Published:Updated:

''விஜய்ணா''... தங்கையை இழந்தவர், பல கோடி தங்கைகளுக்கு அண்ணன் ஆனது எப்படி? #HBDVijay

விஜய்
விஜய்

‘கில்லி’க்குப் பிறகு வந்த எல்லா படங்களிலும் விஜய்க்கு தங்கச்சி கேரக்டர் ஒன்று இருக்கவே செய்யும். அப்படி இல்லை என்றாலும் அவரை அண்ணா என்று உணரவைக்க இயக்குநர்கள் ஒரு சீன் வைத்துவிடுவார்கள்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஒரு பேட்டியில் விஜய்யை பற்றி குறிப்பிடும் போது “ மற்ற ஹீரோக்களை, பெண்கள் ஒரு பாய் ஃபிரண்டாவோ, லவ்வராவோதான் பாக்குறாங்க. ஆனால் விஜய்யை அண்ணா ஸ்தானத்தில் வெச்சு பாக்குறாங்க. அந்த நெருக்கமான உணர்வுதான் விஜய்யின் மிகப்பெரிய பலமே” என குறிப்பிட்டார்.

அவரின் அந்த வார்த்தைகள் நிச்சயம் மறுக்க முடியாத உண்மை. இங்கே தமிழ் சினிமாவில் நிறைய ஹீரோக்கள் அண்ணனாக நடித்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அண்ணன் - தங்கை என்றாலே ‘பாசமலர்’, ‘கிழக்குச் சீமையிலே’ போன்ற படங்கள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் அந்த படத்தில் நடித்த சிவாஜியையோ, விஜயகுமாரையோ ‘அண்ணா’ என்று யாரும் அழைத்ததாகத் தெரியவில்லை. இங்கே அண்ணா என்று ஆசையாய் கூப்பிடப்படுவது விஜய் மட்டும்தான். அவர்களுக்கெல்லாம் கிடைக்காத அந்த ‘அண்ணா’ பிராண்ட் விஜய்க்கு மட்டும் கிடைத்திருக்கிறதே எப்படி, அந்தப் பெயர் அவருக்கு தற்செயலாக அமைந்ததா?

பெற்றோருடன் விஜய்
பெற்றோருடன் விஜய்

சில உதாரணங்களைப் பார்க்கலாம். ‘கில்லி’ படத்தில் ஒரு நகர்ப்புற அண்ணன்- தங்கை உறவை கொண்டு வந்திருப்பார் விஜய். மிகச் சரியாக வொர்க் அவுட் ஆகியிருக்கும். அதற்கு அடுத்ததே ‘திருப்பாச்சி’ படத்தை தேர்வு செய்தார். அதில் கிராமத்து அண்ணன் – தங்கை உறவு. அதுவும் செம ஹிட். இப்படி அடுத்தடுத்த படங்களில் வெவ்வேறு அண்ணன் தங்கை உறவை அழகாக கொண்டு வந்திருந்தார் விஜய்.

‘கில்லி’க்குப் பிறகு வந்த எல்லா படங்களிலும் விஜய்க்கு தங்கச்சி கேரக்டர் ஒன்று இருக்கவே செய்யும். அப்படி இல்லை என்றாலும் அவரை அண்ணா என்று உணரவைக்க இயக்குநர்கள் ஒரு சீன் வைத்துவிடுவார்கள். ‘பிகில்’ படத்தில் “இப்போ நான் உன்னோட கோச்சா கேட்கல, ஒரு அண்ணனா கேட்கிறேன்” என்பது ஒரு எடுத்துக்காட்டு.

இவ்வளவு ஏன் ‘மேயாத மான்’ படத்தில் ''தங்கச்சி'' பாடலில் வரும் வரியில் கூட “ஈடு இல்ல எவனும்… எங்க தளபதி தான் வரணும்” என விஜய் ரெஃபரன்ஸ் வரும்படி ஒரு வரி வரும். அந்த அளவுக்கு விஜய்யின் ‘அண்ணா’ பிராண்ட் உருவகம் பெற்றது. “அவ என்ன அண்ணானு கூப்டுட்டா டா” என ஃபீல் பண்ணும் பசங்களுக்கு மத்தியில் அந்த Brother Zone தான் விஜய்யை பட்டித்தொட்டி எங்கும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.

விஜய்
விஜய்

நமக்கு கிடைக்காத அல்லது கிடைத்து தவறிப்போன உறவுகளின் மிச்சத்தை நம் யாரோ ஒருவரிடம் தேடிச்செல்லும் பழக்கம் நம் எல்லோருக்கும் இருக்கும். அலுவலகத்தில் இறந்து போன அப்பா சாயலில் யாராவது தென்பட்டால் மனதளவில் உடனே அவரிடம் ஒரு நெருக்கம் உண்டாகும். அது குணம், குரல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி விஜய்க்கும் அண்ணா என்று கூப்பிட ஒரு தங்கையில்லையே என்கிற உணர்வு இருந்திருக்கலாம். ஏனென்றால் சிறுவயதில் தங்கையை இழந்தவர் அவர். திடீரென தவறிப்போன தங்கையைப் பற்றி பல்வேறு பேட்டிகளில் அவர் பேசியிருக்கிறார்.

''விஜய் குழந்தையில் பயங்கர துறுதுறு. குறுப்புக்காரர். ஓடிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பார். ஆனால், தங்கை வித்யா இறந்ததும் அப்படியே அமைதியாகிவிட்டார். சத்தமாகப் பேசுவதைக்கூட நிறுத்திவிட்டார்'' என அவரது தாய் ஷோபா சந்திரசேகர் சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார். விஜய் தனது மகளுக்குக்கூட தங்கையின் பெயரான வித்யாவை கொஞ்சம் மாற்றி திவ்யா என்று வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு தங்கை மேல் மிகவும் அன்பாக இருந்திருக்கிறார் விஜய்.

விஜய்யை அண்ணா என அழைக்க இப்போது ஒரு தங்கையல்ல, கோடிக்கணக்கான தங்கைகள் இருக்கிறார்கள்!

பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்ணா!

அடுத்த கட்டுரைக்கு