Published:Updated:

ராம், அபர்ணா, மைதிலி மற்றும் பியானோ... 2019-ல் `ஹே ராம்' அனுபவம் எப்படி இருக்கிறது?

Hey Ram theatre experience
News
Hey Ram theatre experience

60 ஆண்டுகள் கமல் மேற்கொண்டுள்ள இந்த கலைப் பயணத்தின் மாஸ்டர் பீஸ், முடிந்தால் இப்படியொரு படத்தை இனி எடுத்துவிடுங்கள் என்ற அவரின் அறைகூவல், அடுத்த சில தலைமுறை திரைப் படைப்பாளிகளுக்கான ஒற்றை இலக்கணப் புத்தகம் என 'ஹே ராம்' எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலாகிப்போனது.

மொகஞ்சதாரோவின் தொல்லியல் ஆராய்ச்சிக் குழிக்குள் இருக்கும் சாக்கேத் ராமையும், அம்ஜத் கானையும் மிஸ்டர் வீலர் மேட்டிலிருந்து அழைக்கும்போது, டால்பி அட்மாஸ் ஒலி அமைப்பு வழியாக... என் தலைக்கு மேலிருந்து கேட்ட வீலரின் குரலும், இரு புறங்களிலிருந்தும் கேட்ட ராம், அம்ஜத்தின் குரல்களும்தாம், அடுத்த மூன்றரை மணி நேர ஆச்சர்யங்களுக்கு என்னைத் தயார்படுத்திய முதல் பொறி. 'ஹே ராம்' படம் தொடங்கி கிட்டத்தட்ட 5 நிமிடம் கழித்து வரும் இந்தக் காட்சிதான், 20 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் கண்ட கனவின் பெருவாயிலும் கூட.

Hey Ram
Hey Ram

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

60 ஆண்டுகள் கமல் மேற்கொண்டுள்ள இந்த கலைப் பயணத்தின் மாஸ்டர்பீஸ், முடிந்தால் இப்படியொரு படத்தை இனி எடுத்துவிடுங்கள் என்ற அவரின் அறைகூவல், அடுத்த சில தலைமுறை திரைப் படைப்பாளிகளுக்கான ஒற்றை இலக்கணப் புத்தகம் என 'ஹே ராம்' எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலாகிப்போனது. "எனக்கு செமி ஃபிக்‌ஷன் பிடிக்காது" எனக் கூறும் பல சாக்கேத் ராம்களுக்கு, கமல்ஹாசன் உருவாக்கிய இந்த செமி ஃபிக்‌ஷன் வகைப் படமும் அதன் சாரமும், இன்னும் பல ஆண்டுகளுக்குத் தேவைப்படும் என்பதும் இந்த மண்ணின் அரசியல் அசைவுகள் உருவாக்கியுள்ள நெருக்கடி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

படம் வெளியாகி 20 ஆண்டுகள் நெருங்கியுள்ள நிலையில், இப்போது அதை மீண்டும் ஒருமுறை திரையரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்தக் கால திரையிலும், ஒலி அமைப்புகளிலும் 'ஹே ராம்' எப்படியிருக்கப்போகிறது என்ற ஆர்வமே பெரிதும் மனமெங்கும் விரவிக்கிடந்தது. சுதந்திரம் பெறவிருந்த காலகட்டம் தொடங்கி, பெற்றபின் சில மாதங்களில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட கணம் வரை காட்சிப்படுத்திய 'ஹே ராம்', அகண்ட பாரதக் கனவு எப்படியெல்லாம் நாடெங்கும் பரவியிருந்தது என்பதை அந்த அகண்ட திரையில் காட்டியது.

Hey Ram
Hey Ram

துணைக் கதாபத்திரங்களின் 'கேரக்டர் ஆர்க்' (பாத்திரத்தின் உணர்வுப் பரிணாம மாற்றம்) எத்தனை வலுவாக இருக்கிறதோ அத்தனை வலுவானதாக இருக்கும் ஒரு திரைக்கதை. இதுநாள் வரை குறுந்திரைகளில் கண்டுகளித்த இந்தப் படத்தை, முதல் முறையாகப் பெருந்திரையில் கண்டபோதுதான், படத்தின் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் எப்படிப்பட்ட பயணங்களை வடிவமைத்திருக்கிறார் கமல் என்பது தெரிகிறது. அம்ஜத், லால்வாணி, மைதிலி, அப்யன்கார் எல்லாவற்றுக்கும் மேலாக சாக்கேத் என ஒவ்வொருவருடைய அசைவும், உணர்வு வெளிப்பாடும் அந்தத் திரையில் இன்னமும் நுட்பமாகத் தெரிந்தன. உதாரணமாக, ராம் தன்னுடன் அவளையும் அழைத்துக்கொண்டு பாம்பே-வுக்குச் செல்லப்போகிறான் எனத் தெரிந்ததும், மைதிலி ஒரு சிறிய குழந்தைத்தனமான துள்ளல்போடுவாள். அவளுடைய இந்த இயல்பு, படத்தின் இறுதிவரை தொடரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அபர்ணாவின் இழப்புக்குக் கதறி அழும் ராம், படத்தின் பிற்பகுதியில், அம்ஜத்தின் இழப்புக்கும் கதறி அழும்போதுதான் அவனுடைய வாழ்வின் இரு முக்கிய மாறுதல்களுக்கு உட்படுகிறான். இந்த இரண்டு அழுகைக் காட்சிகளும், அதன் சத்தங்களும் திரையரங்குக்கே உரியவை. காந்தியைக் கொல்ல வேண்டும், கொல்லக்கூடாது என ராம் மாற்றிக்கொள்ளும் தன் முடிவுகளுக்கான முதல் விதையே இந்த அழுகைதான். அதற்கு, அகண்ட திரை அப்படிக் கைகொடுத்திருக்கிறது.

Hey Ram
Hey Ram

தொழில்நுட்ப நேர்த்தியில், 'ஹே ராம்' படத்தை வைத்துப் பாடம் எடுக்கலாம். 1990-களின் பிற்பகுதியில் வெளியான பல ஆங்கிலப் படங்களுக்கு நிகரான ஒளிப்பதிவையும், காட்சி அமைப்புகளையும் இந்தப் படத்தில் செய்திருப்பார் ஒளிப்பதிவாளர் திரு. மொகஞ்சதாரோவின் குழிக்குள் தொடங்கி, ஒரு கலவரத்துக்குப் பயந்து சென்னையின் ஒரு தெருவொர குழிக்குள் முடியும் ராமின் வாழ்க்கையைக் காட்சி வாயிலாகக் கதையாகச் சொல்லியிருப்பது, திரு-வின் கலைத் தந்திரம். அதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒளிகள், அவற்றை வீச அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கோணங்கள் எல்லாமே, பல நேரங்களில் மெய்சிலிர்க்கவைக்கின்றன. "ஓநாயாய் இருந்து பாத்தாதான் அதோட நியாயம் தெரியும்" என அப்யன்கார் சொல்லும் காட்சியில், அவன் கண்கள் மீதுமட்டும் ஒளிவீசி அதைக் குளோஸ்-அப்பில் காட்டி மிரட்டியிருக்கிறார்.

அவரை கொல்லப்போகிறான் என்பதாலேயே காந்தியின் இயல்புகளுக்கு நேர்மாறான இயல்புகளைக்கொண்டிருக்கிறான், ராம். காந்தி ஒளியை விரும்புபவர், ராம் இருளிலேயே காலத்தைக் கழிக்கிறான். காந்தி, குரங்கு பொம்மை வாயிலாக வாழ்வதற்கான தத்துவங்களைச் சொன்னவர். ராமோ, இறந்த மண்டை ஓடுகளைத் தன் சேமிப்புகளில் பத்திரப்படுத்திவைத்திருப்பவன். இந்தக் காட்சியளவு மாற்றங்களையெல்லாம் படம்பிடித்தது மட்டுமல்லாமல், அதைத் திரைமொழிக்குள் அடக்கியது எல்லாம் கமல் - திரு என இரு வித்தைக்காரர்களின் கூட்டு முயற்சி. அதிலும், படத்தின் கடைசி நொடிவரை காந்தியின் முகம் வரையப்பட்ட சுவர், அதில் இருக்கும் ஜன்னல்கள் வழியாகக் கதை சொல்லியிருப்பதெல்லாம், இந்தப் படத்தை ஏன் திரையரங்கில் மட்டுமே பார்க்க வேண்டுமென்பதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று.

Hey Ram
Hey Ram

'ஹே ராம்' என்றால், கமலுக்கு அடுத்தபடியாக இளையராஜாதான். எந்தவொரு இசைக் கலைஞரும் செய்யத் துணியாத ஒரு பெரும் முயற்சியை, அவ்வளவு நேர்த்தியாக இளையராஜா இந்தப் படத்தில் செய்திருப்பார். ஏற்கெனவே, வேறு ட்யூன்கள் போடப்பட்ட பாடல்களின் வாயசைவுகளுக்கும் உடலசைவுகளுக்கும் ஏற்றவாறு புதிய மெட்டுகளையும், ட்யூனையும் உருவாக்கிய கதை எல்லோரும் அறிந்ததே. அதே வேளையில், அந்தப் பாடல்கள் திரையில் காட்டப்பட்டபோது, அது ஏன் இளையராஜாவால் மட்டுமே முடிந்த காரியம் என்பதும் தெளிவாகிறது.

ராம், தன் இரண்டு மனைவிகளையும் பியானோவுடன்தான் ஒப்பிட்டுப் பார்க்கிறான். அபர்ணாவுடன் நெருங்கி இன்பத்தில் திளைத்திருக்கும்போது, 'நீ பார்த்த பார்வை'க்கான இசையை எழுப்பும் அதே பியானோ, அவள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட பிறகு, மாடியிலிருந்து கீழே விழுந்து உடைவதெல்லாம் இளையராஜாவின் ஹோம் கிரவுண்டாகத்தான் தெரிகிறது. மனிதன், இறங்கி விளையாடியிருக்கிறார். அதிலும் டால்பி அட்மாஸ் அமைப்பில் இந்தக் காட்சி படத்தின் நிசப்தத்தைப் பிளந்துகொண்டு ஒரு மனச் சலனத்தை ஏற்படுத்தும் ஓசையைக் கிளப்பியிருப்பது, மீண்டும் ஒருமுறை இந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமென்கிற ஆசையைத்தான் தூண்டுகிறது.

Hey Ram
Hey Ram

மாஸ்டர்பீஸ் என்றால், அதற்கான எல்லா காரணங்களும் அதனுள் பொதிந்துகிடக்க வேண்டும். 'ஹே ராம்' அப்படிப்பட்ட காரணங்களையெல்லாம் சுமந்துகொண்டுதான் இத்தனை ஆண்டுகள் வந்திருக்கிறது. இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் போகும் என்பதில் ஐயமில்லை. படத்தின் கருத்தியல், பலரால் முழுவதும் ஏற்கமுடிவதாகவும் அல்லது முழுவதும் வெறுப்பதாகவும் இருக்கலாம். ஆனால், அந்தக் கருத்தியலை ஓரமாக வைத்துவிட்டு, 'ஹே ராம்' படத்தை ஒரு கலைவடிவமாக அணுகினால், இந்தப் படம், தான் எடுத்துக்கொண்ட கருத்தியலுக்கு எந்த அளவுக்கு நேர்மையாக இருந்திருக்கிறது என்பதும், அதைக் காட்சியாகவும் ஒலியாகவும், உணர்வாகவும் எப்படித் தன் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறது என்பதும் போற்றவேண்டிய கூறுகள் என்பதை உணரலாம். அதையே ஒரு திரையரங்கில் கண்டால், அந்தப் பாத்திரங்களுடன் சில மணிநேரம் உறவாடிவிட்டும் வரலாம்.