கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

பாலிவுட்டின் சவால் நாயகி!

பூமி பெட்னேகர்
பிரீமியம் ஸ்டோரி
News
பூமி பெட்னேகர்

2017-ல் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்தும் நம் ‘ஜோக்கர்’ படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளை நினைவுபடுத்தும் வகையிலும் வெளிவந்தது ‘டாய்லெட்: ஏக் பிரேம் கதா.’

“என் முதல் படத்துக்குப் பிறகு என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், அது வழக்கத்திற்கு மாறான ஒரு கதாபாத்திரம்!”

பாலிவுட்டின் சவால் நாயகி!

அந்த நடிகைக்கு அதுதான் முதல் படம். உடல் பருமனான ஒரு பெண்ணின் பாத்திரம். கணவனே வெறுக்கும் மனைவியின் கதை அது. அப்படிப்பட்ட பாதிப்பில் இருப்பவரின் எண்ண ஓட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். ஆனால், கழிவிரக்கம் தேடக்கூடாது. சவாலானதுதான். இருந்தாலும், அதை ஏற்றிருப்பவரும் ஒன்றும் சாதாரணமானவர் அல்லர்! வெளிநாட்டில் இருக்கும் ஒரு பிரபல நடிப்புக் கல்லூரிக்குச் சென்று வந்தவர். 15 வயதிலேயே நடிப்புதான் தனக்கு எல்லாமே என்று முடிவு செய்தவர். ஒரு கதாபாத்திரத்தைப் புரிந்து நடிப்பது எப்படி என்பதை அவருக்கு யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. அதுவும் நாயகனாக, அவரின் கணவனாக நடிப்பது அப்போது முன்னணி நட்சத்திரமாக உருமாறிக் கொண்டிருந்த ஆயுஷ்மான் குரானா. மறுமுனையில் இருப்பவர் கடும் போட்டியாளர் எனும்போது நம்மிடமும் ஒருவித உத்வேகம் எட்டிப்பார்க்குமே... இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் போல, சென்னை - மும்பை ஐபிஎல் போட்டிபோல... நானும் நீயுமா என இந்த இரண்டு கலைஞர்களும் மோதிக்கொண்ட அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. சூப்பர் ஓவர் வரை சென்ற போட்டியின் க்ளைமாக்ஸில் அந்த நடிகை ஆயுஷ்மானையே ஓவர்டேக் செய்தார். படம் பார்த்த பலரும் அன்று ஆயுஷ்மானுக்குப் பூங்கொத்துகள் நீட்டியிருக்கலாம். ஆனால், வரலாற்றில் சந்தியா என்ற அந்தப் பெண் கதாபாத்திரத்தின் பெயர்தான் பொறிக்கப்பட்டது. சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது தேடி வந்தது. சந்தியாவாக வாழ்ந்தவர் பூமி பெட்னேகர்!

பாலிவுட்டின் சவால் நாயகி!

‘தம் லகா கே ஹைஷா’ என்ற அந்தப் படம் அந்த வருடம் இந்தியில் சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. இந்த முதல் பட வாய்ப்பு, பூமிக்கு ஒருவித சிக்கலுடன்தான் கிடைத்தது. உடல் எடையைக் கூட்ட வேண்டும். ஷூட்டிங்கிற்கு முன், 30 கிலோவரை உடல் எடையை ஏற்றியதாக அவரே சொன்னார். 90 கிலோவரை அவரின் எடை இருந்தது. படத்தின் பாத்திரத்துக்காக இதைச் செய்தார் என்பதைவிட, பாலிவுட்டையே தன் பக்கம் திருப்ப இதைச் செய்தார் எனலாம். ஆனால், இந்த மெனக்கெடல் படம் முடிந்ததும் நின்றுவிடவில்லை. நான்கே மாதங்களில் 21 கிலோ வரை மீண்டும் எடையைக் குறைத்துக் காட்டினார். ஸ்வெட்டரைக் கழற்றி ஹேங்கரில் மாட்டுவதுபோல, மிகக் குறைந்த அவகாசத்தில் ஸ்லிம் பூமியாக வந்து நின்றார். மீண்டும் பாலிவுட் திரும்பிப் பார்த்தது. 2015-ல் #LoseItLikeBhumi என்று இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக உலகுக்கே தன் எடைக்குறைப்பு ரகசியத்தைக் கூறி பலருக்கும் தன்னம்பிக்கை ஊட்டினார். உண்மையில் அவர் சொன்னதுபோல அந்த முதல் படத்துக்குப் பிறகு அவரின் சினிமா வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. சில படங்கள் நடித்து மார்க்கெட்டை ஓரளவுக்குப் பிடித்தவர்கள் கூடச் செய்யத் தயங்கும் விஷப் பரீட்சை அது!

பாலிவுட்டின் சவால் நாயகி!

2017-ல் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்தும் நம் ‘ஜோக்கர்’ படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளை நினைவுபடுத்தும் வகையிலும் வெளிவந்தது ‘டாய்லெட்: ஏக் பிரேம் கதா.’ நிஜ வாழ்வில், கணவன் வீட்டில் டாய்லெட் இல்லையென விவாகரத்து கோரி, நீதிமன்றத்தின் படியைச் சில பெண்கள் துணிந்து ஏறியிருந்தார்கள். அவற்றை மையமாக வைத்து உருவான படத்தில் அக்‌ஷய்குமாரின் ஜோடியாக நடித்தார் பூமி. துணிச்சலான, முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட படித்த பெண்ணாகக் கலக்கியிருந்தார். சீனியர் ஹீரோ, மனைவி வேடம், அதைப் பூமி தயங்காமல் தன் இரண்டாவது படமாகச் செய்தார். அதே வருடம், மீண்டும் ஆயுஷ்மானுடன் இணைந்து ‘ஷுப் மங்கள் சாவ்தான்’ எனக் கல்யாண விருந்து வைத்தார். ஆம், தமிழில் வெளியான ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தின் ரீமேக்.

திரைப்படங்கள் பெரும்பாலும் ஒதுக்கித் தள்ளிய, பெண்களின் பாலியல் உணர்வுகளைப் பேசிய நெட்ஃப்ளிக்ஸின் ஆந்தாலஜி சினிமாவான ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ல் இயக்குநர் ஜோயா அக்தர் எடுத்த பார்ட்டில் நடித்தார் பூமி. ஒடுக்கப்பட்ட பெண்கள் எப்படி முன்னேறிய ஆண் வர்க்கத்தினருக்கு இரையாகின்றனர் என்பதைப் பேசியது இந்தப் படம்.

‘சோன்சிரியா’ - சம்பல் பள்ளத்தாக்கின் கூட்டுக்கொள்ளைக்காரர்கள் சந்தித்த சாதிய அரசியலைப் பதிவு செய்த இந்தப் படம், சமகால இந்தியத் திரையுலகின் முக்கியமானதொரு படைப்பு. இதில் கதைக்கு உயிரூட்டும் பாத்திரம் ஒன்றில் பூமி நடித்திருந்தார். பூமி பெட்னேகரின் மொத்தப் படங்களின் வரிசையும் இப்படியானதுதான். அவர் ஒரு சாதாரண பாலிவுட் நடிகை செய்யும் விஷயங்களைச் செய்ய வரவில்லை என்பதை ஒவ்வொரு படத்திலும் மீண்டும் மீண்டும் நிரூபித்தார், நிரூபித்துவருகிறார்.

இதற்கெல்லாம் உச்சமாக, ‘சாண்ட் கி ஆங்க்’ என்ற பயோகிராபி படத்தில் டாப்ஸியுடன் நடித்தார். படத்தில் இருவருக்கும் 80 வயதான பாட்டிகளின் கதாபாத்திரம். துப்பாக்கி சுடுவதில் வல்லவர்களான ஷூட்டர் தாதி (பாட்டி) சந்த்ரோ தோமராக பூமி நடிக்க, ரிவால்வர் தாதி பிரகாஷி தோமராக டாப்ஸி நடித்திருப்பார். இருவரின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்றன.

மறுபக்கம் வேறொரு கிராபில் ஃபுல் ஸ்பீடில் சென்றுகொண்டிருந்த ஆயுஷ்மான் குரானா, ‘பாலா’ படத்துடன் வந்து நின்றார். வழுக்கைத் தலை நாயகன் படும் அவஸ்தைகளைப் பதிவு செய்த படத்தில் சற்றே கறுப்பான, அதே சமயம் தன்னம்பிக்கையான பெண்ணாக வந்தார் பூமி பெட்னேகர். ஆயுஷ்மானும் இவரும் தோன்றும் காட்சிகள் அப்ளாஸ்களை அள்ளின. ஆனால், இந்தப் பாத்திரத்தைப் பூமி போன்றதொரு நடிகை ஏற்று நடித்தது சர்ச்சையைக் கிளப்பியது. நிஜமாகவே அப்படியான ஒரு கறுப்பான பெண்ணை நடிக்கவைக்காமல் மாநிறமாக இருக்கும் பூமியை வாலன்டியராக மேக்கப் போட்டு டிக் செய்தது ஏன் என்று பஞ்சாயத்து கிளம்பியது.

பாலிவுட்டின் சவால் நாயகி!

ஆனால், எல்லாவற்றுக்கும் பூமியிடம் பதில் இருந்தது. “கேளுங்கள்... `பாலா’ படம் வழுக்கைத் தலை மனிதனைப் பற்றிய கதையோ, ஒரு கறுப்பான பெண்ணைப் பற்றிய கதையோ அல்ல. எல்லோருக்கும் இப்படியானதொரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். உயரம், குள்ளம்; முடி இருக்கிறது, இல்லை; உடல் பருமன், ஒல்லி; கறுப்பு, வெள்ளை... இங்கு எதுவுமே நிறைவானதல்ல. நமக்கு இருப்பதைக் குறைகளாக நினைக்காமல் நம் வாழ்வைக் கொண்டாட வேண்டும் என்று சொன்ன படம் அது. ஏனென்றால் இவை அனைத்துமே நம் சமுதாயம் நம் மேல் திணிக்கும் கருத்துகள்தானே?” என்று பேசினார் அவர்.

‘சாண்ட் கி ஆங்க்’ பாத்திரம் குறித்துப் பேசுகையில், “வயதான தோற்றமோ, இல்லை நிறத்தைக் குறைப்பதோ, நான் ஒரு நடிகை. எனக்குக் கொடுக்கப்படும் பாத்திரத்தைச் சிரத்தையுடன் நான் செய்கிறேன். இந்த விமர்சனங்களின் லாஜிக்படி பார்த்தால், என் முதல் படமான ‘தம் லகா கே ஹைஷா’ படத்தையே நான் செய்திருக்கக்கூடாது. எதற்காக நான் என் உடலை வருத்திக்கொண்டு நடிக்கவேண்டும்? என் நடிப்பில் குறைகளைச் சொல்லுங்கள். ஆனால், என் படத் தேர்வுகளில் உங்கள் கருத்துகளைத் திணிக்காதீர்கள். ஏனென்றால், இப்படியான சவாலான படங்களை நான் இனிமேலும் தொடர்ந்து செய்துகொண்டு தான் இருப்பேன்” என்றார்.

இடையில் கமர்ஷியல் காமெடி படமொன்றைச் செய்திருந்தாலும் பூமி பெட்னேகர் தொடர்ந்து தேடுவது சவால்களைத்தான். பாலிவுட்டில் ஒரு நடிகைக்கு இதுதான் இலக்கணம் என்று எழுதப்பட்டதைத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறார் அவர். இதுவரை 12 படங்கள்தான் நடித்திருக்கிறார். ஆனால், இவர் ஒரு படத்தில் இருக்கிறார் என்றாலே அதில் ஏதோ ஒன்று ஆச்சர்யப்படுத்தும் வகையில் இருக்கும் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டார். அந்த வகையில் இந்தப் பூமி, பாலிவுட்டின் கலகக்காரி!