Published:Updated:

``அந்த நெருப்பை அப்படியே வெச்சுக்கோங்க சூர்யா!'' - ரஜினிகாந்த்

'காப்பான்' இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யங்களின் தொகுப்பு.

'காப்பான்' இசை வெளியீட்டு விழா
'காப்பான்' இசை வெளியீட்டு விழா

'அயன்', 'மாற்றான்' படங்களைத் தொடர்ந்து சூர்யா - கே.வி.ஆனந்த் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம், 'காப்பான்'. இதில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா, சமுத்திரக்கனி எனப் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. வெளியூர்களிலிருந்து சூர்யா ரசிகர்கள் வந்திருந்தினர். விழா நடக்கும் இடத்திற்கு சில கிலோ மீட்டர்களுக்கு முன்பிருந்தே சூர்யாவுக்காகப் பல பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் பலவற்றில் புதிய கல்விக்கொள்கை பற்றி சூர்யா பேசியது குறித்துப் பதிவிடப்பட்டிருந்தது.

கார்த்தி - ஆர்யா - சாயீஷா
கார்த்தி - ஆர்யா - சாயீஷா

இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். ரசிகர்களின் ஆரவாரத்தோடு தொடங்கிய இவ்விழாவை ஜெகன் - நட்சத்திரா ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவின் தொடக்கமாக பல குழந்தைகள் இப்படத்தில் இடம்பெற்ற 'விண்மீன்' பாடலைப் பாடினர். 'அவர்கள் பாடி முடித்த பிறகு ஒரு சர்பிரைஸ் கொடுக்கப்போறோம்' என்ற தொகுப்பாளர்கள், அந்தக் குழுவில் பாடிய ஹாரிஸ் ஜெயராஜின் மகள் நிகிதாவை அறிமுகம் செய்தனர். பாடகியாக அவர் அறிமுகமாகும் படம் இது. இதைத் தொடர்ந்து, அந்தக் குழுவில் இருந்த ஒரு குழந்தையிடம் 'உனக்கு எந்த ஹீரோ பிடிக்கும்' என ஜெகன் கேட்க, அந்தக் குழந்தையிடம் இருந்து 'சூர்யா' என்ற பதில் வர அரங்கமே அதிர்ந்தது. 'ஏன் உனக்கு சூர்யாவைப் பிடிக்கும்' என்ற ஜெகனின் கேள்விக்கு, 'நீங்கதானே அப்படிச் சொல்லச் சொன்னீங்க' என்று அக்குழந்தை சொல்ல, அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.

சமுத்திரக்கனி முதல் ஆளாக தனது அனுபவத்தைப் பேசினார். இவரைத் தொடர்ந்து, ஆர்யா - சாயீஷா ஜோடியை மேடைக்கு அழைத்தனர். இருவரும் தங்கள் அனுபவங்களைப் பேசி முடித்தபின், 'உங்களில் முதலில் காதலைச் சொன்னது யார், எப்படி?' எனக் கேள்வி கேட்டனர் தொகுப்பாளர்கள். "முதலில் நான்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்னு சொன்னேன். சாயீஷாகிட்ட இல்லை; அவங்க அம்மாகிட்ட. அவங்க அம்மாக்கிட்ட சொல்றதுதான் சரியான முறைன்னு தோணுச்சு. ஏன்னா, இதுக்கு முன்னாடி பலபேர்கிட்ட நேரடியா புரபோஸ் பண்ணி பேக் ஃபயர் வாங்கியிருக்கேன்" என்றார் ஆர்யா.

அடுத்ததாக மேடையேறிய சிவகுமார், "1976 நவம்பர் 12-ஆம் தேதி பத்து வயதுள்ள பள்ளி மாணவன் ஒருவன் என்னிடம் தான் வரைந்த ஓவியத்திற்கு மூன்றாம் பரிசு பெற்றான். அந்தப் பையன்தான், கே.வி.ஆனந்த்" என்று நாஸ்டால்ஜியா விஷயங்களை அவரது ஸ்டைலில் பேசினார்.

சூர்யா - ரஜினிகாந்த்
சூர்யா - ரஜினிகாந்த்

"இந்த விழாவில் பங்கேற்றுள்ள ரஜினி பொருளை மட்டும் பகிர்ந்து கொடுப்பவர் அல்ல... புகழையும், பெருந்தன்மையையும் பகிர்ந்து கொடுப்பவர். சினிமா துறையில் உள்ளவர்கள் தங்கள் பணிக்கு சம்பளம் வாங்குகிறோம். அதோடு சமூகத்திற்கும் அவர்களுக்குமான உறவு முடிந்துவிட்டதாக நினைக்காமல், எனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பாராட்டியபடி விடைபெற்றார், பாடலாசிரியர் வைரமுத்து.

இயக்குநர் கே.வி.ஆனந்த் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய பாடலாசிரியர் கபிலன், "இன்று தமிழ்நாட்டின் 'காப்பான்' சூர்யா. அவர் பேசிய புதிய கல்விக்கொள்கையைக் கேட்டு, கலைமகளே வீணையைத் தண்டாயுதமாக மாற்றிவிட்டாள்." என்று விடைபெற்றார்.

பேசுங்கள் இன்னும் பேசுங்கள் எல்லோரும் கேட்கிறார்கள், கேட்பார்கள். இதையே சூப்பர் ஸ்டார் ரஜினி சார் பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார்.
கபிலன்

மோகன்லால் பேசும்போது, "கே.வி.ஆனந்த் கேமராமேனா நான் நடிச்ச படத்துலதான் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு அவருக்கு தேசிய விருது கிடைச்சது. ரொம்பத் திறமைசாலி. ஒரு இயக்குநராகவும் தன்னை நிரூபிச்சிட்டார். என்னுடைய இந்த 41 வருட சினிமா பயணத்துல இந்தப் படத்துல சூர்யாகூட நடிச்சது மறக்கவே முடியாது. சின்னச் சின்ன விஷயங்களைக்கூட பார்த்துப் பார்த்து பண்ணுவார். கடின உழைப்பாளி. அதுதான் அவருக்கு இது மாதிரியான ரசிகர்களைச் சேர்த்திருக்கு. என் டார்லிங் சூர்யாவுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள்." என்று வாழ்த்தி விடைபெற்றார்.

"ஒரு சூப்பர் ஹிட் கமர்ஷியல் சினிமாவுக்கான எல்லா அம்சமும் இந்தப் படத்துல இருக்கு. சூர்யா அப்பாவைத்தான் இளமையா இருக்கார்னு சொல்வாங்க. ஆனா, சூர்யாவுடைய இளமை இன்னும் அதிகரிச்சுக்கிட்டே இருக்கு. ஒவ்வொரு படத்துலேயும் அவருடைய உழைப்பு கூடிக்கிட்டே இருக்கு. இந்தப் படம் நிச்சயமா சூர்யாவுக்குப் பெரிய மாஸ் படமா இருக்கும்."
இயக்குநர் ஷங்கர்
மோகன்லால் - ரஜினிகாந்த்
மோகன்லால் - ரஜினிகாந்த்

ரசிகர்களின் ஆரவாரத்தோடு மேடையேறிய சூர்யா, பட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். "என் தைரியம், பலம், அடையாளம் எல்லாமே ரசிகர்களின் அன்புதான். இந்த இடம் எனக்குக் கிடைக்கும்னு நான் நினைக்கல. எனக்கு இருக்கிற தகுதியைவிட எனக்குக் கிடைச்ச ஆசீர்வாதம் பெருசு. நிறைய வீண் முயற்சிகள் எல்லாம்தான் விடாமுயற்சியா மாறி வெற்றி தரும். எல்லோரும் வெற்றி, தோல்வியைப் பார்த்திருப்போம். எல்லா ஜாம்பவான்களும் அதைச் சந்திச்சுட்டுதான் வந்திருக்காங்க.

40 வருடங்களா எல்லோரையும் ரசிக்க வெச்சிட்டு இருக்கார், ரஜினி சார். 70'ஸ் கிட்ஸ்ல இருந்து 2010'ஸ் கிட்ஸ் வரை எல்லோரையும் திருப்திபடுத்துறது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனா, அவர் அதை ஈஸியா செஞ்சிடுறார். அதனாலதான், அவர் முதன்மையா இருக்கார். அவர் வழி எப்போவும் தனி வழிதான். அந்த வழியில போலாம். ஆனால், அவர் அடைஞ்சிருக்க உயரத்தை அடையிறது சாத்தியமே இல்லை.
சூர்யா

என் அன்பான ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். எங்கே எதைப் பேசணுமோ அங்கே அதைப் பேசலாம். இங்கே வேற விஷயம் பேசலாம். விளம்பரத்துக்காக எதையும் பண்ண வேண்டாம். அது ரொம்பத் தப்பா போயிடும். அப்புறம், நம்மளோட எண்ணத்தைப் போலின்னு பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. அதுக்கு நாம இடம் கொடுக்க வேண்டாம். எல்லோரும் ஊருக்குத் திரும்பிப் போகும்போது பத்திரமா போங்க. உங்களுடைய தனிமனித முன்னேற்றம், உங்க குடும்ப முன்னேற்றம் முதல்ல முக்கியம். அப்புறம், நாம சேர்ந்து நிறைய களப்பணிகள் செய்யலாம். சினிமா மூலமாகவும், என் தனிப்பட்ட வாழ்க்கை மூலமாகவும் உங்களுக்கு முன்னுதாரணமா இருப்பேன்." என்றார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

அரங்கமே ஆர்ப்பரிக்க ரஜினிகாந்த் மேடையேறி, படக்குழுவிற்கு வாழ்த்து சொல்லிப் பேச ஆரம்பித்தார்.

" 'அயன்' படத்துக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்துல நான் நடிக்கிறதா இருந்தது. சில காரணங்களால் அது நடக்கல. நான் ரொம்ப மிஸ் பண்றேன். மோகன்லால் மாதிரி இயற்கையான நடிகர் இந்தியாவுலேயே கிடையாது. ஆர்யாவை எப்போப் பார்த்தாலும் 'நான் கடவுள்' அகோரி கேரக்டர்தான் ஞாபகம் வரும். நான் அடிக்கடி இமயமலைக்குப் போறதுனால நிறைய அகோரிகளைச் சந்திச்சிருக்கேன். ஆனா, ஆர்யா அந்த கேரக்டர்ல நடிச்ச விதம், பாலாவுடைய கற்பனை வேற லெவல்ல இருக்கும். ரெண்டுபேருக்கும் ஹாட்ஸ் ஆஃப். இளையராஜா - ரஹ்மான் இசையின் காம்பினேஷன்தான், ஹாரிஸ் ஜெயராஜ். இன்னைக்குவரை 'வசீகரா' பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். 'தமிழாற்றுப்படை' புத்தகத்தைப் படிச்ச பிறகு வைரமுத்துமேல வெச்சிருக்கிற மரியாதை நூறு மடங்கு அதிகமாகியிருக்கு. சுபாஷ்கரன் தமிழ் சினிமாவுக்குக் கிடைச்ச சொத்து. நிறைய அற்புதமான படங்களைத் தயாரிக்கிறார். அவங்க தயாரிப்புல ஷங்கரும், கமல்ஹாசனும் ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, 'இந்தியன் 2' படத்துல சேர்ந்திருக்காங்க. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும்ங்கிறதுல சந்தேகமே இல்லை.

அப்புறம், எம்.ஜி.ஆர்ல இருந்து பல ஜாம்பவான்களின் கனவான 'பொன்னியின் செல்வன்' கதையைத் தயாரிக்கிறார். வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன், நந்தினி, குந்தவை... இந்தக் கேரக்டர்களெல்லாம் எப்படித் திரையில் வரப்போகுதுனு பார்க்க நான் ரொம்ப ஆர்வமா காத்துக்கிட்டிருக்கேன். இப்போ மெயின் விஷயத்துக்கு வர்றேன். 1960-களில் இருந்த பெரிய நடிகரின் கால்ஷீட்டுக்கு அவ்வளவு டிமாண்ட். அவர் கால்சீட் கொடுக்கலைன்னா, வேற யார்கிட்டேயும் போகமாட்டாங்க. காத்திருந்து கால்ஷீட் வாங்குவாங்க. அந்த நடிகர், தன் வீட்டுல ரெண்டு செடிகளை நல்ல நல்ல உரங்களைப் போட்டு வளர்த்தார். அந்த ரெண்டு செடிகளும் மரமான பிறகு, பணத்தை மட்டும் காய்க்கல... நல்ல பெயர், புகழ், செல்வாக்குனு எல்லாமே கொடுத்தது. அந்தச் செடிகள்தான் சூர்யாவும், கார்த்தியும்.

நீட் தேர்வால் ரூ. 5,000 கோடி பிசினஸ்... நடிகர் சூர்யா சொன்னது எந்தளவுக்கு உண்மை?!

சிவகுமார் சார்கூட 'கவிக்குயில்', 'புவனா ஒரு கேள்விக்குறி' ரெண்டு படங்கள் நடிச்சுட்டேன். 'கவிக்குயில்' பட ஸ்பாட்ல ஶ்ரீதேவி, ஃபடாஃபட் ஜெயலக்‌ஷ்மி ரெண்டுபேர்கிட்டேயும் பேசிக்கிட்டு இருப்பேன். 'எப்போ பார்த்தாலும் பொண்ணுங்ககிட்டயே பேசிக்கிட்டு இருக்க. ஏதாவது புத்தகத்தைப் படி, எழுது'னு சிவகுமார் என்னைத் திட்டுவார். 'நான் என்ன சார் பண்றது... அவங்கதான் பேசுறாங்க'னு சொன்னேன். 'அவங்க என்கிட்ட பேசுறாங்களா, என்கிட்ட பேசுறாங்களாய்யா'னு கேட்டார். 'ஏன் அவர்கிட்ட பேசமாட்டிக்கிறீங்க'னு நடிகைகள்கிட்ட கேட்டேன். சிவகுமார் சார் கோபப்படலைன்னா சொல்றேன், 'சார் கோபப்பட மாட்டீங்களே' என்றார். சிவக்குமார் அதுக்குத் தலையசைக்க, ரஜினிகாந்த் தொடர்ந்தார். 'இல்லைங்க.. அவர்கிட்ட பேச ஆரம்பிச்சா, 100 பூவோட பெயரைச் சொல்ல ஆரம்பிச்சிடுவார்'னு சொன்னாங்க.

அடுத்து, 'புவனா ஒரு கேள்விக்குறி' பட ஸ்பாட்ல ஒரு சம்பவம். ஒருநாள் எனக்கு சீன் இல்லைன்னு சொல்லிட்டாங்க. சரினு நானும் சுமத்ராவும் பேசிக்கிட்டு இருந்தோம். கொஞ்சநேரத்துல ஒரு அசோஸியேட் டைரக்டர் வந்து கையில் ரெண்டு பக்க வசனம் கொடுத்து, 'இதை ரெடி பண்ணிக்கோங்க. சூரியன் மறையும்போது எடுக்கணும். ஒரே டேக்ல பண்றமாதிரி தயாராகிக்கோங்க'னு சொல்லிட்டுப் போயிட்டார். எல்லாமே திருக்குறள் மாதிரி இருக்கு. சரினு நானும் தனியா வந்து ஒரு மரத்தடியில் சேர் போட்டு உட்கார்ந்து, சாப்பிடாமகூட மனப்பாடம் பண்ணிக்கிட்டு இருந்தேன். சாயுங்காலம் ஆகிடுச்சு, பேக்-அப் சொல்லிட்டாங்க. அந்த சீனை எடுக்கவே இல்லை. அப்புறம் சிவக்குமார் சார் வந்து, 'படத்துல இந்த சீனே கிடையாது. நீ ரொம்ப நேரம் அவங்ககூட பேசிக்கிட்டு இருந்ததை வேற யாராவது பார்த்து உன்னை பொம்பளப் பொறுக்கின்னு சொல்லிடக்கூடாதுல்ல. அதனாலதான், நான் இதைக் கொடுக்கச் சொன்னேன்'னு சொன்னார். சக நடிகன் கெட்டபெயர் வாங்கக் கூடாதுங்கிற அக்கறை அவருக்கு எப்போவும் இருக்கும்.

'காப்பான்' இசை வெளியீட்டு விழா
'காப்பான்' இசை வெளியீட்டு விழா

சூர்யாவை 'நேருக்கு நேர்' படத்துல பார்க்கும்போது, அவருக்கு நடக்கத் தெரியல, நடிக்கத் தெரியல, டயலாக் பேசத் தெரியல.. இவர் எப்படி நல்ல நடிகராக வருவார்னு நினைச்சேன். அப்படி இருந்த சூர்யா இன்னைக்கு தன்னைத் தானே செதுக்கிக்கிட்டு ஒவ்வொரு படத்துக்கும் பயங்கரமா நடிக்கிறார். அவருடைய இந்த நடிப்புக்கு முக்கியப் பங்கு, பாலாவுக்குப் போகணும். 'நந்தா', 'பிதாமகன்', 'கஜினி', 'காக்க காக்க', 'அயன்', 'சிங்கம்' இந்த கேரக்டர்களெல்லாம் இவரைத் தவிர யாரும் செய்யமுடியாது. என்ன ஒரு உழைப்பு... ஹாட்ஸ் ஆஃப் சூர்யா. ஆனா, கார்த்தி இவருக்கு நேரெதிர். முதல் படமான 'பருத்திவிரன்'லயே அடிச்சு தூள் கிளப்பிட்டார். குறிப்பா, அந்த க்ளைமாக்ஸ் சீன் நடிப்பு, நூறு படத்துல நடிச்சாலும் அப்படி நடிக்க முடியாது.

சமீபமா சூர்யாவின் இன்னொரு முகம் வெளியே தெரிஞ்சது. அவருடைய எண்ணம், அவரின் கேள்வி இதில் பல விஷயங்களை நான் ஆமோதிக்கிறேன், வரவேற்கிறேன். ஒரு நடிகர் இப்படிப் பேசியிருக்கார்னு அந்த விஷயம் பெருசாகல. 'அகரம்' மூலமா நிறைய குழந்தைகளுக்குப் படிப்பு கொடுக்குறாங்க. அங்கே படிக்கிற மாணவர்கள் படும் கஷ்டத்தை நேர்ல பார்த்திருக்காங்க. அதனாலதான், அந்தக் கோபம் தானா வெளியே வந்திருக்கு.

இதை ரஜினி பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார்னு சொன்னாங்க. சூர்யா பேசியதே கேட்டிருக்கு. அந்த நெருப்பை அப்படியே பாதுகாத்து வைங்க. இன்னும் வயசு இருக்கு. போக வேண்டிய தூரம் இருக்கு. காலத்தின் கையில் என்ன இருக்கோ, யாருக்கும் தெரியாது. சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்ல; மக்களுக்கும் உங்க தொண்டு வேணும். வாழ்த்துகள் சூர்யா!"
என்று விடைபெற்றார் ரஜினி.

மோகன்லாலின் 41 வருட சினிமா பயணத்தின் நினைவாக ஒரு ஓவியத்தை அவருக்கு வழங்கினார், ரஜினிகாந்த். விழாவின் இறுதியாக 'காப்பான்' ஆடியோவை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கொடுக்க, ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டு, ஷங்கர் வெளியிட்டார்.