Published:Updated:

ஹே! சினாமிகா - சினிமா விமர்சனம்

ஹே! சினாமிகா
பிரீமியம் ஸ்டோரி
ஹே! சினாமிகா

பளீர் வண்ணங்களும் மின்னும் காட்சியமைப்புகளும் என துடைத்துவைத்த கண்ணாடியாய் ஒளிர்கிறது ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு

ஹே! சினாமிகா - சினிமா விமர்சனம்

பளீர் வண்ணங்களும் மின்னும் காட்சியமைப்புகளும் என துடைத்துவைத்த கண்ணாடியாய் ஒளிர்கிறது ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு

Published:Updated:
ஹே! சினாமிகா
பிரீமியம் ஸ்டோரி
ஹே! சினாமிகா

காதல், மோதல், கூடல் எனத் தொன்றுதொட்டுத் தொடரும் தமிழ்சினிமா பாரம்பரியத்தை நீட்டிச் செல்லும் மற்றுமொரு படம் இந்த ‘ஹே! சினாமிகா’.

துல்கருக்கு அதிதியைப் பார்த்தவுடன் காதல் பற்றிக்கொள்ள, திருமணமும் செய்துகொள்கிறார்கள். சமைப்பதில் அதீத ஈடுபாடு கொண்ட துல்கருக்கு எல்லா விஷயங்களையும் பற்றி விரல்நுனியில் தகவல்களும் அடுத்தவருக்குச் சொல்லிக்கொண்டேயிருக்க எக்கச்சக்க ஆர்வமும் இருக்கிறது. இந்த இயல்பே தனிப்பட்ட முறையில் தொல்லையாக மாற, அதற்கான தீர்வை காஜல் மூலம் செயல்படுத்த முயல்கிறார் அதிதி. இந்த மூன்று மனிதர்களின் முக்கோண உறவுகள் ஏற்படுத்தும் விளைவுகளே படம்.

எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாத அறிவுஜீவித்தனம் கொண்ட இளைஞனாக துல்கர் இயல்பாகப் பொருந்திப்போகிறார். தன்னைத் தன் மனைவியும் இந்த உலகமும் எப்படிப் பார்க்கிறது என்பதை உணர்ந்து உடையும் தருணங்களில் வெகுவாய் ஸ்கோர் செய்கிறார். முதல்பாதியில் ஏக்கம் தெறிக்கும் முகமும் பின்பாதியில் துயரம் கவிழும் கண்களுமாய் நன்றாகவே நடித்திருக்கிறார் அதிதி. இவர்கள் இருவருக்கு இடையில் காஜலின் முயற்சிகள் போதாமை. பொருந்தா வசன உச்சரிப்பும் அவருக்கான மைனஸ். சிரிக்க வைக்கும் வேலையை யோகிபாபு தவறவிட, ஒருசில இடங்களில் அதைச் செய்து படத்திற்குக் கலகலப்பு சேர்க்கிறார் மிர்ச்சி விஜய்.

ஹே! சினாமிகா - சினிமா விமர்சனம்

பளீர் வண்ணங்களும் மின்னும் காட்சியமைப்புகளும் என துடைத்துவைத்த கண்ணாடியாய் ஒளிர்கிறது ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு. அந்நியத்தன்மை தென்பட்டாலும் ‘கலர்புல்லான படம்’ எனப் பெயர் வர உழைத்திருக்கிறார்கள் கலை இயக்குநர்கள் மூர்த்தியும் செந்தில் ராகவனும். கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன.

தமிழ்சினிமாவில் அதிகம் காட்டப்படாத ‘ஹோம்மேக்கர் ஆண்’ என்கிற ரோலை ஒரு இளம் ஹீரோவை முன்வைத்து யோசித்ததற்காக இயக்குநர் பிருந்தாவுக்கும் கதாசிரியர் கார்க்கிக்கும் பாராட்டுகள். ஆனால் காஜல் அகர்வால் பாத்திரத்தில் துருத்திநிற்கும் செயற்கைத்தன்மை, துல்கரின் கேரக்டரை விளக்குவதற்காக மீண்டும் மீண்டும் வரும் ஒரேமாதிரியான காட்சிகள். பண்பலைத் தொகுப்பாளராக துல்கர் மேற்கொள்ளும் ஸ்டிங் ஆபரேஷனின் முதிர்ச்சியற்ற அபத்தங்கள் ஆகியவை பெருங்குறைகள்.

ஹே! சினாமிகா - சினிமா விமர்சனம்

ஒரு சுவாரஸ்யமான ஒன்லைனைச் சொல்வதிலும் சுவாரஸ்யம் கூடியிருந்தால் ‘ஹே! சினாமிகா’ நம்மையும் காதலில் விழ வைத்திருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism