Published:Updated:

``காசு வேண்டாம்... க்ரெடிட் கொடுத்தாலே போதும்’’ - `விஸ்வாசம்’ தீம் மியூசிக் சர்ச்சை குறித்து இமான்!

பிரபலங்களை எளிமையாக தொடர்புகொள்ளும் வழி, ட்விட்டர். உடனடியாக இமானை டேக் செய்து அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட, அதற்கு அவர், ``இதுவரை புரொடக்‌ஷன் பக்கமிருந்து எந்த அனுமதியும் என்னிடம் பெறவில்லை'' என்று பதிலளித்திருந்தார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சினிமா மீது பல ஆண்டுகளாக படிந்திருப்பது `காப்பி'(Copy) கரை. சில படைப்பின் உழைப்பை வேறொரு படத்தில், அதுவும் நன்றியின்றி உபயோகிப்பது பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. கதை திருட்டைத் தொடர்ந்து இம்மாதிரியான பிரச்னைகளும் சினிமாவில் தலைவிரித்து ஆடுகிறது. இதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகளும் படத்துக்குப் படம் நடந்துகொண்டுதான் வருகிறது.

MAR JAAVAAN
MAR JAAVAAN

வேறு மொழி சினிமா கதையை காப்பியடிப்பது, வேறொருவரின் கதையை படமாக்குவது மாதிரியான விஷயங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, எல்லா மொழி சினிமா துறையில் இது நடந்து வருகிறது. பிளாக் அண்டு ஒயிட் காலத்திலிருந்து படத்தோடு சேர்த்து இசையும் கைகோத்து வந்தால்தான் அப்படம் முழுமை பெறும். பரிணாம வளர்ச்சியோடு சேர்த்து டெக்னாலஜியின் வளர்ச்சியும் தற்போது விண்ணைத் தொட்டுள்ளது. ஒருபக்கம், சினிமா இப்படி ஆரோக்கியமாக போய்க்கொண்டிருந்தாலும் காப்பியடிக்கும் பழக்கம் இன்னும் சினிமாவை விடவில்லை. சமீபத்தில் வெளியான `சஹோ' படத்திற்குக் கூட இப்படியொரு பிரச்னையும் சர்ச்சையும் எழுந்தது.

இப்படிப் பட்டியலிட பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். கதைகளைக் காப்பியடிப்பதுபோல் இசையைக் காப்பிடிப்பதும் தற்போது வழக்கமாகிவிட்டது. என்ன, டெக்னாலஜியின் வளர்ச்சியைப் பயன்படுத்தி அதை வேறு விதமாக சில படங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதால் `இது அதுல்ல?!' என்ற சந்தேகம் மட்டுமே எழுகிறது. இந்த வரிசையில் சமீபத்தில் வெளியான பாலிவுட் படமான `மர்ஜாவான்'னின் ட்ரெய்லரும் `காப்பி' சர்ச்சையில் சிக்கியுள்ளது. மிலாப் ஸவேரி இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ரித்தேஷ் தேஷ்முக், தாரா, ரகுல் ப்ரீத் சிங் போன்றவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இது. ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சஞ்சய் சௌத்ரி இசைக்கோர்ப்பு பணிகளைச் செய்துள்ளார்.

``இது `விஸ்வாசம்' தீம் மியூசிக்ல!?" - கொதித்த ரசிகர்கள், இமான் பெயரைச் சேர்த்த படக்குழு

ட்ரெய்லரின் பாதி நன்றாகவே நகர்ந்து வந்தாலும், திடீரென `விஸ்வாசம்' படத்துடைய பின்னணி இசை வந்தவுடன் அஜித் ரசிகர்கள் அனைவரும் ஷாக்காகிவிட்டனர். அதைக் கொந்தளிப்பாக மாற்றி யூ-டியூபில் கமென்ட்டுகளும் பதிவிட்டனர். ஆனால், படக்குழுவினரோ அந்தக் கமென்ட்டுகளையெல்லாம் நீக்கிவிட்டனர்.

பிரபலங்களை எளிமையாக தொடர்புகொள்ளும் வழி, ட்விட்டர். உடனடியாக இமானை டேக் செய்து அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட, அதற்கு அவர், ``இதுவரை புரொடக்‌ஷன் பக்கமிருந்து எந்த அனுமதியும் என்னிடம் பெறவில்லை'' என்று பதிலளித்திருந்தார்.

IMMAN
IMMAN

இமானை தொடர்புகொண்டு பேசினேன். அவர், ``படத்தின் ட்ரெய்லரை நானும் பார்த்தேன். ஆனால், படத்தின் இசை சம்பந்தமாக 'மர்ஜாவான்' படக்குழுவினர் யாரும் எதுவும் என்னிடம் பேசவில்லை. ரசிகர்களும் இது தொடர்பாக கேட்டதால்தான் ட்விட்டரில் என்னுடைய கருத்தைப் பதிவிட்டேன். 'விஸ்வாசம்' படத்துடைய ஆடியோலேபிள் லெஹரி நிறுவனத்திடம்தான் இருக்கிறது. டீ-சீரிஸ் நிறுவனமும் லெஹரியும் ஒன்றுதான். காப்புரிமையை வாங்கிக்கூட அந்தப் படத்தில் என்னுடைய இசையைப் பயன்படுத்தியிருக்கலாம். தவிர, 'விஸ்வாசம்' படத்தை வெவ்வேறு மொழிகளில் எடுத்திருந்து அதில் இந்த இசையை பயன்படுத்தியிருந்தால்கூட நான் ஆதங்கப்பட்டிருக்க மாட்டேன். ஆனால், வேறு ஒரு படத்தில் என்னுடைய கன்டென்ட்டை பயன்படுத்தியதுதான் இடிக்கிறது. இதற்காக எனக்கு காசு வேண்டாம். இசை பொது சொத்துதான். ஆனால், குறைந்தபட்ச மரியாதைக்காகவாவது என்னுடைய பெயரை கிரெடிட்டில் போட்டிருக்கலாம்.

இந்த மாதிரி சம்பவம் 'கும்கி' படத்துக்கும் நடந்தது. ஆனால், அது சட்ட ரீதியாக நடந்தது. 'கும்கி' படத்தின் மியூஸிக்கை ஒரு மராத்தி படத்தில் பயன்படுத்தியிருந்தனர். சோனி நிறுவனத்தை வைத்து படக்குழு என்னிடம் முறையாக பெர்மிஷன் வாங்கித்தான் அதைச் செய்தனர். படத்துடைய டைட்டில் கார்டிலும் என்னுடைய பெயரை மென்ஷன் செய்து நன்றி சொல்லியிருந்தனர்.

முதலில் என்னைத்தான் இசையமைக்கக் கேட்டிருந்தார்கள். எனக்கு வெவ்வேறு வேலைகள் இருந்ததால் அதைப் பண்ண முடியலை. ஆனால், நீங்க யூஸ் பண்ணிட்டு எனக்கு கிரெடிட் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னேன். அதுவும் நடந்தது. படைப்பாளி எல்லோரும் இதைத்தான் எதிர்பார்க்கிறோம். ஆனால், `மர்ஜாவான்' படக்குழு இதைப் பண்ணலைங்கிறதுதான் என்னுடைய கோபம். இந்த சர்ச்சைக்கு அப்புறம் படத்துல இது இருக்குமா, இல்லையானு தெரியலை. ஒருவேளை இருந்தா அட்லீஸ்ட் கிரெடிட்டாவது போடுங்க'' என்ற ஆதங்கத்தோடு பேசி முடித்தார். 

தற்போது `மர்ஜாவான்' படத்தின் ட்ரெய்லரிலும், விக்கிப்பீடியா பக்கத்திலும் இமானின் பெயர் இணைக்கப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு