Published:Updated:

கருணாநிதி, எம்.ஜி.ஆர் வணங்கிய டி.ஆர்.எஸ்! - மார்டன் தியேட்டர்ஸின் கதை

Modern Theatres Logo

சினிமா தயாரிப்பு தொழிலில் கொல்கத்தாதான் கோலோச்சிக்கொண்டிருந்தது. சினிமா தயாரிப்பு தொடர்பான எல்லா வேலைகளுக்கும் கொல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. அதற்கு மாற்றாக சேலத்திலேயே ஒரு ஸ்டூடியோ தொடங்கினால் என்ன? என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டது இந்த ஸ்டூடியோ.

கருணாநிதி, எம்.ஜி.ஆர் வணங்கிய டி.ஆர்.எஸ்! - மார்டன் தியேட்டர்ஸின் கதை

சினிமா தயாரிப்பு தொழிலில் கொல்கத்தாதான் கோலோச்சிக்கொண்டிருந்தது. சினிமா தயாரிப்பு தொடர்பான எல்லா வேலைகளுக்கும் கொல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. அதற்கு மாற்றாக சேலத்திலேயே ஒரு ஸ்டூடியோ தொடங்கினால் என்ன? என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டது இந்த ஸ்டூடியோ.

Published:Updated:
Modern Theatres Logo

தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் மாடர்ன் தியேட்டர். சேலம் மாநகரின் மிகப்பழைமையான அடையாளங்களுள் ஒன்றாகவும் இது இருக்கிறது. 1935-ஆம் ஆண்டு டி.ஆர்.சுந்தரம் என்பவரால் தொடங்கப்பட்டது மாடர்ன் தியேட்டர்ஸ். சென்னைக்கு வெளியே தொடங்கப்பட்ட ஸ்டூடியோக்களில் மிக நீண்டகாலம் இயங்கி அதிக வெற்றிப்படங்களை கொடுத்த நிறுவனம் என்ற பெருமையும் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு உண்டு. ஜவுளித் தொழில் தொடர்பாக லண்டனில் உயர்கல்வி பெற்றிருந்தார் சுந்தரம். ஆனாலும், அவருக்கு சினிமாவின் மீது இயல்பாகவே ஒரு ஈர்ப்பு இருந்தது. லண்டனிலிருந்து சேலம் திரும்பியவுடன், அப்போது சேலத்தில் இருந்த படத்தயாரிப்பு நிறுவனமான ஏஞ்சல் ஃபிலிம்ஸுடன் இணைந்து இரண்டு படங்களைத் தயாரித்தார்.

TR Sundaram
TR Sundaram

1930களின் தொடக்கத்தில் சினிமா தயாரிப்பு தொழிலில் கொல்கத்தாதான் கோலோச்சிக்கொண்டிருந்தது. சினிமா தயாரிப்பு தொடர்பான எல்லா வேலைகளுக்கும் கொல்கத்தா செல்ல வேண்டி இருந்தது. அதற்கு மாற்றாக சேலத்திலேயே ஒரு ஸ்டூடியோ தொடங்கினால் என்ன? என்ற டி.ஆர்.எஸ்ஸின் எண்ணத்தில் சேலம் -ஏற்காடு ரோட்டில் 10 ஏக்கர் பரப்பளவில் படப்பிடிப்பு தளம், பாடல் பதிவு செய்யும் ரெக்கார்டிங் ரூம், ஒரு லேப் என ஒரு முழுப்படத்தையும் பதிவு செய்வதற்கான அத்தனை அம்சங்களுடனும் பிரமாண்டமாக உதயமானது மாடர்ன் தியேட்டர்ஸ். 1937-ல் தனது முதல் படமான `சதிஅகல்யா'வைத் தயாரித்தது. பிற்காலத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய இலங்கைக்குயில் தவமணி தேவிதான் இந்தப்படத்தின் கதாநாயகி. 1938ல் மலையாள மொழியின் முதல் பேசும் படமான 'பாலன்' தயாரிக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களுமே மாடர்ன் தியேட்டர்ஸுக்கு வெற்றிகரமான தொடக்கமாக அமைந்தன.

அடுத்ததாக மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களான `மனோன்மணி', இரண்டாம் உலகப் போரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட `பர்மா ராணி', `ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' ஆகிய அனைத்துப் படங்களும் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுத் தந்தன. இதே காலகட்டத்தில்தான் மு.கருணாநிதியும் திரைத்துறையில் வசனகர்த்தாவாக தனது பயணத்தை தொடங்கியிருந்தார். அவரது ஆரம்ப காலத்திலேயே கருணாநிதியின் திறமையை உணர்ந்து கொண்ட டி.ஆர்.எஸ், அவரை மாடர்ன் தியேட்டர்ஸின் கதை வசன இலாகாவில் பணிபுரியுமாறு அழைப்புவிடுத்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து கருணாநிதி கதை வசனம் எழுதிய 'மந்திரி குமாரி' மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததுடன் கருணாநிதி, எம். ஜி.ஆர் என இருவர் வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

Manthiri Kumari
Manthiri Kumari

இதையடுத்து தமிழில் முழுநீள வண்ணக்கலர் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். `அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' என்ற அரபு நில இரவுக் கதையொன்று தேர்வு செய்யப்பட்டது. மாடர்ன் தியேட்டர்ஸுடன் இணைந்து `மந்திரி குமாரி', `சர்வாதிகாரி' என்ற இரண்டு வெற்றிப்படங்களைத் தந்திருந்த எம்.ஜி.ஆர் இதற்கும் கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதே போன்று மலையாளத்தில் முதல் வண்ணப்படமான `கண்டம் பெச்ச கோட்டு' என்ற படமும் டி.ஆர்.எஸ்ஸால் தயாரிக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தன.

மாடர்ன் தியேட்டர்ஸின் 99-வது படமான 'கொஞ்சும் குமரி' மனோரமாவை கதாநாயகியாக வைத்து தயாராகிக் கொண்டிருந்தது. இதன் தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே டி.ஆர்.எஸ் ஆகஸ்ட் 29,1963 அன்று மாரடைப்பால் தன்னுடைய 56 ஆம் வயதில் காலமானார். சுந்தரம் காலமானார் என்று செய்தி வந்த போது மனோரமா 'கொஞ்சும் குமரி' படப்பிடிப்பில் இருந்தார். தகவலை அறிந்ததும் தன்னுடைய மேக்கப்பை கூட கலைக்காமல் அவருடைய வீட்டுக்குச் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி, எம்.ஜி.ஆர், நம்பியார், தங்கவேலு என திரையுலக ஆளுமைகள் பலரும் சேலம் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Alibabavum 40 Thirudargalum
Alibabavum 40 Thirudargalum

மறைந்த டி.ஆர்.எஸ்ஸின் உருவச்சிலை ஜனவரி 5, 2000-ம் ஆண்டு அன்று சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. டி.ஆர்.எஸ்ஸின் மறைவுக்குப் பிறகு ஸ்டூடியோ நிர்வாகத்தை கவனித்து வந்த மூன்று பேர் கொண்ட குழு, தொடர்ந்து இரண்டு தோல்விப்படங்களைத் தயாரித்தது. இதனால் மாடர்ன் தியேட்டர்ஸின் நிர்வாகப் பொறுப்பை டி.ஆர்.எஸ்ஸின் மகன் ராமசுந்தரம் நேரடியாக ஏற்றுக்கொண்டார்.

ராமசுந்தரம் பொறுப்பேற்ற பிறகு அசோகன், ஜெமினி கணேசன் நடிப்பில் 'வல்லவனுக்கு வல்லவன்' படம் தயாரிக்கப்பட்டது. குறித்த நேரத்தில் படத்தை திட்டமிட்டபடி படத்தை முடிப்பதில் டி.ஆர்.எஸ்ஸின் பாணியையே பின்பற்றினார், ராமசுந்தரம். முதல் படமே ராமசுந்தரத்திற்கு வெற்றிப்படமாக அமைந்தது. 'வல்லவனுக்கு வல்லவன்' வெற்றியைத் தொடர்ந்து ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் இரு 'வல்லவர்கள்', 'வல்லவன் ஒருவன்' போன்ற கதைகளை உருவாக்கினார் ராமசுந்தரம். இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன. இந்தப் படங்களின் மூலம் தமிழக ஜேம்ஸ் பாண்ட் என்று புகழ்பெற்றார் ஜெய்சங்கர்.

Vallavanukku Vallavan poster
Vallavanukku Vallavan poster

என்றாலும், அடுத்தடுத்து தயாரிக்கப்பட்ட 'கருந்தேள் கண்ணாயிரம்', 'பிராயச்சித்தம்', 'துணிவே தோழன்', 'அன்று முதல் இன்று வரை' போன்ற படங்கள் தொடர்ந்து சாதாரண படங்களாகவே அமைந்தன. சுமாரான படங்களே தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் அந்தப் படங்களையும் மிகவும் குறைவான விலைக்கே விற்க வேண்டி இருந்தது. இதனால் மிகப்பெரிய வருவாய் நெருக்கடியைச் சந்தித்தது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். அடுத்து படம் தயாரித்தால் நஷ்டம்தான் என்ற நிலையில் படத்தயாரிப்பை நிரந்தரமாக நிறுத்திவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார் ராமசுந்தரம்.

படத்தயாரிப்பைக் கைவிடும் நிலையில், மாடர்ன் தியேட்டர்ஸ் மொத்தமாக 136 படங்களைத் தயாரித்திருந்தது. அதில் தமிழ் மொழிப்படங்கள் மட்டும் 102. அதுபோக, தெலுங்கு 13, கன்னடம் 4, மலையாளம் 8, சிங்களம் 7, இந்தி 1, ஆங்கிலம் 1 எனப் பல மொழிகளில் படங்களைத் தயாரித்திருந்தார்கள்.

Konjum Kumari poster
Konjum Kumari poster

இதில் சிறந்த பிராந்திய மொழிப்படமாக `குமுதம்' மத்திய அரசின் விருது பெற்றது. பிறகு 'வல்லவனுக்கு வல்லவன்' படத்திற்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது. இதையெல்லாம் தாண்டி கடன் வாங்கி படம் எடுக்காத நிறுவனம் என்ற நற்பெயரும் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு இருந்தது. இவ்வாறு தமிழ்சினிமா உலகிற்கே கலங்கரை விளக்கமாக விளங்கிய ஒரு நிறுவனம் படத்தயாரிப்பையே நிறுத்திக் கொண்டது தமிழ் சினிமாவின் சோகமான வரலாறு.

மாடர்ன் தியேட்டர்ஸ் வருவாயைப் பெருக்கும் வகையில், ஒத்திகை மண்டபம் இருந்த பகுதியில் டி.ஆர்.எஸ் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. மற்ற பகுதிகள் சுந்தரம் அப்பார்ட்மென்ட்ஸ் என்ற பெயரில் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுவிட்டன.

Stamp released in memory of TRS
Stamp released in memory of TRS

மாடர்ன் தியேட்டர்ஸின் வளமையையும் வறுமையையும் ஒன்றாகப் பார்த்த மனிதர்கள் சிலர் இன்னமும் அதன் பசுமையான நினைவுகளுடன் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ் நன்றாக இயங்கி வந்த காலத்தில் உணவு சப்ளை செய்தது கோவிந்தசாமி கவுண்டர் ஹோட்டல், அதன் முதலாளி அம்மாவிடம் பேசினோம். "எனக்குக் கல்யாணம் ஆன புதுசுல மாடர்ன் தியேட்டர்ஸ் ஓஹோன்னு ஓடிட்டு இருந்துச்சு. எங்க கடையில இருந்துதான் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு டீ, காபி, டிபன் எல்லாமே கொடுத்து விடுவோம். கலைஞரும் இங்கதான் சாப்பிட வருவாரு. மாடர்ன் தியேட்டர்ஸ்ல வசனம் எழுதிட்டு இருந்தாரு", எனத் தன் பழைய கால நினைவுகளை அசைபோடுகிறார் சுந்தரவள்ளியம்மா.

மேலும் தொடர்ந்தவர், "ஜெய்சங்கர், சிவகுமார் எல்லாரும் வருவாங்க. பனைவெல்லம், சுக்கு போட்ட டீ ஜெய்சங்கருக்கு ரொம்ப பிடிக்கும். சில நடிகைகளுக்கு அகத்திக்கீரை உப்பு போடாம வேகவச்சு தரச்சொல்லுவாங்க. ஆனால் மாடர்ன் தியேட்டர்ஸ் கொஞ்ச நாள்ல பணக்கஷ்டத்துல முடங்கிப்போச்சு. என் வீட்டுக்காரர் இறந்ததுக்கு அப்பறம் கடைய நடத்தவும் ஆள் இல்லை. அதனால நாங்களும் இதை அப்படியே விட்டுட்டோம்", என்றார்.

The remains of the old studio in Salem
The remains of the old studio in Salem

மாடர்ன் தியேட்டர்ஸின் வண்ணமிழந்த எதிர்காலத்திற்கு சாட்சியாக அதன் நுழைவு வாயில் மட்டும் சிதிலமடைந்து நின்று கொண்டிருக்கிறது. அதை அண்ணாந்து பார்த்து கடந்து போகிறவர்களிடம் மாடர்ன் தியேட்டர்ஸின் கடந்த கால வரலாற்றை கதையாக சொல்லிக் கொண்டிருக்கிறது அதன் நுழைவுவாயில்.