Published:Updated:

``இந்த புரஃபஷன்ல இயந்திரத்தனமாதான் இருக்கணும்; ஆனா..?!" - ஜனகராஜ் பேட்டி @1990

ஜெனகராஜ்

“என் தொழிலை நான் ரொம்ப சின்சியரா மதிக்கிறேன், நேசிக்கிறேன்” 1990ல் காமெடி நடிகர் ஜெனகராஜ் விகடனுக்கு அளித்த பேட்டி...

``இந்த புரஃபஷன்ல இயந்திரத்தனமாதான் இருக்கணும்; ஆனா..?!" - ஜனகராஜ் பேட்டி @1990

“என் தொழிலை நான் ரொம்ப சின்சியரா மதிக்கிறேன், நேசிக்கிறேன்” 1990ல் காமெடி நடிகர் ஜெனகராஜ் விகடனுக்கு அளித்த பேட்டி...

Published:Updated:
ஜெனகராஜ்

சென்ற வாரம் நகைச்சுவை நடிகர் ஜனகராஜைச் சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்றபோது அவசரமாகப் படப்பிடிப்புக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். "கார்லே ஏறுங்க பேசிக்கிட்டே போகலாம்..." என்றார்.

"ஏவி. எம்-ல இன்னிக்கு சத்யராஜோட 'ஏர்போர்ட்' படம் பூஜை... தலையைக் காண்பிச்சுட்டுப் போயிடலாம்” என்றார். போகும் வழியில்.

வண்டி ஸ்டூடியோவுக்குள் நுழைய, ஏதோ பொதுக்கூட்டம் நடப்பதைப் போல் ரசிகர் கூட்டம் காத்துக்கிடந்தது. கூட்டத்தைப் பார்த்த ஜனகராஜ்... “கண்ணாடியை ஏத்துங்க" என்றார் அவசரமாக.

“இப்ப இறங்கினா பிய்ச்சு எடுத்திடுவாங்க. வேணாம்பா, நாம அப்புறமா வந்துக்கலாம். வண்டியை விடு" என்று டிரைவரிடம் சொல்ல, கார் போரூருக்குப் பக்கத்திலுள்ள மூன்றாங்கட்டளை என்ற கிராமத்தை நோக்கிப் போக, பேச ஆரம்பித்தார் ஜனகராஜ்:

"காலேஜ் டேஸ்லே நிறைய நாள் நான் மட்டம் போட்டேனா.... அட்டெண்டன்ஸ் இல்லைன்னு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க!  அப்பதான் எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருந்த பாரதிராஜா, இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் எல்லாரும் அறிமுகமானாங்க! பாஸ்கர்தான், "நீ ஏதாவது இன்ஸ்ட்ரூமென்ட் கத்துக்க'ன்னு சொன்னாரு.  சரின்னு தலையாட்டிட்டு அவரு கொடுத்த அட்வைஸ்படி வயலின் கத்துக்கிட்டேன். 

ஜெனகராஜ்
ஜெனகராஜ்

அதுக்குப் பிறகு கொஞ்ச நாள் கழிச்சு 'ஓ நெஞ்சமே'ன்னு வாணி மஹால்ல பாரதிராஜா ஒரு நாடகம் போட்டார். அதில நான் ஒரு காரெக்டர் பண்ணேன். இளைய ராஜாதான் மியூஸிக்...

கொஞ்ச நாள்ல பாரதிராஜா 'பதினாறு வயதினிலே' படம் எடுத்து சூப்பர்ஹிட் கொடுத்தாரு. அடுத்து அவர் 'கிழக்கே போகும் ரயில் 'படத்தை எடுக்க ஆரம்பிச்ச சமயம் அவர்கிட்ட போய்' என்னை அசிஸ்டெண்ட் டைரக்டரா வெச்சுக்குங்க'ன்னேன். அவர் 'நீ ஒரு நல்ல நடிகன்டா... உனக்கு அசிஸ்டெண்ட் டைரக்டர் உத்தியோகம் எல்லாம் வேணாம். இந்தப் படத்தில உனக்கு ஒரு நல்ல காரெக்டர் தர்றேன்னாரு.

அவ்வளவுதான்... பயங்கர சந்தோஷம் எனக்கு, ஊர் ஃபுல்லா நான் சினிமாவிலே நடிக்கப் போறதைச் சொல்லிட்டு அவர்கூட லொகேஷனுக்குப் போனேன் . அங்க போனதுக்கப்புறம்தான் தெரிஞ்சது , எனக்கு அந்த காரெக்டர் இல்லைன்னுட்டு. 'அடுத்த படத்தில தர்றேன்'னு அவர் சொன்னாரு. ஆனா, நான் வுடலை...' எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன். ரொம்ப அசிங்கமாயிடும். ஏதோ கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க‘ன்னேன்!

அப்புறம்தான் அந்தப் படத்தில 1 வயசான (கெட்ட) பிராமணரா ஓல்டு கெட்அப்பில் நடிக்க சான்ஸ் கிடைச்சுது.

அதுக்கப்புறம் அவரோட படங்கள்ல மட்டும் நடிச்சேன். நானாகப் போய் வெளி கம்பெனிகள்ல சான்ஸ் கேட்க எனக்கு என்னமோ மாதிரி இருந்தது. அவங்களா வரட்டும்னு இருந்தேன். அப்பதான் ராபர்ட் ராஜசேகர் அறிமுகம் கிடைச்சு. அவங்களோட 'பாலைவனச் சோலையில் எனக்கு ஒரு பவர்ஃபுல் காரெக்டர் கொடுத்தாங்க. படம் சூப்பர் ஹிட்டாக... பட சான்ஸ் என்னைத் தேடி வர ஆரம்பிச்சுது.

அதுக்கப்புறம் 'காதல் ஓவியம்' படத்தில் அட்டகாசமான ரோல் கொடுத்தாரு பாரதிராஜா... அதில் நான் ரொம்ப நல்லா பண்ணியிருந்தும், படம் சரியா ஓடாததாலே எனக்குப் பெரிய பேரு கிடைக்காம போச்சு...

அந்த நேரத்தில்தான் ஒரு பெரிய ஆக்ஸிடெண்ட் நடந்தது" என்று சொல்லும்போதே, ஷூட்டிங் லொகேஷன் வந்துவிட, சஸ்பென்ஸாய்ப் பேச்சை நிறுத்திவிட்டுக் கீழிறங்கி மேக்கப் போடடப் போனார் ஜனகராஜ்!

‘நான் புடிச்ச மாப்பிள்ளே 'படத்தின் ஷூட்டிங்குக்காக வயதான கெட் அப்பில் வந்த ஜனகராஜ் ஒரு கதர் சட்டை, ஒரு லங்கோடு சகிதம் வயலில் வேலை செய்ய ரெடியானார்.

ஷாட் முடிந்து வந்தவர்... ”டைரக்டர் ராபர்ட ராஜசேகரனோட ஃபேமிலி கல்யாணம் பாண்டிச்சேரியில் நடந்தது. அதுக்குப் போயிட்டு நைட்டு கார்ல மெட்ராஸ் திரும்பிட்டிருந்தோம்... எங்கன்னு எனக்கு சரியா ஞாபகமில்ல... கார் பின்சீட்டிலே ஜன்னலோரமா நான் உட்கார்ந்துனு இருந்தேன். லேசா கண்ணை மூடின சமயம். திடீர்னு ஒரு பெரிய கல்லு கண்ணாடியைப் பேத்துக்கிட்டு என் மூஞ்சியிலே வந்து விழுந்தது... அலறிட்டேன். லைட்டை டோட்டுப் பார்த்தா... மூஞ்சியிலிருந்து ஒத்த = முருது. அவசரமா காரைத்திருப்பி விட்மருக்குப் போனோம். அங்க கொளு - நாள் பரீட்மெண்ட் எடுத்துக் கிட்டு பெட்ராஸ் வந்து தனியார் ஆஸ்பத்திரியில சேர்ந்தேன். அந்தக் கல் மூஞ்சியில வந்து விழுந்ததிலேதான் என்னோட நெத்தி, தாடை எலும்பு உடைஞ்சு இடது கண்ணு இப்படி ஆயிடுச்சு. ஆனா அதுவே எனக்கு இப்ப ப்ளஸ் பாயிண்டா போச்சு. ஆனா, அன்னிக்கு கார்ல வந்து விழுந்த கல்லு எப்படி வந்ததுங்கறது மட்டும் இன்னும் ஒரு புதிராவே இருக்கு" என்றபடி மெளனமானார் ஜனகராஜ்!

"நடிகர்களின் இமேஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''என்னைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டுலதான் நடிகர்கள் தங்களோட இமேஜ் பத்தி அதிகமா பார்த்துக்க வேண்டியிருக்கு. இதுவே கேரளால எடுத்துக்குங்க . . . மோகன்லாலும் மம்மூட்டியும் ஹீரோவாத்தான் நடிக்கணும்னு ஜனங்க நினைக்கலே. எந்த காரெக்டர் எடுத்து நடிச்சாலும் ரசிக்கறாங்க. ஆனா, இங்க அப்படியில்ல. நானே ஒரு படத்தில் காமெடி கலந்த வில்லன் ரோல் செஞ்சேன். படம் வந்ததும் நீங்க எங்களைச் சிரிக்க வைக்கற மாதிரி காரெக்டர்லே பண்ணுங்க , பளீஸ்னு எனக்கு ஏகப்பட்ட லெட்டர்ஸ்! அது என்னை ரொம்ப யோசிக்க வெச்சுது. ஸோ . . . அப்படிப்பட்ட படங்களை நான் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிட்டேன். அதுக்காக வில்லன் ரோலே பண்ண மாட்டேன்னு அர்த்தமில்ல... நல்ல டாமினேட் பண்ற மாதிரியான ரோல் கிடைச்சா பண்ணுவேன்."

“அரசியலுக்கு நடிகர்கள் வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருக்கிறதா?"

''நீங்க என்னை டேஞ்சர்ல் மாட்டி விட்டுடுவீங்க போலிருக்கே... நீங்க முதல்ல கேட்ட கேள்வி எனக்குச் சம்பந்தமில்லாதது. என்னைப் பத்திக் கேட்டீங்க இல்ல. எனக்கும் அரசியலுக்கும். ரொம்ப தூரம்... அது எனக்குத் தேவையில்லைன்னு முடிவு எடுத்துட்டேன்.

சின்ன வயசிலே பசங்களோட சேர்ந்து , 'கம்யூனிஸம் ''லெனின்' னு பேசிக்கிட்டிருந்தேன் . இப்போ அதுவும் கிடையாது. ஜாதகம், ஜோசியம் இதிலயும் சுத்தமா நம்பிக்கை கிடையாது."

"படங்களில் நீங்கள் காமெடி செய்கிறீர்கள்... நிஜ வாழ்க்கையில் எப்படி?“

"நான் ரொம்ப சீரியஸ் டைப்புங்க! பொதுவா காமெடி நடிகர்கள் ப்ராக்டிகல் லைஃப்லே சீரியலாத்தான் இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. ஏன் அந்த - மாதிரின்னு லாஜிக் எல்லாம் தெரியாது . ஆனா, நான் ரொம்ப சீரியஸ் டைப்! இல்லைன்னு வெச்சுக்குங்க . . . இளிச்ச வாயன்தானேன்னு நம்மை ஏமாத்திட்டுப்பூடுவானுங்க. பாருங்க... வெயில் கொளுத்துது. இறங்கி நடிச்சாவணும்... டைரக்டரா இருந்தாக்கூட யாரையாவது விட்டுச் சில ஷாட்ஸ் எடுக்கலாம். ஆனா நடிகனுக்கு வேற வழியே கிடையாது" - என்று சொல்லும்போதே ஆள் வந்து கூப்பிட... நம்மை ஒரு பார்வை பார்த்தபடி இறங்கிப் போனார்.

அடுத்து ஷூட்டிங் வேறு லொகேஷனுக்கு மாற... மீண்டும் காரில் பயணம்...! இந்த முறை டிரைவர் ஸீட்டில் ஜனகராஜ்.

வழியில் நின்ற மக்கள்... "ஹேய் ஜனகராஜ்டா...'' என்று உற்சாகக் குரலெழுப்ப... சலனமேயில்லாமல் காரை ஓட்டிவந்தார் ஜனகராஜ்!

அவரிடம், "எப்படி உங்களால் மெகானிக்கலாக, அவர்கள் கூப்பிடுவதை அங்கீகரிக்காமல் வர முடிகிறது?" என்றோம்.

"இதுக்குப் பதிலை நான் அப்புறமா சொல்றேன்'' என்றபடி பேச்சை மாற்றினார்.

சென்ற இடத்தில் இடைவெளி விடாமல் ஷூட்டிங் நடக்க... ஒருவழியாய் பேக்கப் ஆனபோது மணி ஆறாகி இருந்தது.

ஜனகராஜ் வீடு திரும்பியபோது அங்கு அவர் மகன் அழுது கொண்டிருக்க , அன்பாக விசாரித்தார் ஜனகராஜ். அவர் மனைவி... "கட்டிங் பண்ணிக்கிட்டான் குட்டு... அசிங்கமா வெட்டிட்டானாம்... அதான் அழுகை'' என்றார் .

"ஏண்டா முளைச்சு மூணு இலை விடலை... அதுக்குள்ள ஸ்டைலா?"என்று செல்லமாய் ஜனகராஜ் அதட்ட...

அழுகையை நிறுத்திய குட்டு, "என்ன?" என்றான் மிரட்டும் தொனியில் !

"பார்த்தீங்களா . . . . அப்பனையே மிரட்டறான் " என்றவர் ,

"ஒரு நாள் ஷூட்டிங் போற அவசரத்தில லேசா இவன் கன்னத்தில் தட்டிட்டுப் போயிட்டேன். சாயங்காலம் வந்து ' என்ன ராஜா' ன்னு சிரிச்சுக்கிட்டேகிட்டே போனேன். பளீர்னு ஒரு அறை வெச்சான் என் கன்னத்திலே. அவ்வளவு ஞாபகசக்தி " என்றார் சிரித்தபடி!

விடைபெற்று வெளியே வரும் சமயம் நம்மைக் கூப்பிட்டார் ஜனகராஜ்... "சொல்ல மறந்துட்டேனே, நீங்க கேட்ட கேள்விக்கான ஆன்ஸரரை! இந்த புரொஃபஷன்ல இயந்திரத்தனமாத்தான் இருக்கணும். ரசிகர்கள் கூப்பிடறதுக்கெல்லாம் திரும்பினா கூட்டத்துக்கு நடுவுல இயல்பா நம்மாலே நடிக்க முடியாது. வேடிக்கை பார்க்கிறாங்கங்கற உணர்வு வந்துடும். இன்னிக்குப் பார்த்திங்கள்ல . . . கோமணத்தோட நடிச்சேன். என் காது படவே பொம்பளைங்க கிண்டலடிச்சாங்க . அதைக் கேட்காத மாதிரி கண்டுக்காம போயிடணும். பட்... நடிக்கிற விஷயத்தில் நான் இயந்திரத்தனமாக இருக்கலை... காரணம், என்னோட தொழிலை நான் ரொம்ப சின்சியரா மதிக்கிறேன், நேசிக்கிறேன்... புதுசு புதுசா செய்யணுமனு ஆசைப்படறேன்" என்றார்.

- க. சண்முகம்

(14.10.1990 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)