Published:Updated:

ராஷ்மிகா, வாணி போஜன், ரைமா சென்... 2020 கோலிவுட்டில் அறிமுகமாகும் ஹீரோயின்ஸ்!

2020ல் கோலிவுட்டில் அறிமுகமாகும் ஹீரோயின்கள்!

1
மேகா ஆகாஷ்

மேகா ஆகாஷ், லிஜோ மோள், அஞ்சலி நாயர், பிரியங்கா என 2019-ல் அறிமுகமாகி அசத்திய நாயகிகள், தற்போது, அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கின்றனர். அதேபோல, 2020-ம் ஆண்டு அறிமுகமாகக் காத்திருக்கும் ஹீரோயின்கள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

2
வாணி போஜன்

வாணி போஜன்

`மாயா', `ஆஹா' உள்ளிட்ட சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் `தெய்வமகள்' இவருக்கு சின்னத்திரை உலகில் அதிக ரசிகர்களை உருவாக்கித் தந்தது. அந்த சீரியல் முடிந்ததும் அவருக்குப் பல பட வாய்ப்புகளும் வரத் தொடங்கின. இதற்கிடையில், விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் `மீக்கு மாத்திரமே செப்தா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார், வாணி போஜன். தமிழில் வைபவ்விற்கு ஜோடியாக `லாக்கப்', அசோக் செல்வனுக்கு ஜோடியாக `ஓ மை கடவுளே' என இரண்டு படங்கள் இவரது நடிப்பில் வெளியாகக் காத்திருக்கின்றன. தவிர, இன்னும் இரண்டு பெயரிடப்படாத படங்களிலும் நடித்து வருகிறார். இவற்றில் `ஓ மை கடவுளே' படம் வரும் காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.

3
ஶ்ரீநிதி ஷெட்டி

ஶ்ரீநிதி ஷெட்டி

கர்நாடகாவைச் சேர்ந்த ஶ்ரீநிதி ஷெட்டி, நிறைய அழகிப் போட்டிகளில் பங்குபெற்றுள்ளார். தவிர, `மிஸ் கர்நாடகா' உள்ளிட்ட நிறைய அழகிப் பட்டங்களையும் வென்றுள்ளார். ஐடி கம்பெனியில் பணியாற்றிக்கொண்டே மாடலாகவும் இருந்தார். அப்போது வந்த வாய்ப்புதான் `கே.ஜி.எஃப்'. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் பிரமாண்ட பொருள் செலவில் உருவான படம். இதன் முதல் பாகம் எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் படமே பெரிய படம் என்பதால் அனைவராலும் கவனிக்கப்பட்டார், ஶ்ரீநிதி. `கே.ஜி.எஃப் 2' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே `கோப்ரா' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததன் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விக்ரம், இர்பான் பதான் நடிக்கும் `கோப்ரா' படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

4
நிதி அகர்வால்

நிதி அகர்வால்

மாடலிங்கில் இருந்த இவருக்கு பாலிவுட்டில் இருந்து ஆஃபர் வர, `முன்னா மைக்கேல்' என்ற படத்தில் டைகர் ஷெராஃபிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, நாக சைதன்யாவுடன் `சவ்யசாச்சி' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர், அகிலுடன் `மிஸ்டர் மஜ்னு', பூரி ஜெகன்நாத் இயக்கிய `ஐஸ்மார்ட் ஷங்கர்' என தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது ஜெயம் ரவியின் 25-வது படமான `பூமி' படத்தில் நடிக்க வைத்துள்ளார், இயக்குநர் லக்‌ஷ்மன். இவர் தமிழில் அறிமுகமாகும் `பூமி' திரைப்படம், மே 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.

5
ரஜிஷா விஜயன்

ரஜிஷா விஜயன்

மலையாள சேனலில் தொகுப்பாளராகப் பணியாற்றி வந்த ரஜிஷா விஜயன், `அனுராகக் கருக்கின் வெள்ளம்' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அறிமுக நடிகையாக அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, திலீப்புடன் `ஜார்ஜேட்டன் பூரம்', வினித் ஶ்ரீனிவாசனுடன் `ஒரு சினிமாக்காரன்', `ஜூன்', `ஸ்டான்ட் அப்' உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்து வந்தார். தற்போது, தனுஷ் நடிக்கும் `கர்ணன்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார், இயக்குநர் மாரி செல்வராஜ். முதல் தமிழ் படமே தனுஷுடன் என்ற குஷியில் இருக்கிறார், ரஜிஷா.

6
ரைமா சென்

ரைமா சென்

`குட் லக்', `தாஜ்மஹால்' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த ரியா சென்னின் உடன் பிறந்த சகோதரிதான் ரைமா சென். நிறைய பெங்காலித் திரைப்படங்களிலும், சில இந்திப் படங்களிலும் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது `மூடர் கூடம்' படத்தை இயக்கிய நவீன் இயக்கத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் `அக்னிச் சிறகுகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார், ரைமா சென்.

7
ரியா சுமன்

ரியா சுமன்

மும்பை பெண்ணான இவர், அனுபம் கேர் நடத்தும் நடிப்புப் பள்ளியில் டிப்ளமோ முடித்தவர். தெலுங்கில் நானி நடித்த `மஜ்னு' படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, `பேப்பர் பாய்' என்ற படத்தில் நடித்தார். தற்போது, ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் `சீறு' படத்தின் மூலம் கோலிவுட்டில் தடம் பதிக்கவிருக்கிறார், ரியா சுமன்.

8
ரித்திகா சென்

ரித்திகா சென்

அமலா, சுவலட்சுமி, கஜோல், ரீமா சென் உள்ளிட்ட நடிகைகள் பெங்காலியில் இருந்து கோலிவுட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து, ரித்திகா சென்னும் கோலிவுட் பக்கம் வரவிருக்கிறார். முன்னணி பெங்காலி நடிகையான இவர், சந்தானம் நடிக்கும் `டகால்டி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படம் ஜனவரி 31-ம் தேதி வெளியாக இருக்கிறது.

9
அகான்ஷா சிங்

அகான்ஷா சிங்

இந்தி டிவி நாடகங்களில் நடித்து வந்த அகான்ஷா சிங், வருண் தவான், ஆலியா பட் நடித்த `பத்ரிநாத் கி துல்ஹானியா' படத்தின் ஒரு சின்ன கேரக்டரில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பிறகு, `மல்லி ராவா', `தேவதாஸ்' உள்ளிட்ட தெலுங்குப் படங்களில் நடித்தார். இதைத்தொடர்ந்து, சுதீப், சுனில் ஷெட்டியுடன் `பயில்வான்' எனும் கன்னட படத்தில் அறிமுகமானார். தற்போது, ஆதிக்கு ஜோடியாக `க்ளாப்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார், அகான்ஷா.

10
ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

சாய் பல்லவி, ஷாலினி பாண்டே மாதிரியான ஹீரோயின்கள் தமிழ் படத்தில் அறிமுகமாவதற்கு முன்பே நம் ஊருக்கு பரிச்சயமாகிவிட்டார்கள். இந்த வரிசையில் ராஷ்மிகா மந்தனாவும் இணைந்திருக்கிறார். கன்னடத்தில் அறிமுகமாகி சில படங்கள் நடித்த பிறகு, டோலிவுட் இவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தது. `சலோ', `கீத கோவிந்தம்', `தேவதாஸ்', `டியர் காம்ரேட்' என அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்திருந்தார். அதிலும் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த `கீத கோவிந்தம்' படமும், `இன்கேம் இன்கேம்' பாடலும்தான் இவரை இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனாக்கியது. `டியர் காம்ரேட்' தமிழிலும் வெளியானாலும் நேரடி தமிழ் படத்தில் இன்னும் அவர் நடிக்கவில்லை. கார்த்தியுடன் நடிக்கும் `சுல்தான்' படத்தின் மூலம் ராஷ்மிகாவின் கோலிவுட் விஜயம் நிகழவிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு