Published:Updated:

கொரோனா@கோலிவுட்... கேளம்பாக்கத்தில் ரஜினி, கதவுக்குள் கமல், கலங்கிய விஜய்!

ரஜினி, கமல்
ரஜினி, கமல்

கொரோனா தாக்குதல் சென்னையில் தீவிரமாக ஆரம்பித்ததில் கோலிவுட்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனாவால் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் எனப் பாதிக்கப்பட பலரும் வெளியே தெரியாமல் சிகிச்சை எடுத்துவருகிறார்கள். இந்தக் கொரோனா சூழலை உச்சநட்சத்திரங்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்?!

ரஜினி

ஜூனில் கொரோனா தீவிரமாக ஆரம்பித்ததுமே போயஸ் கார்டன் வீட்டில் இருந்து கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குக் குடும்பத்துடன் குடியேறிவிட்டார் ரஜினி. மகள்கள், பேரன்கள் என எல்லோருமே இப்போது அந்த வீட்டில்தான் இருக்கிறார்கள். 5 ஏக்கருக்கும் மேலான அந்தப் பண்ணைவீட்டிலேயே காய்கறித் தோட்டம் இருக்கிறது. அங்கே விளையும் காய்கறிகளையே சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல் பண்ணை வீட்டுக்குள்ளேயே தங்கியிருந்து வேலை செய்பவர்கள் மட்டுமே தொடர்ந்து உள்ளே இருக்கிறார்கள். வெளியே இருந்து தினமும் வேலைக்கு வந்துபோனவர்களை இப்போது உள்ளே அனுமதிப்பதில்லை. ரஜினி இப்போது எப்படியிருக்கிறார் என்று அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் விசாரித்தோம். ``முன்பைவிடவும் மிகவும் உற்சாகமாகவே இருக்கிறார் ரஜினி. அதிகாலையிலேயே போனில் அழைப்பார். கொரோனா விஷயங்கள் பற்றிப் பேச ஆரம்பித்து அப்படியே பழைய சினிமா விஷயங்களைப் பேசுவோம். ஓடிடி-யில் படங்கள் பார்க்கிறார். உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள யோகா, மூச்சுப் பயிற்சிகள் செய்கிறார். சினிமா ஷூட்டிங்கைப் பொறுத்தவரை கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டால் மட்டுமே ஷூட்டிங் தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். பல நூறு கோடிகளை ரஜினி என்கிற ஒருவருக்காக மட்டுமே முதலீடு செய்கிறார்கள். அதனால் அவரது உடல்நிலைதான் மிகவும் முக்கியம் என்பதால் எல்லாம் சரியான பிறகுதான் `அண்ணாத்தே' படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகளே நடக்கும்'' என்றார்கள். ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாக இருந்த லோகேஷ் கனகராஜிடமும் நிலைமை சரியாகும் வரை வேறு ப்ராஜெக்ட்களில் கவனம் செலுத்தும்படி சொல்லப்பட்டிருக்கிறதாம்.

கமல்

Kamal Haasan
Kamal Haasan

சென்னையில் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையைவிட்டு கமல்ஹாசன் வெளியேவருவதில்லை. அக்டோபரில் நிலைமை சரியாகிவிடும் என முதலில் பேச்சுகள் இருந்ததால் `தலைவன் இருக்கின்றான்' படத்துக்கான ஷூட்டிங் ஸ்பாட் திட்டமிடல்கள் நடந்தன. ஆனால் இந்த ஆண்டு இறுதிவரை நிலைமை சரியாகாது என்பதால் படத்துக்கான பேப்பர் வொர்க்கை மட்டும் முடித்துவைக்கும் வேலைகள் நடக்கின்றன. கமலின் உதவியாளரும் நிரந்தரமாக ஹோட்டலிலேயே தங்கவைக்கப்பட்டிருக்கிறார். இப்போதைக்குக் கமல்ஹாசனின் அறைக்குள் நுழைய அவருக்கு மட்டுமே அனுமதி.

விஜய் 

சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழும் பழக்கம்கொண்டவர் விஜய். தற்போது கானாத்தூர் வீட்டில் இருக்கும் விஜய் முன்பெல்லாம் இரவில் கடற்கரையில் வாக்கிங் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இப்போது வீட்டுக்குள்ளேயேதான் வாக்கிங். வெளியிலிருந்து வீட்டுக்குள் யாரும் வரக்கூடாது என்பதால் முக்கியமான வேலையாட்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். `மாஸ்டர்' படத்தின் ப்ரொடக்‌ஷன் டீமின் முக்கிய நபர் ஒருவருக்குக் கொரோனா வந்ததிலிருந்து விஜய் ரொம்பவே கலக்கத்தில் இருக்கிறார் என்கிறார்கள். லாக்டெளனைத் தளர்த்தியதும் திறக்கப்பட்ட விஜய்யின் அடையாறு அலுவலகம் இப்போது மீண்டும் மூடப்பட்டிருக்கிறது. நிலைமை சரியாகும் வரை யாரும் அலுவலகத்துக்கு வரவேண்டாம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. `மாஸ்டர்' படம் இன்னும் ரிலீஸாகாததால் அந்தப்படத்தின் டைரக்ஷன் டீம் உட்பட அனைவருக்குமே தயாரிப்புத் தரப்பிலிருந்து தொடர்ந்து சம்பளம் வ

ழங்கப்பட்டுவருவதாகச் சொல்கிறார்கள். `மாஸ்டர்' படத்தைப் பொங்கல் ரிலீஸுக்குத் திட்டமிடலாம் எனச் சொல்லியிருக்கும் விஜய், முருகதாஸிடம் அடுத்த படத்துக்கான ஷூட்டிங்கை சென்னையிலேயே நடத்தும் வகையில் திட்டமிடச் சொல்லியிருக்கிறாராம்

vijay
vijay

அஜித்

அஜித், நீலாங்கரை வீட்டிலேயேதான் இருக்கிறார். அப்பா, அம்மா என அவரது முழுக் குடும்பமும் அவரது வீட்டிலேயேதான் இருக்கிறார்கள். `வரும்முன் காப்போம்' என்பதை எப்போதுமே கடைப்பிடிக்கும் அஜித் தன்னுடைய நண்பர்களிடமும் அதையேதான் வலியுறுத்துகிறார். `வலிமை' படத்தின் ஒட்டுமொத்த டீமையும் கொரோனா முடியும்வரை வெளியேவர வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்கள். நிலைமை சரியாகும் வரை ஷூட்டிங் குறித்த எந்தத் திட்டமிடல்களும் வேண்டாம் எனச் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

சூர்யா & விக்ரம்

சூர்யா தனது குடும்பத்துடன் தி.நகர் வீட்டில்தான் இருக்கிறார். வீட்டில் வேலைபார்த்து வந்த அத்தனைப்பேருக்கும் சம்பளம் கொடுத்து, அவர்களை கொரோனா சூழல் முடியும்வரை வெளியே வரவேண்டாம் என சொல்லிவிட்டார்கள். சூர்யா, கார்த்தி, அவரது தங்கை என ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒரே வீட்டில் இருந்துகொண்டு வீட்டு வேலைகளைத் தங்களுக்குள் பிரித்து செய்துகொள்கிறார்கள்.

நடிகர் விக்ரமுக்குச் சாதாரண காய்ச்சல், தலைவலி என்றாலே அலர்ஜி. அதனால் கொரோனா முடியும்வரை எந்தவிதமான கமிட்மென்ட்டுகளும் வேண்டாம் எனத் தெளிவாகச் சொல்லியிருக்கும் விக்ரம் வீட்டைவிட்டு வெளியேவருவதில்லை.

Ajith, Vijay, Surya, VIkram
Ajith, Vijay, Surya, VIkram

விஜய் சேதுபதி

ஹீரோக்களைப் பொறுத்தவரை இந்தக் கொரோனா சூழலில் வீட்டை விட்டு வெளியேவந்துபோகும் ஒரே ஹீரோ விஜய் சேதுபதி. அடிக்கடி தன் அலுவலகத்துக்கு வந்துபோகும் விஜய் சேதுபதி நண்பர்களையும் சந்திக்கிறார். ``வீட்டுக்குள்ளேயே இருந்தா பயந்தே செத்துடுவோம். ஆனால் பாதுகாப்பா இருப்போம்'' என்பதுதான் விஜய்சேதுபதியின் ஸ்டேட்மென்ட் என்கிறார்கள்.

ஹீரோயின்கள் எப்படி?

நடிகைகளைப் பொறுத்தவரை எல்லோருமே பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்கிறார்கள். வீடுகளைவிட்டு யாருமே வெளியேவருவதில்லை. ஆனால், எப்போது ஷூட்டிங் தொடங்கினாலும் `நோ' சொல்லாமல் நிச்சயம் நடிக்கவருவோம் என்று தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்களாம்.

அடுத்த கட்டுரைக்கு