Published:Updated:

"ரசிகர்களை எப்படி மதிக்கணும்னு விஜய்கிட்டதான் கத்துக்கிட்டேன்!" - பயோகிராஃபியில் ப்ரியங்கா!

புத்தகத்தில் மனம்திறந்த ப்ரியங்கா சோப்ரா!
புத்தகத்தில் மனம்திறந்த ப்ரியங்கா சோப்ரா!

"முதல் படத்திலேயே மிகவும் திறமை வாய்ந்த நடிகரான விஜய்யுடன் நடித்தது எனக்கு உத்வேகம் அளித்தது."

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து பின்பு ஆங்கில தொடர் மற்றும் படங்களில் நடித்து இன்று சர்வதேச அளவில் அறியப்படும் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தனது சுயசரிதை புத்தகமான 'Unfinished'-ஐ சமீபத்தில் வெளியிட்டார். அதில் இதுவரை அவர் கடந்துவந்த பாதையை விரிவாக எழுதியுள்ளார். பாலிவுட் கலாசாரம் தொடங்கி பாலியல் சீண்டல்கள் வரை பல விஷயங்களையும் இந்தப் புத்தகத்தில் பேசியிருக்கிறார்.

இன்று சர்வதேச புகழை எட்டியிருந்தாலும் அவர் நடித்த முதல் படம் தமிழ் படம்தான்! விஜய் நடித்து மஜித் இயக்கிய 'தமிழன்' திரைப்படத்தின் மூலம்தான் பிரியங்கா சோப்ரா நடிகையாக அறிமுகமானார். இதுகுறித்து தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் ப்ரியங்கா.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

" 'தமிழன்' எனக்கு அற்புதமான அறிமுகத் திரைப்படம். மும்பையிலிருந்து சுமார் 800 மைல் தொலைவில் சென்னையில் திறமையான பாதுகாப்பான ஒரு படக்குழுவுடன் வேலைபார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் வேலைக்கு மரியாதையும் அந்த குழுவில் கிடைத்தது" என்று எழுதியிருக்கிறார் பிரியங்கா.

விஜய் குறித்து மிகவும் பாசிட்டிவாக இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். "முதல் படத்திலேயே மிகவும் திறமை வாய்ந்த நடிகரான விஜய்யுடன் நடித்தது எனக்கு உத்வேகம் அளித்தது. வெளியூர்களில்தான் நாங்கள் அதிகமாகப் படம்பிடித்தோம். ஏராளமான ரசிகர்கள் அவரைக் காண மணிக்கணக்காகக் காத்திருப்பார்கள். 15 மணிநேரம் ஷூட்டிங் நடந்தாலும் அதன்பின் பொறுமையாக ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்துக்கொடுத்தப்பிறகுதான் கிளம்புவார்.

விஜய்
விஜய்

ரசிகர்களுடனான விஜய்யின் பணிவும் பெருந்தன்மையும் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரையிலும் என்னுடனே இருக்கிறது. அந்தப் படம் முடித்து சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு 'குவான்டிகோ' தொடருக்காக நியூயார்க் பொது நூலகத்தில் படம்பிடித்தோம். சுற்றி வரிசையாக மக்கள் நின்று படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தனர். மதிய இடைவெளியில் ஒவ்வொருவரும் வந்து என்னுடன் படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டபோது விஜய்தான் நினைவுக்கு வந்தார். பொறுமையாக நின்று எல்லோருடனும் படம் எடுத்துக்கொண்டேன். ரசிகர்களை எப்படி மதிக்கவேண்டும் என்பதை விஜய்யிடம்தான் கற்றுக்கொண்டேன்!" என்று சிலாகித்திருக்கிறார் ப்ரியங்கா.

அடுத்த கட்டுரைக்கு