Published:Updated:

இடிக்கப்பட்டதா இளையராஜாவின் இசைக்கோயில்?! - போராட்டத்துக்குத் தயாராகும் பாரதிராஜா!

இளையராஜா
இளையராஜா

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து இளையராஜாவை காலி செய்யச் சொன்னதால், எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத்துக்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரச்னை எழுந்தது.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் 'இசையால் வசமாகா இதயம் எது?' என்று கணீர் குரலால் டி.எம்.செளந்தர்ராஜன் பாடினார். அடுத்த தலைமுறையோ, ' இளையராஜா இசையால் வசமாகா இதயம் எது?' என்று பாடி மகிழ்ந்து, ராஜாவை உச்சத்தில் வைத்துக் கொண்டாடிவருகிறது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோதான், கடந்த 41 ஆண்டுகளாக இளையராஜா வாழ்ந்த இசை வாசஸ்தலம். ரஜினிக்கு 'அம்மா என்றழைக்காத...', கமலுக்கு 'நானாக நானில்லை தாயே...', விஜயகாந்த்துக்கு 'ராசாத்தி உன்ன...', சத்யராஜுக்கு 'அடி ஆத்தாடி..' பிரபுவுக்கு 'தூளியிலே ஆடவந்த', விஜய்க்கு 'என்னைத் தாலாட்ட வருவாளா...' என்று ராஜாவின் எல்லா பாடல்களும் உருவான பூமி, பிரசாத் ஸ்டூடியோதான்.

இளையராஜா
இளையராஜா

தினமும் காலை 7 மணிக்கு பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்து விடுவார் இளையராஜா. இரவு எப்போது வெளியே போகிறார் என்று யாருக்குமே தெரியாது. தன்னுடைய வீடு, மனைவி, மகன்கள், மகள், பேரக்குழந்தைகளுடன் செலவிட்ட நேரத்தைவிட அதிகமான நேரத்தை பிரசாத் ஸ்டூடியோவில்தான் கழித்திருக்கிறார் இளையராஜா. ஒருமுறை எல்.வி.பிரசாத்தின் மகன், ''ராஜா சார்... இது எப்போதுமே உங்கள் இசைக்கோயில்... நீங்கள் எங்கள் வளாகத்தில் இசை அமைப்பது எங்களுக்குப் பெருமை. கடைசிவரை நீங்கள் இங்கேதான் இருக்க வேண்டும்'' என்று ஒரு விழா மேடையில் பேசியிருந்தார்.

ஆனால் இப்போது, பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முதலில் இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு ஒரு பெரும்தொகையை வாடகையாகக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கிடையே ''வாடகை வேண்டாம்... வெளியேறுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார்கள். இளையராஜா எவ்வளவோ பேசியும் சம்மதிக்காமல், இரவோடு இரவாக இளையராஜாவின் ஸ்டூடியோவுக்குள் நுழைந்து, தங்களின் பொருள்களை வைத்துவிட்டது பிரசாத் நிர்வாகம்.

பிரசாத் ஸ்டூடியோ
பிரசாத் ஸ்டூடியோ

பெங்களூருவில் ஓர் இசைக்கச்சேரி, 'கமல்-60' விழாவில் ஓர் இசைக்கச்சேரி என்று இரண்டு பெரிய இசைக் கச்சேரிகளை நடத்த ஒப்புக்கொண்ட நிலையில், உயிருக்கு உயிராக நேசித்த அறை பூட்டப்பட்டதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் இளையராஜா.

பெங்களூருவில் உள்ள ஹார்மோனியப் பெட்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தனது இசைக்குழுவோடு அங்கே நடந்த கச்சேரிக்கும், இங்கே நேரு ஸ்டேடியத்தில் நடந்த இசைக் கச்சேரிக்கும் சேர்த்து பெங்களூருவிலேயே ரிகர்சல் பார்த்திருக்கிறார் இளையராஜா. இதுவரை எத்தனையோ சினிமா பிரபலங்கள் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திடம் சமரசம் பேச முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால், அத்தனை முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. இந்தப் பிரச்னையின் உச்சமாக, கடந்த 25-ம் தேதி இரவு பிரசாத் ஸ்டூடியோவில் இருந்த இளையராஜாவின் இசைக்கோயில் இடிக்கப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள். வழக்கமாக, எப்போதும் பிரசாத் ஸ்டூடியோ உள்ளே எல்லோரும் சாதாரணமாகச் சென்றுவருவார்கள். ஆனால், கடந்த இரண்டு நாள்களாக செக்யூரிட்டிகளை வைத்து, யாரையும் உள்ளே விடாமல் தடுத்துவருகின்றனர். நாமும் உள்ளே போக முயன்றோம். ஆனால், உள்ளே நுழையமுடியவில்லை.

பாரதிராஜா, இளையராஜா
பாரதிராஜா, இளையராஜா
``விரைவில் நற்செய்தி வரும்!"- நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடந்த பாரதிராஜா - இளையராஜா சந்திப்பு

இதற்கிடையே பாரதிராஜா, அமீர், சீமான் ஆகியோர் இளையராஜாவுக்கு ஆதரவாக நாளை வியாழக்கிழமை பிரசாத் ஸ்டூடியோ வாசலில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.

இதுதொடர்பாக பிரசாத் ஸ்டூடியோவின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ''இளையராஜாவின் ரெக்கார்டிங் ஸ்டூடியோ இடிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்வது பொய். அந்த இடம் அப்படியேதான் இருக்கிறது. வேண்டுமென்றே வதந்திகளைப் பரப்புக்கிறார்கள்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு