2019 ஸ்பெஷல்
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

2019 அண்டை வீட்டு சாளரம்

கல்லி பாய் (இந்தி)
பிரீமியம் ஸ்டோரி
News
கல்லி பாய் (இந்தி)

2019-ல் அயல்மொழிகளில் வெளியான முக்கியமான சினிமாக்கள் இவை...

2019 அண்டை வீட்டு சாளரம்

கும்பளங்கி நைட்ஸ் (மலையாளம்)

ளநீரும் கடல்நீரும் சூழ்ந்த தீவு கும்பளங்கி. இந்தத் தீவில் வசிக்கும் சில மனிதர்களின் ஆர்ப்பாட்டமில்லாத வாழ்க்கையையும் அழுத்தமான உணர்வுகளையும் அழகாகப் படம் பிடித்திருந்தது `கும்பளங்கி நைட்ஸ்.'

கும்பளங்கி நைட்ஸ்
கும்பளங்கி நைட்ஸ்

ஸ்யாம் புஷ்கரன் எழுத்தில் மது.சி.நாராயணன் இயக்கத்தில் உருவான இப்படம், கண்டங்கள் கடந்தும் கொண்டாட்டபட்டது. மனித உணர்ச்சிகளை ஸ்யாமின் நுணுக்கமான எழுத்தும், கும்பளங்கியின் குளிர்ச்சியை ஷிஜு காலித்தின் ரம்மியான ஒளிப்பதிவும் கண்ணாடிகளாய்ப் பிரதிபலித்திருக்கும். ஷேன், சௌபின் மற்றும் ஸ்ரீநாத்தின் இயல்பான நடிப்பும், ஃபகத்தின் வித்தியாச வில்லத்தனமும் படத்தின் பலங்கள்.

கல்லி பாய் (இந்தி)

தாராவியின் குடிசைப் பகுதியில் பிறந்து, வறுமையில் வளர்ந்து, ராப் எனும் கலை அறிந்து, தன் உள்ளக் குமுறல்களைச் சொற்களாகக் கிறுக்கி, இசை கோத்துப் பல செவிகளைத் தனதாக்கி, `அப்னா டைம் ஆயேகா...' எனப் பாடித் தீர்த்த `கல்லி பாய்' சென்ற ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்று.

கல்லி பாய்
கல்லி பாய்

நாஸி, டிவைன் எனும் இரண்டு ராப்பர்களின் உண்மைக் கதையைத் தழுவிப் புனைந்த திரைக்கதை, அதிரடிக்கும் ஓல்ட் ஸ்கூல் ஹிப்ஹாப் இசை, அட்டகாசமான ஒளிப்பதிவு என பக்கா பேக்கேஜாக உள்ளங்களைக் கவர்ந்தது. ரன்வீர் சிங், சித்தாந்த் சதுர்வேதி, அலியா பட், விஜய் ராஸ் என அனைவரும் தாராவிவாசிகளாகவே வாழ்ந்திருந்தனர். சோயா அக்தர் இயக்கத்தில் உருவான கல்லி பாயை, இந்தியா ஆஸ்கருக்கு அனுப்பிவைத்தது சிறு மகிழ்ச்சியைத் தந்திருந்தாலும், அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறாமல் வெளியேறியது பெரும் சோகம். கவலை எதற்கு, அப்னா டைம் ஆயேகா!

ப்ரோச்சேவரேவரூரா (தெலுங்கு)

விநோதமான திரைக்கதை வடிவமைப்பு, அதை விழுங்கிவிடும் இடைவேளைத் திருப்பம் என இரண்டரை மணிநேரத்துக்கு நம்மைச் சிரிக்கவைத்து, குழம்பவைத்து, யோசிக்கவைத்து, இறுதியில் சுபம் சொல்லி முடியும் வித்தியாசமான படம்.

ப்ரோச்சேவரேவரூரா
ப்ரோச்சேவரேவரூரா

இரண்டு கதைக்களங்கள், எக்கச்சக்க கதாபாத்திரங்கள், ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வெவ்வேறு இலக்குகள், வெவ்வேறு பயணங்கள், ஒருவரின் இலக்கை நோக்கிய பயணத்தின் மீது மற்றொருவரின் பயணம் ஏற்படுத்தும் தாக்கம் என ஒரு ஹைப்பர்லின்க் பாடம் எடுத்தது படம். சமூகத்தின் அன்றாடச் சிக்கல்கள், பெண் சுதந்திரம், காதல், நட்பு எனத் திரைக்கதையெங்கும் கொட்டிக்கிடக்கும் உணர்வுப் பரிமாற்றங்களும், அவை பார்வையாளர்களுக்குப் பரிமாறப்பட்ட விதமுமே இந்தப் படம் கொண்டாடப் படுவதற்கான காரணங்கள். தெலுங்கு சினிமா புத்துயிர் பெற்றுவரும் இக்காலகட்டத்தில், அட்டகாசமான திரைமொழியுடன் வந்த `ப்ரோச்சேவரேவரூரா' தெலுங்குத் திரையுலகத்துக்கு எக்ஸ்ட்ரா ஆக்ஸிஜன்!

உயரே (மலையாளம்)

யர பறக்கவேண்டும் எனும் கனவு, வாழ்வின் லட்சியமாகவே மாறினால், மலையையும் மடுவாகத் தாண்டிப் பறந்துவிடலாம். இந்த நம்பிக்கைதான் `உயரே!' ஒரு பெண் கதாபாத்திரத்தை மனதளவில் வலிமையானவளாக எப்படி வடிவமைப்பது என்பதை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறது மலையாள சினிமா.

உயரே
உயரே

கூடவே, பார்வதியின் திறமையான நடிப்பும் தனித்துவமான உடல்மொழியும் படத்தை இன்னும் உயரத்திற்கு எடுத்துச் சென்றது. பிரமாதமான வசனங்கள், பிரச்னைகளுக்குத் தெளிவான தீர்வுகள் எனக் கூரான பேனா நுனியிலிருந்து அதைவிடக் கூர்மையான எழுத்துகளைக் கொட்டியிருந்தனர் எழுத்தாளர்கள். திரைக்கதையில் தேவையில்லாத ஹீரோயிசத்துக்கு இடம் கொடுக்காதது, வன்முறைக்கு ஆளாகும் பெண்ணைச் சுற்றியிருப்பவர்கள் அந்தப் பெண்ணுக்கு எத்தகைய நம்பிக்கை அளிக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியது ஆகியவற்றால் `உயரே'வுக்கான இடம் இந்திய சினிமாவுலகில் பெரும் உயரத்தில் இருக்கிறது.

ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா (தெலுங்கு)

சிகர்களை மூளையைக் கசக்கவைத்தது `ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா'. இடியாப்பத்தைவிடச் சிக்கலான திரைக்கதையை இறுதியில் நூற்கண்டாய்ச் சுற்றிக் கொடுத்துக் கிறுக்கிப் பிடித்து வைத்தான் ஆத்ரேயா.

ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா
ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா

ஒரு டிடெக்டிவ் படத்துக்குத் தேவையான எல்லா வகையான அம்சங்களையும் நக்கலான தொனியில் கலாய்த்துவிட்டுத் தொடங்கும் படம், போகப் போக, எதிர்பாராத ஒரு முடிவை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும். படம் தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்துக்கு நம்மிடம் சொல்லப்படும் பல தகவல்கள் எதற்கென்றே நமக்குத் தெரியாமல் நம்மைக் கடந்துவிடும். ஆனால், ஹீரோ ஆத்ரேயா துப்பறியும்போது முடிச்சுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்க்க அவிழ்க்க நம்மிடம் முன்னால் சொல்லப்பட்ட தகவல்கள் அனைத்தும் நம் கண்முன் தோன்றி `அட!' போடவைக்கும். கோமாளித்தனமும் அறிவாளித்தனமும் கலந்த நாயகனின் கதாபாத்திர வடிவமைப்பும் அவன் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் சுற்றிப் பின்னபட்ட திரைக்கதையும் படத்தின் பலம்.

சோன்ச்சிரியா (இந்தி)

திருட்டை மட்டுமே தொழிலாகச் செய்துவரும் ஓர் இனக்குழுவுக்கு நடக்கும் பல சம்பவங்களின் தொகுப்புதான் `சோன்ச்சிரியா'. அந்தச் சமூகம் செய்கின்ற ஒரு குற்றம், அந்தச் சமூகத்தின் தலைவனின் நெஞ்சை அழுத்துகிறது. அவனது குழுவை அவனே காவல்துறையில் சிக்க வைக்கிறான்.

சோன்ச்சிரியா
சோன்ச்சிரியா

அந்தக் குழுவின் மறுமலர்ச்சி என்பது ஒரு சிறுமியின் மூலமாகக் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறான். வாழ்வின் அத்தனை கோரங்களையும் சந்தித்த அந்தச் சிறுமியின் மலர்ச்சி மெல்ல மெல்ல சோன்ச்சிரியாவாக விரிகிறது. மனோஜ் பாஜ்பாய், பூமி பெட்நேக்கர், சுஷாந்த் சிங் ராஜ்புட், அஷுதோஷ் ராணா எனப் படத்தில் வருபவர்கள் எல்லாம் அந்த இனக்குழு மனிதர்களாகவே வாழ்ந்திருப்பார்கள். படத்தில் சில நிமிடங்களே வந்தாலும், பூலான் தேவி பாத்திரம் சொல்லும் பெண்களின் அரசியல் இந்தியச் சமூகத்தின் சாபக்கேடு. வடமாநிலப் பெண்கள், அந்த மாநிலங்களின் காவல்துறை, இதுபோன்ற சமூகங்கள் எனப் பல விஷயங்களின் உண்மை நிலையைத் தோலுரிக்கும் முக்கியமான படைப்பு இது.

ஜெர்ஸி (தெலுங்கு)

ஸ்போர்ட்ஸ் சினிமாக்கள் என்றாலே, இறுதியில் கதாநாயகனின் அணி, எதிர் அணியை வெல்லும் ஒன்லைனர்கள்தான். இந்த ஆண்டாண்டுக்கால இந்திய ஸ்போர்ட்ஸ் படங்களிலிருந்து வேறுபட்டு, தோற்றவனின் கதையைச் சொன்னது `ஜெர்ஸி'.

ஜெர்ஸி
ஜெர்ஸி

இந்திய அணியின் ஜெர்ஸியை ஒருநாள் உடுத்த வேண்டுமென்பது அர்ஜுனின் (நானி) கனவு. அந்தக் கனவு, ஆயிரமாயிரம் இளைஞர் களுக்கு மறுக்கப்பட்டது போலவே, 26 வயதான அர்ஜுனுக்கும் மறுக்கப்படுகிறது. மனைவி, குழந்தை என செட்டிலாகும் அர்ஜுனுக்கு, விளையாட்டு மூலம் கிடைத்த அரசு வேலையும் பறிபோகிறது. மகனின் பிறந்தநாளுக்கு ஜெர்ஸி வாங்கப் பணமில்லாமல் போராடும் அர்ஜுனுக்குள், புதைந்துபோன கனவு விழித்துக்கொள்கிறது. 36 வயதில் மீண்டும் ஜெர்ஸி அணிய முடிவுசெய்கிறார். ஒரு விளையாட்டு வீரனுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு, மீண்டும் கிடைக்கும் தருணத்தில் உடைந்து அழுவதை நானி வெளிப்படுத்திய விதம், இந்த ஆண்டின் மிகச்சிறந்த காட்சிகளுள் ஒன்று. தற்போது இதன் இந்தி ரீமேக்கில் ஷாஹித் கபூர் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஜல்லிக்கட்டு (மலையாளம்)

இந்த ஆண்டு ஒரு படம், அதன் திரைமொழிக்காகவும், திரை அனுபவத்துக்காகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்றால், அது ஜல்லிக்கட்டுதான். இறைச்சியாக்கப்படவேண்டிய தருணத்தில் திமிறிக்கொண்டு ஓர் எருமை தப்பித்துவிடுகிறது. பின்னணி இசையில் மனிதர்களின் குரல்களை வைத்து பிரசாந்த் பிள்ளை செய்திருந்த ஒலிக்கோவை நம்மையும் அந்தக் கிராமத்து மனிதர்களுடன் எருமையைத் துரத்திச் செல்ல வைத்தது.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

எருமை ஒவ்வொரு முறை அதன் பிடியிலிருந்து விலகும்போதும், மனிதர்கள் மூர்க்கமடைகிறார்கள். அசல் மிருகத்துக்கும் மிருகங்களாய் மாறிவிட்ட மனிதர்களுக்கும் இடையிலான யுத்தம் அந்த ரத்தச் சகதியில் நம்மையும் பங்குகொள்ளச்செய்யும். ஒரு போருக்கான ஆரவாரப் பெருங்கூச்சலுடன் ஓடும் ஜனத்திரள் காட்சியை இவ்வளவு அசுரத்தனமாய் இதற்கு முன்பு இந்திய சினிமாக்களில் கடந்ததில்லை. படம் பேசும் தத்துவார்த்த விஷயங்கள் அடர்த்தியானவை.

ஆர்ட்டிக்கிள் 15 (இந்தி)

ற்போதைய இந்தியச் சூழலுக்கு, நாம் ஒரு படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டுமெனில் அது அனுபவ் சின்ஹா இயக்கிய ஆர்ட்டிக்கிள் 15 தான். இந்த ஆண்டு வெளியான படங்களுள், இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய படம்.

ஆர்ட்டிக்கிள் 15
ஆர்ட்டிக்கிள் 15

`சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பது சாத்தியமான நடைமுறையா, சம்பிரதாய வார்த்தைகளா என்ற கேள்வியை நம் மனசாட்சி முன் எழுப்பியது `ஆர்ட்டிக்கிள் 15'. மேலை நாட்டில் படித்து, உத்தரப்பிரதேசத்தின் சாதிய அடுக்குமுறைகள் நிறைந்த ஊருக்குக் காவல்துறை ஆய்வாளராக வரும் அயன் ரஞ்சனை (ஆயுஷ்மான் குர்ரானா ) அங்கிருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. தோல் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் தலித் சிறுமிகள் 3 ரூபாய் அதிக சம்பளம் கேட்டதால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்படுகிறார்கள். இறந்த உயிர்களுக்கான நீதியையும், அவ்வூர் மக்களின் ஜாதிய மனப்பான்மையையும் மாற்றப் போராடுகிறார் ரஞ்சன். இந்திய மனச்சாட்சியின்மீது வீசப்பட்ட கேள்விதான் `ஆர்ட்டிக்கிள் 15'.

வைரஸ் (மலையாளம்)

கேரளத்தின் பெரும்பாலான நடிகர்கள் ஒரு நல்ல திரைப்படத்துக்காக ஒன்றிணைந்ததுதான் `வைரஸ்.' பறவைகள் மூலம் பரவும் ஒரு கொடிய நோயை மனிதத்தாலும், மருத்துவத்தாலும் வெல்ல முடியும் எனக் கேரளம் நிரூபித்துக்காட்டியதுதான் கதைக்களம்.

வைரஸ்
வைரஸ்

2018-ம் ஆண்டு நிபா வைரஸ் கேரளாவைத் தாக்கியபோது, நோயாளிகளைக் காக்க உயிர்துறந்தவர் நர்ஸ் லினி புதுசெரி. ஒருபக்கம் நோயாளிகளைக் குணப்படுத்துவது, மற்றொரு பக்கம், இந்த நோய்க்கான காரணங்களைக் கண்டுபிடிப்பது என இரட்டைக் களத்தில் பயணிக்கும் திரைக்கதை. மருத்துவம் சார்ந்த ஒரு திரைப்படத்தில் த்ரில்லரைக் கூட்ட முடியுமா என்னும் கேள்விக்கு `ஆம்’, எனச் சொல்லி ஹிட் அடித்தது வைரஸ். குஞ்சகோ போபன், ஆசிஃப் அலி, டோவினோ தாமஸ், பார்வதி, ரேவதி, ரஹ்மான், சௌபின் ஷஹிர், ரீமா கல்லிங்கல், மடோன்னா செபஸ்டியன் எனக் கதை நகரும் ஒவ்வொரு இடத்திலும் நமக்குப் பரிச்சயமான முகங்கள். ஆனால், இவர்கள் மறைந்து, கதை முன்னிலைப்படுத்தப்பட்டது இந்தப் படத்தின் வலுவான அடித்தளம். வலுவான அடித்தளம்.

மூத்தோன் (மலையாளம் - இந்தி)

னிதனுக்குள் இருக்கும் ஆசைகள் ஏராளம். ஆனால், அவற்றுள் சிலவற்றுக்கு இயற்கையின் நியதி என்னும் பெயரில் மனிதர்களே தடை போட்டிருக்கிறார்கள். தடைசெய்யப்பட்ட மனவிருப்பங்கள் குறித்துதான் `மூத்தோன்' பேசுகிறது. தன் அண்ணனைத் தேடி மும்பைக்குக் கிளம்பும் ஒருவரின் கதைதான் இந்தப் படம்.

மூத்தோன்
மூத்தோன்

ஆனால், அந்த ஒருவரும் அவர் தேடும் தன் அண்ணனும் யார் என்பதுதான் ‘மூத்தோனை’ப் புதுமையாக்குகிறது. திரைக்கதை நெடுக இழையோடும் மென்சோகம், இயற்கை குறித்த விளக்கம், அதன்மீது மனிதன் வைத்திருக்கும் முன்முடிவுகள் எனப் படம் முழுக்க நம்முள் ஆயிரமாயிரம் கேள்விகளை எழுப்புகிறார் இயக்குநர் கீத்து மோகன்தாஸ். தமிழ் கலந்த மலையாள வட்டார வழக்கு, மற்ற நாயகர்கள் நடிக்கத் தயங்கும் கதாபாத்திரம் - இந்த இரண்டையும் முழுமையாக உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி, நிவின் தானொரு முழுமையான நடிகன் என நிரூபித்தார்.

கவலுதாரி (கன்னடம்)

நீங்கள் த்ரில்லர் ரசிகராக இருந்து, உங்களிடம் 140 நிமிடங்கள் இருக்குமெனில், நீங்கள் இந்தப் படத்தை தாராளமாய்த் தேர்வு செய்யலாம். இந்த ஆண்டு கன்னடத்தில் வெளியாகி, தற்போது தமிழ், தெலுங்கு எனப் பிற மொழிகளில் தயாராகிக்கொண்டிருக்கிறது கவலுதாரி.

கவலுதாரி
கவலுதாரி

பாலிவுட்டின் அந்தாதுன்னுக்குக் கதை எழுதியவர்களுள் ஒருவரான ஹேமந்த் ராவ், இதன் கதையாசிரியர் என்பது இப்படத்துக்கான நுழைவுச்சீட்டு. பெரிதாக சாதிக்க வேண்டும் எனத் துடிக்கும் ஷியாமுக்குக் கிடைப்பதென்னவோ, டிராஃபிக் கான்ஸ்டபிள் வேலை தான். ஒருநாள் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருக்கும் இடத்தில் மூன்று மண்டையோடுகள் கிடக்கின்றன. அதைப் பற்றித் துப்பறியத் தொடங்குகிறார் ஷியாம். தவிர்க்கும்படி மேலிட நிர்பந்தம் வந்தாலும் விடாப்பிடியாய் அந்தப் புதிர் நோக்கி நகர்கிறார் ஷியாம். முன்பின் நகரும் திரைக்கதை, இறுதி நொடியில் அவிழ்க்கப்படும் முடிச்சுகள் என `கவலுதாரி' திரைப்படம் கன்னட ரசிகர்களுக்கு ஒளித்து வைத்திருந்த சுவாரஸ்யங்கள் ஏராளம்.