Published:Updated:

இளையராஜாவின் செல்லப் பிள்ளை..! #AppExclusive

மனோ

மனோன்னு பேர் வச்சதே இளையராஜா சார் தானாம்!! 28.06.1987 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...!

இளையராஜாவின் செல்லப் பிள்ளை..! #AppExclusive

மனோன்னு பேர் வச்சதே இளையராஜா சார் தானாம்!! 28.06.1987 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...!

Published:Updated:
மனோ

‘எங்க ஊரு பாட்டுக்காரன்’படத்தில் மிகவும் ஹிட்டான பாடல் ‘செண்பகமே!’. படத்தில் இரண்டு முறை வரும் இந்தப் பாடலைப் பாடிய ஆண் குரலை மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரல் நினைவுக்கு வந்தால் ஸாரி, ஏமாந்துவிட்டீர்கள். அந்தப் பாடலைப் பாடிய புதிய குரல் 'மனோ' என்ற இளைஞருடையது.

எஸ்.பி.பி-க்கும் இளையராஜாவுக்கும் பனிப்போர் துவங்கிவிட்டது என்ற செய்திகள் வரத் துவங்கிய பின், இளையராஜா அறிமுகப்படுத்தியுள்ள புதிய குரலுக்குச் சொந்தக்காரர் மனோ. ‘பூவிழி வாசலிலே’ படத்தில் ‘அண்ணே, அண்ணே’ பாட்டின் மூலம் அறிமுகமானார். இந்த இளைஞரின் குரல் அப்படியே எஸ்.பி.பி-யின் மறுபதிப்பு. இதுவரை, தமிழில் எழுபது பாடல்களுக்கு மேல் இளையராஜாவின் இசையில் பாடியுள்ள இந்த இளைஞரிடம் நாம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவதற்கே ஒரு வாரம் ஆனது. அவ்வளவு பிஸி!

Mano
Mano

கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனி அருகிலுள்ள ஒரு தெருவின் மாடி வீட்டில் ஒரு நாள் அதிகாலையில் விலாசம் தேடிக் கதவைத் தட்டியபோது, உள்ளிருந்து ஒரு பாட்டு காற்றில் மிதந்து வந்தது. உள்ளே மனோ சாதகம் செய்து கொண்டிருப்பது புரிந்தது.

மனோவின் உண்மைப் பெயர் நாகூர் பாபு. பல நாட்களாகத் தெலுங்கில் பல இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்தார். பிறகு தெலுங்கு இசையமைப்பாளர் சக்ரவர்த்தியிடம் பணிபுரிந்து கொண்டே, மேடைகளில் பாடிக் கொண்டிருந்தார். இளையராஜா இசையமைத்த தெலுங்குப் படத்தில் எஸ்.பி.பி. ஒரு பாடலைப் பாடியிருந்தார். படம் முடிந்து சென்ஸாருக்குப் போனபோது, பாடலில் ஒரு பகுதியை வெட்டச் சொன்னார்கள். மறுபடியும் வேறு வரிகள் சேர்த்து ‘ரிக்கார்டிங்’ செய்யவேண்டிய நிலை. எஸ்.பி.பி. அப்போது அயல்நாடு சுற்றுப் பயணத்தில் இருந்தார். படத்தை உடனே ரிலீஸ் செய்தாக வேண்டும். அதே போன்ற குரலுடைய ஒருவரைத் தேடியபோதுதான் ‘மனோ’ இளையராஜாவுக்கு அறிமுகமானார். பாடல் பதிவானது. பாடலும் எஸ்.பி.பி. பாடியதைப் போலவே இருந்தது. 

அன்றிலிருந்து இளையராஜாவின் செல்லப் பிள்ளையானார் மனோ. “அதைத் தொடர்ந்து பல படங்களில் எனக்கு வாய்ப்பளித்தார் ராஜா. நாகூர் பாபு என்ற என் பெயரையும் மாற்றிக் கொள்ளச் சொன்னார். ‘நீங்களே புதிய பெயர் சூட்டுங்கள்’ என்றேன். ‘மனோ’ என்று வைத்துக் கொள்ளச் சொன்னார். இளையராஜா தன் இசையில் இப்போது எனக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கிறார்” என்று தெலுங்கு கலந்த கொச்சைத் தமிழில் பேசினார் மனோ. இவருடைய பெற்றோர் ஆந்திராவில் நாடகக் கம்பெனி ஒன்றை நடத்தி, அதில் நடித்தும் வருகிறார்கள். பெற்றோர் மூலமாக வந்ததுதான் சங்கீத ஞானமாம். சகோதரர் ஒருவர் ‘தபேலா’ வாத்தியக்காரர்.

“எஸ்.பி.பி-க்குப் போட்டியாகக் களத்தில் குதித்திருக்கிறீர்களா?” என்ற போது,  “அதெல்லாம் கிடையாது,  எனக்கு காட்ஃபாதர் இளையராஜா என்றால், என் வெல் விஷர் எஸ்.பி.பி-தான், நான் மியூஸிக் உதவியாளனாக இருந்தபோதே எனக்கு அவரைத் தெரியும். சகோதரனைப் போல நடத்துவார் எஸ்.பி.பி.” என்றார்.

ரிக்கார்டிங் கிளம்பத் தயாரானார் மனோ. வாசலில் ஒரு வெள்ளை அம்பாஸடர் இருந்தது. “வாழ்க்கைப் போராட்டத்துக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருந்த என்னை, கார் வாங்குகிற அளவுக்கு பிஸியாக்கிவிட்டார் இளையராஜா” என்றார் உணர்ச்சிவசப்பட்டு.
 
- ஷரத்

(28.06.1987 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)