சினிமா
Published:Updated:

தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் பஞ்சம் ஏன்?

கீர்த்தி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
கீர்த்தி சுரேஷ்

எப்பவுமே ஒரு செட் ஹீரோயின்ஸ் வருவாங்க. தொடர்ந்து சில வருஷம் தாக்குப்பிடிப்பாங்க. அப்புறம் புதுசா சிலர் வந்துருவாங்க.

தமிழின் டாப் ஹீரோக்கள் என ஒரு பட்டியலிட்டால், குறைந்தது பதினைந்து பேராவது தேறி விடுவார்கள். சில வருடங்களுக்கு முன், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கதாநாயகிகளாக அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, ஹன்சிகா, காஜல் அகர்வால், சமந்தா, கீர்த்தி சுரேஷ் எனப் பலரையும் மடமடவெனச் சொல்லிவிட முடியும். ஒவ்வொருத்தருமே குறைந்தது சில வருடங்களாவது இங்கே கோலோச்சியிருப்பார்கள். அவர்களில் பலரும் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களை நோக்கித் தாவிவருகின்றனர். இன்னும் சிலர் தெலுங்கு பக்கம் போய்விட்டனர். தமிழின் டாப் ஹீரோயின்கள் யாரெல்லாம் எனக் கேட்டால், நீண்டநேரம் யோசிக்கவேண்டியிருக்கிறது. இந்த ஹீரோயின் பற்றாக்குறை நிலவுவது ஏன் என்பது பற்றித் திரையுலகினர் சிலரிடம் பேசினேன்.

தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் பஞ்சம் ஏன்?
தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் பஞ்சம் ஏன்?

``ஹீரோயின் பற்றாக்குறை இருக்குதா என்ன?'' - நம்மிடமே கேள்வி எழுப்பியபடி அதிரச் சிரித்து ஆரம்பிக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

``இப்ப நிறைய புதுமுகங்கள் வந்திருக்காங்க. ஆனா, யாரும் க்ளிக் ஆகல. அவங்க படங்கள் ஹிட்டடிக்கும்போது டாப்ல வந்திடுவாங்க. ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட அளவு ஹீரோயின்கள் வருவாங்க. இங்கே கொஞ்ச வருஷம் நிலைச்சிருப்பாங்க. இந்தக் காலத்துக்கும் அப்படி அமைவாங்க. ஆனா, இப்ப உள்ள சூழலினால் கொஞ்சம் தாமதப்படும். என்னைப் பொறுத்தவரை இந்த வருடம் வெளியான படங்களின் எண்ணிக்கையே ரொம்பக் குறைவு. இதுவரை வெளியான எண்பது படங்கள் என்பது பெரிய பட்டியல் கிடையாது. போன வருஷம், இந்த வருஷம்னு இந்த ரெண்டு வருஷத்தை வச்சு, நாம கணிச்சிட முடியாது. நமக்கு தொடர்ந்து படங்கள் வெளியாக ஆரம்பிச்சாலே, பற்றாக்குறைப் பேச்செல்லாம் எழாது'' என்கிறார்.

அவரது கருத்தை வழிமொழிகிறார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். `ரெமோ', `சுல்தான்' படங்களின் மூலம் கீர்த்தி சுரேஷ், ரஷ்மிகா மந்தனா என கலர்ஃபுல் ஹீரோயின்களை இயக்கியவர்.

தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் பஞ்சம் ஏன்?
தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் பஞ்சம் ஏன்?

``ஒரு நல்ல கமர்ஷியல் ஹீரோயினை ரீச் பண்ணணும்னா, தயாரிப்பாளருக்கு பட்ஜெட் தேவைப்படுது. இன்னொரு விஷயம், நம்ம ரசிகர்களுக்குப் பிடிச்ச மாதிரி ஹீரோயின்கள் வர்றதும் குறைஞ்சிடுச்சி. ஏன்னா, த்ரிஷா, நயன்தாரா மாதிரி நடிகைகளுக்கு ரசிகர்கள் அதிக அளவு இருப்பாங்க. அவங்கள மாதிரி ரசிகர்கள் கொண்ட ஹீரோயின்ஸ் இப்ப இல்லை. தவிர, இங்கே நிறைய பேருக்கு ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் பண்ணணும்னு ஆசை வந்திடுச்சு. தெலுங்கில் சமீபத்துல வெளியான `உப்பென்னா' பெரிய ஹிட். அதுல கீர்த்தி ஷெட்டின்னு ஒரு புதுவரவு கிடைச்சிருக்காங்க. அந்த மாதிரி தமிழுக்கு இன்னும் யாரும் அமையல. அதனால இருக்கற வரவை வச்சு, மேனேஜ் பண்ண வேண்டியிருக்கு. ஸ்ரீதிவ்யா தமிழ்ல அறிமுகமானபோது ஒரு புது வரவாத் தெரிஞ்சாங்க. முன்னாடி மும்பை ஹீரோயின்கள் நிறைய பேர் வந்துட்டிருந்தாங்க. அஞ்சாறு பேர் வந்தாலும், எல்லாருக்குமே நல்ல மார்க்கெட் இருக்கும். இப்ப ரெண்டு வருஷமா சினிமா டல்லா வேறு இருக்கு. அதனாலேயும் நமக்குப் பற்றாக்குறையா இருக்கறது போலத் தோணலாம்'' என்கிறார் பாக்கியராஜ் கண்ணன்.

பாக்கியராஜின் கருத்துக்கு வலுச் சேர்க்கிறார் இயக்குநர் விஜய் சந்தர். `வாலு', `ஸ்கெட்ச்', `சங்கத்தமிழன்' படங்களை இயக்கியவர்.

தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் பஞ்சம் ஏன்?
தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் பஞ்சம் ஏன்?

“எப்பவுமே ஒரு செட் ஹீரோயின்ஸ் வருவாங்க. தொடர்ந்து சில வருஷம் தாக்குப்பிடிப்பாங்க. அப்புறம் புதுசா சிலர் வந்துருவாங்க. எல்லார் கவனமும் புதுவரவு பக்கமிருக்கும். 'வாலு'ல ஹன்சிகா நடிக்கும்போது அவங்களால எங்களுக்கு டேட் ஒதுக்கவே முடியல. அவ்ளோ பிஸியா படங்கள் வச்சிருந்தாங்க. இப்பவும் அவங்களுக்குப் படங்கள் குறைஞ்சிடுச்சே தவிர, ஃபீல்டுல இருக்குறாங்களே! தமன்னா இப்ப சிரஞ்சீவி சார் ஹீரோயின். ஆனாலும் அவரும் சூப்பர் ஸ்டார்தானே? ராஷிகண்ணா இந்தியிலும் பண்றாங்க. த்ரிஷாகூட `96' மூலம் ஹிட் கொடுத்தாங்க. ஸோ, எல்லாருக்குமே ஒரு நேரம் அமையும்போது, ஜொலிக்கிறாங்க. டைம் அமையும்போது, எல்லாருமே ஹிட்டாவாங்க'' என்கிறார் விஜய் சந்தர்.

இது ஹீரோயின் சென்ட்ரி சீசன் என்பதால்... நயன்தாராவை வைத்து `டோரா' கொடுத்த இயக்குநர் தாஸ் ராமசாமி ``இப்ப எல்லா ஹீரோயின்களுமே அவங்களுக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்க நினைக்கறாங்க. இதை நயன்தாரா மேம்தான் ஆரம்பிச்சு வச்சாங்க. அதுக்கு முன்னாடி விஜயசாந்தியைச் சொல்லலாம். ஹீரோயின்கள் தென்னிந்திய மொழிகளைக் கவர வேண்டியிருக்கு. அப்படி நான்கு மொழிகளுக்கும் பொதுவான ஆளைத்தான் பெரிய ஹீரோயினா கொண்டாடுறாங்க'' என்கிறார்.

தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் பஞ்சம் ஏன்?
தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் பஞ்சம் ஏன்?

பெயர் வெளியிட விரும்பாத, பரபரப்பான தயாரிப்பாளர் ஒருவர், நடைமுறைச் சிக்கல்களை விவரித்தார்.

``மாஸ் ஹீரோ நடிக்கற படம்னா, பிசினஸே ஹீரோவை வச்சுதான். இங்கே ஹீரோயினுக்கெனத் தனி மார்க்கெட் இல்ல. ஹீரோவைப் போல், அவங்க படத்தையும் கொண்டாட ரசிகர்களும் இல்ல. அப்படியிருந்தும் பெரிய ஹீரோயின் பக்கம் போகக் காரணம், தென்னிந்திய மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்பதால்தான். மும்பையிலிருந்தோ அல்லது ஹைதராபாத்திலிருந்தோ கமர்ஷியல் ஹீரோயினை கமிட் பண்ணினோம்னா அவங்களுக்கு பேமென்ட் கோடியில் கொட்டணும் என்பதைவிட, அவங்களோடு குறைஞ்சது அஞ்சு உதவியாளர்களாவது வருவாங்க. மேனேஜர், ஸ்டைலிஸ்ட், காஸ்ட்யூமர், ஹேர் டிரெஸர், டெய்லர்னு ஒரு தனி டீமே அங்கிருந்து வருவாங்க. அவங்களுக்கும் அந்த ஹீரோயின் தங்கியிருக்கும் ஹோட்டலில்தான் தங்கும் வசதிகள் செய்து கொடுக்க வேண்டியிருக்கும். அதன்பிறகு அவங்களுக்கான பேட்டா, அவங்க வந்துட்டுப் போக பிளைட் டிக்கெட் என பல லட்சங்கள் செலவாகும். கொரோனாச் சூழல்ல படத்தை பிசினஸ் பண்றதே மூச்சுத் திணறும் விஷயமா இருக்கும். இப்படியான சூழல்ல டாப் ஹீரோயின் தேவையில்லாத நிலை இருக்கு'' என்கிறார்.

மீண்டும் ஒரு ஸ்ரீதேவி, மீண்டும் ஒரு குஷ்பு தமிழுக்குத் தேவைப்படுகிறார்கள்.