``அப்பா இல்லைன்னா...'', ``ரீமேக் ஸ்டார்'' - விமர்சனங்கள் உண்மையா, விஜய் வளர்ந்தது எப்படி? #HBDVijay

அப்பாவால் தூக்கிவிடப்பட்டவர், ரீமேக் படங்கள் மூலம் ஸ்டார் ஆனவர் இந்த இரண்டு விமர்சனங்களும்தான் நடிகர் விஜய்யைப் பற்றி பலரும் முன்வைப்பது. இந்த விமர்சனங்கள் உண்மையா?
தமிழ் சினிமா கடந்த 80 ஆண்டுகளில் பல ஹீரோக்களை சந்தித்துவிட்டது. அதில் சிலர் மட்டுமே மக்கள் மனதை ஆட்சி செய்து மாஸ் ஹீரோக்களாக உருவெடுக்கின்றனர். அப்படியான மாஸ் அந்தஸ்தைப் பெற்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்திருக்கும் இந்தத் தலைமுறையின் ஒரு உச்ச நட்சத்திரம் விஜய். 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய், எந்த அளவுக்குப் பாராட்டப்பட்டிருக்கிறாரோ அதே அளவிலான விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார். அப்படியான விமர்சனங்களில் முக்கியமானவை இரண்டு.

முதலாவது, அப்பாவால் தூக்கிவிடப்பட்டவர். இரண்டாவது, ரீமேக் படங்கள் மூலம் ஸ்டார் ஆனவர். இந்த இரண்டு விமர்சனங்களுக்கும் விஜய்யிடம் உள்ள பதில்கள் என்ன?
தமிழ் சினிமா வரலாற்றில் வாரிசு நடிகர்கள் ஏராளம். விஜய்க்கு முன்னும் விஜய்க்குப் பின்னும் எவ்வளவோ பேர் வாரிசுகளாக சினிமாவுக்குள் வந்துள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் அதிகம் சந்திக்காத இந்த விமர்சனத்தை விஜய் மட்டும் அதிகம் சந்திக்க நேரிடுவது ஏன் என்ற கேள்வி நமக்குள் நிச்சயம் இருக்கும்.

அந்தக் கேள்விக்கான பதில்... `இதுவரை வந்த வாரிசு நடிகர்களில், எவரும் விஜய் அளவுக்கு அனைத்து வயதினரையும் கவர்ந்து மாஸ் ஹீரோவாக வளரவில்லை' என்பதுதான். அப்படி வாரிசு நடிகர்களில் வேறு எவரேனும் விஜய் போல மாஸ் ஹீரோவாக வளர்ந்திருந்தால் அவர்கள் மீதும் இப்படியான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

வாரிசு நடிகர்களில் பலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர்கள் இருந்தாலும் விஜய்க்கு இருக்கும் மாஸ் அந்தஸ்து வேறெந்த வாரிசு நடிகருக்கும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் ரஜினி படங்களுக்கு இணையாக அதிகம் வசூல் செய்வது விஜய் படங்கள்தான். அதுவும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான `பிகில்' படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் சாதனையில் விஜய்யை உச்சத்துக்கு உயர்த்திவிட்டது.
தனியொரு மனிதனாக சினிமாவுக்குள் வந்து ஜெயிப்பதென்பது பெரிய சாதனைதான். அதே நேரத்தில் ஒரு சினிமா பிரபலத்தின் வாரிசாகவோ, சொந்தக்காரராகவோ இருந்து, அந்த பிரபலத்தின் மூலம் வாய்ப்பு பெற்று சினிமாவில் வெற்றி காண்பதும் சாதாரண விஷயமில்லை. எவரின் உதவியும் இன்றி சினிமாவுக்குள் வந்து தோல்வி கண்டால் யாரும் நம்மைப் பற்றி அதிகம் குறை கூறிப் பேசப்போவதில்லை. ஆனால், ஒரு பிரபலத்தின் மகனாக இருந்து சினிமாவுக்கு வந்து தோல்வி கண்டால், தோல்வி கண்டவரை மட்டுமல்ல அவரை அறிமுகப்படுத்திய பிரபலத்தையும் சேர்த்து விமர்சிப்பார்கள்.
விஜய் நடிக்க வந்தபோதும் இதே நிலைமைதான். விஜய்க்கு சினிமாவில் தனக்கென ஒரு இடம் பெறுவது மட்டுமல்ல, அப்பாவுக்கு இருந்த நல்ல இயக்குநர் என்ற பெயரையும் சேர்த்துக் காப்பாற்ற வேண்டியிருந்தது. விஜய், ஆரம்ப காலத்தில் எவ்வளவோ அவமானங்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார். விஜய் மட்டுமல்ல எஸ்.ஏ.சந்திரசேகரும் `காசு இருக்குனு புள்ளைய வெச்சு படம் எடுக்குறாரு' என்பது போன்ற பல அவமானங்களைச் சந்திக்க நேரிட்டது.

ஆனால், இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்துவிட்டார் விஜய். தன்னை அறிமுகப்படுத்திய அப்பாவின் பெயரைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல் `விஜய்யை அறிமுகப்படுத்தியவர்' என்ற பெருமையையும் எஸ்.ஏ.சந்திரசேகருக்குப் பெற்றுத்தந்திருக்கிறார்.
`பெரிய இயக்குநரோட புள்ள அதான் பெரிய ஹீரோ ஆயிட்டாரு' என்று விஜய்யின் வளர்ச்சியை இரண்டு வரிகளில் கடந்து செல்லலாம். ஆனால், இந்திய சினிமா மொத்தத்தையும் எடுத்துக் கொண்டால் எஸ்.ஏ.சந்திரசேகரைவிட பெரிய இயக்குநர்கள், பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய தயாரிப்பாளர்களின் வாரிசுகள்கூட சினிமாவுக்கு வந்து ஜொலிக்கத் தவறியிருக்கிறார்கள்.

அரசியலில் ஒரு பெரும்புள்ளியின் பிள்ளை, தன் தந்தையின் செல்வாக்கையும் பண பலத்தையும் வைத்து மக்களிடம் வாக்குகளைப் பெற்று மந்திரியாகிவிட முடியும். ஆனால், எவ்வளவு பெரிய பிரபலத்தின் பிள்ளையாக இருந்தாலும் சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் திறமை இல்லையென்றால் தூக்கியெறியப்படுவார்கள்.
பிள்ளைகள் ஆசைப்படுவதில், தங்களால் முடிந்தவற்றையெல்லாம் எப்படியாவது பிள்ளைகளுக்குச் செய்துவிட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். அதைத்தான் எஸ்.ஏ.சியும் செய்தார். பிடித்ததைப் படிக்க வேண்டுமென்று அப்பாவிடம் பிள்ளைகள் கேட்பதைப்போல விஜய், `நான் நடிக்க வேண்டும்' என்று கேட்டிருக்கிறார். விஜய்யின் அப்பா இயக்குநர் என்பதால் நடிக்கும் வாய்ப்பு எளிதாகக் கிடைத்துவிட்டது. ஆனால், அப்பா இயக்குநர் என்பதால் மட்டும் கேமரா முன்னால் நின்றவுடன் நடிப்பு தானாக வந்துவிடாது. நடிப்பு வந்துவிட்டாலும் மக்கள் மனதில் இடம் பிடிப்பது மிகவும் கஷ்டம்.
மக்கள் மனதில் ஒரு நடிகனாக, ஸ்டராக இடம்பெறுவதற்கான அத்தனை திறமைகளையும் தனது முயற்சிகள் மூலமும் பயிற்சிகள் மூலமும் தானாகவே வளர்த்துக்கொண்டதால்தான் இன்றைக்கு விஜய் விஜய்யாக இருக்கிறார்.

அப்பாவின் தயவில் சினிமாவுக்கு வந்த விஜய்யின் வெற்றியைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்...
விஜய் நடிக்க வந்தபோது, எஸ்.ஏ.சியின் மகன் என்று அடையாளம் காணப்பட்டார். இன்றைக்கு விஜய்யின் அப்பாவாக எஸ்.ஏ.சி அடையாளம் காணப்படுகிறார்.
ரீமேக் ஸ்டார் விஜய்?
ரீமேக் படங்கள் மூலம்தான் விஜய் பெரிய ஸ்டரானார் என்ற விமர்சனமும் அவர் மீது அடிக்கடி வைக்கப்படும் ஒன்று.
இன்றும் தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக இருக்கும் ரஜினி, கமல் ஆகிய இருவருமே எக்கச்சக்க ரீமேக் படங்களில் நடித்துள்ளனர். `பில்லா', `தீ', `பணக்காரன்', `முத்து', `தில்லு முல்லு', `விடுதலை', `மிஸ்டர் பாரத்' தொடங்கி `குசேலன்', `சந்திரமுகி' வரை ரஜினி நடித்த ரீமேக் படங்களின் லிஸ்ட் பெரியது. அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான 11 படங்களின் தமிழ் ரீமேக்கில் நடித்தவர் ரஜினிகாந்த். `சத்யா', `குருதிப்புனல்', `உன்னைப் போல் ஒருவன்', `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்', `பாபாநாசம்' எனக் கமலும் நிறைய படங்களின் தமிழ் ரீமேக்கில் நடித்திருக்கிறார். ஆனால், இவர்கள் இருவருக்கும் இல்லாத `ரீமேக் ஸ்டார்' என்ற பெயர், விஜய்யை தேடி வந்து ஒட்டிக்கொண்டது ஏன்?

அஜித், சூர்யா உள்ளிட்ட இந்தத் தலைமுறையின் அனைத்து முன்னணி நடிகர்களுமே ரீமேக் படங்களில் நடித்திருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது ரீமேக் படங்களில் விஜய்யின் வெற்றி விகிதம் மிகவும் அதிகம். விஜய்யின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் `கில்லி'. தெலுங்கில் வெளியான `ஒக்கடு' படத்தின் ரீமேக்தான் `கில்லி'. தெலுங்கில் அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிதான். ஆனால், தமிழ் சினிமாவில் `கில்லி' ஒரு மைல்கல் படமாக மாறியது. கில்லியின் வெற்றி விஜய்யை அடுத்த தலைமுறையின் முன்னணி கதாநாயகனாக மாற்றியது.
இன்னொரு மொழியில் ஹிட் அடித்த படத்தைத் தமிழில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்படி ரீமேக் செய்து வெற்றி காண்பது சுலபமல்ல. தமிழின் முன்னணி கதாநாயகர்கள் நடித்து வெளியான பல ரீமேக் படங்கள் தோல்வி கண்டிருப்பதை வைத்து நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பல ரீமேக் படங்களே தோல்வியடைந்துள்ளன.
கமல் நடித்த ரீமேக் படங்களில் பெரும்பாலானவை வெற்றிப் படங்கள்தான். ஆனால், அவர் மீது ரீமேக் தொடர்பான விமர்சனங்கள் ஏன் வைக்கப்படவில்லை என்று கேட்கலாம். இந்தியாவில் உள்ள எந்த மொழி சினிமாவை எடுத்துக் கொண்டாலும் அந்த சினிமாவில் உள்ள ஜாம்பவான்கள் தொடங்கி கத்துக்குட்டிகள் வரை வெற்றிப் படங்களை ரீமேக் செய்து வெளியிடுவதென்பது அடிக்கடி நிகழக்கூடிய ஒரு சாதாரண விஷயம்தான்.

இக்கால இளைஞர்கள் சோஷியல் மீடியாவில், தங்களது நாயகனை உயர்த்திப்பிடிக்க மற்றொரு நாயகனை ஏதாவது குறை கூறி விமர்சனங்கள் வைக்கிறார்கள். ஒரு சினிமா நமக்கு உற்சாகத்தைத் தருகிறதா நல்ல பொழுதுபோக்காக அமைகிறதா என்பதை விடுத்து `படம் முழுக்க நடந்துகொண்டே இருக்கிறார்', `ஹீரோயினைவிட உயரம் குறைவாக இருக்கிறார்' என்பது போன்ற சப்பை காரணங்களைச் சொல்லிப் பலரும் ஹீரோக்களை விமர்சிக்கிறார்கள். அப்படியான சப்பைக் காரணங்களுள் ஒன்றாகத்தான் இந்த `ரீமேக் ஸ்டார்' என்ற விமர்சனத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

கமல், ரஜினி காலகட்டத்திலும் ரசிகர்கள் சண்டை இருக்கத்தான் செய்தது. ஆனால், இக்கால இளைஞர்களைப்போல தினமும் சண்டையிட்டுக்கொள்ளும் வழக்கமும் வசதியும் அப்போதில்லை. எனவே, படங்கள் வெளியாகும்போது யாருடைய கட் அவுட் பெரியது, யார் அதிக தோரணம் கட்டியது, படம் எப்படி இருக்கிறது என்பதிலேயே சண்டைகள் முடிந்துவிடும். இந்தக் காரணங்களால்தான் கமலுக்கு அப்படியான விமர்சனங்கள் எதுவும் எழவில்லை. அதுமட்டுமல்லாமல் சினிமாக்களில் ரீமேக் என்பது அடிக்கடி நிகழும் சாதாரண விஷயம் என்பதாலும் அதைப் பற்றிய விவாதங்கள் எழாமல் இருந்திருக்கலாம்.
இப்போது மீண்டும் விஜய்யின் கதைக்கு வருவோம்...
மற்ற மொழிப் படங்களை விஜய் ரீமேக் செய்து நடித்ததைவிட மற்ற மொழிகளில் விஜய்யின் படங்கள் ரீமேக் செய்யப்பட்டதுதான் அதிகம்.
இன்றைய தலைமுறை தமிழ் நடிகர்களின் படங்களில், வேற்று மொழியில் அதிகம் ரீமேக் ஆன படங்கள் விஜய் நடித்தவைதான். தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் விஜய்யின் வெற்றிப் படங்களான `லவ் டுடே', `குஷி', `திருப்பாச்சி' ஆகியவற்றை ரீமேக் செய்து தெலுங்கு சினிமாவில் வெற்றி கண்டவர். பவன் கல்யாணின் அண்ணனும் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாருமான சிரஞ்சீவி, தனது 150-வது படமாக விஜய் நடித்த `கத்தி' படத்தைத்தான் ரீமேக் செய்து பிரமாண்ட வெற்றி கண்டார்.

விஜய்யின் சில படங்கள் வங்காளம், பஞ்சாபி, ஒரியா, சிங்களம் ஆகிய மொழிகளில்கூட ரீமேக் செய்யப்பட்டுள்ளன.

`அப்பா தயவில் வந்தவர்', `ரீமேக் படங்களால் ஸ்டார் ஆனவர்' என்று தன் மீது வைக்கப்படும் ஒவ்வொரு நெகட்டிவ் விமர்சனத்தையும் Ignore செய்துவிட்டு தன் படங்களின் வெற்றிகள் மூலம் அந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுத்திருக்கிறார் விஜய். நெகட்டிவ் விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு அமைதியாகத் தங்கள் வேலையைச் செய்துகொண்டிருப்பவர்கள் எப்போதுமே வெற்றியடைவார்கள் என்பதற்கு விஜய்யும் ஓர் உதாரணம்.
பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்!