Published:Updated:

தமிழ் சினிமாவுக்கு லாபம் கொடுக்கிறதா `நேரடி ஓடிடி ரிலீஸ்' வியாபாரம்?

ஓடிடி
ஓடிடி

ஓடிடி நிறுவனங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிறுவனமும் புதிய படங்கள் லிஸ்ட்டில் வருடத்துக்கு அதிகபட்சமாக 20 படங்களுக்குள்தான் வாங்குகிறார்கள்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இதுவரை பெரிய நடிகர்கள் நடித்து, கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நேரடியாக ரிலீஸாகியிருக்கும் ஒரே படம் 'பொன்மகள் வந்தாள்'. இந்தப்படம் மொத்தமாக 4-5 கோடி ரூபாயில் எடுத்து முடிக்கப்பட்டு அமேசானுக்கு 5.5 கோடி ரூபாய்க்கும், விஜய் டிவிக்கு தொலைக்காட்சி உரிமையாக 1.5 கோடி ரூபாய்க்கும் விற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. லாபமாகப் பார்த்தால் தயாரிப்பு நிறுவனத்துக்கு 1-2 கோடி ரூபாய்வரைதான் என்கிறார்கள். புரமோஷன் செலவுகளை அமேசான் நிறுவனமே பார்த்திருக்கிறது.

அடுத்து கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட சிலர் சேர்ந்து தயாரித்திருக்கும் 'பெண்குயின்' படமும் ஒரு கோடி ரூபாய் லாபம் வைத்துதான் விற்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இவை திரையரங்கில் வெளியாகி ஹிட் ஆகியிருந்தால் நல்ல லாபம் கிடைத்திருக்கும்.

ஓடிடி நிறுவனங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிறுவனமும் புதிய படங்கள் லிஸ்ட்டில் வருடத்துக்கு அதிகபட்சமாக 20 படங்களுக்குள்தான் வாங்குகிறார்கள். அமேசான், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் ஆகிய நிறுவனங்கள்தான் பெருமளவில் படங்களை வாங்குகின்றன. சன் டிவி தான் தயாரிக்கும் படங்களின் ஓடிடி உரிமையைத் தன்னிடமே வைத்துக்கொள்கிறது. மற்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்களின் ஓடிடி உரிமையை வாங்குவது கிடையாது.

 ஓடிடி
ஓடிடி

ஓடிடி நிறுவனங்கள் 5 அல்லது 10 வருடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் படங்களை வாங்குகின்றன. அமேசான் நிறுவனம் 'தர்பார்' படத்தை வாங்கியிருக்கிறது என்றால், இந்தியாவில் மட்டும்தான் அமேசானில் இந்தப்படம் வெளியாகும். வெளிநாடுகளில் அமேசான், நெட்ஃபிளிக்ஸ், டென்ட்டுகொட்டாய் எனப் பல தளங்களிலும் இந்தப்படத்தை விற்கும் உரிமை தயாரிப்பாளருக்கு உண்டு. 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தயாரிப்பாளர் அந்தப்படத்தை வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்கலாம்.

தியேட்டரில் படத்தை வெளியிட்டால் தயாரிப்பாளர்களுக்கு மூன்று மாதத்துக்குள் மொத்தப்பணமும் வந்துவிடும். ஆனால், ஓடிடியில் அப்படி இல்லை. அமேசானைத் தவிர்த்து மற்ற தளங்கள் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் வரை ஒப்பந்தம் செய்த தொகையைப் பிரித்துப் பிரித்துத் தருகின்றன. இதனால் தயாரிப்பாளர்களுக்குப் பணம் விரைந்து வந்துசேர்வதில்லை என்கிற குறையிருக்கிறது.

அதேபோல், 50 கோடி, 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கும் படங்களால் நிச்சயம் ஓடிடி-யில் லாபம் கிடைக்காது என்கிறார்கள் மூத்த தயாரிப்பாளர்கள். ''முதலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக பெரிய நடிகரின் படத்தைப் பெருந்தொகைக்கு வாங்குவார்களே தவிர, தொடர்ந்து வாங்க மாட்டார்கள். அப்படியே வாங்கினாலும் தயாரிப்பாளருக்குப் பெரிய லாபம் கிடைக்காது.

ஒரே விஷயம் என்னவென்றால், படம் சுமாராக இருந்தாலும் ஓடிடிக்கு விற்றால் ஒப்பந்தம் செய்த பணம் வந்துவிடும். ஆனால், தியேட்டர் ரிலீஸில் அப்படியில்லை. படத்துக்கான விமர்சனங்களைப் பொறுத்து இது மாறுபடும்.

எப்படியிருந்தாலும் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகாது. அவர்களின் சம்பளமே பல கோடிகள். அவ்வளவு பணம் கொடுத்துப் பெரிய படங்களை வாங்க ஓடிடி நிறுவனங்கள் இப்போதைய சூழலில் தயாராக இல்லை என்பதே உண்மை'' என்கிறார்கள்.

- கலக்கத்தில் இருக்கிறது கோலிவுட். கண்களுக்கு எட்டிய தூரம்வரை நிலைமை சரியாகும், ஷூட்டிங்குகள் ஆரம்பமாகும், தியேட்டர்கள் திறக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. அடுத்து என்ன என்கிற பதில் தெரியாத கேள்வியும், பெரும்குழப்பமும் தமிழ் சினிமாவைச் சூழ்ந்திருக்கும் சூழலில் உண்மை நிலவரத்தை அப்படியே சொல்லும் ஆனந்த விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > தியேட்டரா, ஓ.டி.டியா? - திசை தேடும் கோலிவுட்! https://bit.ly/3hGgBG4

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு