Published:Updated:

Writer Review: விசாரணை, ஜெய் பீம் வரிசையில் போலீஸ் அதிகாரத்துக்கு எதிரான மற்றுமொரு படமா `ரைட்டர்'?!

Writer Review | ரைட்டர் விமர்சனம்

காவல்நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரியும் ஒருவர், மீட்சிப் பாதையை தேர்ந்தெடுத்து தன் தவறுகளைச் சரி செய்ய நினைத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதுதான் இந்த 'ரைட்டர்'.

Writer Review: விசாரணை, ஜெய் பீம் வரிசையில் போலீஸ் அதிகாரத்துக்கு எதிரான மற்றுமொரு படமா `ரைட்டர்'?!

காவல்நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரியும் ஒருவர், மீட்சிப் பாதையை தேர்ந்தெடுத்து தன் தவறுகளைச் சரி செய்ய நினைத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதுதான் இந்த 'ரைட்டர்'.

Published:Updated:
Writer Review | ரைட்டர் விமர்சனம்
தன் காவல்துறைப் பணியின் அந்திமக் காலத்தில் இருக்கும் சமுத்திரக்கனி, காவல்துறை ஊழியர்களுக்கும் யூனியன் வேண்டும் என்று பல வருடங்களாக சட்டப் போராட்டம் நடத்துபவர். விளைவு, பணி நிறைவு பெறும் தறுவாயில், சென்னைக்கு மாற்றப்படுகிறார். அங்கு அவர் தன்னை அறியாமல் செய்த தவறினால் ஒரு ஆராய்ச்சி மாணவனின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. செய்த தவற்றைச் சரி செய்ய சமுத்திரக்கனி எடுக்கும் முடிவுகளும், அதனால் அரங்கேறும் அதிர்ச்சி நிகழ்வுகளும்தான் 'ரைட்டர்' படத்தின் கதை.
Writer Review | ரைட்டர் விமர்சனம்
Writer Review | ரைட்டர் விமர்சனம்

ரைட்டர் தங்கராஜாக சமுத்திரக்கனி. இந்த வருடம் 'தலைவி' படத்தில் ஆர்.எம்.வீரப்பனாகவும், 'விநோதய சித்தம்' படத்தில் காலத்தின் கடவுளாகவும் தன் சிறப்பான நடிப்பைக் கொடுத்தவர் இதில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார். வழக்கமான அறிவுரைகள் எதுவுமில்லாமல், அளவாகப் பேசி, அதே சமயம் படம் மொத்தத்தையும் தாங்கிப் பிடித்து, ஓர் இயக்குநரின் நடிகனாக தனி முத்திரைப் பதித்திருக்கிறார். துப்பாக்கியைக் கையில் ஏந்தும்போது, "சர்வீஸ்ல பாதிக்குமேல ரைட்டராவே இருந்துட்டேன். கையெல்லாம் நடுங்குது. வேணாம் சார்" எனக் கண்களில் கண்ணீருடன் அவர் கசிந்துருகும் காட்சியில் அவருக்குள் இருக்கும் அற்புதமான நடிப்பாற்றல் வெளிப்படுகிறது. வெல்டன் 'தங்கராஜ்'!

காவல்துறையிடம் மாட்டிக்கொண்டு அல்லல்படும் இளைஞனாக 'ஜானி' ஹரிகிருஷ்ணன். "ஏன் கையெழுத்து போடணும்?" என தன்மானம் இழக்காத போராளியாகக் கவனம் ஈர்க்கிறார். 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி காவல்நிலையத்திலியே தங்கி பணி செய்யும் குற்றவாளியாக அதகளம் செய்திருக்கிறார். படத்தின் பல ராவான இடங்களில் அவரின் நகைச்சுவைதான் வெடித்து சிரிக்க வைக்கிறது. காவல்துறை அதிகாரிகளையே லெப்டில் டீல் செய்யும் வகையில் அவருக்கு எழுதப்பட்ட வசனங்களும், அதைப் பேசி நடித்த அவரின் உழைப்பும் பாராட்டப்பட வேண்டியது. இனியா சில காட்சிகளே வந்தாலும், அவர் தன் உயரதிகாரியின் முன், குதிரையில் ஏறி சவால்விடும் காட்சி, தமிழ் சினிமாவின் முக்கியமான ஷாட்களில் ஒன்றாக இடம்பெறும் அளவிற்கு வீரியம் மிக்கதாக இருக்கிறது. வக்கீலாக ஜி.எம்.சுந்தர், பழைய ஸ்டேஷனில் உடன் பணிபுரிந்த காவலதிகாரியாக 'வத்திக்குச்சி' திலீபன், சமுத்திரக்கனியின் மனைவியாக வரும் மகேஸ்வரி என அனைவருமே தங்களின் பாத்திரம் அறிந்து நடித்து, படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றனர்.

Writer Review | ரைட்டர் விமர்சனம்
Writer Review | ரைட்டர் விமர்சனம்

இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப், தன் முதல் படத்திலேயே அதிகாரத்துக்கு எதிரான முக்கியமானதொரு உரையாடலைத் துவங்கி வைக்கும் ஒரு கதையைக் கையாண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் போலீஸை நாயகர்களாகவும், சூப்பர்ஹீரோக்களாகவும் காட்டிக் கொண்டிருக்கையில், அதன் மற்றொரு பக்கத்தை சமரசமின்றி காட்சிப்படுத்தியதற்காக பாராட்டுகள். அதனாலேயே 'விசாரணை', 'கர்ணன்', 'ஜெய் பீம்' எனக் காவல்துறையின் தவறுகள் மீது விமர்சனங்களை வைக்கும் படங்கள் வரிசையில் இணைந்துகொள்கிறது இந்த 'ரைட்டர்'. நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக, மீண்டும் ஒரு போல்டான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கும் பா.இரஞ்சித்துக்குப் பாராட்டுகள்.

முன்னுக்குப் பின்னான காட்சியமைப்புக் கொண்ட திரைக்கதை சுவாரஸ்யத்தைக் கூட்டியிருந்தாலும், குறைகளும் இருக்கவே செய்கின்றன. ஹரிகிருஷ்ணனின் பிளாஷ்பேக் கதை, அவரின் அண்ணன் கதாபாத்திரம் போன்றவை நெகிழச் செய்தாலும், அதில் கதையை நிறுத்துவதுபோன்ற பாடல் எதற்கு என்ற கேள்வி எழாமல் இல்லை. சமுத்திரக்கனியின் பிளாஷ்பேக், ஹரிகிருஷ்ணனின் பிளாஷ்பேக், இனியாவின் பிளாஷ்பேக் என படமே பிளாஷ்பேக்கால் நிரம்பியிருக்க, கிளைமேக்ஸையும் கோர்வையாகச் சொல்லாமல், அதற்கும் பிளாஷ்பேக் போடுகிறார்கள். இந்த பார்மேட் அந்த கிளைமேக்ஸின் வீரியத்தையும் சற்றே குறைத்திருக்கிறது. போலீஸ் ஏன் ஓர் இளைஞனை வதைக்கிறது என்பதை முதல் பாதி முழுக்கவே மூடி மறைத்து சுவாரஸ்யம் கிளப்பியது சரிதான், ஆனால், அந்த ட்விஸ்ட் மற்றும் காரணம் வெளிப்படும் இடத்தில் இன்னமும் கொஞ்சம் தெளிவான காட்சிகளும், வசனங்களும் வைக்கப்பட்டிருக்கலாமே?!

Writer Review | ரைட்டர் விமர்சனம்
Writer Review | ரைட்டர் விமர்சனம்
அதேபோல், 'நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி' என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பல பகுதிகள், காட்சிகளாகப் படத்தில் வருகின்றன. அதற்கான கிரெடிட்ஸாக படத்தின் இறுதியில் மட்டும் 'பிபிலியோகிராபி' எனப் புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டிருப்பது அறமா என்பதைப் படக்குழுவினர்தான் சொல்லவேண்டும்.
எடுத்துக்கொண்ட களத்திற்காகவும், படம் துவங்கி வைக்கும் உரையாடலுக்காகவும், சமரசமில்லாமல் பிரச்னைகளைக் காட்சிப்படுத்தியதற்காகவும், குறைகளை மறந்து இந்த 'ரைட்டர்'-ஐ பாராட்டி பதக்கமளிக்கலாம்!