Published:Updated:

இளைய தளபதி டு தளபதி... தளபதி டு தலைவன்! தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான விஜய்யின் வின்னிங் வரலாறு!

விஜய்
News
விஜய்

விஜய்யின் ‘பீஸ்ட்' படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்திருக்கிறது. விஜய்யின் 66-வது படம் என்ன, விஜய் தனது 67-வது படத்தை எந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு கொடுக்கப்போகிறார் என விஜய்யை சுற்றித்தான் இன்று தமிழ் சினிமா வியாபாரமும், வர்த்தகமும் நடந்துகொண்டிருக்கிறது.

சினிமா உலகம் தியேட்டரில் இருந்து ஓடிடி நோக்கி வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் கடைசி சூப்பர் ஸ்டார் யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஓடிடி பிளாட்ஃபார்முக்கென இனி படங்கள் தயாராகும் என்பதால் மாஸ் ஹீரோ பில்ட்அப்கள், பன்ச் டயலாக்குகள், ஓப்பனிங் பாடல்கள் என்கிற கான்செப்ட் சினிமாவில் இருக்காது என்பதே கணிப்பு. அதனால், எம்ஜிஆர், ரஜினி வரிசையில் இந்தத் தலைமுறையின் உச்சநட்சத்திரம் யார்?!

''ஒரு குழந்தை உருவாக பத்து மாசம், ஒரு பட்டதாரி உருவாக 3 வருஷம், ஆனா, ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவைப்படுது...'' - 'மெர்சல்' படத்தில் விஜய்யின் வசனம் இது. ஆமாம்... தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஸ்டாராக உயர்வதற்கு விஜய்க்கு 28 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. 1992-ம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முதல் படியில் ஏறிய விஜய் இன்று உச்சத்தில் நின்றுகொண்டிருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

படம் சுமார், கதை சுமார், லாஜிக்குகள் இல்லை, ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் என அத்தனையையும் தாண்டி 'பிகில்'தான் 2019-ம் ஆண்டின் வசூல் நம்பர் 1. 300 கோடி ரூபாய் வருமானம் என வரிமானவரித்துறையே சாட்சியம் அளித்திருக்கிறது. இது அத்தனையும் சாத்தியமானது விஜய் எனும் ஒற்றைமனிதனுக்காகத்தான். தீபாவளி, பொங்கலைப்போல அவர் பட ரிலீஸ் நாட்களை தமிழ்நாட்டின் திருவிழாவாக மாற்றியிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

விஜய்
விஜய்

கொரோனா பயம்போக்க, தியேட்டர்கள் மீண்டும் பழையபடி கொண்டாட்டத்துக்குத் தயாராக தமிழ் சினிமாவுக்கு விஜய்யின் ‘மாஸ்டர்' வரவேண்டியிருந்தது. கொரோனா சூழலிலும் வசூல் சாதனைகள் படைத்து தன் இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் விஜய். ஓடிடிக்கு விற்கப்படும் படங்களிலும் அதிக விலைக்கு விற்பனையாவது விஜய் படங்களே!

இப்போதே விஜய்யின் அடுத்தப் படமான ‘பீஸ்ட்' படத்துக்கான எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்திருக்கிறது. விஜய்யின் 66வது படம் என்ன, விஜய் தனது 67வது படத்தை எந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு கொடுக்கப்போகிறார் என விஜய்யை சுற்றித்தான் இன்று தமிழ் சினிமா வியாபாரமும், வர்த்தகமும் நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விஜய் நடித்து ரிலீஸாகும் படங்கள்தான் தமிழ்நாட்டின் சென்சேஷன்.

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக, உச்சநட்சத்திரமாகப் பல ஆண்டுகளுக்கும் மேலாக முதலிடத்திருக்கும் ரஜினியின் உச்சத்தை இப்போது விஜய் தொட்டுவிட்டார் என்பதே உண்மை. ''இன்று சம்பளத்திலும் சரி, சினிமா வியாபாரத்திலும் சரி, ரசிகர்களின் எண்ணிக்கையிலும் சரி முதலிடத்தில் இருப்பவர் விஜய்தான்'' என்கிறார்கள் சினிமாத்துறையின் சீனியர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1995-ம் ஆண்டு ரஜினிக்கு 'பாட்ஷா' படம் வெளியானது. அப்போது அவரது வயது 45. வியாபார ரீதியாக ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தப் படம் 'பாட்ஷா'தான். இந்தப் படத்துக்குப் பிறகுதான் அவர் சினிமா வாழ்க்கைக்குள் அரசியல் குறுக்கீடுகள் அதிகமானது. அவரும் அரசியல் பேச ஆரம்பித்தார். ரஜினி பேசுவதெல்லாமே தலைப்புச் செய்திகளாகின. போயஸ் கார்டனில் இருந்து இன்னொரு பவர் சென்டர் உதயமானது. அதேப்போல் விஜய்யின் 45-வது வயதில் ரிலீஸானப் படம் 'பிகில்'. விஜய்யின் சம்பளத்தை, வியாபாரத்தை, ரசிகர் செல்வாக்கை உச்சத்துக்கு கொண்டுபோய் நிறுத்தியிருக்கும் படம். இப்போது ஐடி ரெய்டு மீண்டும் அவரை அரசியல் ஆட்டத்துக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

விஜய்
விஜய்

எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக கோலிவுட்டுக்குள் அடியெடுத்துவைத்த விஜய்க்கு யாரும் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துவிடவில்லை. தயாரிப்பாளர்கள் யாரும் இவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க முன்வராத நிலையில் அப்பாவே தயாரிப்பாளரானார். ''இதெல்லாம் நான் நடித்தப் படங்கள்'' என விஜய்யே வெளியே சொல்லிக்கொள்ள முடியாத படங்கள்தான் அவரது ஃபிலிமோகிராஃபியின் ஆரம்பம். 'உங்கள் விஜய்', 'உங்கள் விஜய்' என்கிற எஸ்.ஏ.சி-யின் முயற்சிகள் திணிப்புகளாகவே இருந்தன. ஆனால் 'பூவே உனக்காக' படத்தில் இயக்குநர் விக்ரமனும், 'காதலுக்கு மரியாதை' படம் மூலம் ஃபாசிலும் விஜய்யின் ட்ராக்கையே மாற்றினார்கள். முதல்முறையாக 'பூவே உனக்காக' படத்துக்கு குடும்பங்கள் வந்தன. 'காதலுக்கு மரியாதை' இளைஞர் கூட்டத்தை விஜய்க்கு சேர்த்ததோடு, மக்கள் மனதிலும் பெரிய மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்தது.

90'ஸில் வெளிவந்த விஜய் பட காதல் பாடல்கள் எல்லாம் ரேடியோ வைரல்களாகின. இயக்குநர் ரமணாவின் 'திருமலை' அவரை ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது. 'கில்லி' அவரை மிகப்பெரிய கமர்ஷியல் மாஸ் ஹீரோவாக மாற்றியது. 'திருப்பாச்சி', 'சிவகாசி', 'போக்கிரி' என அதே ரூட்டில் போனவருக்கு திடீர் சரிவு. 'அழகிய தமிழ் மகன்', 'குருவி', 'வில்லு', வேட்டைக்காரன்’ என அடுத்தடுத்தப் படங்கள் அத்தனையும் ஃப்ளாப்.

ஆனந்த விகடனில் விஜய்க்கு கவர் ஸ்டோரி கடிதம் வெளியானது. '' மற்ற நடிகர்கள் எல்லாம் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டும்போது நீங்கள் குறைந்தபட்சம் ஹேர் ஸ்டைலைக்கூட மாற்ற ரெடியாக இல்லை. 'வேட்டைக்காரன்' போஸ்டருக்கும் 'சுறா' போஸ்டருக்கும் அனுஷ்கா, தமன்னாவை வைத்துத்தான் வித்தியாசம் கண்டுபிடிக்க முடிந்தது. இந்தப் பிடிவாதம் கெட்அப்பில் மட்டும்தான் இருக்கும் என நினைத்தால், கதையைக்கூட மாற்ற மாட்டேன் என்று அடம்பிடித்தால் எப்படிங்ணா?'' என கேள்விகளோடு முடிந்திருந்தது அந்தக் கடிதம்.

ரூட்டை மாற்றினார் விஜய். 'ஃப்ரெண்ட்ஸ்' என ஃபீல் குட் படம் இயக்கிய சித்திக்கிடம் போனார். 'காவலன்' ஹிட் ஆனது. அடுத்து மோகன் ராஜாவுடன் 'வேலாயுதம்', ஷங்கருடன் 'நண்பன்', ஏ.ஆர்.முருகதாஸுடன் 'துப்பாக்கி' எனத் தனக்கானப் பாதை எது என்பதைப் புரிந்துகொண்டார்.

''காவலன் படத்தை ஆரம்பிக்கும்போது ரசிகர்கள் இந்தப் படத்தை எப்படி எடுத்துப்பாங்கங்கிற சந்தேகம் மட்டும்தான் என் மனசில் இருந்துச்சு. தொடர்ந்து ஆக்ஷன் படங்களாப் பார்த்தவங்க இதை எப்படி நினைப்பாங்கன்னு யோசிச்சேன். ஆனா, என்னுடைய எல்லா எதிர்பார்ப்பையும்தாண்டி, 'காவலன்’ படம் சூப்பர் சக்சஸ் ஆனதுக்காக முதல் நன்றி என்னுடைய ரசிகர்களுக்குத்தான் சொல்லணும்.

அவங்களுக்கு நான் ஒரு உத்தரவாதமும் தர்றேன்... டிஷ்யூம் டிஷ்யூம் படங்களை இனிமேல் நான் தொடர்ந்து தர மாட்டேன். நல்ல கதையம்சம் இருக்கும் படங்களில் ஒரு கேரக்டராக இருப்பதும் பெருமையான விஷயம்தான். இனிமேல் வருஷத்துக்கு ரெண்டு படங்கள் பண்ணுவேன். ஒண்ணு, கலகலன்னு 'காவலன்’ டைப். இன்னொண்ணு... ஜிவுஜிவுன்னு 'வேலாயுதம்’ மாதிரி ஆக்ஷன்'' என்று 2011-ல் விகடனுக்கு அளித்தப்பேட்டியில் சொல்லியிருந்தார் விஜய்.

இன்று இயக்குநர்களின் நாயகனாக மாறியிருக்கிறார் விஜய். இவர் அளவுக்கு ஃபிட்டான நடிகர்கள், டான்ஸ் ஆடக்கூடிய ஹீரோக்கள், காமெடியிலும் கலகலக்கும் நாயகர்கள் தமிழ் சினிமாவில் மிக மிகக் குறைவு.

விஜய்
விஜய்

வெற்றி, வியாபாரம், வசூல், ரசிகர்கள் ஆதரவு என அனைத்திலுமே இப்போது விஜய்யின் கொடிதான் பறக்கிறது. ஒரு பத்திரிகையாளனாக 2008 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரஸ்மீட்களில் விஜய்யைப் பார்த்திருக்கிறேன். பேச்சில் ஒரு கூச்சமும், ஒரு தயக்கமும், ஒரு தவிப்பும் இருக்கும். ஆனால் பத்தே ஆண்டுகளில் அனைத்தையும் மாற்றி ஒற்றை ஸ்டாண்டிங் மைக்கின் முன் விஜய் பேசும் பேச்சைக் கேட்க அத்தனை ரசிகர்களும் தவம் கிடக்கிறார்கள். விஜய் பேச்சால் டிவி சேனல்களின் டிஆர்பிக்கள் எகுறுகின்றன. சோஷியல் மீடியாக்கள் வைரல் மீம்களால் தெறிக்கின்றன.

தனிக்கொடி... மக்கள் மன்றம்!

2008-ல் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் 'குருவி' படத்தில் நடித்தார் விஜய். இந்தப் படம் ஷுட்டிங்கில் இருந்தபோதே விஜய்க்கும்- உதயநிதி தரப்புக்கும் உரசல் ஆரம்பித்தது. மே மாதம் ‘குருவி’ வெளியாகி படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. உரசல் இன்னும் அடுத்தக்கட்டத்துக்குப் போனது. 2011 தேர்தலில் களமிறங்கப்போகிறோம் என எஸ்.ஏ.சி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேச, விஜய் மக்கள் மன்றத்துக்கென தனிக்கொடி ரெடியானது. 2008 ஜூன் 22-ம் தேதி அவரது பிறந்தநாளில் இந்தக் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்.

நீல வண்ணத்தில் விஜய்யின் படமும் 'உழைத்திடு, உயர்ந்திடு' என்கிற வாசகமும் இந்தக் கொடிக்குள் இருந்தது. கட்சிக்கான முன்னோட்டம்தான் இந்தக் கொடியா என அப்போது விஜய்யிடம் கேட்டபோது, ''அரசியலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய மக்கள் இயக்க உறுப்பினர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். நான் பொதுவானவனாகவே இருக்க விரும்புகிறேன்'' என்றார் விஜய்.

அடுத்து இலங்கைப் போர் உச்சத்தில் இருந்தபோது 2009 ஏப்ரலில் இலங்கைத் தமிழர் ஆதரவுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இதற்குப்பிறகு மன்றக் கொடிகளை எல்லா மாவட்டங்களிலும் ஏற்றி, உரையாற்றும் பிளானில் இருந்தார் விஜய். இதனால் இன்னும் கடுப்பானது அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க. இதற்கிடையே ஈரோட்டில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் இதற்கு அனுமதியளித்த போலீஸ், கடைசிநிமிடத்தில் பின்வாங்கியது. ''நீங்கள் மேடை ஏறக்கூடாது... மீறி ஏறினால் உங்கள் உயிருக்கு உத்தரவாதம்'' இல்லை என்று சொல்ல கூட்டம் ரத்தானது. அடுத்து இன்னும் பெரிய அதிர்ச்சி விஜய்க்கு காத்திருந்து.

2011 பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த 'காவலன்' படத்தை திரையிடக்கூடாதென தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு படம் ரிலீஸாகாத சூழல் உருவானது. மிரண்டுபோனார் விஜய். சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து படம் ரிலீஸானதும் விஜய் செம ஹேப்பி. காரணம் நீண்ட இடைவெளிக்குப்பிறகு அவருக்கு ஹிட் படம். திமுக அரசுக்கு எதிராக வெளிப்படையாக விகடனுக்குப் பேட்டியளித்தார் விஜய். ''எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் வரிசையில் இப்போது என்னைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்'' என்றவர் ''நடிகனாகணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சதைவிட மிகப் பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்காரவெச்சு இருக்காங்க. அதுபோல, இன்னொரு இடத்திலும் அதே மக்கள் என்னை அமரவைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை'' என அந்தப் பேட்டியை முடித்திருந்தார் விஜய்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

2011 தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்றதும் தன்னுடைய மக்கள் இயக்கம் அதிமுக-வின் வெற்றிக்கு அணில் போல உதவியதாக அறிக்கைவிட்டார். இந்த அறிக்கையால் விஜய் மீது கொஞ்சம் கவனம் திருப்பினார் ஜெயலலிதா. 2013 ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்தன. மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் மிகப்பெரிய மேடை அமைத்தார்கள். அப்போது அதிமுக பொதுக்குழு கூட்ட நேரம். ஒருபக்கம் 'அம்மா அழைக்கிறார்' என ஜெயலலிதா கட் அவுட்கள் இருக்க, இன்னொருபக்கம் விஜய் நிகழ்ச்சிக்கு 'அப்பா அழைக்கிறார்' என எஸ்.ஏ.சி-யின் கட் அவுட்கள்.

இதை அப்படியே படமாக எடுத்து உளவுத்துறை ஜெயலலிதாவுக்கு அனுப்ப கோபத்தின் உச்சத்துக்கு சென்றுவிட்டார். உடனடியாக விழா ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த 'தலைவா' படத்தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினை அழைத்து கடுமையாக எச்சரிக்க விஜய்யின் பிறந்தநாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. திமுகவால் 'காவலன்' படத்துக்குப் பிரச்னை வந்தததுபோல 'தலைவா' ரிலீஸ் அதிமுக-வால் பிரச்னையை சந்தித்தது. அப்போது கொடநாட்டில் இருந்த ஜெயலலிதாவை சந்திக்க விஜய்யும், எஸ்.ஏ.சி-யும் சந்திக்கப்போக அங்கே காவல்துறையால் திருப்பி அனுப்பப்பட்டார்கள். கடைசியில் கிட்டத்தட்ட விஜய் மன்னிப்புக் கேட்கும் தொனியில் வீடியோ ஒன்றை வெளியிட 'தலைவா' ரிலீஸானது. இப்படித்தொடர்ந்து அவர் படங்கள் ரிலீஸின்போது பிரச்னைகளை சந்திப்பது 'சர்கார்' வரைத் தொடர்ந்தது.

‘மெர்சல்’ வரை இளையத்தளபதி விஜயாக இருந்தவர், மெர்சலில் தளபதியாக மாறினார். 'தளபதி' என்கிற அடைமொழி அதுவரை மு.க.ஸ்டாலினுக்கே இருந்தது. ஆனால், அதைமீறி அதுவும் சன் பிக்சர்ஸ் தயாரித்த 'சர்கார்' படத்தில் தளபதி என மாற்றினார் விஜய்.

திமுகவுக்கும், விஜய்க்கும் இடையே விழுந்த விரிசலில் இன்னும் எந்த மாற்றமும் இல்லை என்பதற்கு சமீபத்திய தேர்தலும், அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களுமே சாட்சி. ‘’பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிளில் வந்தார்'’ என அவரைவைத்து அடுத்தப்படம் தயாரிக்கும் சேனலிலேயே செய்திவந்தபோது அதை உடனடியாக மறுக்கச்சொல்லி தன் பிஆர்ஓ மூலம் தகவல் சொன்னார் விஜய். மீண்டும் திமுக ஆட்சி அமைத்ததும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும் பல்வேறு நடிகர்கள் வாழ்த்தி செய்திகளை வெளியிட, விஜய்யிடம் இருந்து அமைதியே பதிலாக இருந்தது. கொரோனா நிதியை கிட்டத்தட்ட எல்லா முக்கிய நடிகர்களுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொடுத்துவிட்டார்கள். அஜித் ஆன்லைன் மூலமாக நிதியளித்து அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிட்டுவிட்டார். ஆனால், விஜய்யிடம் இருந்த இதுவரை எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

ரஜினி - விஜய்
ரஜினி - விஜய்

விஜய் ஆதரவு?

காங்கிரஸ் ஆட்சியின்போது ராகுல் காந்தியை சந்தித்ததுப் பரபரப்பைக் கிளப்பினார் விஜய். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை விஜய் கேட்கிறார் எனத் தகவல் பரவி, கொஞ்ச நாளில் அடங்கியது. அடுத்த சில மாதங்களில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார் விஜய். அடுத்தபடியாக 2014 மக்களவைத் தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருந்தபோது மோடியை சந்திக்க ஒப்புக்கொண்டார் விஜய். கோவையில் மோடி- விஜய் சந்திப்பு நடந்தது. இப்படி ஆரம்பத்தில் திமுக எதிர்ப்பில் தொடங்கிய அவரது அரசியல் நிலைப்பாடு அதிமுக, காங்கிரஸ் என மாறி இப்போது பா.ஜ.க-வில் வந்து நிற்கிறது.

பா.ஜ.க எதிர்ப்புக்கு ஆரம்பப் புள்ளி வைத்தவர் ஹெச்.ராஜா. 'மெர்சல்' படத்தில் ஜி.எஸ்.டி-க்கு எதிராக விஜய் சில வசனங்கள் பேச ‘’இவர் ஜோசப் விஜய்... இப்படித்தான் பேசுவார்'' என விவகாரத்தை ஹெச்.ராஜா திசைமாற்ற, மக்கள் ஆதரவு முழுக்க விஜய் பக்கம் திரும்ப பா.ஜ.க-வை வெளிப்படையாகவே விமர்சிக்க ஆரம்பித்தார் விஜய். 'ஜோசப் விஜய்' என்கிற லெட்டர் பேடில் அறிக்கை வெளியிடுவது, தொடர்ந்து இசை வெளியீட்டு விழாக்களில் அரசியல் பேச்சைக் கலப்பது, படங்களிலும் தன்னுடைய கிறிஸ்துவ அடையாளத்தை பகிரங்கப்படுத்துவது என முன்பைப் போல் அமைதியாக இல்லாமல் எதிர்வினைகள் நிகழ்த்துகிறார்.

ரஜினி - விஜய்!

100 கோடிக்கும் மேல் உயர்ந்த ரஜினியின் சம்பளம் இப்போது குறைந்துவிட்டது என்கிறார்கள். அதேப்போல் ரஜினி படங்களுக்கான பிசினஸும் குறைந்திருக்கிறது. இன்னொரு பக்கம் ‘பிகில்' படத்துக்கு முன்பு 50 கோடியில் இருந்த விஜய்யின் சம்பளம் இப்போது ரஜினியின் சம்பளத்தை நெருங்கிவிட்டது. வியாபாரம், வசூலைப் பொருத்தவரை ரஜினியை முந்திவிட்டார் விஜய் என்பதே தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் சொல்லும் கணக்கு.

தமிழ் சினிமாவின் உச்சபட்ச மாஸ் ஹீரோ, சூப்பர் ஸ்டார் அந்தஸ்து விஜய்யிடம் தான் இப்போது வந்து நிற்கிறது. ‘அண்ணாத்த' படத்துக்குப்பிறகு ரஜினி ஒன்றிரண்டு படங்களே நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. அதனால், ரஜினியின் இடத்துக்கு விஜய் வந்துவிட்டாலும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை வெயிட்டிங்கில் வைத்திருக்கிறார் விஜய் என்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்து நிற்கும் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!