்முறை, ஆபாசம் நிறைந்த காட்சிகள், சென்ஸார் இல்லாமல் தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தில் எளிதாக வந்துவிடுகின்றன. அதனால், குழந்தை வளர்ப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

Ambala
Ambala

ஒரு ஹீரோ சினிமாவில் நடித்த ஒரு காட்சியை, குழந்தை வீட்டில் நடித்துக் காட்டினால், உடனே நாம் எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்பதில் கவனம் தேவை. அதைப் பாராட்டுகிறோமா, கண்டிக்கிறோமா, கேலிசெய்கிறோமா என்பதன் அடிப்படையில் நம் பிள்ளைகளின் மனநிலை கட்டமைக்கப்படும். எல்லாவற்றுக்குமான எதிர்வினையையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல செய்ய வேண்டும்.

நான் சில இயக்குநர்களிடம், 'ஏன் இப்படி படம் எடுக்குறீங்க?' என்று கேட்டிருக்கிறேன். அவர்களோ, 'இப்படிப் படம் எடுத்தால்தான் மக்கள் ரசிக்கிறார்கள்' என்கிறார்கள். ஒரு காலத்தில் பறந்து பறந்து சண்டைபோட்டது போலவோ மீசையை முறுக்கிக்கொண்டு வில்லன்களைச் சாய்த்தது போலவோ இப்போது காட்சிகள் அமைக்கப்படுவதில்லை. அப்படியொரு காட்சி இடம்பெற்றால், இன்றைய தலைமுறை கேலிசெய்கிறது. சமூகம் அந்த அளவுக்கு பக்குவப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், எல்லா நிலையும் மாறும்" என நம்பிக்கை விதைத்தார்.

அடுத்த கட்டுரைக்கு