Published:Updated:

எதிர் நீச்சல்காரி!

பிரியங்கா சோப்ரா
பிரீமியம் ஸ்டோரி
பிரியங்கா சோப்ரா

இந்தியாவில் உடல்ரீதியான கேலிகளை அதிகம் எதிர்கொண்ட நடிகை என்றால் அது சந்தேகமே இல்லாமல் பிரியங்கா சோப்ரா தான்

எதிர் நீச்சல்காரி!

இந்தியாவில் உடல்ரீதியான கேலிகளை அதிகம் எதிர்கொண்ட நடிகை என்றால் அது சந்தேகமே இல்லாமல் பிரியங்கா சோப்ரா தான்

Published:Updated:
பிரியங்கா சோப்ரா
பிரீமியம் ஸ்டோரி
பிரியங்கா சோப்ரா

தன் ஆரம்பக்கால சினிமாவில் ஒரு விரசமான பாடலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார் பிரியங்கா சோப்ரா. அந்தப் பெரிய பட்ஜெட் படத்தில், நான்கு நிமிடங்களுக்கு நீளும் பாடலில், தான் அணிந்திருக்கும் ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றவேண்டும். “இன்னும் சில ஆடைகளை இதன்மேல் அணிந்துகொள்ளவா, அல்லது, ஹேர் ரிப்பன் போன்ற சில பொருள்களைக் கழற்றவா? பாடல் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே நான் எல்லாவற்றையும் கழற்றும் சூழலில் ஆடை வடிவமைக்கப் பட்டிருக்கிறது” என இயக்குநரிடம் புகார் அளிக்கிறார் புதுமுகமான பிரியங்கா. “எதுவா இருந்தாலும், உள்ளாடை எல்லாம் தெரியணும். இல்லாட்டி எதுக்கு ஆடியன்ஸ் படம் பார்க்க வரப்போறான்?” என்பதுதான் அந்த இயக்குநரின் பதில். இரண்டு தினங்கள் ஷூட்டிங் முடிந்த நிலையில், பிரியங்கா அந்தப் படத்திலிருந்து விலகுகிறார். தனக்குக் கொடுக்கப்பட்ட சம்பளத்தைவிட நஷ்ட ஈடாக அதிகத் தொகையை பிரியங்கா கொடுக்க வேண்டியிருந்தது. காலங்காலமாக ஆணாதிக்கம் நிறைந்த சினிமாத்துறையின் எழுதப்படாத விதி அதுதான். அந்தப் பாடல் கவர்ச்சியாகத்தான் எடுக்கப்படும் என்பதையும் அறிந்தே இருந்தார். ஆனால், அந்த இயக்குநரின் தொனிதான் பிரியங்காவை நிலைகுலையச் செய்தது. ஒரு கவர்ச்சிப் பிண்டமாகத்தான் தன்னை அந்த இயக்குநர் கருதியிருக்கிறார் என்பதைப் பிரியங்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எதிர் நீச்சல்காரி!

இந்தியாவில் உடல்ரீதியான கேலிகளை அதிகம் எதிர்கொண்ட நடிகை என்றால் அது சந்தேகமே இல்லாமல் பிரியங்கா சோப்ரா தான். இந்தியாவிலிருந்து ஒரு நடிகை ஹாலிவுட் திரைப் படங்கள், தொடர்கள் என நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டும் அதிக சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறார். ஆஸ்துமாவுக்கான சிகிச்சை என மருத்துவமனைக்குச் செல்ல, ஒரு சிறு ஆபரேசனில் சரியாகிவிடும் என ஆரம்பித்த நிகழ்வு, மூக்கின் பாலம் உடைந்துபோய் பிளாஸ்டிக் சோப்ரா என நக்கல் அடிக்கப்படும் சூழலை உருவாக்கியது. மிஸ் இந்தியா, மிஸ் வேர்ல்டு எனப் புகழின் உச்சிக்குச் சென்றவரை, மீடியாக்கள் வரவேற்றது இப்படித்தான். பாலிவுட் கரியரை ஆரம்பிப்பதற்கு முன்பே அதை முடித்து வைத்தது பிரியங்காவின் மூக்கு. மிஸ் வேர்ல்டு என்னும் பிம்பத்துடன் கூடுதல் விளம்பரத்துக்கு உதவுவார் என நம்பிக்கை வைத்து பிரியங்காவை புக் செய்த பாலிவுட் அவரைத் தூக்கியெறிந்தது. பாலிவுட் வேண்டாம் என ஒதுக்க, முதல் படமே விஜய்யுடன் நடித்த ‘தமிழன்’தான். அண்டாஸில் முதல் நாயகியாகத் தேர்வான பிரியங்கா, இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு அவருக்குப் பதில் லாரா தத்தா நாயகியாக அறிமுகமானார். அண்டாஸ் படத்துக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான பிலிம்பேர் வாங்கினாலும், ஒட்டுமொத்த பாலிவுட்டையும் திரும்பிப் பார்க்க வைத்த படம் ஐத்ராஸ்தான். அதற்கு இடையே அவர் நடித்த படங்கள் எல்லாம் கிளாமர் நாயகி என்பதைத் தவிர வேறில்லை. பதவி, புகழ் உச்சிக்குச் செல்ல எதையும் செய்யும் ஒரு பெண், தன் முன்னாள் காதலனைப் பழிவாங்கப் பாலியல் புகார் அளித்துக் கொடுமை செய்யும் எதிர்மறைக் கதாபாத்திரம். மீண்டும் பிலிம்பேர். அனைத்து விமர்சனங்களிலும் பிரியங்காவுக்குத் தனிப்பத்தி ஒதுக்கப்பட்டது. பிரியங்கா ஒரு நடிகையாக உருமாறியது இதன் பின்னர்தான்.

எதிர் நீச்சல்காரி!

நாயகன் சம்பளத்தில் 10% தான் நாயகிக்கு. மறுக்கும் நாயகிகள் மாற்றப்படுவார்கள். நாயகி என்பவர் பாடல்களில் வந்து கவர்ச்சி காட்டத் தேவைப்படும் ஒரு நபர். இந்தக் குட்டையில்தான் எதிர்நீச்சல் போட வேண்டும். கரியர் ஆரம்பித்த மூன்று ஆண்டுகளில் 17 படங்களை நடித்து முடித்திருந்தார். அந்தப் படங்களுக்கு என்ன வேண்டுமோ, அதைச் செய்து வந்தார். பாலிவுட்டில் பெண்மைய சினிமாக்களை ஆரம்பித்து வைத்தது பிரியங்கா, கங்கனா நடித்த ‘ஃபேஷன்’தான். இந்திய ஃபேஷன் துறை பற்றிய படமான ஃபேஷனில் அனைத்து ஸ்டீரியோடைப்புகளையும் உடைத்திருந்தார் பிரியங்கா. ஆறு கிலோ வரை எடையை உயர்த்தி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையைக் குறைத்திருப்பார். தேசிய விருது, பிலிம்பேர் என அந்த ஆண்டு எல்லா விருதுகளிலும் பிரியங்காவின் பெயர்தான்.

எதிர் நீச்சல்காரி!

ஒரு கட்டத்தில் வினோதக்கதைகள் எல்லாம் பிரியங்காவுக்கு வந்தன. `What’s Your Raashee?’ படத்தில் 12 ராசிகளுக்கு 12 பெண்களாக நடிக்க வேண்டும். அந்தப் படத்தில் 12 கெட்டப்பில் வந்திருப்பார். கின்னஸ் சாதனைக்கெல்லாம் தேர்வாகி அதிர்ச்சி அளித்தார். விஷால் பரத்வாஜின் `7 Khoon Maaf’படத்தில் உண்மைக் காதலைக் கண்டறிய முடியாமல் ஏழு கணவர்களைக் கொல்லும் வேடம். ஆட்டிச நபராக ‘பர்ஃபி’ படத்துக்குப் பின்னர், வித்தியாசமான ரூட் பிடித்தார் பிரியங்கா. இந்தியாவில் நடித்துக்கொண்டே லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் நியூ யார்க்குக்கும் பறந்து கொண்டிருந்தார். In My City, Exotic என அடுத்தடுத்து ஆல்பங்களை வெளியிட்டார். ஆங்கிலப் பாடல்களில் இந்தி வரிகளை அவரே எழுதி இணைத்தது இன்னும் கூடுதல் கவனத்தைப் பெற்றது. இந்திப்பட நாயகி ஒருவரால் சுயமாகப் பாட முடியுமா... முடியும் என்றார் பிரியங்கா.

60 நாடுகளில், இந்தியப் பெண்ணான பிரியங்கா தொடர் ஹிட். ஆனால், அவரின் சொந்த மண்ணில் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் ஏளனம் செய்யப்பட்டார். மூக்கில் ஆரம்பித்த பிரச்னை, அக்குளில் போட்டோஷாப் செய்திருக்கிறார் வரை நீண்டது. இன்ஸ்டாகிராமில் இதுதான் நிஜம் என க்ளோஸப் ஷாட் எடுத்து தன் ஆக்குள் படத்தை வெளியிட்டிருந்தார். ஒரு கட்டத்தில் பிரியங்கா செய்யும் எல்லா விஷயங்களுமே சர்ச்சையில் முடிந்தன. ‘பேவாட்ச்’ திரைப்படத்தின் புரொமோஷனுக்காக பெர்லின் வருகிறார் பிரியங்கா. அதே உணவகத்தில் பிரதமர் மோடியும் இருக்க, அவரைச் சந்திக்கிறார். முழங்கால் தெரிய கால் மேல் கால் போட்டு பிரியங்கா அமர்ந்து போஸ் தர, இந்தியா முழுக்க பா.ஜ.க-வினர் ‘மரியாதைக் குறைவு’ எனப் போர்க்கொடி தூக்கினர். அன்று இரவே, முழங்கால், தொடை எல்லாம் தெரியும் அளவு ஸ்கர்ட் அணிந்து, தன் அம்மாவுடன் #itsthegenes (பிறவியிலேயே இருக்கிறது) என இருவரும் கால் மேல் கால் போட்டு போஸ் கொடுத்தனர். அந்த கெத்தும் தன்னம்பிக்கையும்தான் பிரியங்கா.

எதிர் நீச்சல்காரி!

பிரியங்கா சோப்ரா ஒரு மிகச்சிறந்த நடிகையா என்றால் அதில் கட்டாயம் விவாதங்கள், விமர்சனங்கள் எழலாம். ஆனால், எப்போதெல்லாம் தேவை இருக்கிறதோ, அதற்கான உழைப்பை அவர் தர மறுத்ததேயில்லை. பாஜிராவ் மஸ்தானிக்காகவும், காமினிக்காகவும் மராத்தி மொழி கற்றுக்கொண்டவர், குவான்ட்டிக்கோவுக்காக இத்தாலியன் கற்றுக்கொண்டார். மேரி கோமுக்கு பாக்ஸிங், டானுக்கு தை சி, ஹி லெஜெண்டு ஆஃப் துரோனாவுக்கு சீக்கிய தற்காப்புக்கலையான கத்கா என ஒரு நிலையை எட்டிய பின்னும் இன்னும் தன்னைத் தகவமைத்துக்கொண்டே இருக்கிறார். அமெரிக்காவின் பீப்பிள் சாய்ஸ் விருதை வென்ற முதல் தெற்காசியப் பெண்மணி என உலகம் முழுக்க பிரியங்கா விருதுகளைக் குவிப்பதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு அசாத்தியமானது. பர்ப்பிள் பெப்பில் பிக்சர்ஸ் என்னும் நிறுவனம் மூலம் பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். அமேசான், நெட்ஃபிளிக்ஸ் என ஓ.டி.டி-யிலும் தன் நிறுவனத்தை அகலப்படுத்தி வருகிறார்.

எதிர் நீச்சல்காரி!
எதிர் நீச்சல்காரி!

சமீபத்தில் வெளியான தன் unfinished புத்தகத்தில், “நான் எல்லோரையும் போலத்தான். சமயங்களில் உடல் எடையை அதிகரிப்பேன், சமயங்களில் குறைப்பேன். ஆனால், நான் நிறைவான வாழ்க்கையை வாழ்கிறேன். இதுதான் என் முகம். இதுதான் என் உடல். நான் குறையோடு இருக்கலாம். ஆனால் அதுதான் நான்” என எழுதியிருப்பார். இந்தத் தன்னம்பிக்கைதான் பிரியங்கா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism