Published:Updated:

"ஆக்‌ஷன் சீக்வென்ஸ் எப்படினு என்கிட்ட கேட்டாங்க ஜோ; இப்போ, நான் அவங்ககிட்ட கேட்குறேன்!" - சூர்யா

சூர்யா - ஜோதிகா
சூர்யா - ஜோதிகா

'ஜாக்பாட்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யங்கள்...

'குலேபகாவலி' படத்திற்குப் பிறகு, இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ள படம், 'ஜாக்பாட்'. ஜோதிகா, ரேவதி ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். தவிர, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக நடிகர் சூர்யா தயாரித்திருக்கிறார். ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

'ஜாக்பாட்' பட இசை வெளியீட்டு விழா
'ஜாக்பாட்' பட இசை வெளியீட்டு விழா

ஸ்டன்ட் மாஸ்டர் ராக்பிரபு பேசும்போது, "இந்தப் படத்துக்காக என்னை இயக்குநர் அணுகியபோது ஒரு காமெடி படம்னு சொன்னார். இங்கே ஒரு ஆக்‌ஷன் சீன், இந்த இடத்துல ஒண்ணு வேணும்னு சொல்லி கடைசியில ஒரு ஆக்‌ஷன் படமாகவே மாறிடுச்சு. ஆக்‌ஷன் சீக்வென்ஸ்ல எத்தனை ஒன்மோர் கேட்டாலும் கூலா அதைப் பண்ணுவாங்க, ஜோதிகா. அதுக்கான ரிசல்ட் படம் பார்க்கும்போது தெரியும்" என்றார்.

ஜெகன் பேசுகையில், "இந்தப் படத்துல எனக்கு ரொம்ப முக்கியமான ரோல். படம் பார்க்கும்போது கண் சிமிட்டிட்டீங்கனா மிஸ் பண்ணிடுவீங்க. அப்படியான ரோல் கொடுத்திருக்கார் கல்யாண். 2டி தயாரிப்புல நடிக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு. நடிச்ச ரெண்டு நாளும் மறக்கமுடியாதது. 'காக்க காக்க' படத்துல தாமரை எழுதிய 'she is a Fantasy..' வரிகள் ஜோதிகாவுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். தவமிருந்து கிடைத்த வரம் சூர்யானா, அதுக்கு நிறம் சேர்த்தது ஜோதிகா" என்றார். அடுத்ததாக பேசிய தங்கதுரை, "சூர்யா சாரை நேர்ல பார்க்குறது சந்தோசமா இருக்கு. குளிக்க மட்டும்தான் வீட்டுக்கு அனுப்புவார். ஜோதிகா மேடம் கூட நடிச்சது ரொம்ப பெருமையா இருக்கு. நான் காலேஜ் படிக்கும்போது 'சுட்டும் விழிச்சுடரே' பாடலை ரிங் ட்யூனா வெச்சு சுத்திட்டு இருந்தேன்" என்றவரிடம் 'அந்தப் பாடலில் சூர்யா ஆடுவதைப் போல் ஆட வேண்டும் 'என டிடி தங்கதுரைக்கு டாஸ்க் கொடுக்க, தங்கதுரை சூர்யா போல் ஆடினார். சூர்யா, ஜோதிகா ஆகியோருக்காக அவரது ஸ்டைலில் கவிதை வாசித்தபடி விடைபெற்றார்.

Surya
Surya

மன்சூர் அலிகான் பேசும்போது, "ஜோதிகாவின் ஒவ்வொரு படமும் குடும்பத்தோடு போய்ப் பார்ப்போம். இந்தப் படத்துல ராஜராஜ சோழன் படைக்குதிரை மாதிரி இருப்பாங்க ஜோதிகா. கல்யாணுடைய சென்னை தமிழை கேட்க அவ்வளவு அழகா இருக்கும். புதிய கல்விக்கொள்கை பத்தி பேசுனதுக்காக தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சூர்யாவைப் பாராட்டணும். அண்ணன் சீமானும் அவரைப் பாராட்டினார். உலகத்துல இருக்கிற எல்லா தமிழர்களும் சூர்யாவுடைய கருத்துக்கு வலு சேர்க்கிறோம். அரசாங்கத்துடைய காதுகளுக்கு இது போகணும்" என்றார்.

"முதன்முறையா 2டி நிறுவனத்துல வொர்க் பண்றேன். ரொம்ப சந்தோசமா இருக்கு. பாட்டு எழுதி முடிச்சவுடனே ராஜசேகர் சார் கால் பண்ணி நல்லா இருக்குனு பாராட்டினார். கல்யாணும் நானும் நாளைய இயக்குநர்ல போட்டியாளர்களா இருந்தோம். இப்போ அவர் படத்துல பாட்டு எழுதி பாடுறது ரொம்பவே சந்தோசம். ஜோ மேடமுடைய பெரிய ரசிகர்கள் நானும் என் அம்மாவும். 'ஆய்த எழுத்து' படம் பார்த்துட்டுதான் சினிமாவுக்கு வரணும்னு நினைச்சேன். காலேஜ் படிக்கும்போது சூர்யா சார் மாதிரியே முடி வெட்டிக்கிட்டு தாடி வெச்சுக்கிட்டு சுத்தினேன். நடிகரா மட்டுல்லாமல் மனிதராகவும் நிறைய பேருக்கு முன்னுதாரணமா இருக்கார்.

'ஜாக்பாட்' பட இசை வெளியீட்டு விழா
'ஜாக்பாட்' பட இசை வெளியீட்டு விழா

மாணவர்களுக்கான விஷயங்களை தைரியமா பேசுறார். எல்லோருக்கும் கருத்துகள் இருக்கும். ஆனா, அதை வெளியே பேசமாட்டாங்க. ஆனா, வெளியே சொல்றதுக்கு தைரியம் இருக்கணும். அது சூர்யா சாருக்கு நிறையவே இருக்கு. அவர்கிட்ட இருந்து நாங்க கத்துக்கிறோம். கல்வி தொடர்பா அவர் பேசுறது ரொம்ப சந்தோசம். நானும் அரசு பள்ளியில படிச்சவன்தான். அதனால அந்த மாணவர்களுடைய வலியை என்னால் புரிஞ்சுக்க முடியும். அரசு பள்ளிகள்ல நல்ல ஆசிரியர்கள் இருக்கணும். மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கணுங்கிறது பெரிய கனவா இருக்கு. அந்தக் கனவு போராட்டத்துனாலதான் நனவாகும். அதுக்கான முதல் புள்ளி சூர்யா சாருடையது" என்று எமோஷனலாகப் பேசினார் அருண்ராஜா காமராஜ்.

"என்னோட ஜோதான் என்னோட ஜாக்பாட். 200 சதவிகிதம் எந்த வேலையும் குறைச்சுக்காமல் எல்லாத்தையும் சரியா செய்ற அம்மா, ஜோதிகா. இடைவெளிக்குப் பிறகு அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாமே ரொம்ப யோசிச்சுதான் முடிவெடுக்கிறாங்க. 'ராட்சசி' படத்துக்கு கிடைச்ச அந்த வரவேற்பு இந்தப் படத்துக்கும் கிடைக்கும்னு நம்புறேன். ஹீரோயின் பண்ணமுடியாத விஷயங்கள்னு பார்க்காமல் சூப்பரா பண்ணியிருக்கார். சிலம்பம் கத்துக்கிட்டது, ரோப் ஷாட் பண்ணதை எல்லாம் பார்த்துட்டு எனக்கு செம ஷாக்கா இருந்தது. நான் தினமும் வொர்க் அவுட், ஜிம்னு போறேன். எனக்கு ஓகே. ஆனா, எதையும் பண்ணாமல் இந்த விஷயங்கள் எல்லாம் அருமையா பண்ணியிருக்காங்க.

சூர்யா
சூர்யா

தினமும் குழந்தைகளுக்கு தேவையான விஷயங்களை எல்லாம் ஒரு அம்மாவா செஞ்சு முடிச்சுட்டு ரெண்டு மணி நேரம் சிலம்பம் க்ளாஸ் போவாங்க. ஆறு மாதம் பாண்டியன் மாஸ்டர்கிட்ட சிலம்பம் கத்துக்கிட்டாங்க. பசங்க எழுந்திரிக்கிறது முன்னாடி எழுந்து டயலாக் பேசிப்பார்ப்பாங்க. அதைதான் நான் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிருக்கேன். 'ஏழாம் அறிவு' பண்ணும்போது இந்த பன்ச் எப்படி, இந்த கிக் என்னனு ஆக்‌ஷன் சீக்வென்ஸ் பத்தி கேட்பாங்க. ஆனா, இப்போ நான் ஜோதிகாகிட்ட நிறைய கேட்டு தெரிஞ்சுக்கிறேன்" என்றார் சூர்யா.

ஜோதிகா பேசுகையில், "இதுவரை நான் பண்ணாத ஜானர் இது. எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். ரேவதி மேடமுடைய தீவிர ரசிகை நான். அவருக்கு நிகரான ரோல் கொடுத்து என்னை நடிக்க வெச்சதுக்கு கல்யாண் சாருக்கு நன்றி. ஹீரோக்கள் என்னெல்லாம் பண்றாங்களோ அதை எங்களை வெச்சு பண்ணியிருக்கார் கல்யாண். அவர் என்கிட்ட 'கெத்தா வாங்க; கெத்தா பேசுங்க; கெத்தா பாருங்க'னு பாசிட்டிவா பேசிக்கிட்டே இருப்பார். நான் இப்படி ஆக்‌ஷன் பண்ணுவேன்னு எனக்கே தெரியலை. அதுக்கு என்னை தயார்படுத்திய ராக்பிரபு மாஸ்டருக்கு நன்றி. 'இனி இது தேவைப்படும்'னு சொல்லி எனக்கு ஆக்‌ஷன் கிட் வாங்கி கொடுத்தார் சூர்யா.

'ஜாக்பாட்' பட இசை வெளியீட்டு விழா
'ஜாக்பாட்' பட இசை வெளியீட்டு விழா

நான் வீட்டுல இல்லாத நேரங்கள்ல குழந்தைகளை ஒரு அம்மாவாகவும் இருந்து பார்த்துகிறது சூர்யாதான். அதனாலதான் நான் இப்படி இருக்கேன். என் வாழ்க்கையில எனக்கு கிடைச்ச ஜாக்பாட் சூர்யாதான். எல்லோரும் நிறைய சூப்பர்ஸ்டார்கள்கூட நடிச்சுட்டாங்க, சூர்யா, விஜய், அஜித், விக்ரம் இவங்க எல்லார் கூடவும் நடிச்சிட்டாங்கனு பெருமையா சொல்வாங்க. ஆனா, ஹீரோயின்களைப் பத்தி யாரும் பேசமாட்டிக்கிறாங்க. ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணன், ரேவதி, சச்சு, அடுத்த படத்துல செளகார் ஜானகி, தபு, சிம்ரன், லைலா, ரம்பா... இந்த மாதிரி லெஜண்ட் ஹீரோயின்கள்கூட நடிச்சிருக்கேன்னு பெருமைப்படுறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு