Published:Updated:

" 'விஸ்வாசம்' வசூலிச்சதுல 50 கோடியை இமானுக்குக் கொடுக்கலாம்!" - 'கென்னடி கிளப்' ஆடியோ லான்ச்

'கென்னடி கிளப்' இசை வெளியீட்டு விழா
'கென்னடி கிளப்' இசை வெளியீட்டு விழா

'கென்னடி கிளப்' இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யங்கள்...

சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார் ஆகியோர் நடித்துள்ள படம், 'கென்னடி கிளப்'. 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் ஏற்கெனவே கபடியைப் பற்றி பேசியிருந்தாலும், இந்த முறை பெண்கள் கபடி பற்றியும் அந்த வீராங்கனைகள் தங்களின் வாழ்வில் சந்திக்கும் சவால்கள் ஆகியவற்றைப் பேசியுள்ளார் சுசீந்திரன். இத்திரைப்படத்தில் நிஜ கபடி வீராங்கனைகள் பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இசையமைப்பாளர் இமான்
இசையமைப்பாளர் இமான்

அந்த பெண்கள் கபடி அணி வென்ற கோப்பைகள் அரங்கத்தை அலங்கரித்து இருந்தன. விழாவில் படக்குழு மட்டுமின்றி இயக்குநர் எழில், இயக்குநர் அகத்தியன், இயக்குநர் சபாபதி, இயக்குநர் லெனின் பாரதி, தயாரிப்பாளர்கள் தேனப்பன், சிவா, கதிரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் லெனின் பாரதி, "இது எனக்கு நெருக்கமான மேடை. இசையமைப்பாளர் இமான் மற்றும் பின்னணி இசை கலைஞர்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துகள். நிறைய பேசணும்னு ஆசையா இருக்கு. ஆனா, நான் பேசுனா சர்ச்சையா மாறிடுங்கிறதுனால வாழ்த்துகளோட நிறுத்திக்கிறேன்" என்றபடி விடைபெற்றார்.

தயாரிப்பாளர் சிவா

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நிச்சயமா இந்தப் படம் வெற்றி பெறும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஏராளமான சோதனைகளுக்கு நடுவுல விடாமுயற்சியோடு சாதனைகளை பண்ணிட்டு இருக்கிறார் சசிகுமார். அவருடைய வெற்றி ஒரு போராளியுடைய வெற்றியா பார்க்கிறேன். அவர் ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும்னு ஆசைப்படுறேன். தமிழ் சினிமாவின் செல்ல இசையமைப்பாளர் இமான். 'விஸ்வாசம்' படத்துடைய 100 கோடி வசூலில் 50 கோடி ரூபாய் 'கண்ணான கண்ணே' பாடலுக்காக இமானுக்கு கொடுத்திருக்கலாம். அப்படி ஒரு வெற்றிக்கு சொந்தக்காரர். இந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு பெருமை சேர்த்த சுசீந்திரனுக்கு நன்றியும் வாழ்த்துகளும்

பாரதிராஜா - சுசீந்திரன்
பாரதிராஜா - சுசீந்திரன்

இசையமைப்பாளர் இமான்

சுசீந்திரன் சார்கூட ஏழாவது முறையா இணைஞ்சிருக்கிறது ரொம்ப சந்தோசம். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமா இருக்கும். சசிகுமார் சார் 'உங்க ஹேர்ஸடைலும் தாடியும் ரொம்ப அழகா ஸ்டைலா இருக்கு. இந்தப் படத்துல உங்களைப் பார்க்கும்போது சசிகுமார் 2.0வா தெரியுறீங்க. நடிக்கிறது தெரியாம நடிச்சிருக்கீங்க'. பாரதிராஜா சார் ஸ்கிரீன்ல வர்றது படத்துக்கான மரியாதையை அதிகரிக்குது. நான் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. அதுக்காகதான் உடம்பை குறைச்சிருக்கேன். எல்லோருக்கும் நன்றி

இயக்குநர் சுசீந்திரன்

'வெண்ணிலா கபடிக்குழு' என் அப்பாவுக்கு முதல் குழந்தை; 'கென்னடி கிளப்' இரண்டாவது குழந்தை. 'கபடி கபடினு வாழ்க்கையை கெடுத்துக்கிற'னு என் அப்பாவை திட்டிக்கிட்டே இருப்பாங்க. ஆனா, அந்த கபடி மூலமா எனக்கு வாழ்க்கை கிடைச்சிருக்கு. 'பாண்டியநாடு' படத்துக்கு பிறகு, பாரதிராஜா சாரை இயக்குறது ரொம்ப சந்தோசம். அவர் நடிக்கிறதை பார்த்து ரசிச்சுட்டு இருப்பேன். 'சுப்ரமணியபுரம்' படத்துல நான் சசி சாருக்கு உதவி இயக்குநரா வேலை செய்ய வேண்டியது. செட்டை பாசிட்டிவா வெச்சுக்கிறது அவர்தான். இதுவரை ஒன்பது புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தி இருக்கார். அனைத்து உதவி இயக்குநர்கள் சார்பாக என் நன்றியை தெரிவிச்சுக்கிறேன். இந்தப் படம் உருவாக காரணமா இருந்த 'வெண்ணிலா கபடிக்குழு' வீராங்கனைகளுக்கு மிகப்பெரிய நன்றி

சசிகுமார் - மீனாட்சி
சசிகுமார் - மீனாட்சி

நடிகர் சசிகுமார்

இந்தப் படம் கபடி வீராங்கனைகளின் பயோபிக்னு சொல்லலாம். அவங்க வாழ்க்கையை பத்தி பேசுறதுக்கு நாங்க ஆதரவா இருந்திருக்கோம் அவ்வளவுதான். கபடிக்காக தன் வாழ்க்கையை அர்பணிச்சவர் இந்தப் வீராங்கனைகளுடைய பயிற்சியாளர் செல்வம். அவர் கேரக்டர்லதான் நான் நடிச்சிருக்கேன். வறுமையை ஜெயிக்கிறதுக்காக விளையாடுற விளையாட்டுதான் கபடி. இவங்ககூட இருக்கிறப்போதான் அவங்க வாழ்க்கையை புரிஞ்சுக்க முடிஞ்சது. எனக்கு ஸ்போர்ட்ஸ் படம் நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. சுசீ கதை சொன்னவுடனே ஓகே சொல்லிட்டேன். முடி எல்லாம் வெட்டி என் கெட்டப் முழுக்க மாத்திட்டார். எனக்கு கபடி பத்தி சுசீ நிறைய சொல்லிக்கொடுத்தார். இந்த மாதிரி நிறைய படங்கள் வரணும். அதுல நான் நடிக்கணும். என்னுடைய சுயநலமும் இதுல இருக்கு. இல்லைனா, டூயட், அருவா கம்பு தூக்கறதுனு போயிடும். அப்படி போயிடக்கூடாதுனுதான் இந்த மாதிரி படங்கள் வரணும்னு நினைக்கிறேன். பாரதிராஜா சார்கூட நடிச்சது பாக்கியமா நினைக்கிறேன்

இயக்குநர் பாரதிராஜா

இந்தப் படத்துல நடிக்கும்போது ஒரு இயக்குநராகவோ நடிகராகவோ என்னை உணரவே இல்லை. ஒரு குடும்பத்துக்கூட வாழ்ந்தேன்னுதான் சொல்லனும். சினிமா கலைஞர்களுக்கு மட்டும்தான் கற்பனை சுகம் கிடைக்கும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் இயக்குநர் பாரதிராஜாவாகவே இருக்கணும்னு ஆசைப்படுறேன். கபடி ப்ளேயர்ஸ் எல்லோருக்கும் சல்யூட்! சுசீந்திரன் என்னை அப்பானுதான் கூப்பிடுவான். அதுக்கு தகுந்த மாதிரி அவர் அப்பா கேரக்டர்ல என்னை நடிக்க வெச்சிருக்கான். ரொம்ப சந்தோசமா இருக்கு. சசிகுமார் முகம் பார்க்க குழந்தை மாதிரி இருக்கும். நடிக்கிறது தெரியாமல் நடிக்கிறார். நான் கூட ஓவர் ரியாக்‌ஷன்தான். சிவாஜி காலத்துல இருந்து அப்படியே நடிச்சு நடிச்சு அதை குறைக்க முடியாமல் இருக்கோம்.

'கென்னடி கிளப்' இசை வெளியீட்டு விழா
'கென்னடி கிளப்' இசை வெளியீட்டு விழா

இமான் உடம்பை குறைச்சு திறமையை வளர்த்துட்டு இருக்கார். ஏன் குறைச்சு பேசுற லெனின்? பேசும்போது பிரச்னைகள் வரணும். பிரச்னைதான் தீர்வு சொல்லும். 'வன்முறையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் கையை உடைச்சீங்களே... அவங்களை தூண்டிவிட்ட சினிமா ஹீரோக்களுடைய கையை உடைங்க பார்ப்போம்'னு தைரியாம பேசியிருந்தான் லெனின். என்ன பேசணுமோ பேசு; பயப்படாதே. நாங்க எல்லாம் உனக்கு பின்னாடி இருக்கோம். அதிக சமூக பொறுப்புணர்வு சினிமாகாரனுக்குதான் இருக்கணும். எதிர்கால சமூகம் கெட்டுப்போகாமல் இருக்க நல்ல படங்களை எடுங்கள்.

இறுதி நிகழ்வாக 'கென்னடி கிளப்' படத்தின் இசை வெளியிடப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு