Published:Updated:

``மரணதண்டனை கொடுக்கவே யோசிக்குற நாட்ல, அப்பாவி மக்கள் ஏன் சாகணும்?" - `உறியடி' விஜய் குமார்

From `Uriyadi Movie Series'
From `Uriyadi Movie Series'

குற்றம் பண்ணா, மரணதண்டனை குடுக்கவே யோசிக்குற இந்த நாட்டுல, எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி மக்கள் ஏன் இறக்கணும்?

விஜய் குமார், தன் படைப்புகளின் வழியாக சமூக அவலங்களுக்கு எதிராய்க் குரல் கொடுக்கும் ஆங்ரி யங் மேன்.

தனி மனித அளவிலும் சமூகத்திலும் பல சிக்கல்களை உண்டு பண்ணியிருக்கும் இந்தக் கொரோனா நாள்கள் மற்றும் இன்னபிற நிகழ்வுகள் பற்றி அவருடன் உரையாடினேன். ஊரடங்கு, விஷவாயு கசிவு, கொரோனா, சினிமா என நீண்ட உரையாடலில் இருந்து..

எப்படி போகுது இந்த ஊரடங்கு நாள்கள்?

From `Uriyadi Movie Series'
From `Uriyadi Movie Series'

என் வீட்டில் ஒரு மீன்தொட்டி இருக்கு. அந்தத் தொட்டிக்குள்ளே ஒரு மீனும், வீட்டுக்குள்ளே நானும்னு தனிமையில்தான் நாள்கள் கழியுது. அதேநேரம் இது எனக்கு கஷ்டமாவும் இல்லை. கடந்த பத்து வருஷமாவே நான் இப்படித்தான் இருக்கேன். பட வேலைகள் இருக்கிற நாள்கள் மட்டும் விதிவிலக்கு. இத்தனை நாளும் பாதுகாப்பற்ற இந்த வாழ்க்கையை, பிஸியாகவே வெச்சிருக்க எதையோ தேடி, ஓடிட்டே இருந்தோம். அந்த ஓட்டத்துல, நமக்குள்ளே இருக்கிற பிரச்னைகளைச் சரி பண்ணாமலேயே விட்டுட்டோம். இப்போ அதைச் சரிபண்ண கிடைச்ச நாள்களா இந்த ஊரடங்கு நாள்களைப் பார்க்குறேன். இன்னும் பண்பட்ட மனுஷனா மாற விரும்பி, உள்நோக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்துறேன். எது மேலேயும் அட்டாச்மென்ட் இல்லாத, யாரிடமும் நன்றிகூட எதிர்பாராத இடத்துக்கு மனசையும், சிந்தனைகளையும் மேம்படுத்தும் வேலைகளுக்காக இந்த நாள்களைச் செலவிடுறேன். சோற்றுக்குப் பிரச்னை இல்லைன்னா, இந்தமாதிரி சிந்தனைகள்லாம் வரும்.

இந்த நாள்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்ன?

From `Uriyadi Movie Series'
From `Uriyadi Movie Series'

''தனிமையை இன்னும் பெட்டரா கையாளக் கத்துக்கிட்டேன். அடுத்ததாக சேமிப்பு எவ்வளவு முக்கியம்னு கத்துகிட்டேன். எனக்கும் கடன், அது, இதுன்னு சில பொருளாதாரப் பிரச்னைகள் இருக்கு. ஆனாலும், சம்பாதிக்குற காசை சேமிச்சு வைக்கணும்னு நான் யோசிச்சதே கிடையாது. போஸ் வெங்கட் அண்ணா இயக்கத்துல நான் நடிக்க இருந்த படமும், இந்த மாதம் ஷூட்டிங் தொடங்குறதா இருந்து ஊரடங்கினால் தள்ளிப்போயிடுச்சு. இது எல்லாம் சேர்ந்து, சேமிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவத்தை எனக்குப் புரிய வெச்சிடுச்சு. சக மனிதர்கள் எத்தனையோ பேர் பசி, பட்டினியில் துடிச்சுட்டு இருக்காங்க. அவங்களுக்கு ஏதாவது உதவி பண்ணணும்னு நினைச்சா கூட காசு தேவைப்படுது இல்லையா. அதுக்காகவாது இனி சேமிக்கணும்!''

`உறியடி 2'வில் நீங்கள் எச்சரித்த ஆபத்துகள், நிஜத்தில் நடந்துகொண்டிருப்பதைக் கவனித்தீர்களா?

From `Uriyadi Movie Series'
From `Uriyadi Movie Series'

''விசாகப்பட்டினத்துல விஷவாயு கசிவு, சட்டீஸ்கரில் பேப்பர் மில்லில் வாயு கசிவு, நெய்வேலியில் பாய்லர் வெடிப்புன்னு தொடர்ந்து வர்ற செய்திகளைப் பார்க்கும்போது மன உளைச்சலா இருக்கு. வரலாற்றில் நடந்த, நடக்கின்ற, நடக்க சாத்தியமுள்ள விஷயங்களை வெச்சிதான் என் இரண்டு படங்களையும் பண்ணியிருக்கேன். `உறியடி 2' படத்தில் மீத்தைல் ஐசோ சையனைடுங்கிற விஷ வாயுவால் மக்கள் இறந்துபோகிற மாதிரி காட்டியிருப்பேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் தூக்கத்திலேயே உயிரை விட்டு, தலைமுறை தலைமுறைகளா பல லட்ச மக்கள் பாதிக்கப்பட்ட போபால் பேரழிவு இதே விஷவாயுவால் நடந்ததுதான்.''

அதுமட்டுமல்ல, திருச்சியில் பல மாதங்களுக்கு முன்னால, இதேமாதிரி ஒரு தொழிற்சாலையில் விபத்து நடந்தது. அதில் இறந்துபோனவங்க உடல் கூட கிடைக்காம, அங்கே கிடந்த மண்ணை எடுத்துட்டுப்போய் அடக்கம் பண்ணாங்க. ஒவ்வொரு தொழிற்சாலையும் எப்போ வேணாலும் வெடித்துச் சிதறக்கூடிய எரிமலை மாதிரி. அப்படிப்பட்ட தொழிற்சாலைகளை, சரியா பரமாரிக்கலைன்னா என்ன கொடூரங்கள் நடக்கும்னுதான் சொல்லியிருந்தேன். போபால் விஷவாயு கசிவால் பாதிக்கபட்டவர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குக் கொரோனா நோய் தொற்றும் வாய்ப்பு அதிகம் இருக்குறதா சொல்றாங்க.

கொரோனா தொற்றிலிருந்து தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் காப்பாத்த ஊரடங்கை கடைப்பிடிச்சு வீட்டுக்குள்ளே இருந்த மக்கள்தானே, இப்போ விசாகபட்டினத்தில் விஷவாயு கசிஞ்சு இறந்துபோயிருக்காங்க. குற்றம் பண்ணா, மரணதண்டனை கொடுக்கவே யோசிக்குற இந்த நாட்டுல, எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி மக்கள் ஏன் சாகணும்?

From `Uriyadi Movie Series'
From `Uriyadi Movie Series'

தொழிற்சாலைகள் இல்லைன்னா எப்படி வேலைவாய்ப்பு கிடைக்கும்னு வாதத்துக்கு வருவாங்க. அதெல்லாம் தெரியாம இல்லை. தொழிற்சாலைகள்ங்கிறது கத்தி மாதிரி, அது காய்கறிகளை வெட்டவும் பயன்படுத்தலாம். அடுத்தவன் உயிரையும் பறிக்கலாம். அவை பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்படுதா? அதிலிருந்து வெளிவரும் கழிவுகள் நிலம், நீர், காற்றை மாசுப்படுத்தாமல் இருக்குதாங்கிறது ரொம்ப முக்கியம். காற்றுல கலந்திருக்க மாசை சுவாசிக்கிறதால், இந்தியர்களுடைய சராசரி ஆயுட்காலம் குறைஞ்சுட்டு வருது. சல்ஃபர் டை ஆக்சைடை அதிகம் எமிட் பண்றது இந்தியாதான். ஏதோ தொழிற்சாலைகள் புரொடியூஸ் பண்றதை நான் ஏன் சுவாசிக்கணும்? என் ஊரில், என் ஊருக்கு அருகில் இருக்க தொழிற்சாலை பாதுகாப்பாதான் இருக்கா, சரியா பரமாரிக்கப்படுதான்னு எனக்கு எப்படி தெரியும்? `உறியடி-2' வந்தப்போ `விஷவாயு கசிஞ்சு 260 பேர் இறந்துபோறதா மிகைப்படுத்திருக்காங்க'ன்னு சிலர் பேசினாங்க. உண்மையில், சின்ன பட்ஜெட்டில் 260 பேர்னு வெச்சேன். பெரிய பட்ஜெட்டா இருந்திருந்தால் 20 ஆயிரம் பேர்னு காட்டிருப்பேன்.

ஒரு குடிமகனா, அரசின் செயல்பாட்டை எப்படி பார்க்குறீங்க?

From `Uriyadi Movie Series'
From `Uriyadi Movie Series'

பேரிடர் வரும்போது எல்லோரும் சேர்ந்து நிண்ணுதான் சமாளிக்கணும். விமர்சனம் பண்ற நேரமா இது தோணலை. ஆனாலும், ஒரு வருத்தம் இருக்கு. இந்தியாவில் நிலைமை மோசமாகுறதுக்கு 3 மாசம் முன்னாடியே, சீனாவில் இந்த நோயின் கொடூரம் பற்றித் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. அப்போவே, முன்னெச்சரிக்கையா செயல்பட்டு விமான நிலையங்களை மூடியிருந்தால், இன்னைக்கு ஒட்டுமொத்த நாட்டையும் மூடியிருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காதுன்னு தோணுது. நடந்தது நடந்துடுச்சு. ஆனாலும், கேரளா அதைச் சிறப்பா கையாண்டு சாதிச்சுருக்காங்க. ஏன்னா, ஏற்கெனவே 2 வைரஸ்களை வெற்றிகரமா கையாண்ட அனுபவம் அவங்களுக்கு இருக்கு. அதனால், கேரளா அரசிடமிருந்து சில விஷயங்களை மற்ற அரசுகள் எடுத்துக்கணும். மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல்துறையினர் ஆரம்பிச்சு அரசியல்வாதிகள் வரை பலரும் நமக்காக உழைச்சுட்டு இருக்காங்க. இந்த நேரத்துல குறை சொல்றது, அவங்க எல்லோருக்குமே கஷ்டமா இருக்கும்!

இந்தக் கொரோனா, சமூகத்தில் நிகழ்த்தப்போகிற மிகப்பெரிய மாற்றம் என்னவா இருக்கும்னு நினைக்குறீங்க?

From `Uriyadi Movie Series'
From `Uriyadi Movie Series'

நிச்சயமா, வாழ்க்கை முன்னாடி இருந்தமாதிரி, மறுபடியும் இருக்கப்போறதில்லை. பழைய நிலைக்குத் திரும்புவதற்கு ஒரு வருஷமாவது ஆகும். பொருளாதாரம் ரொம்ப அடிவாங்கியிருக்கு. பசி கொடுமை அதிமாச்சுன்னா, சமூகஒழுங்கு சீர்குலைய ஆரம்பிச்சுடும். இங்கே எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் சார்ந்துதான் வாழ்றோம். அதனால், ஒருத்தருக்கு ஒருத்தர் உறுதுணையா இருந்து, எந்தப் பிரிவினையும் இல்லாமல் அன்பு மட்டுமே பகிர்ந்து இந்த இருளில் இருந்து மீண்டு வருவோம். விடியும் வரை விண்மீன்களாவோம்!''

அடுத்த கட்டுரைக்கு