
இளையராஜாவின் கேரியரில் `இசைப்புயல்' வீசியபோது...?
அது ஒரு பொன்மாலைப்பொழுது... இளையராஜா என்ற இசைராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்தோம். அந்த நிமிடத்துக்கு முதல் நிமிடம் வரை ராஜாவின் இசையை மட்டுமே நேசித்து வந்த நம்மைப் பார்த்து `என்னையும் நேசியேன்' என்றது அவரின் அலட்டல் இல்லாத உபசரிப்பும் பந்தா இல்லாத பேச்சும் - விஷயம் செறிந்த விளக்கங்களும்!
சிம்பனி இசையமைத்த சமயத்தில் 'இந்தியாவின் இசை அடையாளம்' என்று விகடன் தாத்தாவால் பெருமைப்படுத்தப்பட்ட அதே இசைராஜா - துளியும் பகட்டு இல்லாமல் சின்னப் பெண்களான எங்களையும் மதித்து ஒத்துழைப்பு கொடுத்தவிதம் மறக்கவே முடியாத சம்பவம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு இளையராஜாவைத் தமிழ் வாசகர்களின் முன் கொண்டுவந்து நிறுத்திய பெருமிதம் இப்போது எங்களுக்குள்...

மரபை உடைத்த உங்கள் சாதனையின் பின்னணி என்ன? இந்த ரசவாதம் உங்களுக்கு எப்படிச் சாத்தியமானது?
இசைக்கு எந்தக் காலத்திலும் ஏழே ஸ்வரங்கள்தான். அது எல்லோருக்கும் பொதுவானது தான். ராகங்களை - `இது என் கல்யாணி', `இது என் காம்போதி' என்று யாரும் சொன்னதுமில்லை... சொல்லவும் மாட்டார்கள். மேலும் வீசுகின்ற காற்றை `இது இந்தப் பிரிவினருக்கு மட்டும் சொந்தமானது. பாமரனுக்கு இதில் பங்கு கிடையாது' என்று சொல்லவும் முடியாது. இதைச் சொல்ல ஒருவன் பிறந்து வந்து 'சாதனை' பண்ணிவிட்டான் என நீங்கள் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். எனக்கதில் விருப்பமுமில்லை, வெறுப்பும் இல்லை.
நீங்கள் இப்படிச் சொந்தம் கொண்டாடாமல் இருந்தால் - காப்பி அடிப்பவர்கள் அதிகமாகிவிட வாய்ப்பு ஏற்படும் இல்லையா?
எனக்குச் சொந்தமானது என்று நான் உரிமை கொண்டாடினால் மட்டும் அது நிற்கவா போகிறது? அதனால் என்ன? இல்லாதவர்கள் பிச்சை எடுக்கிறார்கள். எடுக்கட்டும். அதில் பிழை ஒன்றும் இல்லை.
இருந்தாலும்,சோழர் காலக் கோயிலை இன்று யாராவது கட்ட முடியுமா? இமயம் போல் இன்னொரு மலை தோன்றிவிடுமா? கங்கையிலிருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால்களில் ஓடும் நீர் கங்கை நீராகத்தான் கணக்கிடப்படுமேயன்றி கங்கையைவிடச் சிறந்த நதியாகக் கணக்கிடப்படாது.
கங்கை மாதிரியான பாரம்பரியம் போற்றப்பட வேண்டும் என்ற எண்ணமில்லையா?
பாரம்பரியம், சம்பிரதாயம், இலக்கணம் இவையெல்லாம் நிலையானவை அல்ல. அவ்வப்போது வாழும் உயிரினங்களின் தன்மையைப் பொறுத்து மாறுதல்களுக்கு உள்ளாவது சம்பிரதாய சட்ட இலக்கணங்களின் தன்மை. இடுப்புக்குக் கீழே வெறும் முண்டு மட்டும் கட்டிக் கொண்டு, மேலே ஒரு துண்டைப் போர்த்தி ஆடை அணிந்த காலத்தில் - மடிசார் கட்டிய பெண்ணை அந்த வீட்டின் பெரியவர் `கலி முத்திடுத்து - மடிசார்ங்குறா... காஞ்சிபுரம் பனாரஸ்ங்குறா நம்ம காலத்திலேயெல்லாம் இப்படியா' என்று அங்கலாய்த்ததும்... அடுத்த தலைமுறையின் மாமி `ஐயோ ஐயோ! கர்மம் கர்மம்! ஜாக்கெட்டுக்குள்ளே உள்பாடின்னு ஏதோ ஒண்ணப் போடுறாளே' எனப் புலம்பியதும், இப்போதைய தலைமுறை பாண்ட், ஷர்ட், சல்வார் கமீஸோடு அலைவதைப் பார்த்து ஆனந்திப்பதும் தான் சம்பிரதாய சட்ட இலக்கணத்தின் வரம்பு.
அதுவே கலைக்குச் சொன்னால் - பழைய தலைமுறை, `பாட்டு கூத்துன்னு என்னடா அது? ஏன் கெட்டுப் போறே' என்று கோயில் கச்சேரி கேட்கப் போன இளைஞர்களைத் திட்டியதும்... பின், `என்னவோ டிராமா, சினிமான்னு அலையுறானே தறுதலை' என்று கிட்டப்பா பாகவதர் காலத்தில் பேசியதும், இன்று `ராக், பாப், ஸ்டார் டி.வி. மைக்கேல் ஜாக்ஸன் என்று அலையுறானே' என வருத்தப்படுவதுமே நமது மரபாகப் போய்விட்டது. சட்டம் சம்பிரதாயம் என்பது இதுதான்.
21-ம் நூற்றாண்டுக்கு உங்களின் `நெட் கான்ட்ரிபியூஷன்' என்ன?
அடுத்து வரப்போகும் பல நூற்றாண்டுகளையும் விட்டு விட்டீர்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்தென்றல் வீசுவதும்,அருவி சலசலபபதும்,நிலவொளி நெஞ்சை வருடுவதும் வரலாற்றுச் சாதனையென்றா கொள்ள முடியும்?அதேபோல் இந்தச் சிறு குருவி இன்னும் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கட்டும். அதை விட்டுவிடுங்கள்.

மிஸஸ் இளையராஜா - ராஜாவுக்கேத்த ராணி!
முன்பிருந்த `மியூசிக் டிரென்ட்', இனி வரவிருக்கும் `மியூசிக் டிரென்ட்' பற்றி உங்கள் கருத்து?
ஒரு மாற்றமும் வராது. முன்பும் ஒரு பக்கம் Classical Music வித்வான்கள் மேடைகளில் பாடிக்கொண்டிருந்தார்கள் சினிமா சங்கீதமும் கேட்டுக் கொண்டிருந்தது. Modern, Pop, Rock, Jazz, Folkmusic-ம் கேட்டுக் கொண்டிருந்தது. இன்றும் அது அப்படியே நடக்கிறது நாளையும் அவ்வாறே நடக்கும்.
சினிமா இசையின் இப்போதைய டிரென்ட் எது..?
முன்பு எம்.எஸ்.வி. சாருக்கென்று ஒரு தனி பாணி (ஸ்டைல்) இருந்தது. அதே போல் கே.வி.மகாதேவன், ஜி.ராமனாதன், டி.ஆர். பாப்பா... என அத்தனை இசை அமைப்பாளர்களும் ஒவ்வொரு தனிப் பாணியில் இசையமைத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது ஒரே ஒரு `டிரென்ட்'தான் இருக்கிறது. யார் இசையானாலும் ஒரே ஒருவருடைய `டிரென்ட்' மட்டும் பிரதிபலிக்கிறது. அது யாருடைய டிரென்ட் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஜனங்களும் முட்டாள்கள் அல்ல. அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். வட இந்தியாவிலும் இதே `டிரென்ட்'தான் பின்பற்றப்படுகிறது.
`எந்த ஒரு மனிதனும் தொப்புள் கொடியின்றி பிறக்க முடியாது. இந்த தொப்புள் கொடியைப் பற்றிக் கொண்டு சென்றாலே இறைவனடியைச் சேரலாம்' - இது சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி பேட்டியில் நீங்கள் கூறியது... உங்கள் தாயைப் பற்றி...
தொப்புள் கொடி உதாரணம் அல்ல. சிந்தனையும் அல்ல... உண்மை. அல்லது உண்மையின் திறவுகோல். என் தாயைப் பற்றி நான் என்ன சொல்ல? உன் தாய்தான் என் தாய். உன் தாயின் தொப்புள் கொடியைப் பற்றி நீ வந்திருக்கிறாய். என் தாயின் வழியாக நான் வந்திருக்கிறேன். பின்னோக்கி அதைப் பற்றிச் சென்றால் நீயும் நானும் ஒரே தாயின் குழந்தைகளாகத்தான் ஆவோம்.
பண்ணைபுரத்து இளைஞன் இளையராஜாவின் மண்வாசனை நினைவுகளும், மறக்க முடியாத மனிதர்களும் பற்றிச் சொல்ல முடியுமா?
உலகிலுள்ள எல்லோரும் மண்ணில்தான் பிறக்க வேண்டும். எல்லோருக்கும் உள்ள மண்வாசனையே எனக்கும் இருக்கிறது. எனக்கு மட்டும் மண்வாசனை இருக்கிறது எனச் சொல்வது நீங்கள் எல்லோரும் வானிலிருந்து நேரே குதித்து மண்ணில் வந்தவர்கள் என்ற நினைப்பு உங்களுக்கு இருப்பதைக் காட்டுகிறது. மறக்க முடியாத நபர்களைவிட முக்கியமானவர் ஒருவரை மறக்கக் கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் அவரைச் சுத்தமாக மறந்து போகிறேன். அதைய பற்றிச் சொல்வதென்றால்,......................................அது ஏன் உங்களுக்கு?அது நான்தான்! என்னை அடிக்கடி மறந்து போகிறேன்.
உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத குணங்களை அலசி ஒரு சுய விமரிசனம் ப்ளீஸ்!
பிடிக்காத குணங்கள்:
மகா கர்வி. அகங்காரம் நிறைந்தவன். ஆணவத்தின் மொத்த உருவம். மற்றவாகளை மதிக்கத் தெரியாத மடையன். தன்னைத் தவிர உலகில் வேறு யாரும் இல்லை என்ற நினைப்பில் அடிக்கடி மூழ்க நினைப்பவன். விட்டால் எல்லாமே நான்தான் என்று சொல்லி விடுவான். ரொம்ப Danger ஆன ஆள். ஆனால் இனிச்சவாயன். அதே நேரத்தில் அழுத்தம், ரொம்ப அழுத்தம்.
பிடித்த குணம்:
மேற்கூறிய எல்லாமே எனக்குப் பிடித்தவைதான். (குறிப்பு) - எல்லோருக்கும் பிடித்தவைகளே எனக்கும் பிடிக்கும்.
இசையைத் தவிர மற்ற ஆர்வங்கள் என்னென்ன?
தனித்திருப்பது.

`மாஸ்டர் பீஸ்'கள்
உங்களுடைய `மாஸ்டர் பீஸ்' என்று எதை கருதுகிறீர்கள்?
என்னுடைய மாஸ்டர் பீஸ் மூன்று :No.1 - கார்த்திக் (என் மகன்)No.2 - பவதாரிணி (என் மகள்)No.3 - யுவன் (என் மகன்).
கோடி சுவாமிகள், விசிறி சுவாமிகள் எனத் தங்களுக்கு பல மகான்களிடம் அனுபவங்கள் உண்டென்று அறிவோம். எங்களுக்குப் பயனாகும் சிலவற்றைக் கூறுங்களேன்...
உங்களுக்கு மட்டுமல்ல... இன்றைய இளைஞர்கள் அனைவருக்கும் சொல்வேன்!
கற்கின்ற அவசரத்தில்கல்விதனை மறந்துவிட்டாய்நிற்கின்ற அவசரத்தில்காலூன்ற மறந்துவிட்டாய்விற்கின்ற அவசரத்தில்விலைவைக்க விட்டுவிட்டாய்ஏற்கின்ற அவசரத்தில்பொற்பரிசைப் போட்டுவிட்டாய்இன்றைய இளைஞனே!
நாளையே அண்ணனாவாய்!
நாளை மறுநாள் - தந்தையாவாய்!ஓர் பதினெட்டிலேயேஎண்பது வயது வாழ்ந்தவன்அறிந்துகொண்ட அனைத்தையும் தெரிந்து கொண்டாய் - மிச்சம் மீதி எதுவும் இல்லை!
இப்போதே வாழ்வின் எல்லைக்குச் சென்றவனின் அலுப்பு!
இனிவரும் நாட்களைவிரக்தியில் கழிக்கப் போகிறாயா? - ஆம்.அதுதான் உன் விதி!
இந்த நிலையிலாவது ஆன்மிகத்தேடல் ஒன்றையே விரும்புங்கள்... தேடுங்கள்.

சாஸ்திரிய சங்கீதத்திலும் முத்திரை பதித்து கர்நாடக சங்கீதக்காரர்களை எழச் செய்தது, கிராமிய இசையை திரையில் புகுத்தியது, இந்திய - மேற்கத்திய இசையை அழகான காம்பினேஷனில் கலந்தது... இந்த வரிசையில் உங்கள் அடுத்த புதுமை என்ன?
நேற்றுக் குடித்த நீர் இன்றைய தாகம் தீர்க்காது. ஆனால் நேற்று அருந்தியது `அமிர்தபானம்' எனில் இன்று தாகமே வராது. அதை நீங்கள் இன்று நினைவு கூர்வதால் இன்றைய நினைவுகளை இனிமையான கனவில் பறந்து நாளைப் போக்க அல்லது கழிக்க உதவுகிறது.
கடந்து சென்ற கணம் முதல் உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?
`சீச்சீ... இது ஒரு வாழ்வா?' எனத் தோன்றுகிறது!
- விகடன் டீம்