Published:Updated:

`வசூல்ராஜா' டு `ஆதித்ய வர்மா'... தமிழ் சினிமா டாக்டர்கள் எப்படி?

Doctors of Tamil cinema
Listicle
Doctors of Tamil cinema

மருத்துவர்களை மட்டுமே மையமாகக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட பல படங்கள் ஹிட் அடித்துள்ளன. அவற்றில் சில இங்கே!


வசூல் ராஜா

``பேஷன்ட் ரொம்ப சீரியஸ்'', ``வீ ட்ரைட் அவர் பெஸ்ட்", ``நீங்க அப்பாவாகப் போறீங்க" என்ற வசனம் முதல், ``பேஷன்ட் உயிருக்கு ஆபத்து இல்லைன்னுதான் சொன்னேன். அவர் கோச்சா டெல்லி மேட்சுக்குப் போற நிலைமையில் உடம்பு இல்லை" என்ற பிகில் வசனம்வரை பல வசனங்கள் பல படங்களில் டாக்டர்கள் பேசுவதாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

மருத்துவர்களை மட்டும் மையமாகக் கொண்ட அமெரிக்க சீரிஸான கிரேஸ் அனாட்டமி, தி குட் டாக்டர், ஹவுஸ் எம்.டி போன்று தமிழில் தொடர்கள் இல்லை என்றாலும் மருத்துவர்களை மையமாக வைத்து இயக்கப்பட்ட பல திரைப்படங்கள் ஹிட் அடித்துள்ளன.


1
வசூல் ராஜா

வசூல் ராஜா

தந்தை (நாகேஷ்) தன் மகன் ( கமல்) மருத்துவன் இல்லை என்ற உண்மையை அறிந்து அவமானப்பட்டு அழுததைப்பார்த்து, தாங்க முடியாமல், மருத்துவர் ஆவேன் என்று சபதத்தோடு மருத்துவக் கல்லூரியில் நுழையும் கமல் ஆரம்பம் முதலே அமர்க்களப்படுத்துவார். ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்து மார்க்கபந்துவாகிய கிரேசி மோகனை உஷார் செய்து நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, `2019 நீட் தேர்வில் நடப்பதை' அன்றே கணித்து மாஸ் காட்டியிருப்பார் கமல். மருத்துவக் கல்லூரியில் முதல் நாள் வகுப்பு அறைக்குச் செல்வார் கமல். மாணவர்கள் கமலை பேராசிரியர் என்று நினைக்க, நானும் ஸ்டூடன்ட்தான் என்று cool bro வாக வரும் கமல் வகுப்பின் முடிவில் பிரகாஷ் ராஜ், "Any Questions" என்று கேட்டவுடன் கமல், ``ஒரு பேஷன்ட் உடம்பு முடியாம வாயில் நுரை தள்ளிக்கிட்டு எமர்ஜென்சின்னு வந்தா, உடனே சிகிச்சை பண்ணுவீங்களா, இல்ல அட்மிஷன் ஃபார்ம் ஃபில் அப் பண்ணச் சொல்லி சாவடிப்பீங்களா?" என்ற வசனம் சிரிக்க வைத்தாலும் மருத்துவ உலகின் சில யதார்த்தங்களைச் சிந்தித்து, கோபப்படவும் வைத்தது. தன் 7-ம் எண் ரூம்மேட்டான சுவாமிநாதனை ராக்கிங் செய்த சீனியர்ஸை ராக்கிங் செய்வதும், அநியாயத்திற்காக குரல் கொடுப்பதும் அப்ளாஸ் தருணங்கள்.

சிடுமூஞ்சி கிளீனரை தன் கட்டிப்பிடி வைத்தியத்தால் மனம் மகிழ வைக்கும் தருணங்களில் நம் மனமும் நெகிழும். 12 வருடங்களாக கோமா நிலையில் இருந்த நோயாளியின் வாழ்வில் ஒளி ஏற்றி, அன்பால் ஆகாதது ஏதும் இல்லை (அன்பே சிவம்!) என்று நிரூபித்திருப்பார்கள். கமலை அசிங்கப்படுத்தி கல்லூரியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக பிரகாஷ்ராஜ் வைக்கும் வாய்மொழித் தேர்வில் முதலில் கலக்கும் கமல், புற்றுநோய் பற்றிய கேள்விக்குப் பதில் தெரிந்தாலும் புற்றுநோயால் இறந்த ஜாஹிரின் நினைவில் தத்தளிக்கிறார். ``அவன் என்னை டாக்டரா பார்க்கல சார். கடவுளாப் பார்த்தான், அவனை என்னால காப்பாற்ற முடியலையே" என்று கண்ணீர் விடும் கமல், தான் இந்தக் கல்லூரியை விட்டுச்செல்வதாக கூறிவிட்டு கடைசியாக ஒன்றை கேட்பார். அது தனக்காக அல்ல. ``ஜாஹிர் அம்மா வந்தாங்கன்னா பாடிய உடனே கொடுத்துடுங்க, அத fill பண்ணு, இத fill பண்ணுன்னு கஷ்டப்படுத்தாதிங்க சார்" என்று கமல் உடையும் தருணங்கள் நம் கண்களில் கண்ணீர் வர வைக்கும் தருணங்கள். மருத்துவப் படங்களிலேயே எப்பொழுதும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படம் ஒரு அக்மார்க்தான். சிரிப்பும், கருத்தும், உணர்வும் நிறைந்த படம். டாக்டர் பாத்திரத்தை ஹீரோவாக கொண்ட படங்களிலேயே முதல் ரேங்க் வாங்கும் படம் வசூல் ராஜா MBBS தான்!


2
சாமுராய்

சாமுராய்

மருத்துவக் கல்லூரி வாழ்க்கையை கலைக் கல்லூரி மாணவர்களைவிட என்ஜாய் பண்ணும் தியாகுவாகிய விக்ரம், தன் பிறந்தநாள் பார்ட்டிக்கு வராத ஜெயாவை கடிந்து கொள்வார். ஜெயா மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவராய் இருப்பார். சமூக அக்கறை கொண்டவராய், அநியாயத்தை தட்டிக் கேட்பவராய் செயல்படுவார்.

ஒரு சிறுவனின் மரணத்திற்கு மருத்துவ நிர்வாகம் காரணமாக, நிர்வாகத்தை எதிர்த்து தோற்றுப்போய் மனமுடைந்து இருப்பார் ஜெயா. அவரை உயிருக்கு உயிராக விரும்புகிற விக்ரம் அவரை தேற்றுகையில், ``சம்பந்தமே இல்லாத ஒருத்தனுக்கு இப்படி யோசிச்சுகிட்டு உட்கார்ந்திருக்காத" என்று அன்பாக விக்ரம் அதட்ட, ``சொந்தம்னாதான் தட்டிக்கேட்பீங்களா? தட்டிக் கேட்க வைக்கிறேன்" என்று சபதம் எடுத்துக்கொண்டு தீக்குளித்து உயிர் விடுவார். ஜெயாவின் இறுதி ஆசையான ``நீ எங்க தப்பு நடந்தாலும் தட்டிக்கேட்பியா தியாகு" என்ற வார்த்தைகள் விக்ரமை, சாமுராயாக மாற்றிவிடுகிறது. ஒரு சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை உணர்த்துவதாக இப்படம் அமைந்தது.


3
மெர்சல்

மெர்சல்

மெர்சல் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் வந்தாலும், அப்பா விஜய்யைவிட, மெஜிசியன் வெற்றியைவிட, மக்கள் மனதில் இடம் பெற்றது மக்கள் மருத்துவரான ஐந்து ரூபாய் டாக்டர் மாறன்தான். என்ட்ரியிலேயே விமான நிலையத்தில் பேச்சு மூச்சற்று இருக்கும் பெண்ணுக்கு முதலுதவி செய்து தன்னை அவமானப்படுத்திய போலீஸையே சல்யூட் அடிக்க வைக்கும் தருணம் முதல், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மருத்துவத் துறையின் அவலங்களை விளக்குவதுவரை மாஸ் காட்டியிருப்பார் விஜய்.

ஐந்து ரூபாய் மருத்துவர் மாறனுக்கு, கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதுபோல் உண்டியலில் குணமான நோயாளிகள் பணம் போடும் தருணங்கள் நெகிழ்ச்சி. டாக்டர் டேனியலாக எஸ்ஜே சூர்யாவும் தன் வில்லத்தனத்தில் கலக்கியிருப்பார். ``5 ரூபா வாங்கிட்டு மருத்துவம் பார்க்குறவன, இந்த உலகம் திறமை இல்லாதவன்னு சொல்லும். 5,000 ரூபாய் அநியாயமா வாங்குகிறவன பார்க்க டோக்கன் வாங்கிக்கொண்டு நிற்கும்" என்ற சூர்யாவின் கூற்றை மாறனுக்கு கிடைத்த மக்கள் அன்பும், உயரிய விருதும் பொய்யாக்கிவிடும். ``இப்ப சிசேரியனானு கேட்டு ஷாக் ஆகுறல்ல... மார்க் மை வொர்ட்ஸ், இன்னும் முப்பது வருஷம் கழிச்சு ஒருத்தன் நார்மல் டெலிவரின்னு சொன்னா எல்லாரும் ஷாக் ஆவாங்க" என்று கூறிவிட்டு சிரிக்கும் டேனியலின் வார்த்தைகள், இன்றைய யதார்த்த நிலையை உணர்த்துபவை.


4
தர்மதுரை

தர்மதுரை

`தர்மதுரை' இன்றைய மருத்துவர்கள் லாப நோக்குடன்தான் செயல்படுவார்கள் என்ற கூற்றைப் பொய்க்க வைப்பதாக அமைந்த படம். தர்மதுரையில் செகண்ட் இயர் சிண்ட்ரோம், உடல் தான விழிப்புணர்வு, மாணவர்களிடையே சண்டை என்று பல இடங்களில் பந்து சுத்தினாலும் மருத்துவர் காமராஜர் வந்தவுடன் கோல் அடிக்க தொடங்குகிறது படம். ``மக்கள் பணத்தில் அரசாங்க கல்லூரியில் படித்த நாங்கள் வெளிநாடு செல்ல மாட்டோம்" என்று பேராசிரியருக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்ற தமன்னா படும் கஷ்டம், மணமுறிவு வரை செல்கின்றது.

``மக்களுக்கு இங்க தர்மதுரைன்னு ஒரு டாக்டர் சேவை செய்கிறார் என்று கேள்விப்பட்டேன். அது என் மாணவனா? என்று தெரிந்துகொள்ள வந்தேன்" என்று கண்கள் தெரியாத நிலையில் டாக்டர் காமராஜராக ராஜேஷ் கூறும் இடத்தில் கண்களில் நமக்கும் கண்ணீர் துளிர்க்கும். திருநங்கையை வாட்ச் உமனாக அமர்த்துவது, மருந்து மட்டும் எழுதாமல் அதற்கேற்ற உணவை கூறுவது என்று பல இடங்களில் அருமையாக நடித்திருப்பார் விஜய்சேதுபதி. கிளைமாக்ஸ் காட்சியில் மருத்துவமனையில் அடிபட்டு அரைமயக்கத்தில் படுத்திருக்கும் விஜய் சேதுபதி பக்கத்துக் கட்டிலில் உள்ள ஒரு குழந்தையின் தாய், அந்தக் குழந்தையின் அபாய நிலையை உணர்ந்து ``டாக்டர் வரீங்களா" என்று வேறு மருத்துவரை தேடுகையில், பக்கத்து பெட்டில் முடியாமல் படுத்திருந்தாலும் டாக்டர் என்ற சொல்லைக் கேட்டவுடன், தள்ளாடியபடி எழுந்து குழந்தையைக் காப்பாற்றுவார் விஜய் சேதுபதி. மருத்துவத்தின் மகிமையை உணர்த்தும் `தர்மதுரை'.


5
சந்திரமுகி

சந்திரமுகி

சந்திரமுகியில் வெள்ளை கோட்டு, ஸ்டெதஸ்கோப் என்ற டாக்டருக்கான அடையாளம் இல்லாமல் ஒரு மனோதத்துவ மருத்துவராக கலக்கியிருப்பார் ரஜினி. ``டாக்டர் சரவணன் இருக்க பயமேன்" என்று வெளிநாட்டு ராஜாவாக வலம் வரும் ரஜினி சிரிப்பு, சீரியஸ் என இரண்டிலும் மாஸ் காட்டியிருப்பார். ஜோதிகாவின் மனநிலையை குறித்து விளக்குவதும், துர்காஷ்டமி அன்று வேட்டையன் ராஜாவாக மாறுவதும் மக்களை வெகுவாக கவர்ந்த நடிப்பு.


6
ஆதித்யா வர்மா

ஆதித்யா வர்மா

`அர்ஜுன் ரெட்டி', `கபீர் சிங்'கைத் தொடர்ந்து விரைவில் வெளியாக இருக்கும் `ஆதித்ய வர்மா' இளைஞர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ மாணவன் என்றால் ஸ்டெதஸ்கோப்பும், புக்கும்தான் என்று காட்டாமல் மருத்துவக்கல்லூரியில் காதலும் மலரும் என்று சொல்லும் ரொமான்டிக் படம்தான் `அர்ஜுன் ரெட்டி'. அதன் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் `ஆதித்ய வர்மா'. அறிமுக நாயகனான துருவை, படத்தில் கல்லூரிப் பேராசிரியர், ``யுனிவர்சிட்டி டாப்பர் ஆனால் ... Anger management ல் 0. கோபத்தை கன்ட்ரோல் பண்ண முடியாத ஒரு மனுஷன், ஒரு சர்ஜிகல் பிளேடை பிடிச்சா அது கொலைக்குச் சமம்...'' என்று பின்னால் குரல் ஒலிக்க அறிமுகப்படுத்துவார்.

அர்ஜுன் ரெட்டியில் எந்தவொரு கெட்ட பழக்கத்தையும் விட்டுவைக்காத, நல்ல பையனாக வலம் வருவார் விஜய் தேவரகொண்டா. அறுவை சிகிச்சைக்கு முன் குடிப்பதனால் ஏற்படும் பின்விளைவுகளைச் சந்திப்பதும், நோயாளியிடம் கத்துவதும், காதலி ப்ரீத்தியிடம் உருகுவதும் என 'அர்ஜுன் ரெட்டி' வேறு மாதிரியான டாக்டர் படமாக இருக்கும். இது தெலுங்கிலிருந்து இந்தியிலும் அப்படியே ரீமேக் ஆனது. தற்போது `ஆதித்யா வர்மா'வாக தமிழிலும் ஹிட் அடிக்கவிருக்கிறது. இதுவரை வந்த தமிழ் சினிமா டாக்டர் கதாபாத்திரங்களில் `ஆதித்யா வர்மா' கொஞ்சம் வேற மாதிரிதான்!