Published:Updated:

“நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன்…” - 1988 #AppExclusive

M.G.Ramachandran ( Vikatan Archives )

இன்றைய கோலிவுட் நாயகர்களும்/நாயகிகளும் நிச்சயம் படிக்க வேண்டிய கட்டுரை! ;-)

“நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன்…” - 1988 #AppExclusive

இன்றைய கோலிவுட் நாயகர்களும்/நாயகிகளும் நிச்சயம் படிக்க வேண்டிய கட்டுரை! ;-)

Published:Updated:
M.G.Ramachandran ( Vikatan Archives )

எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்துக்களில் கட்டுண்ட ரசிகர்கள், பல லட்சக்கணக்கானவர்கள். கடந்த சில ஆண்டுகளில் எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்த புதிய படங்கள் எதுவும் வராமல் போனாலும், அவர் நடித்த பழைய படங்கள் இன்றும் தமிழகமெங்கும் உள்ள தியேட்டர்களில் நாள்தோறும் ஒடிக்கொண்டுதான் இருக்கின்றன.

M.G.Ramachandran
M.G.Ramachandran
Vikatan Archives

எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்துக்களில் கட்டுண்ட ரசிகர்கள், பல லட்சக்கணக்கானவர்கள். கடந்த சில ஆண்டுகளில் எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்த புதிய படங்கள் எதுவும் வராமல் போனாலும், அவர் நடித்த பழைய படங்கள் இன்றும் தமிழகமெங்கும் உள்ள தியேட்டர்களில் நாள்தோறும் ஒடிக்கொண்டுதான் இருக்கின்றன.

பெரிய விளம்பரங்களுடன் வரும் இன்றைய சில புதிய படங்கள், அவருடைய பழைய படங்கள் பெறும் வசூலில் பாதிகூடப் பெற முடியாமல் தடுமாறுகின்றன.1917-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி ஶ்ரீலங்காவில் உள்ள கண்டி நகரில் பிறந்தவர் எம்.ஜி. ராமச்சந்திரன். தந்தை மருதூர் கோபாலமேனன் - ஒரு நீதிபதி. தாயார் சத்யபாமா. நல்ல வசதியுடன் வாழ்ந்த அந்தக் குடும்பம், கோபால மேனனின் மறைவுக்குப் பிறகு வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டது. வேறு வழியின்றி பிழைப்பைத் தேடி தன் அன்னை, அண்ணன் எம்.ஜி. சக்ரபாணியுடன் தமிழ்நாட்டுக்கு வந்தார் எம்.ஜி.ஆர். வேலை தேடி அலைந்த அவரை, கலைத்தாய் அழைத்துக் கொண்டாள். தன் அன்பு அன்னையைக் காப்பாற்ற, தனது ஏழாம் வயதில் நடிகர் எம்.கே. ராதாவின் தந்தை கந்தசாமி முதலியார் நடத்திவந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார் எம்.ஜி.ஆர். அப்போது அவருக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்தவர், பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காளி என். ரத்தினம். ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க எம்.ஜி. ராமச்சந்திரன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வேதனை ததும்பும் அனுபவங்களாக இருந்தன.

ஆனால், இந்தக் காலகட்டத்தில் அவர் பெற்ற துயர அனுபவங்கள், எதிர்கால வெற்றிகளை அடையும் மனப்பக்குவத்தை அவருக்குத் தந்தன.'சதிலீலாவதி' படம் மூலம் எம்.ஜி.ஆர் திரையுலகில் அறிமுகமானர். எம்.கே. ராதா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.எஸ். பாலையா போன்ற பல பிரபல நடிகர்களுக்கும் 'சதிலீலாவதி'தான் முதல் படம்! இதைத் தொடர்ந்து சிறு வேடங்களேயே எம்.ஜி.ஆர். ஏற்க நேர்ந்தது. முருகனாக, அர்ஜூனனாக, சிவனாக புராணப் படங்களில் நடித்த அவர், ‘அசோக்குமார்’ படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரின் நண்பராக வந்து சிறப்பாக நடித்திருந்தார்.

பின்பு பி.யூ. சின்னப்பா நடித்த 'ரத்னகுமார்' படத்தில் சில காட்சிகளில் வில்லனாக வந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடித்தார். இதற்கிடையில் எம்.ஜி. ராமச்சந்திரன் பலவித நடிப்புப் பயிற்சிகளைக் கற்றுத் தேர்ந்தார். மற்போர், வாள்வீச்சு, சிலம்பாட்டம் அனைத்தையும் பயின்று கொண்டார். இந்தப் பயிற்சிகள் அனைத்தும் அவர் எதிர்காலத்தில் வெற்றிப்பட நாயகனகப் பவனிவர மிகவும் உதவின.

“நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன்…”  - 1988 #AppExclusive

(மருதநாட்டு இளவரசி)பின்னர் ‘ஜெனோவா', 'மோகினி", 'மர்மயோகி’, ‘சர்வாதிகாரி’ - இப்படிப் பல படங்கள் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தன. சண்டைக் காட்சிகளில் அவர் காட்டிய அசுர வேகம் பலரை மலைக்க வைத்தது.

அவர் நடித்த படங்களைக் காண ரசிகர்கள் திரள ஆரம்பித்தனர். இவ்வேளையில்தான் பக்‌ஷிராஜாவின் 'மலைக்கள்ளன்' வந்தான் - ரசிகர்களின் மனத்தை வென்றான்.'மலைக்கள்ள'னில் பல வேடங்களைத் தாங்கி எம்.ஜி.ஆர். சிறப்பாகவே நடித்திருந்தார். 1954-ல் சிறந்த தமிழ்ப் படம் என்பதற்காக ஜனாதிபதி பரிசு பெற்ற படமாக அது அமைந்தது.தமிழில் தயாரான முதல் வண்ணப் படம்: 'அலிபாபாவும் 40 திருடர்களும்'. இப்படத்தில் நடித்த பெருமையை அடைந்தார் எம்.ஜி. ராமச்சந்திரன்.

பழங்கதைகளில் ஒன்றான 'குலேபகாவலி' கதையை, ராமண்ணா படமாக இயக்க, எம்.ஜி. ராமச்சந்திரன் நடிப்பில் அது வெளிவந்தபோது வசூல் சாதனை படைத்து, திரையரங்குகளில் வெற்றி உலா வந்தது. இதன்பின், முப்பது தியேட்டர்களில் திரையிடப்பட்டு, 100 நாள் வெற்றி கண்டான் 'மதுரை வீரன்'. அதில் எம்.ஜி.ஆர். உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய வசனம்:

'மன்னா..! என்மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எண்ணிக்கையில் பலப்பல.. ஒருவனைக் குற்றவாளி ஆக்கிவிடலாம், நிரபராதி என்று நிரூபிப்பதுதான் கடினம்… மன்னா! இது வரை என் வாழ்வில் கள்ளம் இல்லை. கபடு இல்லை. சூது இல்லை. சூழ்ச்சி இல்லை... பதவியை நான் கேட்டுப் பெறவுமில்லை... கூப்பிட்டுத் தந்தீர்கள் என்பதற்காக நான் செய்வதெல்லாம் சரி என்று வாதிடவும் வரவில்லை. புலி வேட்டையாடும் பொறுப்பேற்றேன்.. வழியிலே ஒரு புள்ளிமானைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தது. ‘காப்பாற்ற வருவான்... அந்த வரவைக் கள்ளர்களோடு சம்பந்தப்படுத்தலாம்’ என்று காத்திருந்தார்கள் சிலர்! யார் அந்த சிலர்? ஏன் அங்கு வந்தார்கள்? எவரிட்ட ஆணை? ..... மன்னா..! நாடு பயமில்லாமல் வாழவேண்டும்... பச்சைப் பயிர்கள் செழித்து வளரும் பாண்டிய மண்டலம் நீடூழி வாழ வேண்டும்... திருமலை மன்னர் சீரும் சிறப்பும் பெற்றுச் சிறந்தோங்க வேண்டும் என்று ஆசைப்பட்டவன் நான்... ஆனால், சூழ்ச்சிக்காரர்களின் நாடி மூச்சிலே, சதிகாரர்கள் பின்புறமிருந்து தாக்கிய தாக்குதலிலே நான் யாரென்ற கேள்வியே மறைந்து, குற்றக் கூண்டிலே நிற்க வேண்டிய கோரமான நிலை அடைந்திருக்கிறேன்... நான் சாகவேண்டும் என்று மன்னர் தீர்ப்பளித்தாலும் சரி, அதற்காக தான் அஞ்சப் போவதில்லை... ஆனால், கடைசி முறையாகக் கூறுகிறேன். நேற்றும் சரி, இன்றும் சரி, கள்ளர்களோடு எனக்கு உறவும் இல்லை.. மதுரைப் பேரரசுக்கு நான் துரோகம் நினேக்கவுமில்லை... ஏன், துரோகம் எங்கள் பரம்பரையிலேயே இல்லை…”

தேவரின் முதல் தயாரிப்பான ‘தாய்க்குப்பின் தார’த்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்களை உருக வைக்கும் மாறுபட்ட நடிப்பைத் தந்தார்.'எந்தத் திசையிலும், எந்தக் கோணத்திலும் தமிழ்ப் பட வசூல் நாயகன் எம்.ஜி. ராமச்சந்திரன்தான் என்று ஒருமுகமாகப் பேசப்பட்ட வேளை அது. அந்தக் காலகட்டத்தில்தான் எம்.ஜி. ராமச்சந்திரனின் லட்சியத் திரையீடாக 'நாடோடி மன்னன்’ வந்தது. தமிழ்த் திரைப்படவுலகில் எம்.ஜி.ராமச்சந்திரனின் புகழுக்கு முத்திரை பதித்தது 'நாடோடி மன்னன்'. 'நாடோடி மன்னனை’ இயக்கியதுடன், இரட்டை வேடங்களில் நடித்தும் பெரும் சாதனையைச் செய்தார் எம்.ஜி.ஆர். இரண்டு லட்சம் மக்கள் கூடியிருக்க, மதுரையில் நடைபெற்ற வெற்றி விழாவில், எம்.ஜி. ராமச்சந்திரனைப் பாராட்டி, தங்க வாள் பரிசாக அளிக்கப்பட்டது.

“நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன்…”  - 1988 #AppExclusive

‘நாடோடி மன்ன’னில் வீராங்கன்(எம்.ஜி.ஆர்.) - அமைச்சர் இடையே நிகழும் உரையாடல்:

“.... நான் சாதாரண குடியில் பிறந்தவன். உழ முடியாத கலப்பை, அதிகாரமில்லாத பதவி இவைகளை நாங்கள் விரும்புவதேயில்லை... உங்கள் கட்டாயத்துக்காக நான் மன்னனாக இருக்கச் சம்மதிக்கிறேன்... ஆனால், சட்டம் இயற்றும் அதிகாரம் என் கையில்தான் இருக்க வேண்டும்...""அது ஆபத்து வீராங்கா...'“... அமைச்சரே, நீங்கள் மாளிகையிலிருந்து மக்களைப் பார்க்கிறவர்கள்... நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன்... பெரிய இடத்தில் புகுந்ததால் என் உருவம் மாறியிருக்கிறது. ஆனால், என் உள்ளம் மாறவில்லை... இங்கிருந்து போக விரும்புவதெல்லாம் வெளியே மக்களுக்குத் தொண்டு செய்வதற்குத்தான்... அமைச்சரே... கொஞ்ச நாட்கள் இருந்தாலும் மக்களின் குறைகளைத் தீர்க்கிறவன்தான் அறிவாளி…”

ஏ.எல். சீனிவாசன் தயாரித்த, கவிஞர் கண்ணதாசனின் கதை வசனத்தில் வெளிவந்த 'திருடாதே’ படம், எம்.ஜி. ராமச்சந்திரனின் திரை வாழ்வில் மற்றுமொரு புதுத் திருப்பத்தினை ஏற்படுத்தித் தந்தது.

'தாய் சொல்லைத் தட்டாதே...', 'தெய்வத்தாய்', 'பணத்தோட்டம்' இப்படித் தொடர்ந்து வந்த பல படங்கள் இவரை சமூகப் படங்களின் வெற்றி நாயகனை மாற்றின.

இவற்றைத் தொடர்ந்து வெளிவந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை' படம், எம்.ஜி.ஆர்தான் வசூல் மன்னன் என்பதை சந்தேகமற நிரூபித்தது. கோழை, வீரன் ஆகிய இரட்டை வேடங்களில் 'எங்க வீட்டுப் பிள்ளை'யில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக அந்த ஆண்டின் சிறந்த நடிகராக எம்.ஜி.ஆர். ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பி.ஆர். பந்துலுவின் அற்புதப் படைப்பாக வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்', மீண்டும் எம்.ஜி.ஆரை சாகசப்பட வெற்றி நாயகனாக மக்கள் முன் நிறுத்தியது.

எம்.ஜி.ஆர். நடித்த முதல் படமான 'சதிலீலாவதி' படத்துக்குக் கதை எழுதிய எஸ்.எஸ். வாசன், ஜெமினி நிறுவனம் சார்பில் தயாரித்து அளித்த வண்ணப்படம் 'ஒளி விளக்கு’. எம்.ஜி.ஆரின் 100-வது படமாக ‘ஒளி விளக்கு’ அமைந்தது.

லட்சக்கணக்கான பொருட் செலவு, நேரம், உழைப்பைச் செலவழித்து எம்.ஜி.ஆர். உருவாக்கிய பிரமாண்டமான சித்திரம் 'அடிமைப் பெண்’. அவர் தயாரித்து அளித்த 'உலகம் சுற்றும் வாலிபன்’, தமிழ்த் திரையுலகின் மற்றொரு சாதனையாக இன்றும் கருதப்படுகிறது. 'ரிக்ஷாக்காரன்’ படம் 'பாரத்' விருதைப் பெற்றுத் தந்தது.

ஒரு நாயக நடிகர், ஒரேமாதிரியாகத் தொடர்ந்து நடித்து வந்தால், ரசிகர்கள் சலிப்படைந்து, அவரை ஒதுக்குவதுதான் வழக்கம். ஆனால், பெரும்பாலான படங்களில், தான் நீதியை நிலைநாட்டும் பாத்திரங்களை ஏற்றும், ரசிகர்கள் மீண்டும் மீண்டும் தன் படங்களைத் திரண்டு வந்து பார்க்கும் சாதனையையும் புரிந்தவர் எம்.ஜி.ஆர்.

“நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன்…”  - 1988 #AppExclusive

தனக்கு வரும் சோதனைகளே வென்று காட்டும் திறன் படைத்தவர் எம்.ஜி.ஆர். ஒரு மேடை நாடகத்தின்போது நிகழ்ந்த விபத்தில், இவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது. ‘இனி இவர் எழுந்து நடமாட முடியாது' என்று அப்போது பொதுவாகப் பேசப்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆர். பழைய தெம்புடன் எழுந்து, அசுர வேகத்தில் இயங்க ஆரம்பித்தார். 1967-ல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு, அவருக்குத் தெளிவாகப் பேசமுடியாத நிலை உண்டாகியது. இதனால் ‘இவர் சகாப்தம் முடிந்தது' என்று பலர் எண்ணினர். ஆனால், அவர்களின் எண்ணத்தைத் தவறாக்கி, ரசிகர்களின் ஆதரவுடன் அதன் பிறகும் புதுப் புது சாதனைகளைப் புரிந்தார் அவர்.'உரிமைக் குரல்' படத்தில் எம்.ஜி.ஆர். சொல்வார்:

“எங்க பரம்பரைக்கே சோறு போட்ட பூமி இது... என் தாய் எனக்குப் பாலூட்டி வளர்த்தாங்க... இந்த நிலத் தாய் எனக்குச் சோறூட்டி வளர்த்தாங்க... என் உயிர் போனாலும் இந்த மண்ணுலேதாண்டா போகும். ஆனா, அந்த நேரத்துல நான் எழுப்புகிற உரிமைக்குரல் இங்கு மட்டுமல்ல, எங்கெங்கு உழைக்கும் இனம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஒலிச்சிக்கிட்டே தான் இருக்கும்…”எம்.ஜி.ஆரிடம் உள்ள தனிச் சிறப்பு, அவர் ஏற்படுத்திய வசூல் சாதனைகளை அவரே வென்று காட்டியதுதான்.

(03-01-1988 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)