Published:Updated:

`கும்பளங்கி நைட்ஸ் ஸ்கிரிப்ட் எழுத மூணு வருஷமாச்சு!' சென்னை சுயாதீன திரைப்பட விழாத் துளிகள்

IFFC2020
IFFC2020

வணிக சினிமாக்களைத் தாண்டி, சுயாதீனத் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் உள்ளிட்ட வகை திரைப்படங்களுக்காக சென்னை சுயாதீனத் திரைப்பட விழாவை நடத்திவருகிறார்கள்.

சினிமா... உலகெங்கிலும் பல கோடி மக்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் மகத்தான கலை. அதன் உருவாக்கம், திரைப்படத்தைப் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. திரைப்படங்கள் பார்ப்பதும், திரைப்படங்கள் குறித்து உரையாடுவதும் பலருக்கும் பிடித்தமான ஒன்று. சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது சினிமா. அதன் உருவாக்கத்திலும், பேசுபொருள்களிலும் சுவாரஸ்யத்தைத் தாண்டி சமூகம் சார்ந்த பொறுப்புணர்வும், கலை நேர்த்தியும் தேவைப்படுகிறது. உலகெங்கும் பல தன்னிச்சையான திரைப்பட அமைப்புகள் இந்த உரையாடல்களையும் பல்வேறு செயல்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றன. சென்னையில் இயங்கிவரும் `தமிழ் ஸ்டூடியோ' கடந்த 12 வருடங்களாகத் தமிழ்ச் சினிமா குறித்து தொடர்ச்சியான உரையாடல்களை முன்னெடுக்கும் திரைப்பட இயக்கம். திரைப்பட விமர்சனம், திரையிடல்கள், பயிற்சிப் பட்டறைகள் எனத் தீவிரமாக இயங்கி வருகிறது. வணிக சினிமாக்களைத் தாண்டி, சுயாதீனத் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் உள்ளிட்ட வகை திரைப்படங்களுக்காக சென்னை சுயாதீனத் திரைப்பட விழாவை நடத்திவருகிறது.

IFFC2020
IFFC2020

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவில் ஆவணப்படங்கள், குறும்படங்கள், சுயாதீனத் திரைப்படங்கள், திரைப்படம் குறித்த உரையாடல், Maser Class, Discussion Panels எனப் பல புதிய அனுபவங்களை பார்வையாளர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் வழங்கியது.

Environment Friendly என்ற இந்த வருட திரைப்பட விழாவுக்கான Motto வாக அறிவித்திருந்தனர். அதற்கேற்ப முற்றிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் துணிகளில் வரையப்பட்ட ஓவியங்கள், பேப்பர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தோரணங்கள் விழா அரங்கின் முகப்பை அலங்கரித்தன. பிரசாத் பிரிவ்யூ மற்றும் பிரசாத் 70mm இரு அரங்கிலும் திரையிடல்களும், உரையாடல் நிகழ்வுகளும் நடைபெற்றன. பிரபல சுயாதீனப்பட இயக்குநர்களான பிரசன்னா விதானகே, சிவக்குமார் மோகனன், மறைந்த ஒளிப்பதிவாளர் எம்.ஜெ.ராதாகிருஷ்ணனின் மகன் எட்வர்ட் ராதாகிருஷ்ணன் மற்றும் `கும்பளங்கி நைட்ஸ்' படத்தின் இயக்குநர் மது.சி. நாராயணன், இயக்குநர்கள் லெனின் பாரதி, மிஷ்கின், கமலக்கண்ணன் மற்றும் எழுத்தாளர் இரா.முருகவேள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

`கும்பளங்கி நைட்ஸ் ஸ்கிரிப்ட் எழுத மூணு வருஷமாச்சு!' சென்னை சுயாதீன திரைப்பட விழாத் துளிகள்
பேரன்பு, கல்லி பாய், கும்பளங்கி நைட்ஸ், டூலெட், 2.0, ஆர்ட்டிகள் 15...  2019-ன் ஃபர்ஸ்ட் ஹாப் ஹிட்ஸ்!

விழாவின் முதல் படமாக மலையாளத்தில் உருவான `வெயில் மரங்கள்' படம் திரையிடப்பட்டது. இயற்கைப் பேரிடரால் பாதிப்புக்குள்ளாகி கேரளத்திலிருந்து இமாசலப்பிரதேசத்துக்கு குடிபெயரும் ஒரு தலித் குடும்பத்தைப் பற்றிய படம். இயற்கை சீற்றமும் சாதிய அடக்குமுறையும் ஒடுக்கப்பட்ட மனிதனின் வாழ்வில் ஏற்படுத்தும் நெருக்கடிகளை உண்மைக்கு மிக நெருக்கமாகக் காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் பிஜுக்குமார் தாமோதரன். பார்வையாளர்களால் வெகுவாகப் பாராட்டப் பெற்றது இப்படம். திரையிடலுக்குப் பின் `இன்றைய மலையாள சினிமா' என்கிற தலைப்பில் `கும்பளங்கி நைட்ஸ்' படத்தின் இயக்குநர் மது.சி.நாராயணன் உரையாடினார். `கும்பளங்கி நைட்ஸ்' படத்துக்கான விதை 6 வருடங்களுக்குமுன்பு உருவானது. மூன்று வருடமாக எழுத்துப் பணிகளை மேற்கொண்டு, அதன் பிறகுதான் படப்பிடிப்புக்குச் சென்றோம். மலையாள சினிமாக்கள் அனைத்தும் உண்மைக்கு நெருக்கமாகத் தெரிவதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு ``மலையாள சினிமா மட்டுமல்ல, எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் கதை எந்தளவுக்கு நேர்மையாக, நிஜத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறதோ, அந்தளவுக்குப் படமும் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

நிகழ்வைத் தொடர்ந்து `சினிமாவில் பிம்பங்களின் கூட்டமைப்பு' என்கிற தலைப்பில் ஒளிப்பதிவாளர் ஜி.பி.கிருஷ்ணாவின் மாஸ்டர் கிளாஸ் நடைபெற்றது.

மறைந்த இயக்குநர் அருண்மொழி நினைவாக 35 வருடங்களுக்கு முன் அவர் எடுத்த `நில மோசடி' ஆவணப்படம் திரையிடப்பட்டது. தமிழகத்தின் அரசியல் பிரமுகர் ஒருவர் பினாமிகளின் பெயரில் உழவு நிலங்களை விவசாய மக்களிடமிருந்து அபகரித்த அநீதியைக் காத்திரமாகப் பதிவு செய்திருந்தார்.

பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் உண்மையை உரக்கச் சொல்ல நினைத்த அருண்மொழியின் துணிச்சலை அரங்கம் கைதட்டிப் பாராட்டியது.

குணப்படுத்த முடியாத நோயால் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒரு படைப்பாளி மேற்கொள்ளும் ஒரு திட்டமில்லாத பயணத்தைக் களமாகக் கொண்டு இயக்குநர் பரத்ராஜின் இயக்கிய `விண்டோ சீட்' என்கிற சுயாதீன சினிமா பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் படைப்பாக இருந்தது. கதையில் நிகழும் சம்பவங்கள், அவை படமாக்கப்பட்ட விதம் என புதுவித அனுபவமாக அமைந்தது அந்தத் திரைப்படம்.

IFFC2020
IFFC2020

திரைப்படங்களின் திரையிடல் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட திரைக்கலைஞர்களின் அனுபவப் பகிர்வும், உரையாடல்களும் திரைப்பட ஆர்வலர்களுக்குப் பயனளிக்கும் விதமாக அமைந்தது. `Spotlight on Environmental Friendliness' என்கிற நோக்குடன் சுற்றுச்சூழல் சார்ந்த படைப்புகள் திரையிடப்பட்டன. `சூழலியலுக்கும் மையநீரோட்ட சினிமாவுக்குமான இடைவெளி' என்கிற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது. சுற்றுச்சூழலுக்கும் சினிமாவுக்குமான தொடர்பு நிலை, ஏன் சினிமாவில் கையாள வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு விரிவான தெளிவான அலசலாக அமைந்தது. திரைப்பட இயக்குநர் மீரா கதிரவன், `பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன், பத்திரிகையாளர் சண்முகானந்தம் உள்ளிட்டோர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாடினர்.

LGBTQIA சார்ந்த கதைகளைப் பேசிய `Queer lens' படைப்புகள் LGBTQ வினரைப் பற்றிய புரிதல்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. அரசியல், சமூக நீதி குறித்து எடுக்கப்பட்ட குறும்படங்களும் திரையிடப்பட்டன. அதையொட்டி `அரசியல் சினிமா மற்றும் சினிமா உலகம்' என்கிற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது. தமிழ் சினிமாக்களில் கையாளப்பட்ட பிற்போக்குத்தனங்கள், நாயக மைய சினிமாவின் தொடக்கம், பெண்களை, ஒடுக்கப்பட்டவர்களைக் கதைகளில் சித்திரிக்கும் விதம் என செறிவானதொரு கலந்துரையாடல் நடைபெற்றது. திரைப்பட இயக்குநர்கள் லெனின் பாரதி, கமலக்கண்ணன், எழுத்தாளர்கள் சுகுணா திவாகர், இரா.முருகவேள் உள்ளிட்டோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

IFFC2020
IFFC2020

`சுயாதீன சினிமாவுக்கான ஒரு வழிகாட்டி' என்கிற தலைப்பில் இயக்குநர் பேராசிரியர் சிவக்குமார் மோகனன் மாஸ்டர் கிளாஸ் நடத்தினார். சுயாதீன சினிமாக்களின் அவசியம், அதன் போக்கு, அதில் கையாளப்படும் கதைகள், சமகாலத்தில் எடுக்கப்பட்ட சிறந்த சுயாதீன படங்கள் என ஆழமான கருத்துகளை வழங்கினார். `உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை' என்ற இயக்குநர் பிரசன்னா விதானகேவின் மாஸ்டர் கிளாஸ், இறுதிப் படமாகத் திரையிடப்பட்ட அவரது `Gaadi' படம் இரண்டும் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. இவை தவிர இரண்டு நாள் நிகழ்வில் தித்திப்பு, உறையூர் எலி உள்ளிட்ட தமிழ்க் குறும்படங்களும் திரையிடப்பட்டன. இறுதிநாள் நாடகக் கலைஞர் பகுவின் திணைநிலவாசிகள் சார்பில் `மா ஸ்கொயர் ' என்ற சமகால அரசியலைப் பிரதிபலிக்கும் நாடகம் நிகழ்த்தப்பட்டது.

IFFC2020
IFFC2020

சிறந்த படங்களுக்கான விருதுகளை இயக்குநர் மிஷ்கின் வழங்கினார். சுயாதீன திரைப்படங்கள் (Independent cinema) பற்றிய ஒரு முழுமையான அனுபவமாக அமைந்தது இத்திரைப்பட விழா. விழாவை ஒருங்கிணைத்த தமிழ் ஸ்டூடியோ அருண் ``தமிழ் ஸ்டூடியோ, ஓர் இயக்கமாக 12 ஆண்டுகளாகச் சினிமா ரசனை குறித்தும், நல்ல திரைப்படங்களின் உருவாக்கம் குறித்தும் இயங்கி வருகிறோம். எங்களின் செயல்பாட்டுகான மாற்றமும் எங்களால் உணர முடிகிறது. எங்களின் விருது விழாவில் கலந்துகொண்ட பரத்ராஜ் தற்போது பலராலும் பாராட்டப் பெற்ற `வின்டோ சீட்' திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்' என்றார் மகிழ்ச்சியுடன். ஆழமான கலந்துரையாடல்கள், புதுமையான படைப்புகள், கலைஞர்களின் அனுபவப் பகிர்வு எனப் பல புதிய திறப்புகளுக்கு வழிவகை செய்யும் விதமாக அமைந்தது திரைப்பட விழா.

அடுத்த கட்டுரைக்கு