
2002-ல் இருந்து 2007 வரை எல்லாமே ஃபிளாப்கள். மனோஜ் சிறப்பாக நடிக்கவில்லையா என்றால், அப்படியெல்லாம் இல்லை.
“திறமையே இல்லாதவர்கள் பாலிவுட்டில் வெற்றியடைவதைப் பார்த்து எரிச்சலுற்றிருக்கிறீர்களா?”
“25 ஆண்டுகளாக இங்கு இருந்திருக்கிறேன். எவ்வளவுதான் ஒருவனை எரிச்சல்படுத்த முடியும்? முன்பெல்லாம் தலையில் அடித்துக் கொள்வேன். என் சகோதரியிடம் அவ்வளவு புலம்பியிருக்கிறேன். இப்போது பழகிவிட்டது.”
யதார்த்தங்களை அதன்வழி போகிற போக்கில் தலையில் தட்டிக் கடந்து செல்பவர் மனோஜ் பாஜ்பாய். நெப்போட்டிசம் குறித்தான கேள்விக்கும், மனோஜிடம் இப்படியானதொரு பதில்தான் வந்தது. நெப்போட்டிசக் குழந்தைகள் யாருக்கும் தான் போட்டியல்ல என்றார். இந்தியாவின் ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகர். ஓ.டி.டி-க்களின் வருகைக்குப் பின்னர் நிரந்தர ஹீரோ. இந்தக்காலத்து நடிகர்களில் தீவிரவாதி, போலீஸ் என இருவேறு முகங்களைப் பலமுறை அணிந்தவர் மனோஜ் பாஜ்பாய்தான்.
ஒருங்கிணைந்த பீகாரில் இந்தியா முழுக்கப் புகழ்பெற்ற நபர்களில் லல்லு, தோனி வரிசையில் கட்டாயம் இருக்கும் மற்றுமொரு பெயர் மனோஜ் பாஜ்பாய். குடும்பத்தில் ஆறு குழந்தைகள். மனோஜுக்கு மட்டும் பாலிவுட் நடிகர் மனோஜ் குமாரின் பெயர் சூட்டப்படுகிறது. வறுமை சூழ்ந்த வீட்டில் எல்லாம் மாற எளிய வாய்ப்பு சினிமாதான் என முடிவெடுக்கிறார். ஆனால், ‘நம் முகத்துக்கு பாலிவுட் செட்டாகாது’ என மேடை நாடகங்கள் பக்கம் நகர்கிறார். போஜ்புரி கலந்து பேசும் மனோஜுக்கு இந்தியாவது கொஞ்சம் கொஞ்சம் வரும். ஆங்கிலம் `சுத்தம்.’ எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார். நஸ்ருதீன் ஷாவின் பேட்டிகளின் மூலம் டெல்லியில் இருக்கும் தேசிய நாடகப் பள்ளி பற்றி அறிந்துகொள்கிறார் மனோஜ். ஆனால், அந்தக் கதவுகள் அவருக்குத் திறக்கவேயில்லை. மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக முயல்கிறார். மூன்று முறையும் Unfit எனத் திருப்பி அனுப்பப்படுகிறார். தற்கொலை வரை சென்ற மனோஜுக்கு அப்போது உதவிகரமாக இருந்தது நண்பர்கள் தான். நான்காவது ஆண்டு அந்தக் கல்லூரியில் இடம் வேண்டி நிற்க, ‘ஆசிரியராக வேண்டுமாயின் வாருங்கள்’ என நக்கல் அடிக்கிறது டெல்லி.



கோவிந்த் நிஹாலனியின் `த்ரோகா’லில் சிறு வாய்ப்புக்குப் பிறகு, அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். 60 நபர்களின் புகைப்படங்களைப் பார்த்த இயக்குநர் ஷேகர் கபூர், இறுதியாக மனோஜை ‘பண்டிட் குயின்’ படத்துக்குத் தேர்வு செய்கிறார். மேடை நாடகக் கலைஞர் கனவில் மிதந்துகொண்டிருந்த மனோஜை, ‘ உன்னுடைய இடம் மும்பை. காலத்தைக் கடத்தாமல் வந்து சேர்’ எனக் கட்டளையிடுகிறார் ஷேகர் கபூர். கனவுகள் மீண்டும் உதிக்கின்றன. காமெடிப் படமொன்றில் மனோஜை புக் செய்யும் ராம் கோபால் வர்மா, அவரை வீணடித்துவிட்டதாக வருந்தி, ‘சத்யா’ வாய்ப்பை வழங்குகிறார். மும்பை வீதிகளில் தாதா பிகு மத்ரேவாக வலம் வந்தார் மனோஜ். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் மனோஜுக்கு இப்படித்தான் வந்தது. மீண்டும் வர்மாவுடன் `கௌன்’, `ஷூல்.’ கௌனில் மூன்றே கதாபாத்திரங்கள்தான். ஊர்மிளா, மனோஜ், சுஷாந்த் சிங். கொலையாளி என்கிற சஸ்பென்ஸை இறுதிவரை கொண்டுசெல்ல வைத்திருக்கும் அனுராக்கின் எழுத்து. நேர்மையான காவல்துறை அதிகாரியாக ஷூலில் நடித்திருப்பார். 99-ல் மனோஜ் நடித்த கௌன், ஷூல் இரண்டுமே இன்றுவரையிலும் நடிப்புக்காகவும், மேக்கிங்கிற்காகவும் பாராட்டு பெறுபவை. அடுத்தடுத்து நிறைய சறுக்கல்கள். ஆனால், ‘கரையை அடைவது மட்டும் வெற்றியல்ல, நீந்திக்கொண்டே இருப்பதும் வெற்றிதான்’ என்பதை உணர்ந்திருந்தார் அவர்.



2002-ல் இருந்து 2007 வரை எல்லாமே ஃபிளாப்கள். மனோஜ் சிறப்பாக நடிக்கவில்லையா என்றால், அப்படியெல்லாம் இல்லை. சினிமா என்பது ஒருவரின் நடிப்பு சார்ந்தது மட்டுமல்லவே. எல்லாம் கூடிவர வேண்டும். சோதனைகளின் உச்சக்கட்டமாக தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுவிடுகிறது. தெலுங்கு ‘வேதம்’ படத்துக்காக ஐந்து நாள்கள் தொடர்ந்து இரவு வேளையில் ஷூட்டிங் நடைபெறுகிறது. தூக்கக் கலக்கத்தில் இருந்த மனோஜ் சரியான இடத்தில் விழாமல் போக, தோள்பட்டை உடைந்துவிடுகிறது. இரண்டு ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகுகிறார்.
life begins at forty என்பார்களே. மனோஜ் பாஜ்பாய்க்கு, செகண்டு இன்னிங்ஸ் நாற்பதில் ஆரம்பித்தது. கிரிக்கெட்டில் கம்பேக் என்பது போல, மனோஜ் பாஜ்பாய் மீண்டும் நடிகனாக உயிர்த்தெழுந்தது அப்போதுதான். துரியோதனன் கதாபாத்திரத்தை முன்வைத்து வீரேந்திர பிரதாப் சிங்காக ‘ராஜ்நீதி’யில் மாறியிருந்தார் மனோஜ். அவர் வாழ்நாளிலேயே மிகவும் எதிர்மறையான கதாபாத்திரம் என்றால், அது ‘கேங்க்ஸ் ஆஃப் வசேப’ரில் வரும் சர்தார் கான்தான். ஐந்து மணி நேரப் படத்தை இரு பாகங்களாக வெளியிட்டிருந்தார்கள். ‘சத்யாவுக்குப் பிறகு அசத்தலான நடிப்பு’ எனப் புகழ்ந்து தள்ளியது இந்தியா. மனோஜ், நவாஸுதீன் கூட்டணிதான் மீண்டும். பிரிட்டிஷ் இந்தியாவின் சிட்டகாங்க் எழுச்சி பற்றிப் பேசியது ‘சிட்டகாங்க்.’ இதே கதையம்சத்துடன் அபிஷேக் பச்சனின் படமும் வெளியாக, இந்தப் படத்தின் வெளியீட்டைத் தாமதப்படுத்தினார்கள். ஆனாலும், வென்றது என்னவோ மனோஜின் திரைப்படம்தான். அதே ஆண்டில் மீண்டும், பிரகாஷ் ஜாவின் ‘சக்ரவியூ’கில், நக்ஸலைட்டாகக் களம் கண்டார். நக்ஸலைட்டுகள் பற்றிய படங்களில் மிகவும் முக்கியமானது சக்ரவியூக். இந்தி, தெலுங்கு என நடித்துக்கொண்டிருந்தவர் ‘சமர்’ மூலம் தமிழிலும் என்ட்ரி ஆனார். சிரித்துக்கொண்டே கழுத்தறுக்கும் காமெடி வில்லன். ‘ஸ்பெஷல் 26’ (தானா சேர்ந்த கூட்டத்தின் ஒரிஜினல்) படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட். அடுத்த ஆண்டு மீண்டும் தமிழில் ‘அஞ்சான்.’ சமரும், அஞ்சானும் தந்த சூடுகளினால், மனோஜ் மீண்டும் தமிழ்ப்பக்கம் வரவேயில்லை. திலகன், கிரீஷ் கர்னார்டு, அதுல் குல்கர்னி வரிசையில் தமிழகத்தில் நிகழ மறுத்த மற்றுமொரு அற்புதம் மனோஜ் பாஜ்பாய்.



2016-ல் அவர் நடித்ததில் மிக முக்கியமானதொரு படம் புதியா சிங்-பார்ன் டூ ரன். அந்தச் சிறுவனை எப்படியாவது ஓட வைக்கத் துடிக்கும் வெறித்தன கோச்சாகக் கலக்கியிருப்பார். ஹன்சல் மேஹ்தாவின் அல்காரில் தன்பால் ஈர்ப்புத்தன்மை கொண்ட பேராசிரியர் ராம்சந்திர சிராஸாக மற்றுமொரு அசத்தலான வேடம்.
நஸ்ருதீன் ஷா, ஓம் பூரி என அமிதாப் காலத்து உன்னத நடிகர்கள் எல்லாம் , கமர்ஷியல் ரேசில் தாக்குப்பிடிக்க பிடிக்காமல், ஒதுங்கிக்கொள்ள, மனோஜோ இரண்டிலும் சவாரி செய்ய முயன்றார். இரண்டையும் ரசித்தே செய்தார் மனோஜ். கமர்ஷியல் படங்களில் தன்னை நிலைநிறுத்தினால் மட்டுமே, இந்த உலகில் நீடிக்க முடியும் என்கிற யதார்த்தம் அவருக்குப் புரிந்திருந்தது. அதனால்தான் அவரால் சத்யமேவ ஜயதேவிலும், கலி குலியானிலும் ஒரே நேரத்தில் நடிக்க முடிந்தது. நவாஸுதீன், ராஜ்குமார் என அடுத்தகட்ட நடிகர்கள் தற்போது மனோஜின் பாதையையே பின்பற்றுகிறார்கள்.
இரண்டு விதமானப் படங்களிலும் சம ஈடுபாட்டுடன் நடிப்பதால்தான் மனோஜால் இந்தக் கனவுத் தொழிற்சாலைக்குள் நீடித்து நிற்க முடிகிறது. ‘‘15 நிமிடப் பேட்டியில் என்னால் எல்லாவற்றையும் சொல்ல முடியாது. நான் நிச்சயம் சுயசரிதையை எழுதுவேன்; அதில் சொல்கிறேன். என் வாழ்க்கை என்றுமே ரோஜா மெத்தைகளாக இருந்ததில்லை’’ என்பார் மனோஜ். ஆம், சாம் ஏரியில் வசிக்கும் கொள்ளைகார பாஹிக்களின் தலைவன் மன் சிங்காக சோன்சிரியாவில் அவர் நடித்தது அத்தனை எளிதில் யாராலும் மறக்க முடியாத ஒரு பாத்திரம். குற்றங்களைச் சுமந்து கனத்துத் திரியும் மனம். சில நிமிடங்களே மனோஜ் அந்தப் படத்தில் வந்திருந்தாலும், அவரின் வெறுமையைப் படம் முழுக்க உணர முடியும்.

‘‘என்னால் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுவிட முடிகிறது. ஆனால், விநியோகஸ்தர்களை நம்ப வைக்க முடியவில்லை. ஒரு கமர்ஷியல் படம் வெளியே வந்தால்தான், அதை வைத்து இரண்டு நல்ல படங்களை வெளியிட முடிகிறது’’ என்பார் அவர். 2015-ல் முடித்த `போன்ஸ்லே’வை யாரும் வாங்க முன்வராததால், 2020-ல்தான் வெளியிட முடிந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆண்டுக்கான தேசிய விருது மனோஜுக்கு வந்தது. ஓ.டி.டி வருகைக்குப் பின்னர் மனோஜ் பாஜ்பாய் ஏற்பதெல்லாம், “ஜாலியான வேடங்கள். அவர் பலமுறை போட்டுக் கழற்றிய அதே காக்கிச்சட்டையின் வெவ்வேறு ஆடைகளை இதில் அணிந்துகொண்டிருக்கிறார். ஆனால், அவற்றிலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறுவதில்லை. ஃபேமிலி மேனின் இரண்டாம் பாகத்தில், ‘இந்த வேலை வேண்டாம்’ என உதறித்தள்ள எத்தனிக்கும்போது மனோஜ் காட்டும் முகபாவனை அதற்கு ஒரு சான்று. நவரசங்களின் குவியல் அவர்!
தற்போதும் மாதமொருமுறை ஏதோவொரு படத்தில் ஹீரோவாக நடித்துவிடுகிறார். மனோஜ் பாஜ்பாய் தினம் தினம் துளிர்விடும் ஆலமரம். என்றும் வளர்ந்து கொண்டேயிருப்பார்.