கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

இந்திய சினிமாவின் நம்பிக்கை முகங்கள்!

 பூமி பெட்னேகர்
பிரீமியம் ஸ்டோரி
News
பூமி பெட்னேகர்

சினிமா

திரைப்படங்கள் மக்களைச் சென்றடையும் தளங்கள் மாறினாலும் வடிவம் மாறினாலும் புதுமையான கலைப்படைப்புகளே காலத்தில் நிலைத்துநிற்கின்றன. ஓடிடி, டிடிஹெச் ரிலீஸ், `pay per view' மாடல் என சினிமா காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டிருக்கிறது. திரைக்கலைஞர்களும் இத்தகைய மாற்றங்களைக் கண்டுணர்ந்து எதிர்காலம் இனி இப்படித்தான் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவைத் தவிர்த்து, பிற மொழிகளில் தன் ஸ்டார் வேல்யூவைப் பற்றிக் கவலைப்படாமல் வித்தியாசமான கதைக்களங்களையும், துணிச்சலான முயற்சிகளையும் கொண்டாடும் சில நம்பிக்கையூட்டும் முகங்கள் இங்கே...

ஆயுஷ்மான் குரானா

ஸ்டார் என்று பெயர் எடுப்பது சுலபம். ஆனால், தேர்ந்த நடிகர் என்று எல்லாரையும் ஏற்றுக்கொள்ள வைப்பதுதான் கடினமான ஒன்று. கிட்டத்தட்ட ஆறு படங்கள் அடுத்தடுத்து சூப்பர் ஹிட். அவை கமர்ஷியல் படங்களாக மட்டுமல்லாமல் ஒவ்வொன்றிலும் ஏதேனும் வித்தியாசமாக முயன்று, தான் ஒரு சிறந்த நடிகர் என்றும் பெயர் எடுத்தவர் ஆயுஷ்மான் குரானா. சரியான கதையைத் தேர்ந்தெடுக்கும் வித்தை தெரிந்தவர் ஆயுஷ்மான். தற்போதைய பல முன்னணி நடிகர்களைப்போலவே ஆயுஷ்மானும் டிவி வழி வந்தவர். ரியாலிட்டி ஷோ ஒன்றில் போட்டியாளராக வந்து, பின்பு தொகுப்பாளராக மாறி, மேடை நாடகங்களிலும் நடித்து அதன் மூலம் கிடைத்த புகழால் சினிமா வாய்ப்பை எட்டிப் பிடித்தவர். முதல் படமே ஷூஜித் சர்கார் இயக்கிய ‘விக்கி டோனர்.’ சொகுசு வாழ்க்கை வாழ, தன் விந்தணுவைப் பணத்திற்காகத் தானம் செய்யும் ஜாலி இளைஞன் பாத்திரம்தான் இவரின் முதல் ஹீரோ வேடம். தயங்காமல் களம் கண்டு மக்களின் ஆதரவைப் பெற்றார். (இந்தப் படம்தான் சில மாற்றங்களுடன் தற்போது `தாராள பிரபு' என்று தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.)

முதல் படம் வெற்றி என்றாலும் பின்னர் மூன்று படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன. ஆயுஷ்மான் `ஒன் டைம் வொண்டர்தான்' என்ற பேச்சு எழுந்தது. வெற்றி அவசியம் என்பதை உணர்ந்தவர், நெகிழ்ச்சியான ரொமான்டிக் படங்கள் பக்கம் தாவினார். பின்னர் 2018-ல் இருந்துதான் முற்றிலும் வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கினார். விழிச்சவால் கொண்ட, அதே சமயம் அப்படி இல்லாத, சவாலான நாயகன் வேடத்தை `அந்தாதுன்' படத்தில் ஏற்று நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ஆயுஷ்மானின் அடுத்த பாய்ச்சல் சாதிய அரசியலைத் தோலுரித்த `ஆர்ட்டிகள் 15' மூலம் நிகழ்ந்தது. `பதாய் ஹோ', `ட்ரீம் கேர்ள்', `பாலா' என ஆயுஷ்மான் தொட்டதெல்லாம் ஹிட்டானது. அதற்குக் காரணம் ஒவ்வொன்றிலும் எதையாவது புதிதாக முயலும் துணிச்சல் மனப்பான்மை.

ஆயுஷ்மான் குரானா - கியாரா அத்வானி -  ராஷ்மிகா மந்தனா - ராஜ்குமார் ராவ்
ஆயுஷ்மான் குரானா - கியாரா அத்வானி - ராஷ்மிகா மந்தனா - ராஜ்குமார் ராவ்

ராஜ்குமார் ராவ்

பாலிவுட்டில் பத்து வருடங்களைக் கடந்திருக்கும் ராஜ்குமார் ராவ்வின் பலமே எந்த நடிகரும் பலமுறை யோசிக்கும் துணிச்சலான கதைகளைத் தயக்கமின்றி ஏற்று நடிப்பது. நடிகர் மனோஜ் பாஜ்பாயைப் பார்த்து நடிப்புப் பயிற்சியை மேற்கொண்டவருக்கு ஹீரோவாகும் வாய்ப்பு, `லவ், செக்ஸ் அவுர் தோக்கா' என்ற ஆந்தாலஜி படம் மூலம் கிடைத்தது. பின்னர் சில படங்களில் துணை நடிகராகத் தலைகாட்டியவர், அனுராக் காஷ்யப்பின் கண்களில் பட்டு, `கேங்க்ஸ் ஆப் வாஸேப்பூர்' படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கியப் பாத்திரத்தில் தோன்றினார். ஹீரோவாக அவரின் முதல் வெற்றி, `கை போ சே' படத்தின் மூலம் கிடைத்தது. அதே வருடம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட `ஷாஹித்' படம் மூலம் தேசிய விருதை எட்டிப்பிடித்தார். காவல் துறையால் சித்திரவதைக்கு உள்ளாகும் ஒரு பாத்திரத்தில் கண்களில் நீர் வரவைக்கும் அளவுக்கு ஒரு நடிகராக தன் வீரியத்தைக் காட்டியிருந்தார்.

வாழ்வாதாரத்துக்காக விவசாயத்தை விடுத்து நகருக்குக் குடிபெயரும் விவசாயியின் கஷ்டத்தைப் பேசிய `சிட்டி லைட்ஸ்' படத்தில் நாயகனாக மிளிர்ந்தவர், பின்னர் அபார்ட்மென்டுக்குள் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஒருவனின் போராட்டங்களைப் பேசிய `டிராப்டு' படம் மூலம் பிலிம்பேர் விருது வென்றார். தேர்தலின் முக்கியத்துவம் அறிந்திராத கிராமம் ஒன்றுக்குத் தேர்தல் அதிகாரியாகச் சென்று அவர் படும்பாடு அரசியல் பின்னணியுடன் சொல்லப்பட்டது. இந்தப் படம் தேசிய விருது பெற்றது. சீரியஸ் படங்களைத் தாண்டி ஜனரஞ்சகமான படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார் ராஜ்குமார். ஆயுஷ்மான் குரானாவுடன் `பரேய்லி கி பர்பி', காமெடி பேய்ப்படமான `ஸ்திரி', தன்பாலின ஈர்ப்பு காதலைப் பேசிய `ஏக் லடுக்கி கோ தேக்கா தோ ஐஸா லகா' எனக் கலந்துகட்டி விருந்து வைத்துள்ளார். கைவசம் நான்கு படங்கள் வைத்திருக்கும் ராஜ்குமார் பாலிவுட்டில் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்.

விஜய் தேவரகொண்டா

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோ என்றாலே மாஸ் ஏற்றும் சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டும், பன்ச் வசனங்கள் பேச வேண்டும், குறைந்தபட்சம் பத்து வில்லன்களையாவது ஒரு படத்தில் அடிக்க வேண்டும் என்பதுபோன்ற பல பிம்பங்களை உடைத்தவர் விஜய் தேவரகொண்டா. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த பாதை ரொமான்டிக் ஹீரோ. கிட்டத்தட்ட மாதவனின் முந்தைய காலப் படங்களைப்போல தன்னுடைய பலம் ரொமான்ஸ் என்பதை உணர்ந்து செயல்படுகிறார் இந்த விஜய். 'பெல்லி சூப்புலு' என்ற ரொமான்டிக் காமெடி மூலம் ஹீரோவானவர் முதல் படத்திலேயே நிறைய பெண் ரசிகைகளைப் பெற்றார். அடுத்து இவரை இந்தியா முழுவதும் கொண்டு சென்ற படம் `அர்ஜுன் ரெட்டி.' பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. தமிழ், இந்தி என ரீமேக் செய்யப்பட்ட இந்தப் படம் கிட்டத்தட்ட `தேவதாஸ்' கதையின் மறுபதிப்பு போலத்தான். ஆனால், காதல் தோல்வியால் குடிக்கு அடிமையானவராக விஜய் தேவரகொண்டாவின் அற்புதமான நடிப்பு படத்திற்கு மிகப்பெரும் மைலேஜைக் கொடுத்தது. `கீதா கோவிந்தம்' என மீண்டும் ஒரு ரொமான்டிக் மெகா ஹிட் படத்தைக் கொடுத்தவர், தெலுங்கு, தமிழ் என இருமொழிகளில் எடுக்கப்பட்ட `நோட்டா' எனும் அரசியல் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தார். `கீதா கோவிந்தம்' படத்தில் நாயகி ராஷ்மிகா மந்தனாவுடனான இவரின் கெமிஸ்ட்ரி பேசப்பட இந்த ஜோடி பின்னர் நடித்த `டியர் காம்ரேட்' படமும் கவனம் ஈர்த்தது. இது அனைத்து முக்கிய தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகி பெரிய மார்க்கெட்டைப் பிடித்தது. `அர்ஜுன் ரெட்டி' படம் பெண்களுக்கு எதிரானது, அது முழுக்க முழுக்க ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு என்ற இமேஜை `டியர் காம்ரேட்' மூலம் உடைத்தார் விஜய். பின்னர் `டாக்ஸிவாலா' என்ற பேய்ப்படத்தில் நடித்தவர், `வேர்ல்டு பேமஸ் லவ்வர்' மூலம் மீண்டும் `ஆணாதிக்க' விமர்சனங்களுக்கு உள்ளானார். விஜய்யின் ஒரே பிரச்னை அவ்வப்போது சர்ச்சையாகப் பேசி மாட்டிக்கொள்வது. சமீபத்தில் `எல்லோருக்கும் ஓட்டுரிமை கொடுக்கக்கூடாது' என்று இவர் பேசியதற்குப் பெரிய எதிர்ப்பலை உருவானது. பெயருக்கு காம்ரேட்!

விஜய் தேவரகொண்டா -  பூமி பெட்னேகர் - அன்னா பென்
 - டோவினோ தாமஸ்
விஜய் தேவரகொண்டா - பூமி பெட்னேகர் - அன்னா பென் - டோவினோ தாமஸ்

டோவினோ தாமஸ்

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதைத் தாண்டி பிறரின் பரீட்சார்த்த முயற்சிகளுக்குத் துணை நிற்பதும் ஒரு சிறந்த நடிகரின் உயர் பண்பு. நாயகனாக சாதித்ததாலும் ஈகோ பார்க்காமல் பல படங்களில் சிறப்புத் தோற்றங்களில் தோன்றிப் புதிய முயற்சிகளை எப்போதும் ஊக்குவிப்பவர் டோவினோ தாமஸ். தமிழ்நாட்டில் பொறியியல் படித்தவர், ஐடி கம்பெனி வேலையை விட்டுவிட்டு மாடலிங், பிட்னஸ் என வேறு பக்கம் புலிப் பாய்ச்சல் நிகழ்த்தினார். சில பல படங்களில் துணைக் கதாபாத்திரம், நாயகன் வேடம் எனக் கிடைத்த டோவினோவுக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் `என்னு நிண்ட மொய்தின்' படத்திற்காகப் பெற்ற சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது. அடுத்து `ஸ்டைல்' என்ற படத்தில் இரட்டை வேடம் பூண்டவர் `குப்பி' மற்றும் மாணவர்களின் அரசியல் பேசிய `ஒரு மெக்சிகன் அபரத்தா' மூலம் முன்னணி நடிகராக உருமாறினார். டோவினோவுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் என்றால் அது `மாயநதி.' 2017-ல் வெளியான ரொமான்டிக் த்ரில்லர் படமான இது, அந்த வருடத்தின் மிகப்பெரும் கவனம் ஈர்த்த படமாக அமைந்தது. `கோதா', `தீவண்டி', `என்டே உம்மன்டே பேரு' என பல ஜானர் படங்களில் நடித்தவர், `அபியும் அனுவும்', `மாரி 2' போன்ற படங்கள் மூலம் தமிழிலும் எட்டிப்பார்த்தார். `லூசிஃபர்', `உயரே', `வைரஸ்' போன்ற படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் தோன்றியவரின் கடைசி அதிரி புதிரி ஹிட், சீரியல் கில்லர் த்ரில்லரான `பாரன்சிக்.' அடுத்து பல மொழிகளில் வெளியாகவிருக்கும் `மின்னல் முரளி' என்ற சூப்பர் ஹீரோ படத்தில் நடித்துவருகிறார் டோவினோ தாமஸ். தொடர்ந்து பல மேஜிக்குகள் நிகழ்த்தவிருக்கிறார் டோவினோ!

கியாரா அத்வானி

நாயகியாக நடித்த படங்கள் 10-க்கும் குறைவு. ஆனால், பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக, கிட்டத்தட்ட `ஏ' லிஸ்டில் இருக்கும் தீபிகா படுகோன், கங்கனா ரணாவத் எனப் பலருடனும் இப்போதே போட்டிபோட்டுக்கொண்டிருக்கிறார் கியாரா அத்வானி. `அலியா அத்வானி' எனும் தன் இயற்பெயரை சினிமாவுக்காக `கியாரா அத்வானி' என மாற்றிக்கொண்டார். காரணம், `அலியா பட்' என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு நடிகை இருப்பதுதான். பல புது முகங்கள் நடித்த `F*Ugly' படம் மூலம் அறிமுகமானவருக்குப் பல இளைஞர்களின் ஹார்ட்டின் கிடைத்தது `தோனி' பயோபிக்கில்தான். அதில் தோனியின் காதல் மனைவி சாக்ஷியாக நடித்தவர், தன் இயல்பான நடிப்புத் திறனை அழகாக வெளிப்படுத்தினார். நெட்ப்ளிக்ஸுக்காக உருவான `லஸ்ட் ஸ்டோரீஸ்' ஆந்தாலஜி படத்தில் கரண் ஜோஹர் இயக்கிய கதையில் துணிவான கதாபாத்திரத்தில் தோன்றிப் பேசுபொருளானார். பின்பு தெலுங்கு சினிமா பக்கம் தலைகாட்டியவர் முன்னணி நாயகர்களான மகேஷ் பாபு மற்றும் ராம்சரண் ஆகியோரின் படங்களில் நடித்தார். பின்பு மீண்டும் இந்திப் பக்கம் போனவர் `அர்ஜுன் ரெட்டி'யின் இந்தி ரீமேக்கான `கபீர் சிங்'கில் தடம் பதித்தார். சென்ற வருட இறுதியில் அக்ஷய் குமார், கரீனா கபூர் நடித்த `குட் நியூஸ்' படத்தில் ஒரு கதாநாயகியாக நடித்தவர், பின்னர் `#MeToo' தொடர்பாக நெட்ப்ளிக்ஸ் தயாரித்த `கில்டி' படத்தில் படு போல்டான பாத்திரத்தில் தோன்றினார். தற்போது அக்ஷய் குமாருடன் இவர் நடித்திருக்கும் `காஞ்சனா' ரீமேக்கான `லக்ஷ்மி பாம்' தீபாவளிக்கு ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கிறது. அடுத்து அப்படியே கோலிவுட் பக்கமும் வந்துருங்க கியாரா!

கியாரா அத்வானி -  பூமி பெட்னேகர்
கியாரா அத்வானி - பூமி பெட்னேகர்

ராஷ்மிகா மந்தனா

அம்மணி சினிமாவில் அறிமுகமாகியே நான்கு வருடங்கள்தான் ஆகின்றன. அதற்குள் கன்னடம், தெலுங்கு என அடுத்தடுத்து பத்துப் படங்கள் நடித்துவிட்டார். தமிழிலும் இந்தியிலும் அறிமுகமாகவிருக்கிறார். இந்தக் கன்னடத்துப் பைங்கிளி அறிமுகமான முதல் படம் `கிரிக் பார்ட்டி' அங்கே மெகா ஹிட். காலேஜ் லைப் பற்றிய படம் அங்கே மிகப்பெரிய டிரெண்டு செட்டராக மாறியது. அதற்கடுத்த வருடமே மேலும் இரண்டு கன்னடப் படங்களில் கலக்கியவர், தெலுங்கில் `சலோ' என்ற கல்லூரிப்படத்தில் தமிழ்ப் பெண்ணாக ஸ்கோர் செய்தார். விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி தெலுங்கில் சென்றடையக் காரணமாக அமைந்த `கீதா கோவிந்தம்' மற்றும் `டியர் காம்ரேட்' படங்கள். குறிப்பாக `லில்லி' என்ற கிரிக்கெட்டராக `டியர் காம்ரேட்' படத்தில் நடித்து, தான் சிறந்த நடிகை என்பதை மீண்டும் அழுத்தமாகப் பதிவு செய்தார். இந்த வருட சங்கராந்திக்கு மகேஷ் பாபுவுடன் இவர் நடித்த `சரிலேறு நீக்கெவரு' படம் மாஸ் டெம்போவை ஏற்றி இவரை கமர்ஷியல் நாயகியாக அடையாளம் காட்ட, இதே வருடம் `பீஷ்மா' படத்தில் நித்தினுடன் கைகோத்து அந்த பிம்பத்தை அழியாமல் பார்த்துக்கொண்டார். தற்போது ஒரு கன்னடம் மற்றும் தெலுங்குப் படத்தைக் கையில் வைத்திருப்பவர், கார்த்தியின் `சுல்தான்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகவிருக்கிறார். நல்வரவு ராஷ்மிகா!

பூமி பெட்னேகர்

கிட்டத்தட்ட ஆயுஷ்மான் குரானாவும் இவரும் ஒரே நேரத்தில் தங்கள் பயணத்தைத் தொடங்கியவர்கள். அதனாலோ என்னவோ அவருடனே நான்கு படங்களில் நடித்துவிட்டார். இவரின் வாழ்க்கைப் பயணம் சுவாரஸ்யமானது. மராத்தியரான இவரின் அப்பா மகாராஷ்டிராவில் முழுநேர அரசியல்வாதியாக இருந்தவர், அமைச்சராகவும் பதவிகள் வகித்தவர். புற்றுநோயால் அவர் இறந்துவிட, பூமியின் தாயார் தன் கணவரின் உயிரைப் பறித்த புகையிலைக்கு எதிரான இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 15 வயதில் நடிப்பில் ஆர்வம் என்று கல்விக்கடன் பெற்று வெளிநாடு சென்று நடிப்புக் கல்லூரியில் இணைந்தார். ஆனால், அங்கே வருகைப் பதிவு சதவிகிதம் குறைவு என இவரை வீட்டுக்கு அனுப்பிவிட ஆறு வருடங்களுக்கும் மேலாக பாலிவுட்டின் புகழ்பெற்ற யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து தன் கல்விக்கடனை அடைத்தார். கதாநாயகியாக இவர் அறிமுகமான முதல் படம் பெரிய நடிகையான பின்னர்கூட பலரும் ஏற்கத் தயங்கும் கதாபாத்திரம். எடை அதிகமுள்ள ஒரு பெண்ணாக, தன் கணவனே ஏற்க மறுக்கும் ஒரு மனைவியின் பாத்திரம். ஆனாலும் அதில் தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாக மிளிர்ந்தார் பூமி. கதாநாயகனான ஆயுஷ்மானுடன் இவர் போட்டிபோட்டு நடித்த இந்தப் படம் பல விருதுகளைக் குவித்து சூப்பர்ஹிட் ஆனது. பின்னர் அக்ஷய் குமாருடன் இவர் நடித்த `டாய்லெட்: ஏக் பிரேம் கதா' கழிவறை அரசியலைப் பேசியது. சம்பல் பள்ளத்தாக்கில் இருக்கும் கொள்ளைக்காரர்களின் வாழ்வியல், அதன் பின்னான அரசியல் மற்றும் சாதிச்சண்டைகள் போன்றவற்றை தைரியமாக எடுத்துரைத்த `சோன்சிரியா' படத்தில் சுஷாந்த் சிங்குடன் மிகவும் முக்கியமான பாத்திரம் ஒன்றிலும் நடித்தார். ஆயுஷ்மானுடன் இவர் நடித்த `ஷுப் மங்கள் சாவ்தான்' ('கல்யாண சமையல் சாதம்' ரீமேக்), `பாலா', `ஷுப் மங்கள் ஜ்யாதா சாவ்தான்' போன்ற படங்கள் கவனம் பெற்றன. தற்போது பூமி, அனுஷ்கா நடிப்பில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியான `பாகமதி' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துவருகிறார்.

அன்னா பென்

இந்த லிஸ்ட்டில் கடைக்குட்டி அன்னா பென்தான். சென்ற வருடம்தான் மலையாளத் திரையுலகுக்கு என்ட்ரி கொடுத்தார். இவர் நடித்து மூன்று படங்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. ஆனால், அதற்குள் கடவுளின் நாட்டில் கவனம் பெறத் துவங்கிவிட்டார். வித்தியாசமான கதைக்களம், எளிய இயல்பான கதை மாந்தர்கள், நடிப்பு அசுரன் பகத் பாசில், தற்போது மலையாளத் திரையுலகையே கலக்கிக்கொண்டிருக்கும் சௌபின், ஷேன் நிஜாம் என `கும்பளாங்கி நைட்ஸ்' படத்துக்குப் பல அடையாளங்கள் இருந்தும் அதில் பேபி மோலாக அன்னா கவனம் பெற்றார். அடுத்து `ஹெலன்' படத்தில் மாமிசத்தைப் பதப்படுத்தி வைக்கும் ப்ரீஸர் அறைக்குள் மாட்டிக்கொண்டு வெளியே வரப் பாடுபடும் பெண்ணின் பாத்திரம். கிட்டத்தட்ட பாதிப்படத்தில் ஹெலனாக அன்னா பென் மட்டுமே திரையில் இருப்பார். பரிதவிப்பு, போராட்டம், அழுகை, எழுச்சி, பதைபதைப்பு எனப் பல கோணங்களைத் தொட்ட அன்னாவின் நடிப்பு படத்தை வேறு தளத்திற்குக் கொண்டு சென்றது. அடுத்து இந்த வருடம் லாக்டௌனில் அதிக கவனம் ஈர்த்த மலையாளப் படங்களில் ஒன்றான `கப்பேலா' படத்தின் நாயகி அன்னாதான். பார்க்காமல் காதல், பெண்களைப் பின்தொடரும் `Stalking' பிரச்னை போன்ற விஷயங்களைத் தொட்ட ரொமான்டிக் படமான இதில் அன்னாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. பக்கத்து வீட்டுப் பெண்ணின் முகம், இயல்பான நடிப்பு போன்றவை அன்னா பென்னின் ஆகச்சிறந்த ப்ளஸ்கள்!