Published:Updated:

`எனக்கு எதிரான கும்பல்; அவர் சொல்லித்தான் தெரிந்தது!’ - பாலிவுட் வாய்ப்புகள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

 ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

பாலிவுட்டில் தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான வதந்திகளைப் பரப்புவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தில் தொடங்கியது உலகப் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணம். அப்போது முதல் தமிழ், தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட் எனப் பல மொழிகளில் பல படங்களுக்கு தன் தனித்துவமான இசையைக் கொடுத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தியாவில் இசை மற்றும் திரைத்துறையில் வழங்கப்பட்டும் பல்வேறு விருதுகள் மட்டுமல்லாது இந்தியாவிலிருந்து சென்று ஆஸ்கார் வென்ற கலைஞர் என்ற பெருமை கொண்டவர்.

தில் பெச்சாரா
தில் பெச்சாரா

இந்நிலையில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் தயாரான`தில் பெச்சாரா’ படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதற்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் குறித்து தனியார் ரேடியோ சேனலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஹ்மான், பாலிவுட்டில் தன்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகப் பேசியுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் இருக்கும் வாரிசுகள் தொடர்பான சர்ச்சை பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதனுடன் தற்போது ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்தும் சேர்ந்துள்ளதால் பாலிவுட் சினிமா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

#DilBechara எப்படி? ரஜினியாக, சூப்பர் ஸ்டாராக வாழ்ந்திருக்கலாமே சுஷாந்த்!

தனியார் ரேடியோ நிகழ்ச்சியில் பேசியுள்ள ரஹ்மான், “நான் நல்ல திரைப்படங்களை எப்போதும் வேண்டாம் எனச் சொல்வதில்லை. ஆனால், பாலிவுட்டில் எனக்கு எதிராக ஒரு கும்பல் இருப்பதாக நினைக்கிறேன். என்னுடன் கருத்து வேறுபாடு கொண்ட அவர்கள் தவறான வதந்திகளைப் பரப்புகிறார்கள். `தில் பெச்சாரா' இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தபோது இரண்டு நாள்களில் அவருக்கு 4 பாடல்களை நான் முடித்துக் கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், `சார் உங்களைப் பற்றி பலர் பல கதைகள் சொல்கிறார்கள், ஏதேதோ பேசுகிறார்கள். உங்களிடம் செல்ல வேண்டாம் என என்னைத் தடுத்தனர்’ என்று கூறினார்.

 ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

அதைக் கேட்டபோதுதான் எனக்குப் புரிந்தது நான் ஏன் இந்தியில் குறைந்த அளவிலான படங்களைச் செய்கிறேன்? ஏன் நல்ல படங்கள் என்னிடம் வரவில்லை என்று. ஏனெனில், அங்கிருக்கும் ஒரு கும்பல் எனக்கு எதிராகத் தீங்கு செய்கிறது. நான் சில விஷயங்களைச் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதைத் தடுப்பதற்கும் மற்றொரு கும்பல் உள்ளது. இதை நல்லதாகவே நான் நினைக்கிறேன். நான் விதியை நம்புகிறேன். எல்லாம் கடவுளிடமிருந்து வருகிறது என நினைக்கிறேன். அதனால் எனக்கு வரும் படங்களில் நான் பணியாற்றுகிறேன். அழகான படங்களை உருவாக்குங்கள் அதற்காக என்னிடம் வந்தால் அதை வரவேற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இவரின் கருத்து பாலிவுட் மட்டுமல்லாது மொத்த இந்தியத் திரையுலகின் கவனத்தையும் பெற்றிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு