Published:Updated:

யாஷிகா ஆனந்த்துக்கு இடுப்பு எலும்பு முறிவு, தோழி பலி... சூலேறிக்காட்டில் விபத்து நிகழ்ந்தது எப்படி?

யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த்

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மகாபலிபுரம் தாண்டி சூலேறிக்காடு எனும் இடத்தில் யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் விபத்தில் சிக்கியது. காரில் மொத்தம் நான்கு பேர் பயணித்த நிலையில் யாஷிகாவின் தோழி வள்ளிஷெட்டி பவானி என்பவர் உயிரிழந்தார். யாஷிகாவுக்கு இடுப்பில் எலும்பு முறிவு!

கிழக்கு கடற்கரைச் சாலையில் நேற்று நள்ளிரவு விபத்தில் சிக்கினார் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்றவரும், நடிகையுமான யாஷிகா ஆனந்த். சனிக்கிழமை இரவு கிழக்கு கடற்கரைச் சாலையில் நண்பர்கள் மூன்று பேரை அழைத்துகொண்டு தனக்கு சொந்தமான டாடா ஹேரியர் காரில் வேகமாக பயணித்திருக்கிறார் யாஷிகா.

காருக்குள் வள்ளிஷெட்டி பவானி எனும் பெண் தோழியும், சையது, அமீர் என இரண்டு ஆண் நண்பர்களும் இருந்திருகிறார்கள். காரை ஓட்டியவர் யாஷிகா ஆனந்த். முன்பக்க சீட்டில் யாஷிகாவுடன் வள்ளி ஷெட்டி என்பவர் அமர்ந்திருக்க, பின் இருக்கையில் சையது, அமீர் இருவரும் உட்கார்ந்து பயணித்திருக்கிறார்கள்.

இரவு 11.45 மணியளவில் வேகமாக சென்னை திரும்பிக்கொண்டிருந்தபோது சூலேறிக்காடு எனும் இடத்தில் வேகத் தடுப்புக்கு வைக்கப்பட்டிருந்த பேரிகேடின் மீது மோதியிருக்கிறார் யாஷிகா ஆனந்த். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் வலது பக்கம் திரும்பி சென்ட்டர் மீடியனில் மோதி தலைகீழாக கவிழ்ந்திருக்கிறது. இதில் முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த வள்ளி ஷெட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவரான இவர் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணியாற்றி வந்திருக்கிறர். அவரது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

யாஷிகா ஆனந்தின் டாடா ஹேரியர் கார்
யாஷிகா ஆனந்தின் டாடா ஹேரியர் கார்

காரை ஓட்டிவந்த யாஷிகா ஆனந்துக்கு கை, கால், இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் யாஷிகா போலீஸாரிடம் நடந்த விஷயங்களை சொல்லியிருக்கிறார். அவர் சுயநினைவோடு நல்லபடியாக இருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். பின் சீட்டில் பயணித்த சையது, அமீர் என இருவருக்கும் பெரிய காயங்கள் ஏதும் இல்லை.

அதிவேகமாக கார் ஓட்டியதாகவும், மரணத்தை ஏற்படுத்தியதாகவும் யாஷிகா ஆனந்த் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டியிருக்கலாம் என்கிற சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு