Published:Updated:

மசாலா குறைத்த மாஸ் ஹீரோ!

நானி
பிரீமியம் ஸ்டோரி
நானி

‘நேச்சுரல் ஸ்டார்' என்ற அடைமொழியுடன் டோலிவுட்டில் வலம்வரும் ‘நானி'யின் ரசிகர்களுக்கு இதில் மாற்றுக்கருத்து இருக்கலாம்.

மசாலா குறைத்த மாஸ் ஹீரோ!

‘நேச்சுரல் ஸ்டார்' என்ற அடைமொழியுடன் டோலிவுட்டில் வலம்வரும் ‘நானி'யின் ரசிகர்களுக்கு இதில் மாற்றுக்கருத்து இருக்கலாம்.

Published:Updated:
நானி
பிரீமியம் ஸ்டோரி
நானி

அக்கினேனி நாகேஸ்வர ராவ் ஒருமுறை இப்படிச் சொன்னார், ‘‘அது என்ன, நடிப்பு ரொம்ப நேச்சுரலா இருந்துச்சுன்னு சொல்றது? அப்படி எதுவும் கிடையாது. நடிப்புன்னு ஆனதுக்கு அப்புறம் அதுல என்ன நேச்சுரல்?’’

‘நேச்சுரல் ஸ்டார்' என்ற அடைமொழியுடன் டோலிவுட்டில் வலம்வரும் ‘நானி'யின் ரசிகர்களுக்கு இதில் மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால், நானியை நேச்சுரலான நடிகன் என்று அழைப்பதை அவர் நடிப்புக்கான பாராட்டுப் பத்திரம் என்பதாகப் பார்க்காமல், அவரின் பிரத்யேகமான ‘தி பாய் நெக்ஸ்ட் டோர்' பிரதிபலிப்புக்காகக் கொடுக்கப்பட்ட ஒன்றாகப் பார்க்கலாம். ஆம், நானி ஒவ்வொரு முறை தெலுங்கு பேசும் திரையை ஆக்கிரமிக்கும்போதும், ரத்தம் சிந்தாது, தோட்டாக்கள் தெறிக்காது. நம் அருகே உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த நண்பன் ஒருவன் எழுந்துபோய் திரையில் உலாவினால் நாம் எப்படி உணர்வோமோ, அந்த நடிப்பைக் கொண்டு வந்துவிடுவார். அவரின் மேனரிசங்கள் நாம் சிறுவயதில் பார்த்து வியந்த, நம் ஏரியாவில் கிரிக்கெட் விளையாடும் ஏதோவொரு அண்ணனை நமக்கு நினைவூட்டும்.

மசாலா குறைத்த மாஸ் ஹீரோ!

தொடர்ந்து நான்கு, ஐந்து குடும்பங்களின் வாரிசுகள் மட்டுமே ஆக்கிரமிக்கும் டோலிவுட்டுக்குள், முழுக்க முழுக்க தன் நடிப்புத் திறனை மட்டும் வைத்து உள்ளே வந்தவர் நானி. உதவி இயக்குநர், ஆர்ஜே, நடிகர், டிவி ஆங்கர், தயாரிப்பாளர் எனப் பல முகங்கள் அவருக்கு உண்டு. இயக்குநராக வேண்டும் என்று வந்தவர், தற்போது தெலுங்கு சினிமாவின் தவிர்க்க முடியாத ஸ்டார். எதையும் மறைக்காமல், அதே சமயம் தெளிவாகப் பேசும் நானியிடம் ஒருமுறை நெப்போடிசம் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில், எந்தவிதப் பின்னணியும் இல்லாமல் சாதிக்கப் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் உத்வேகத்தைக் கொடுக்கும்.

‘‘வாரிசு நடிகரா இருக்கறவங்களுக்கு சில சமயம் அதுவே பலவீனமாவும் இருந்திருக்கு. ஏன்னா, அதுவே அவங்களுக்கு ஒருவித அழுத்தத்தைக் கொடுக்கும். ஆனா, யாராவது என்னைப் பாராட்டறப்ப எனக்கு ஒரு ஸ்பெஷல் ஃபீல் வரும். ஏன்னா, அவங்க பாராட்டறது முழுக்க முழுக்க நான் மட்டுமே செஞ்ச ஏதோ ஒரு விஷயத்துக்காக! அவங்களுக்கு எங்க அப்பா பண்ணுனதோ, இல்ல என் குடும்பத்துல யாரோ பண்ணுனதோ இல்ல, நான் பண்ணுன ஏதோ ஒண்ணு பிடிச்சிருக்கு! நிச்சயம் அவங்க எந்தவித நிர்பந்தத்துக்காகவும் என்னைப் பாராட்டலை. அந்தப் பாராட்டுக்கு நூறு சதவிகித காரணம் நான் மட்டும்தான். அது ஸ்பெஷல்தானே?!’’

மசாலா குறைத்த மாஸ் ஹீரோ!

ஆர்ஜே, அப்படியே விளம்பரங்கள் எனச் சுற்றித் திரிந்த நானியை இயக்குநர் மோகன கிருஷ்ண இந்திராகாந்தி தன் ‘அஷ்ட சம்மா' படத்தின் மூலம் ஹீரோவாக்கினார். இந்தப் படம் ஆஸ்கர் வைல்டின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டு ஜோடிகள் பற்றிய ரொமான்டிக் காமெடி. 2010-ல் ‘வெண்ணிலா கபடிக் குழு' படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்து அதில் நாயகனாக நானி நடித்தார். படம் யாரும் எதிர்பாரா வண்ணம் சூப்பர்ஹிட்டடிக்க, நானியின் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் திறனைப் பலரும் பாராட்டினர். அடுத்த வருடமே இயக்குநர் நந்தினி ரெட்டியின் ‘அல மொதலாய்ந்தி (Ala Modalaindi) படத்தில் நித்யா மேனனுடன் நடித்தார். ரொமான்டிக் கலாட்டா காமெடியான இந்தப் படத்தில் நானி, நித்யா மேனன் இருவருமே அதகளம் செய்திருப்பார்கள். அதே வருடம் ‘வெப்பம்' படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார் நானி.

கமர்ஷியலாக அவருக்கு ஒரு மார்க்கெட்டை உருவாக்கிய படம் ‘பிள்ள ஜமீன்தார்.' தென் கொரியாவின் ‘ஏ மில்லினியர்ஸ் ஃபர்ஸ்ட் லவ்' படத்தின் கதையில் தெலுங்குக்கு ஏற்றதுபோல காரம் சேர்த்து இறக்கியிருந்தனர். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ஈகா' படத்தில் சமந்தாவுக்காக, நானிதான் ஈயாக மறுஜென்மம் எடுப்பார். படத்தில் ஒரு சில காதல் காட்சிகளில் மட்டுமே வந்திருந்தாலும் நானியின் முகத்தை நாம் நிச்சயம் மறந்திருக்க மாட்டோம்.

மசாலா குறைத்த மாஸ் ஹீரோ!
மசாலா குறைத்த மாஸ் ஹீரோ!
மசாலா குறைத்த மாஸ் ஹீரோ!

2014-ல் வெளியான ‘பைசா' அவர் நடிப்பின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியது. படம் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வி என்றாலும், நானியின் கலகலப்பான நடிப்பு கவனம் ஈர்த்தது. குறிப்பாக மூட்டை மூட்டை யாகப் பணத்தை ஒரு காரில் பார்த்ததும் நானி கொடுக்கும் விதவிதமான ரியாக்‌ஷன்கள் மாஸ்டர் கிளாஸ்! அதே வருடம் தமிழில் ‘ஆஹா கல்யாணம்' படத்தில் மீண்டும் லவ்வர் பாயாக நடித்தார். அதேபோல் ‘நிமிர்ந்து நில்' படத்தின் தெலுங்கு வெர்ஷன் ‘ஜண்ட பை கபிராஜு' படத்திலும் நடித்தார். இருந்தும், தொடர்ந்து தோல்வி முகமே மிஞ்சியது! ஆனால், இந்தப் படம் வெளியான அதே நாளில்தான் அவரின் ‘எவடே சுப்ரமண்யம்' படமும் வெளியானது. ‘மகாநடி' நாக் அஷ்வினின் முதல் படமான இது, தொடர் தோல்விகளைச் சந்தித்த நானிக்கு ஓர் ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

தொடர்ந்து. ‘பலே பலே மகாதிவோ', ‘கிருஷ்ணா காடி வீரா ப்ரேமா காதா', ‘ஜென்டில்மேன்', ‘மஜ்னு', ‘நேனு லோக்கல்', ‘நின்னு கோரி', ‘மிடில் கிளாஸ் அப்பாயி' எனப் பல ஜானர்களில் கலந்துகட்டி அடித்தார்.

மசாலா குறைத்த மாஸ் ஹீரோ!
மசாலா குறைத்த மாஸ் ஹீரோ!
மசாலா குறைத்த மாஸ் ஹீரோ!

2018-ல் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா வுடன் இவர் இணைந்த காமெடி படம் ‘தேவதாஸ்' சூப்பர்ஹிட்டானது. இப்படியான ஏற்றத்தில் சென்றுகொண்டிருந்த அவரின் மார்க்கெட் வேல்யூ, ஃபார்முலா படங்கள் போன்றவற்றை எல்லாம் ஓரம்வைத்துவிட்டு, ஆத்மார்த்தமான ஒரு படம் செய்ய நினைத்தார். ‘ஜெர்ஸி' - கிரிக்கெட்டை ஆன்மாவாகக் கொண்டு, அதில் தந்தை, மகனின் மேல் வைத்திருக்கும் பாசத்தைப் புதைத்து, நானி எனும் முழுமையான கலைஞனை வெளியே கொண்டு வந்த படம். 26 வயதில் விட்ட கிரிக்கெட்டை, தன் மகனுக்காக 36 வயதில் கையிலெடுக்கும் ஒரு நடுத்தர வயது மனிதனின் வாழ்க்கைப் போராட்டம். தன் வழக்கமான ரொமான்ஸ் மற்றும் கலகல முகம் படத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், 36 வயது நாயகனாக படு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி யிருப்பார் நானி. குறிப்பாக, தான் வெற்றிபெற்றதை அறிந்ததும், ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று ரயிலின் சத்தத்தினூடே அவரும் கத்தி அழுது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி, நமக்குமே கண்ணீரை வரவழைக்கும்.

இப்படி ஒரு எமோஷனலான படத்தில், நடிப்பில் உச்சம் தொட்டுவிட்டு, அந்தச் சுவடே இல்லாமல், படு ஜாலியாக ‘நானீஸ் கேங்க் லீடர்' படத்தில் பென்சில் பார்த்தசாரதியாக அதகளம் செய்திருப்பார். இப்படி எந்தப் பிம்பத்துக்குள்ளும் சிக்காமல் இருப்பதுதான் நானியின் பலமும்கூட!

மசாலா குறைத்த மாஸ் ஹீரோ!
மசாலா குறைத்த மாஸ் ஹீரோ!

ஒரு தயாரிப்பாளராக பல புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிப்பது நானியின் நற்குணம். நானி ஆர்ஜேவாகப் பணிபுரிந்தபோது அவர் நடத்திய ஷோவின் பெயர் ‘நான் ஸ்டாப் நானி.' இன்று அவர் கரியரை விளக்கவும் இந்த மூன்று வார்த்தைகளே போதுமானது. நானியின் வெற்றி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களால் ஆத்மார்த்தமாக உணரப்பட்டது, உணரப்படுகிறது. அதனால், இந்த ‘நேச்சுரல் ஸ்டார்' நானிக்காக மட்டும் அக்கினேனி நாகேஸ்வர ராவ் சொன்னதிலிருந்து கொஞ்சம் முரண்படலாம், தப்பில்லை!