Published:Updated:

பீஸ்ட் : 'நாளைய தீர்ப்பு' டு `மாஸ்டர்'... விஜய்க்கு விகடனின் மார்க்கும், விமர்சனமும் என்ன? #Beast

விஜய்

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார் விஜய். அவரது 64வது திரைப்படமான மாஸ்டர் இன்று வெளியாகும் நிலையில் விஜய்யின் படங்களுக்கு விகடன் என்ன விமர்சனம் எழுதியிருக்கிறது, மார்க் என்ன?!

பீஸ்ட் : 'நாளைய தீர்ப்பு' டு `மாஸ்டர்'... விஜய்க்கு விகடனின் மார்க்கும், விமர்சனமும் என்ன? #Beast

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார் விஜய். அவரது 64வது திரைப்படமான மாஸ்டர் இன்று வெளியாகும் நிலையில் விஜய்யின் படங்களுக்கு விகடன் என்ன விமர்சனம் எழுதியிருக்கிறது, மார்க் என்ன?!

Published:Updated:
விஜய்

விஜய் ஹீரோவாக அறிமுகமான `நாளைய தீர்ப்பு' படத்துக்கு விகடன் விமர்சனம் எழுதவில்லை. அவர் நடித்த இரண்டாவது படமான `செந்தூரப்பாண்டி'யில் இருந்துதான் விமர்சனக் கணக்கைத் தொடங்கியிருக்கிறது விகடன். ஆனந்த விகடனில் விஜய் வாங்கியிருக்கும் அதிகபட்ச மார்க் 50. 'காதலுக்கு மரியாதை' படம்தான் விஜய்யை அரை சதம் அடிக்கவைத்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக 'கில்லி' 45 மார்க் வாங்கியிருக்கிறது. விஜய்யின் மற்ற படங்கள் என்ன மார்க் வாங்கியிருக்கின்றன? அவரின் ஆவரேஜ் என்ன? கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு உங்கள் கணக்கை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.

செந்தூரப்பாண்டி - 30

கதாநாயகன் விஜய், டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் (சாதுவான பார்த்திபன் சாயல்). தந்தை சொல்லிக்கொடுத்தபடி அப்படியே ஒப்பிக்கிறார். அடுத்த படத்தில்தான் இவர் நடிப்பை ஆரம்பிக்க வேண்டும். இருந்தாலும் இவர் சண்டைக்காட்சிகளில் பாஸ் மார்க் பெறுகிறார்.

ரசிகன் - 28
Vijay, Rasigan Review
Vijay, Rasigan Review

படத்தின் ஹீரோ விஜய்... மெனக்கெட்டு சண்டைகள் போடுகிறார்... டான்ஸ் ஆடுகிறார்... ஒரு பாட்டும் பாடியிருக்கிறார்... நடிக்கமட்டும் மறந்திருக்கிறார்.

செல்வா - 30

ரகுவரன் - விஜய்யை மட்டுமே பிரகாசிக்க வைத்து, மற்ற நடிகர்களையெல்லாம் `செல்வா' பட ஷூட்டிங் என்று சொல்லி ஏமாற்றியிருக்கிறார்கள்.

லவ் டுடே - 42

முழுதாக மெச்சூரிட்டி பெறாத இளைஞராக வருகிற விஜய், தனது கண்மூடித்தனமான ஒருதலைக் காதல் தவிப்புகளை அற்புதமாக வெளிப்படுத்தி முடிவுக்கு மேலும் உரமூட்டியிருக்கிறார்.

ஒன்ஸ்மோர் - 39
Vijay, Sivaji, Once More
Vijay, Sivaji, Once More

பார்க்கும் பெண்களையெல்லாம் வார்த்தைகளாலேயே வர்ணணை செய்து வளைத்துப்போடும் ப்ளேபாய் ரக ரோலில் கச்சிதமாகப் பொருந்துகிறார் விஜய்!

பூவே உனக்காக - 43

விஜய்க்கு இது ஒரு வித்தியாசமான, மென்மையானக் களம். டான்ஸ் ஆடுவதில் இருக்கும் அதே ஜோர், நடிப்பில் இல்லையென்றாலும் அது இந்தப்படத்துக்கு பெரிய பாதகமாகமில்லை

காதலுக்கு மரியாதை - 50

நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் ஹீரோக்கள் அகாடமியில் உறுப்பினர் கார்டு பெற்றுவிட்டார் விஜய். ஷாலினியிடம் காதலைப் வெளிப்படுத்தும்போதும், அம்மா ஶ்ரீவித்யாவிடம் அன்பைப் பொழியும்போதும், மென்மையாக ஷாலினியை நினைத்து மனதுக்குள் அசைபோடும்போதும், தமிழ் சினிமாவுக்கு இதோ ஒரு கங்குலி!

நினைத்தேன் வந்தாய் - 35

சிக்கான காஸ்ட்யூம்களுடன் விஜய் அறிமுகமாகும் விநாடியே அரங்கம் இரைச்சலால் குலுங்குகிறது. நடிப்பில் அடக்கிவாசிப்பதன் முழுவெற்றியும் விஜய்க்கு கிடைத்துவிட்டது. அதற்காக காதலி ரம்பாவை மலை உச்சியிலிருந்து அதலபாதாளத்தில் தவறிவிழுந்துவிடாமல் காப்பாற்றும் காட்சியில்கூட கொஞ்சமும் பதற்றம் காட்டமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் எப்படி?!

ப்ரியமுடன் - 41

கெளசல்யாவின் அப்பா ஜெய்கணேஷிடம் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சியில் டெண்டுல்கராக பிரகாசிக்கிறார் இளையதளபதி. `நத்திங் டூயிங்' எனப் பிடிவாதமாக மறுக்கும் அப்பாவிடம் கெஞ்சி, காலில் விழுந்து மன்றாடிய பிறகும், பலன் கிடைக்கமால் போக, விநாடி நேரத்தில் அவர் காலை வாரிவிட்டுக் கீழேத்தள்ளி, தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல், அதே சமயம் அது கலைந்தும் விடாதபடி சாமர்த்தியமாக 'ரிஸ்க் வாக்' செய்திருக்கிறார் விஜய்.

நிலாவே வா - 37

வுட்பியின் பெயரான சங்கீதாவே படத்தின் நாயகிக்கும் பெயராக இருப்பதாலோ என்னவோ... விஜய்யின் காதல் காட்சிகளில் குளுமணாலியின் குளிர்ச்சி!

துள்ளாத மனமும் துள்ளும் - 41

இடுப்பு வளைத்து டான்ஸ் ஆடி, காதல் வசனம் பேசி காலம் தள்ளவிட்டு போகமுடியாதபடிக்கு முழு திறனை வெளிப்படுத்தவேண்டிய சவாலான பாத்திரம் விஜய்க்கு. குறிப்பாக அம்மா இறந்த தகவல் வந்ததும், டாய்லெட்டுக்குள் சென்று தனிமையில் கதறி அழுகிறாரே... ஒரு சோறு பதம்!

என்றென்றும் காதல் - 34

விஜய் இளமைத்துள்ளலோடுதான் இருக்கிறார். நன்றாகத்தான் நடனமாடுகிறார். சண்டைக் காட்சிகளில் மூர்க்கம் காட்டுகிறார். ஆனாலும் என்ன... கதை என்ற அஸ்திவாரம் இல்லாததால் டிவியில் திரை விமர்சனம் பார்ப்பது மாதிரி சட் சட்டென எகிறுகிறது படம்.

நெஞ்சினிலே - 35

அடியாளகச் சென்று மன உறுத்தலினால் தயங்கித் தயங்கி சண்டையில் ஈடுபடுகிற இடங்களில் விஜய் மின்னுகிறார்.

மின்சாரக் கண்ணா - 37

விஜய் தனது மெளன சாமியார் வேஷத்தைக் கலைத்துவிட்டுக் கொஞ்சம் கலகலப்பு ஆசாமியாக மாறியிருக்கிறார். அந்தப் பழைய கோயம்புத்தூர் பாஷையை மட்டும் மாத்துங்கண்ணாங்!

கண்ணுக்குள் நிலவு - 40

சிலது மட்டும் நினைவில் இருக்க, பலது மறந்துவிட்ட மனநோயாளியின் பாத்திரத்தில் பரிதாபத்தை நிரம்பவே சம்பாதித்துக்கொள்கிறார் விஜய்.

குஷி - 40

கீழே ஆறு ஓடுகிறது... மேலே அபாய உயரத்தில் இரு கரைகளையும் இணைக்கிறது ஒரு பாலம். பாலத்தின் உச்சியிலிருந்து கால்களை கயிற்றால் கட்டிக்கொண்டு அலறலும், ஆனந்தமுமாக அந்தரத்தில் ஊசலாடுகிற அந்த பங்கி ஜம்புக்காக விஜய்க்கு ஒரு வெரிகுட். ஆனால், நடிப்பில் இன்னும் `கண்ணுக்குள் நிலவு' பட பாதிப்பு நிறைய இருக்கிறது.

ப்ரியமானவளே - 41
Vijay, Simran, Priyamanavaley
Vijay, Simran, Priyamanavaley

ப்ளேபாய் இளைஞனாக, அக்ரிமென்ட் கணவனாக, தாய்ப்பாசம் கிடைக்கப்பெறாத பரிதாப மகனாக, பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கிறார் விஜய். பற்களைக் கடித்துப்பேசும் பழக்கத்தை இவர் விட்டுவிடலாமே!

ப்ரெண்ட்ஸ் - 42

படத்தின் முதல் பாதியில் விஜய் தர்பார். அடிதடி, ஆட்டம், பாட்டம், `ல்தகா சைஆ' விளையாடுகிறார்.

பத்ரி - 40

பாக்ஸிங் போட்டிக்குத் தயராக விஜய் பயிற்சி எடுக்கும்பாடல் காட்சி பிரமாதம். குப்புறப்படுத்துக்கொண்டு தன் கையால் கார் டயர்களை ஏற்றச்செய்யும்போது, படம் பார்ப்பவர்களுக்கே கை வலிக்கிறது. துணிச்சலுக்கு கங்கிராட்ஸ் விஜய்!

ஷாஜகான் -36

சலிக்கச் சலிக்க சண்டை போடுகிறார்... சராமாரியாக வந்துவிழும் பாடல்களுக்கு டான்ஸ் ஆடுகிறார் என்றாலும், `இவருக்கு என்ன ஆச்சு?' எனக்கேட்கும்படியான ஒட்டுதல் இல்லாத ஒரு நடிப்புதான் விஜய்யிடமும்!

தமிழன் - 40

உரிமைகள் என்ன என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும் என்று போராடுகிற இளம் வழக்கறிஞராக விஜய். கறுப்பு கவுனில் படுபாந்தமாக, கம்பீரமாக இருக்கிறார். வசன உச்சரிப்புகளிலும், பாடி லேங்குவேஜிலும் பலே பிக்-அப்!

பகவதி - 37

தாதாவாக வரும் விஜய் ஸ்டைலாக இருக்கிறார். ஆனால், மனதில் நிற்பவர் டீக்கடை விஜய்தான். மனிதர், சரியான சிக்கனம் சின்னு!

வசீகரா - 41

துள்ளித் துள்ளி ஓட்டம், தலையைச் சாய்த்து ஒரு சோகம், கண்கள் மின்ன காதல், மின்னல் வேக நடனம், என்று கொடுக்கப்பட்ட பாத்திரத்தை பளபளவென தேய்த்து மெருகேற்றியிருக்கிறார் விஜய்.

புதிய கீதை - 39

பாத்திரப்படைப்பு எப்படியிருந்தாலும் மின்னல் வேக டான்ஸுக்கும், சுருதி தப்பாத நடிப்புக்கும் விஜய்னா விஜய்தான்.

திருமலை - 39

வெளிப்பார்வைக்கு முரடு... பழகிப்பார்த்தால் இனிப்பு என்ற பலாப்பழ கேரக்டரில் விஜய் பின்னி எடுக்கிறார். சட்டைக் காலர் இடுக்கிலிருந்து சிகரெட்டைக் கவ்வி உருவுவதிலும், 'என் தியேட்டர்ல உன் படத்தை ஓட்ட நினைக்காதே... நினைச்சா ஸ்கிரீனு கிழிஞ்சிடும்' என்று படுஸ்டைலாக கைவீசி எச்சரிக்கும் ஸ்டைலிலும் சூப்பர் சீனியரை ஞாபகப்படுத்தினாலும் ரசிக்கமுடிகிறது.

கில்லி - 45
Vijay, Trisha, Ghilli
Vijay, Trisha, Ghilli

உற்சாகப் புயலாக விஜய். ஆகாசத்துக்கும், பூமிக்குமாக பறக்கிற பையன். அடிதடியிலும், காமெடியிலும் பிரமாதமான ஸ்கோப். ஆட்டத்திலும் அப்படியொரு நளினம். விஜய்க்கு கில்லி ஒரு வெற்றிப்புள்ளி.

மதுர - 39

குழைவான நடிப்பு, பரபர சண்டை, ஷோக்கான ஸ்டைல் என்று விஜய் என்னவோ நன்றாகத்தான் உழைத்திருக்கிறார். `மச்சான் பேரு மதுர' பாட்டுக்கு அவர் ஆடுகிற துள்ளாட்டத்துக்கு, தியேட்டரே விசிலாட்டம் போடுகிறது. ஆனால், கலெக்டர் ரோல் அவர் தலைக்குப் பொருந்தாத கனமான குல்லா!

திருப்பாச்சி - 40

கலகல சென்ட்டிமென்ட் ஜோர் மெல்லக் குறைந்து இரண்டாம் பாதி முழுக்க சதா இறுகிப்போன முகத்தோடே வருகிறார் விஜய். பாடல் காட்சிகளில் மட்டும் குறைவில்லாத துள்ளல்.

சச்சின் - 42

படத்தை தன் ரகளையான நடிப்பால் தாங்கி நிற்கிறார் விஜய். உடம்பெல்லாம் குறும்பு, அலட்டலான புன்னகை, மெலிதான நகைச்சுவை இழையோடும் பாடிலேங்குவேஜ் எனப் பின்னியெடுக்கிறார். க்ளோசப்களில் இன்னும் அழகு!

சிவகாசி - 42

சிலோன் பெளலர்களை தோனி விளாசுகிற மாதிரி சிக்குகிற அத்தனை பேரையும் அடித்து வெளுக்கிறார். சில இடங்களில் தத்துப்பித்துவம் தலைக்காட்டுவதும், பெண்மைக்கு இலக்கணம் வகுக்கிறேன் பேர்வழி என்று லேசாக நோகடிக்கிற வசனங்கள் பேசுவதும், தேவையே இல்லீங்ண்ணா!

ஆதி - 38

ரயில் நிலையத்தில் குடும்பத்தை ரயிலேற்றிவிட்டு ஓடி வருகிற ரவுடிக் கூட்டத்தைக் கொட்டுகள் முழங்க ஆடிக் கொண்டே துவம்சம் பண்ணுவது, தனியாளாக தாதாவின் கோட்டைக்குள் நுழைந்து சவால் விடுவது போன்ற காட்சிகள் விஜய் ரசிகர்களுக்கான விசில் விருந்து. ஆனால், அதுவே ஓவராகி எதற்கெடுத்தாலும் விஜய் சவடால் வசனம் பேசுவதும், சுற்றி நிற்கும் வில்லன் குரூப் அதை சுவாரஸ்யமாகக் கேட்பதும், முதுகு தீப்பிடித்து எரிய எரிய விஜய் சண்டை போடுவதும்... அவருக்கு எரிகிறதோ இல்லையோ, பார்க்கிற நமக்கு செம எரிச்சல்!

அழகிலும் நடிப்பிலும் ஸ்பெஷல் பிக்-அப் கூடியிருக்கிறது விஜய்யிடம். படம் முழுக்க விஜய் காட்டும் தெனாவட்டு, ரசிக்கும்படியான ரகளை. ஆக்ஷன் காட்சிகளில் கடுமையான உழைப்பு. கங்கிராட்ஸ்!

டைட்டிலுக்கு ஏத்த மாதிரி விஜய் செம ஸ்டைலிஷ்! ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அழகழகான மேனரிசங்களில் அசரடிக்கிறார். நடனங்களும் செம கலக்கல். வழக்கமான கதைகளைவிட்டு புது முயற்சி எடுத்ததற்காக விஜய்க்கு ஒரு வெல்கம் பொக்கே! எதிர்காலத்தை அறிந்து தவிக்கும் குரு, குஷி மைனர் பிரகாஷ் என இரண்டு கேரக்டரிலும் விஜய்யின் பெர்ஃபாமன்ஸ், சர்ப்ரைஸ் போனஸ்!

குருவி - 39
Vijay, Vikatan Party
Vijay, Vikatan Party

விஜய்க்கு ஆதர்சமான ஆக்ஷன் அவதாரம். பொளேர் பொளேரெனப் பொளக்கிறார், டமால் டுமீலென வெடிக்கிறார், ஆகாயத்தில் பறக்கிறார், தண்ணீருக்குள் தடதடக்கிறார் என ஆக்ஷன் பேக்கேஜ்! கிடைத்த கேப்களில் காமெடி, சென்டிமென்ட் வகையறாக்களுக்கும் மரியாதை செய்கிறார்.

வில்லு - 37

`பீமனிடம் கதை' கேட்பதைவிட இயக்குநர்களிடம் `கதை' கேட்பதில்தான் உஷார் தேவை விஜய்! ஆகாயம், நீர், நில மார்க்கமாக முறையே பறந்து, மூழ்கி, ஓடி வித்தைகள் புரிகிற விஜய், பிற்பாதி மிலிட்டரி ரோலுக்காக மீசையை முறுக்கி கெட்டப் சேஞ்ச் செய்கிறார்.

வேட்டைக்காரன் - 38

அறிந்த காட்சிகள், தெரிந்த திருப்பங்கள் எனப் படத்தில் எல்லாமே பழசு (டைட்டில் உட்பட!) படத்தில் செம ஃப்ரெஷ் விஜய். காதலில் குழைகிறார். நட்பில் நெகிழ்கிறார். ஆக்ஷனில் உறுமுகிறார். ஆனால், அலுத்துச் சலித்த அதே ரவுடி வேட்டையை எத்தனை முறை பார்ப்பது? போதாக்குறைக்கு விஜய் நடித்த பல படங்களின் ஸீன்களே இதில் ரிப்பீட். ஆக்ஷன் போர்ஷன் முழுக்க விஜய் நடக்கிறார், பறக்கிறார், சட்டையை உதறுகிறார், பஞ்ச் அடிக்கிறார், சவால்விடுகிறார்... றார்... றார்!

விஜய்யின் 50-வது படம். வழக்கம்போல ஆட்டத்தில் பின்னிப் பெடல் எடுக்கிற விஜய், நடிப்பில் வித்தியாசம் காட்ட வேண்டுமே? `வேட்டைக்கார'னில் கை வீசி நடந்தவர், இதில் கையைப் பின்னால் கட்டிக்கொள்கிறார். மற்றபடி `மேல கை வைக்கிறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிக்கணும். கை வெச்சுட்டா, அப்புறம் யோசிக்கவே முடியாது' என்று தன் புகழ் பாடுகிறார். `எனக்குப் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு. ஒவ்வொருத்தரும் சிங்கக் குட்டிங்க' என்று ரசிகர் புகழ் பாடுகிறார். திடீரென்று தமிழர்களுக்காகக் கவலைப்படுகிறார். நல்லவர்களுக்கு உதவுகிறார்.

காவலன் - 42

பில்ட் - அப் ஓப்பனிங், சூப்பர்மேன் சூரத்தனம், பஞ்ச் பராக்கிரமம், ஆக்ஷன் அவதாரம் என எந்த அலட்டல் மிரட்டலும் இல்லாத `ஸோ ஸாஃப்ட்’ விஜய் சினிமா! காதலியை முதன்முதல் சந்திக்கப் போகும் தவிப்பில் பூங்கா இருக்கையில் இடறி விழுந்து சமாளிப்பதும், `எனக்காக வேண்டிக்கங்க!’ என்று கலங்கிய கண்களுமாக... வெல்கம் விஜய்!

Vijay, Asin
Vijay, Asin
வேலாயுதம் - 42

`துண்டு போட்டு மட்டும் இல்லை... அருவா போட்டும் சீட்டு புடிப்போம்ல...’ என்று வேலாயுதம் அறிமுகமாகிற காட்சியிலேயே படத்துக்கான எனர்ஜி ஏற்றிவிடுகிறார் விஜய். ஆட்டம் பாட்டம், ஆக்ஷன், சென்டிமென்ட் என எல்லா ஏரியாவிலும் ஃபுல் சார்ஜ் பேட்டரியாகச் சுழல்வதில்... விசில் விஜய்!

நிஜமாகவே மாறுபட்ட விஜய். குறும்பு கொப்பளிக்கும் ஸ்மார்ட் மாணவன் பாரிவேந்தனாகப் பிரமாதம் பண்ணுகிறார். 'அவனா நீ?’ என்று கிண்டல் வாங்கி, அனுயாவிடம் அறை வாங்கி, நண்பர்களிடம் உதை வாங்கி, இமேஜை எல்லாம் உடைத்து நடிகனாக மிளிரும்போது... வெல்டன் விஜய்!

`விஜய் மிலிட்டரியா?’ என்று சந்தேகத்தோடே அமர்ந்தாலும், விறைப்பும் முறைப்புமாக கேரக்டருக்கு அட்டகாசமாக உயிர் கொடுத்து இருக்கிறார் விஜய். நிதானமாகப் பேசிக்கொண்டே தீவிரவாதியின் கைவிரல்களை வெட்டும்போதும், சின்ன கத்தியை வைத்து மொத்தப் பேரையும் வீழ்த்தும்போதும் அனல் பட்டாசு. பன்ச் வசனம் பேசாமல், அதே சமயம் மிகவும் ஸ்டைலாக அப்ளாஸ் அள்ளுகிறது விஜய்யின் மேனரிசங்கள்!

தலைவா - 42

விஜய்க்கு என்ன ஆச்சு? `நண்பன்’, ``துப்பாக்கி’ என எக்ஸ்பிரஸ் சினிமா பயணத்தில் யுடர்ன் அடித்து, மீண்டும் பன்ச் பல்லக்கில் ஏறியிருக்கிறார். பின்பாதி முழுக்க `தளபதி... தளபதி’ பில்டப் பாடலும் 'விஷ்வா பாய்’ புகழ்ச்சிகளுமாக சில படங்களுக்கு முன் பார்த்துப் பழகிய விஜய். இதனாலேயே துள்ளல் நடனம், எள்ளல் காதல் என அடக்கி வாசிக்கும் முன்பாதி விஜய், எளிமையாக வசீகரிக்கிறார். ஆக்ஷன் அவதாரங்களுக்கு இடையில், சத்யராஜ் இறக்கும்போதான ரியாக்ஷன்களிலும் முதல்முறை நடுக்கத்துடன் கத்தியைக் கையாளும்போது கண்களில் காட்டும் அதிர்ச்சியிலும் கலக்கல் ப்ரோ!

ஜில்லா - 41

ஆக்ஷன் கதைக்கு விஜய்யின் எக்ஸ்பிரஷன்களும், பாடிலாங்குவேஜும் பக்கா. தீ விபத்தில் பலியான குழந்தைகளைப் பார்த்துக் கலங்குவதும், அப்பா பாசத்தில் உருகுவதுமாக செம. ஆனால், ஒரு பக்கமாகச் சாய்ந்து சாய்ந்து நடக்கும் ஸ்டைல்... வேணாம் ப்ரோ!

ண்ணா.... 'இளைய தளபதி’ங்ளாண்ணா இது?! '2ஜி-ன்னா என்ன..? வெறும் காத்துய்யா... அதுலேயே ஊழல் பண்ணின தேசம் இது!’, 'ஒருத்தன் 5,000 கோடி கடன் வாங்கிட்டு, திரும்பக் கட்ட முடியாதுனு சொல்வான். அவனை இந்த நாடு ஒண்ணும் பண்ணாது; ஆனா 5,000 ரூபாய் கடன் வாங்கின விவசாயி, பணத்தைக் கட்டலைனா அவனை தற்கொலை செய்யவெச்சிரும்!’ என ஆவேசத்துடன் நடப்பு அரசியல் பேசுகிறார். அட, இந்த மாதிரி எல்லாம் பேசி உங்களைப் பார்த்தது இல்லையே ப்ரோ!

புலி - 40

விஜய்... வழக்கம்போல ஃப்ரெஷ். நடனத்தில் வழக்கம்போல துள்ளல். ஆனால், ஃபேன்டசி படத்துக்கு காஸ்ட்யூம் மட்டும் மாற்றினால் போதுமாஜி?! நீட்டி முழக்கிப் பேசும் அந்த டயலாக் டெலிவரி முதல் வாள் சுழற்றும் அந்த ஆக்ஷன் வரை... ப்ச்!

Vijay, Sangeetha
Vijay, Sangeetha

ராதிகா முதல் மொட்டை ராஜேந்திரன் வரை அவ்வளவு பக்காவான காஸ்டிங் இருந்தும், கதைச் சுமை முழுவதும் விஜய்யின் தலைமேல். அத்தனை வெயிட்டையும் ஜித்து ஜில்லாடியாகச் சுமக்கிறார் சோ க்யூட் விஜய். இன்ட்ரோவிலேயே இன்ப அதிர்ச்சி தருகிறார் `இயக்குநர் மகேந்திரன்'. முகத்தில் அப்படியே வைகோ சாயல். அவருடைய வில்லத்தன எக்ஸ்பிரஷன்ஸ் எல்லாமே எக்ஸலன்ட்.

பைரவா - 41

ஒரு சின்ன கேப்புக்குப் பிறகு மீண்டும் பழகிய கமர்ஷியல் களத்தில் கலக்கியிருக்கிறார் விஜய். ஓப்பனிங் கிரிக்கெட் சண்டை ஆயிரம் வாலா லந்து என்றால், இடைவேளை சண்டை பத்தாயிரம் வாலா பவர். `நில்லாயோ...' பாடலில் ஒரு குட்டி ஜம்ப்பிங்கையே நடனமாக மாற்றியதில் ஜொலிக்கிறார் விஜய். படம் நெடுக போனில் கத்துவதும், நேரில் குத்துவதுமாக அதே மாஸ் ஹீரோ பில்டப்.

விஜய்க்கு மூன்று முகங்கள். அவர் ஸ்டைலிலேயே சொல்ல வேண்டுமென்றால் `தளபதி’ கதாபாத்திரத்தை மாஸாகப் பண்ணியிருக்கார். மாறன் கதாபாத்திரத்தை க்ளாஸாகப் பண்ணியிருக்கார், வெற்றி கதாபாத்திரத்தை ஸ்டைலாகப் பண்ணியிருக்கார். வயது நாற்பது ப்ளஸ்னு நம்பவே முடியலீங்ணா!

சர்கார் - 40

சர்காரைத் தாங்கிநிற்கும் அஸ்திவாரம் துள்ளலும் எள்ளலும் கலந்த விஜய் எனும் பிராண்ட்தான்.

அப்பா ராயப்பன் மற்றும் மகன் மைக்கேல் (எ) பிகில் - இரட்டை வேடங்களில் விஜய். மைக்கேல் கதாபாத்திரத்தில் வழக்கமான குறும்பும் ஹீரோத்தனமும் கலந்த விஜய். அவரது இளமை லுக் எப்போதும் நம்மை வியக்கவைப்பது. அவருடைய குறும்புத்தனமான உடல்மொழி ஆரம்பத்தில் ரசிக்கவைத்தாலும் பின்னர் சலிப்பு தருகிறது. ராயப்பனோடு நாம் பொருந்த முடியாமல் போவதற்கும் விஜய்யின் இளமைத்தோற்றம்தான் காரணம். அவரும் நிறைய பிரயத்தனப்படுகிறார். ஆனால், ஒருகட்டத்தில் மைக்கேலின் உடல்மொழி ராயப்பனின் உடலுக்குள் கூடுபாய... கஷ்டம்தான்!விஜய் - வழக்கமான விஜய் இல்லை. ஹீரோயிச பிம்பம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கிரே ஷேடு கேரக்டரில் வெளுத்துவாங்குகிறார். அலட்சிய உடல்மொழி, வயதாவதைத் தயங்காமல் வெளிக்காட்டிக்கொள்ளும் மேனரிசம், டிரேடு மார்க் ஆக்‌ஷன் அவதாரம், குசும்பான ஹியூமர் என ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி.

மாஸ்டர் - 43

வழக்கமான விஜய் இல்லை. ஹீரோயிச பிம்பம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கிரே ஷேடு கேரக்டரில் வெளுத்துவாங்குகிறார். அலட்சிய உடல்மொழி, வயதாவதைத் தயங்காமல் வெளிக்காட்டிக்கொள்ளும் மேனரிசம், டிரேடு மார்க் ஆக்‌ஷன் அவதாரம், குசும்பான ஹியூமர் என ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி.