Published:Updated:

``என் நண்பனுக்கு இதுல விருப்பமில்லை, அவன் உணர்வை மதிக்கிறேன்!" - ஹிப்ஹாப் ஆதி

`நான் சிரித்தால்' ஹிப்ஹாப் ஆதி - ஐஸ்வர்யா
`நான் சிரித்தால்' ஹிப்ஹாப் ஆதி - ஐஸ்வர்யா

அறிமுக இயக்குநர் இராணா இயக்கியிருக்கும் `நான் சிரித்தால்' திரைப்படத்துக்காக ஆதி மற்றும் ஐஸ்வர்யா மேனனை சந்தித்துப் பேசினோம்.

``ஐஸ்வர்யா மேனன் பிட்னஸுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாங்க. அவங்களோட இன்ஸ்டா போஸ்ட் பார்த்தாலே டயரைத் தூக்கிப் போடுறது, கயித்துல தொங்குறதுனு எல்லா வேடிக்கையும் நடக்கும்'' என்று கலாய்யோடு ஆரம்பிக்கிறார் ஹிப்ஹாப் ஆதி.

`` `நான் சிரித்தால்' படம் நல்லா வந்திருக்கு. படத்தோட முதல் பாதி முழுக்க என்னோட சேர்ந்து நீங்களும் சிரிப்பீங்க. 2-வது பாதி முழுக்க சிந்திப்பீங்க. ஸ்க்ரிப்ட் ரொம்ப நல்லா வொர்க்அவுட் ஆகியிருக்கு. என்னோட முதல் இரண்டு படங்கள் மாதிரியே இந்தப் படமும் ஆடியன்ஸுக்கு ட்ரீட்டா இருக்கும். இந்தப் படத்துக்கு மியூஸிக் கம்போஸராவும் வேலை பார்த்திருக்கேன். படத்தோட ஷூட் முடியுற வரைக்கும் மென்டலி காந்திங்கிற கேரக்டராவே இருக்கணும். அதனால, எந்த டைரக்‌ஷன் வேலைகளும் பார்க்கலை. இயக்குநர் இராணாவும் எதைக் காட்சிப்படுத்தப்போறோம்னு ரொம்பத் தெளிவா இருப்பார். நடிக்கிறதே சவலாதான் இருந்தது" என்று பேசிய ஆதியைத் தொடர்ந்து ஐஸ்வர்யா பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஆதிகூட நடிக்கப்போறோம்னு கேள்விப்பட்டதும் சந்தோஷமா இருந்தது. இளைஞர்களுக்கு மத்தியில இவருக்கு நல்ல பெயர் இருக்கு. படத்துலேயும் இயக்குநர் என்னோட கேரக்டருக்கு முக்கியமான ரோல் கொடுத்திருந்தார். படத்தோட முதல் ஷாட்ல இருந்து கடைசிவரை வருவேன். போன்லதான் இராணா கதை சொன்னார். கதையோட முதல் வரியைச் சொல்லும்போதே சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். இந்தக் கதை கண்டிப்பா வொர்க்அவுட் ஆகும்னு நினைச்சுதான் கமிட்டானேன்" என்றார் ஐஸ்வர்யா.

நான் சிரித்தால்
நான் சிரித்தால்

``ஐஸ்வர்யா படத்துக்குள்ள வந்தப்போ ரெண்டு பேருக்கும் அதிகம் பழக்கம் இல்லை. அதனால ஹாய், பாய் அளவுலதான் பேசிக்கிட்டோம். அதுக்கப்புறம் நல்ல பேச ஆரம்பிச்சோம். சாப்பாடுன்னா ரெண்டு பேருக்குமே உயிர். சாக்லேட்ஸ், ஐஸ்க்ரீம்னு சாப்பிடுற எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிட்டோம். இவங்க எவ்வளோ சாப்பிட்டாலும் ஜிம் போய் வொர்க்அவுட் பண்ணி குறைச்சிடுவாங்க. எனக்குத்தான் வெயிட் போட்ருவோம்னு பயமா இருக்கும்'' என்று சிரித்த ஆதியை இடைமறித்து ஐஸ்வர்யா தொடர்ந்தார்,

``ஆதிக்கும் எனக்கும் இந்தப் படத்துல ரொமான்ஸ் போர்ஷன் இருக்கு. ஆனா, ஆதி முகத்துல கொஞ்சம்கூட ரொமான்ஸ் எட்டிப் பார்க்காது. நானே ஆதி கையைப் பிடிச்சு, இப்படிப் பண்ணுங்க, அப்படிப் பண்ணுங்கனு சொல்லிக் கொடுக்கணும். அவர் கொஞ்சம்கூட ரியாக்ட் பண்ணவே மாட்டார்" என ஐஸ்வர்யா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ``ஆமாங்க. இந்த முகத்துக்கும், ரொமான்ஸுக்கும் சம்பந்தமே இல்லை. ஆனா, இராணா கண்டிப்பா ரொமான்ஸ் போர்ஷன் வேணும்னு சொல்லிட்டார். மொட்ட மாடியில ஷூட் நடந்தது. அங்க இருந்து குதிக்க சொன்னாக்கூட குதிச்சிடுவேன். ஆனா, ரொமான்ஸ் மட்டும் வேண்டாம்னு கெஞ்சினேன், கதறுனேன்... விடவே இல்லையே" என்று ஆதி வருத்தப்பட,

`நான் சிரித்தால்'
`நான் சிரித்தால்'

``எங்க ரெண்டு பேருக்கும் ரொமான்ஸ் சாங் படத்துல இருக்கு. கண்டிப்பா அது ஹிட் அடிக்கும். அதே மாதிரி ராப் பாட்டும் ஒண்ணு இருக்கு. அந்தப் பாட்டைத்தான் செட்டுல பாடிட்டிருப்போம். இந்தப் படத்துக்கு முன்னாடி வர ஆதியை பர்சனலா தெரியாது. ஆனா, இவர் நல்ல மனிதர்" என்று ஐஸ்வர்யா சொல்லி முடித்ததும், ``என்னைப் பத்தி பெருமையா சொல்லிட்டாங்க. இவங்களைப் பத்தி நான் சொல்றேன். ஷூட்டிங் ஸ்பாட்ல கரெக்ட்டா வந்து நிக்கிறது ஐஸ்வர்யாதான். மேக்கப் சென்ஸ் இவங்களுக்கு அதிகம். இருந்தும் எல்லாத்தையும் முடிச்சிட்டு டைமுக்கு வந்துடுவாங்க. ஷாட் ரெடினு சொன்னதும் நானும் `எரும சாணி' விஜய்யும் ஆடி அசைஞ்சிட்டு வந்து நிப்போம்" என்று ஆதி சொல்லி முடித்ததும் ஐஸ்வர்யா தொடர்ந்தார்.

``டைரக்டர் எங்களை நினைச்சு ரொம்பப் பெருமைப்படுற விஷயம்னா, நாங்க அதிக டேக் எடுக்க மாட்டோம். பெரும்பாலும் சிங்கிள் டேக்ல இராணா ஓகே சொல்லிடுவார். படத்துல முக்கியமான காட்சிக்கும் இதேதான் நடக்கும். எனக்குக் கொஞ்சம் சந்தேகமா இருந்தது. அதனால ரெண்டு, மூணு டைம் திரும்பவும் ஷூட் பண்ணுனோம். ஆனா, கடைசியில முதல்ல ஷூட் பண்ணதுதான் எங்க எல்லாருக்கும் சரியாப்பட்டுச்சு'' என்று முடித்த ஐஸ்வர்யாவைத் தொடர்ந்து ஆதியிடம் சில கேள்விகள் கேட்டோம்.

``சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்த படம் பண்றீங்கனு கேள்விப்பட்டோமே?"

`நான் சிரித்தால்'
`நான் சிரித்தால்'

``எப்பவும் ஒரு படத்தோட எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு, ரிலீஸானதுக்கு அப்புறம் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் பார்த்துட்டுதான் அடுத்த படத்தோட புராஜெக்ட் உள்ள போவோம். அதனாலதான் வருஷத்துக்கு ஒரு படம் பண்றேன். நான் பண்ற படங்கள் நல்ல விலைக்குப் போகணும்னு எப்பவுமே நினைப்பேன். அதனாலதான் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுப் பார்ப்பேன். அடுத்ததா சத்யஜோதி, சுந்தர் சி சார்னு ரெண்டு பேருக்குமே படம் பண்ற ஐடியா இருக்கு."

``சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை எந்தளவுக்கு பர்சனால இருக்கணும்னு நினைக்குறீங்க?"

``எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அது அவங்களோட விருப்பம்தான். என்னோட தனிப்பட்ட வாழ்க்கை ப்ரைவசியா இருக்கக் காரணம் என்னோட உயிர் நண்பன். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஹிப்ஹாப் தமிழா. ஆனா, வெளியில என்னோட முகம்தான் எல்லாருக்கும் தெரியும். அவனுக்கு இதுல சுத்தமா விருப்பம் இல்லை. இது அவனோட பிரைவசி, அதை நானும் மதிக்கிறேன். எங்க வீட்டுல இருக்கவங்களுக்கு லைம் லைட்ல வர்றதுக்கு விருப்பம் இல்லை. அவங்க உணர்வுக்கும் நான் மதிப்பு கொடுக்கிறேன். இந்தக் கேள்விக்கு என்னோட தனிப்பட்ட முறையில பதில் சொல்லணும்னா, பர்சனலா இருந்தாதான் அது பர்சனல் லைஃப்."

முழு பேட்டிக் காண கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்யவும்!

அடுத்த கட்டுரைக்கு