Published:Updated:

`அவள் ஏன் அப்படி ஆனாள்?' -`ஸ்டார்’ திரைப்படம் பேசும் மிக முக்கியமான விஷயம்!

Star Movie

`தி கிரேட் இண்டியன் கிச்சன்’, `சாரா'ஸ்’ போன்ற திரைப்படங்கள் வெளிவந்து, மொழி எல்லைகளைக் கடந்து, இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறின. அப்படி ஒரு பிரச்னையைத்தான் `ஸ்டார்’ திரைப்படமும் கையில் எடுத்திருக்கிறது.

`அவள் ஏன் அப்படி ஆனாள்?' -`ஸ்டார்’ திரைப்படம் பேசும் மிக முக்கியமான விஷயம்!

`தி கிரேட் இண்டியன் கிச்சன்’, `சாரா'ஸ்’ போன்ற திரைப்படங்கள் வெளிவந்து, மொழி எல்லைகளைக் கடந்து, இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறின. அப்படி ஒரு பிரச்னையைத்தான் `ஸ்டார்’ திரைப்படமும் கையில் எடுத்திருக்கிறது.

Published:Updated:
Star Movie

இந்திய சமூகத்தில் பெண்களின் பிரச்னைகள் பெரும்பாலும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆண்கள் மட்டுமன்றி பெண்களேகூட அவர்களின் பிரச்னைகளைச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல இயலாது.

அண்மைக்காலமாக, குறிப்பாக மலையாளத் திரையுலகம் பெண்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, திரைப்படங்களை உருவாக்கி வருவது வரவேற்கப்பட வேண்டியது. இந்தப் படங்களின் வாயிலாகப் பெரிய அளவிலான விவாதங்களுக்கான கதவுகள் திறக்கப்படுகின்றன. இதற்கு முன் இதுபோன்ற விஷயங்களில் எந்தக் கருத்தும் இல்லாமல் இருந்த பலருக்கு புதிய ஒளி பாய்ச்சப்படுகிறது. இதனால் மிகக் குறைந்த அளவு மாற்றம் உருவானால்கூட அது மிகப் பெரிய வெற்றிதான். அப்படித்தான், `தி கிரேட் இண்டியன் கிச்சன்’, `சாரா'ஸ்’ போன்ற திரைப்படங்கள் வெளிவந்து, மொழி எல்லைகளைக் கடந்து, இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறின. அப்படி ஒரு பிரச்னையைத்தான் `ஸ்டார்’ திரைப்படமும் கையில் எடுத்திருக்கிறது.

Star Movie
Star Movie

கல்லூரிப் பேராசிரியர் ஆர்த்ரா. அவரின் கணவர், தொழிலதிபர் ராய். இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். மிக வசதியான வாழ்க்கை.

பழைமையான நம்பிக்கைகளில் ஊறிய இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆர்த்ரா. கணவர் ராய் கிறிஸ்துவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து, 17 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார்கள். ராயின் முதல் மனைவிக்குப் பிறந்த மகளுடனும் ஆர்த்ராவும் குழந்தைகளும் அன்பாக இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திடீரென்று ஆர்த்ராவின் நடவடிக்கைகள் மாறுகின்றன. அழைப்பை எடுக்காத கணவரிடம் அதீதமாகக் கோபப்படுகிறார். குழந்தைகளிடம் பேசுவதைத் தவிர்க்கிறார். பல மணி நேரம் மொட்டை மாடியில் நின்று எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறார். சரியாகச் சாப்பிடுவதில்லை. உறங்குவதில்லை. கணவர் மீது சந்தேகமும் வருகிறது. தான் அழகாக இல்லையோ என்று தோன்றுகிறது. கல்லூரியிலும் அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை. பல தொன்மையான கதைகளைக் கேட்டு வளர்ந்த ஆர்த்ராவுக்கு மதம் மாறி திருமணம் செய்துகொண்டதால்தான் ஏதோ பிரச்னை வந்துவிட்டதாகவும் நினைக்கிறார். தன்னுடைய கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் சொல்கிறார்.

மனைவியின் நடத்தையில் மாற்றம் இருப்பதை விரைவாகவே அறிந்துகொள்ளும் ராய்க்கு அதற்கான காரணம் மட்டும் தெரியவில்லை. அம்மா இயல்பாக இல்லை என்பதை ராயிடம் குழந்தைகளும் சொல்கிறார்கள். அதன் பிறகு, ஒரு மருத்துவரிடம் செல்லாமல், ஆர்த்ராவின் கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார் ராய். அங்கும் சில நேரம் சாதாரணமாகவும் சில நேரம் அசாதாரணமாகவும் நடந்துகொள்கிறார் ஆர்த்ரா. அதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அந்தக் கிராமத்தின் வழக்கப்படி பூஜைகளும் பரிகாரங்களும் நடத்தப்படுகின்றன.

Star Movie
Star Movie

இவற்றையெல்லாம் காணச் சகிக்காத ராய், திடீரென்று ஆர்த்ராவையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு நகரத்துக்கு வருகிறார். ஆர்த்ரா மீண்டும் விநோதமாகவே நடந்துகொள்கிறார். ஒருநாள் ரத்தப்போக்கு அதிகமாகி மயங்கிவிழும் ஆர்த்ராவை மருத்துவமனையில் சேர்க்கிறார் ராய்.

`இது ஏர்லி மெனோபாஸ். பொதுவாக 45 - 50 வயதுகளில் பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கான அறிகுறிகள் தென்படும். சிலருக்கு இன்னும் முன்னதாகவே வரக்கூடும். மெனோபாஸ் காலகட்டத்தில் பொதுவாக சாதாரணமான பாதிப்புகளே ஏற்படும். ஆனால், சிலருக்கு மட்டும் அது மோசமான விளைவுகளைக் கொண்டுவந்துவிடும். அப்படியான சூழலில், மருந்துகளை எடுத்துக்கொள்வதோடு, குடும்பத்தினரும் விஷயத்தைப் புரிந்துகொண்டால் இதை எளிதில் கடந்துவிடலாம்’ என்று சொல்கிறார் மருத்துவரான பிருத்விராஜ். ஒரு நல்ல கருத்தை மக்களுக்கு அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக, இந்தச் சிறிய பாத்திரத்தை ஏற்றிருக்கிற பிருத்விராஜ், அதை நேர்த்தியாகவும் செய்திருக்கிறார். ஆர்த்ரா இயல்பாக மாறுவதுடன் படம் முடிகிறது.

மெனோபாஸ் பிரச்னைகளைப் பெரும்பாலான சமூகம் இன்னமும் கண்டுகொள்வதில்லை என்பது உண்மைதான். ஆனால், படித்த குடும்பங்களில்கூட, படித்த பெண்ணே (பேராசிரியரும்கூட) உணரவில்லை என்பது நெருடலாக இருக்கிறது. நடவடிக்கைகளில் மாற்றம் தெரியும்போதே மருத்துவமனைக்குச் செல்வதுதானே சரி. இந்த வயது பெண்கள் எந்தப் பிரச்னைக்காக மருத்துவமனைக்குச் சென்றாலும், அங்கே டாக்டர் முதலில் கேட்பது மாதவிடாய் பற்றித்தான். அதற்கேற்ற சிகிச்சை மற்றும் ஆலோசனையுடன் மெனோபாஸ் காலகட்ட பிரச்னைகளை சரிசெய்து விட முடியும்.

படித்த, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் பிரச்னையின்போது மருத்துவமனைக்குச் செல்லாமல், பழைய நடைமுறைகளுக்குச் செல்வது முரணாக இருக்கிறது. அதேபோல மெனோபாஸ் பிரச்னையை வைத்துச் சொல்லப்படும் இந்தக் கதை த்ரில்லராக மாற வேண்டும் என்பதற்காக அமானுஷ்யங்களை நுழைத்திருப்பதும் தேவையா என்றும் தோன்றுகிறது. மெனோபாஸ் பிரச்னையை அமானுஷ்யங்கள் இன்றி, இன்னும் அழகாகவும் ஆழமாகவும் சொல்லியிருக்க முடியுமே.

மூடநம்பிக்கையை உடைப்பதாகச் சொல்லும் ஸ்டார், விண்மீனாக ஜொலிக்காமல், எரிநட்சத்திரமாக மினுக்கி மறைந்துவிடுகிறது. இந்தப் படத்தைப் பார்க்கும்போது புகழ்பெற்ற `மணிச்சித்திரதாழ்’ திரைப்படம் நினைவுக்கு வருவதை இயக்குநர் டொமின் டிசில்வா தவிர்த்திருக்கலாம். ஷீலு ஆபிரகாம், ஜோஜு ஜார்ஜ், பிருத்விராஜ் போன்றவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பெண்களின் முக்கியமானதொரு பிரச்னையைத் திரைக்கதையில் மையப்படுத்தியதற்காக இந்தப் படக் குழுவினரை நிச்சயம் பாராட்டலாம்!

- சஹானா