“கமல், ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து அரசியல் வேண்டாம்” - சிரஞ்சீவி ஓப்பன் டாக்!

“நான் சென்னையில நடிப்பு கத்துக்கிட்டு இருந்தப்ப ‘ஆனந்த விகடன்’ பத்தி என் நண்பர்கள் பேசிக்கிட்டே இருப்பாங்க.
ஜூப்ளி ஹில்ஸ்... மெகா ஸ்டார் சிரஞ்சீவி வீடு... காலை 10 மணிக்கு உள்ளே நுழைகிறேன். அன்றுமாலைதான் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் என்பதால் வீடே பரபரவென இருக்கிறது. ஆனால் ‘உங்களோடு பேச 2 மணிநேரம் ஒதுக்கியிருக்கேன். விகடனோடு பேசி ரொம்ப வருஷமாச்சு. என்ன வேணாலும் கேளுங்க... பேசுவோம்’ என்றவரின் கவனம் முழுக்க முழுக்க என்னுடைய கேள்விகளில்தான் இருந்தது. போனோ, மற்றவர்களின் குறுக்கீடோ எதுவும் இல்லை. நிறையவே பேசினோம்!
“நான் சென்னையில நடிப்பு கத்துக்கிட்டு இருந்தப்ப ‘ஆனந்த விகடன்’ பத்தி என் நண்பர்கள் பேசிக்கிட்டே இருப்பாங்க. வெள்ளிக்கிழமையானா காலையில டீக்கடைக்கு வர்றவங்க, பால் வாங்க வர்றவங்க எல்லோரும் ஆனந்த விகடனையும் வாங்கிட்டுப் போறதைப் பார்ப்பேன். நியூஸ் பேப்பர் போடுறவங்க சைக்கிள்ல போகும்போது ‘ஆனந்த விகடன்... ஆனந்த விகடன்’னு சொல்லிக்கிட்டே போவாங்க. ஆனந்த விகடன்ல சினிமாக்காரரையோ, சாமானிய மனிதரையோ ஒருத்தரைப் பத்திப் பாராட்டி எழுதினாங்கன்னா, அவங்களுக்குப் பெரிய ரீச் கிடைக்கும்னு சொல்லுவாங்க. அப்போதிலிருந்தே எனக்கு ஆனந்த விகடன் மேல பெரிய மரியாதை இருக்கு” எனப் பேசத்தொடங்கினார் சிரஞ்சீவி.
‘` ‘சைரா நரசிம்மா ரெட்டி’ன்னு பீரியட் படம்... ‘பாகுபலி’ வெற்றியோட பாதிப்புல உருவான ஐடியாவா இது?’’
“தெலுங்கு சினிமாவுடைய பலத்தை உலகத்துக்குக் காட்டிய படம் ‘பாகுபலி.’ ஆனா, ‘சைரா நரசிம்ம ரெட்டி’ கதையைப் படமா எடுக்கணும்கிறது 12 வருஷ பிளான். பெரிய பட்ஜெட் தேவைப்பட்டதால தள்ளித்தள்ளிப் போயிட்டே இருந்துச்சு. இடையில் நான் அரசியலுக்குப் போனதால் ஒன்பது வருஷமா நடிக்கவேயில்லை. மீண்டும் நான் சினிமாவுக்கு வந்தப்போ என்னோட 150-வது படத்துக்காக நிறைய கதைகள் கேட்டேன். ஆனா, எதுவும் எனக்குத் திருப்தியா இல்லை. அப்போதான் நான் விஜய் நடிச்ச ‘கத்தி’ படத்தைப் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘உங்களோட ரீ என்ட்ரி படத்தை நான்தான் தயாரிக்கணும்’னு என் மகன் ராம்சரண் ‘கைதி நம்பர் : 150’ படத்தைத் தயாரிச்சான். படம் சூப்பர் ஹிட். அடுத்து ‘சைரா நரசிம்ம ரெட்டி’ கதையைப் பண்ணலாம்னு நம்பிக்கை வந்துச்சு. இந்த நம்பிக்கைக்குக் காரணம் ‘பாகுபலி’யோட வெற்றிதான். ‘இதைப் படமா எடுத்தா 250 கோடி முதல் 300 கோடி வரை செலவாகும். இவ்ளோ பணம் போட்டு இந்தப் படத்தை எடுங்கன்னு யார்கிட்ட கேட்குறது? அதனால, இதை நம்மளே பண்ணலாம். என்ன ரிசல்ட் வந்தாலும் அது நம்மளோட இருக்கட்டும். ரிஸ்க் எடுக்கலாம்’னு ராம் சரண் சொன்னான். அவன் சொன்னது சரின்னு பட்டது. இயக்குநரா சுரேந்தர் ரெட்டியை கமிட் பண்ணினோம்.”

‘`யார் இந்த சைரா நரசிம்ம ரெட்டி?’’
“1800-களில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்தான் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி. இவரைப் பத்தி எதுவும் வரலாற்றுல பதிவாகல. ராயலசீமா பகுதியில 30 பக்கப் புத்தகம் மட்டும்தான் அவரைப் பத்தி இருந்துச்சு. ஆந்திராவில் பிரபலமான கதாசிரியர்கள் பரிச்சூரி பிரதர்ஸ்தான் அவரைப்பத்தி நிறைய ஆராய்ச்சிகள் பண்ணி, இந்தக் கதையில் நீங்கதான் நடிக்கணும்னு சொன்னாங்க. உண்மையில் இந்தப் படத்துக்கான தொடக்கம் பரிச்சூரி பிரதர்ஸ்தான்.’’
‘`வரலாற்றிலேயே சரியாகப் பதிவாகாத கேரக்டர்... நடிக்க சவாலா இருந்திருக்குமே?’’
‘`12 வருஷங்களுக்கு முன்னாடி இந்தக் கதையைப் படமாக்கணும்னு நினைச்சப்போ நரசிம்ம ரெட்டி வாழ்ந்த ஊர்ல இருக்கிறவங்களுக்கு அவரைப் பத்தி என்னவெல்லாம் தெரியும்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். தவிர, அவருடைய வம்சாவளியைச் சந்திச்சேன். அவங்க கேள்விப்பட்ட நிறைய விஷயங்களை என்கிட்ட சொன்னாங்க. உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியோட போட்டோகூடக் கிடையாது. ஆனா, அவர் வம்சாவளியில இருந்த ஒருத்தர் அவர் மாதிரியே இருப்பார்னு ஒரு நம்பிக்கை. அவர் நரசிம்ம ரெட்டி கெட்டப்ல இருக்கிற போட்டோதான் இப்போ எல்லாப் பக்கமும் இருக்கு. ஏற்கெனவே, எனக்குக் குதிரையேற்றம் தெரியும். இந்தப் படத்துக்காக வாள்வீச்சுப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். இத்தனை வருடங்களா நான் பண்ணின ஆக்ஷன் காட்சிகளை ஒப்பிடும்போது இந்தப் படத்துல நான் நடிச்ச ஆக்ஷன் காட்சிகள் வித்தியாசமானது. இதுக்குத் தயாராகுறது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. ஆனா, நான் ஒவ்வொண்ணையும் ரசிச்சுப் பண்ணியிருக்கேன். காரணம், இந்தப் படத்துல நடிக்கிறது என் கனவு. க்ளைமாக்ஸில் வரும் போர்க் காட்சிக்காக ஜார்ஜியா போயிருந்தோம். 45 நாள்கள் க்ளைமாக்ஸ் மட்டும் எடுத்தோம்.”

‘`அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், நயன்தாரா, தமன்னான்னு படத்துல பெரிய ஸ்டார் காஸ்ட்டிங் இருக்கே?’’
“இந்தப் படத்துல சிரஞ்சீவின்னு ஒருத்தன் நடிக்கிறதையே நான் மறந்துட்டேன். வெறும் நரசிம்ம ரெட்டி மட்டும்தான். அவருக்கு யார் ஆதரவு கொடுத்தாங்க, யார் எதிர்த்தாங்க, யார் துரோகம் பண்ணுனாங்கன்னு எல்லாமே கதையில் இருக்கு. அதனால பெரிய நடிகர்கள் தேவைப்பட்டாங்க. எல்லோருக்கும் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள்தான். நரசிம்ம ரெட்டியுடைய குரு பெயர் கோசாயி வெங்கண்ணா. இவர்தான் அவருக்கு வேதம், யோகா, வீரம்னு எல்லாமே கத்துக்கொடுத்தவர். அந்த கேரக்டர்லதான் அமிதாப் பச்சன் சார் நடிச்சிருக்கார். எனக்கு மனைவியா சித்தம்மா கேரக்டர்ல நயன்தாராவும், என் காதலி லக்ஷ்மி கேரக்டர்ல தமன்னாவும் நடிச்சிருக்காங்க. அனுஷ்கா ஜான்சி ராணி கேரக்டர்ல கேமியோ ரோல் பண்ணியிருக்காங்க.”
‘`விஜய் சேதுபதியைப் பத்தித் தெரிஞ்சுக்க ஆர்வம்...’’
“நரசிம்மரெட்டி வாழ்க்கையில அவருக்கு ஆதரவா தமிழ் நாட்டுல இருந்து ராஜபாண்டின்னு ஒரு வீரன் தன்னுடைய படையுடன் வந்து ஆங்கிலேயருக்கு எதிரா சண்டை போட்டிருக்கான். அந்த கேரக்டர்லதான் விஜய் சேதுபதி நடிச்சிருக்கார். இந்த ராஜபாண்டி கேரக்டர்ல யார் நடிக்கலாம்னு பேச்சு வந்தப்போ நான்தான் விஜய் சேதுபதி பேரைச் சொன்னேன். அவர் தமிழ்ல எவ்ளோ பிஸியா நடிச்சிட்டிருக்கார்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும், அவர்கிட்ட கேட்கலாம்னு தோணுச்சு. போன் அடிச்சேன். ‘ராஜ பாண்டின்னு ஒரு கேரக்டர். நீங்க நடிச்சா நல்லாருக்கும்னு நினைக்கிறேன்’னுதான் சொன்னேன். ‘உங்க படத்துல நடிக்கிறது எனக்குப் பெருமை சார். நிச்சயமா வந்து நடிக்கிறேன்’னு சொன்னார். விஜய் சேதுபதி சிம்பிள்னு தெரியும். ஆனால், இவ்ளோ ஹம்பிளான மனிதர்னு அன்னைக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். ஜார்ஜியாவுல ஷூட்டிங் நடக்கும்போது நாங்க தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பெரிய ரசிகர்கள் கூட்டமே வரும். முக்கால்வாசிப்பேர் விஜய் சேதுபதியைப் பார்க்க வந்திருந்தவங்க. திறமையான நடிகர்கள் வரிசையில கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக நான் விஜய் சேதுபதியைப் பார்க்குறேன். விஜய் சேதுபதி என் தம்பி. என் தம்பிகூட நடிச்சதுல எனக்குத்தான் பெருமை.’’

‘`அமிதாப் பச்சன் என்ன சொன்னார்?’’
‘`அமிதாப்ஜியுடன் ரொம்ப வருஷ நட்புங்கிறதால உரிமையோடு ‘இந்தப் படத்துல நீங்க நடிக்கணும், உங்களுக்கு என்ன வேணும்?’னு கேட்டேன். ‘இது என் நண்பனுக்காக நான் பண்ணப்போற படம். என்னுடைய டிராவல், ரூம்னு எதைப் பத்தியும் கவலைப்படாத. மறுபடியும் சம்பளம்னு நீ பேசுனா, இந்தப் படத்துல நான் நடிக்கமாட்டேன்’னு சொன்னவர், ஒரே ஒரு வேண்டுகோள் வெச்சார். ‘எனக்குத் தென்னிந்திய உணவுகள் ரொம்பப் பிடிக்கும். ஷூட்டிங்குக்கு வரும்போது எனக்கு நல்ல சாப்பாடு கொடு, போதும்’னு சொன்னார். அவர் ஐதராபாத்ல இருந்த அத்தனை நாளும் என் வீட்ல இருந்துதான் அவருக்குச் சாப்பாடு. எதையும் எதிர்பார்க்காமல் வந்து நடிச்சுக் கொடுத்த அமிதாப் சாருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கேன்.”
‘`எல்லா மொழிப் படங்களிலும் நடிச்சிருக்கீங்க. ஆனா, தெலுங்கு தவிர மற்ற மொழிகளில் நேரடியான படங்கள் அதிகம் பண்ணாததற்குக் காரணம் என்ன?’’
“என் வாழ்க்கையில போட்டோ ஆல்பம் எடுத்துக்கிட்டு வாய்ப்பு கேட்டு நான் எங்கேயும் போனதே கிடையாது. சென்னைல ரஜினிகாந்த் படிச்ச பிலிம் இன்ஸ்டிட்யூட்லதான் நானும் படிச்சேன். நான் படிச்சுக்கிட்டு இருக்கும்போதே முதல் பட வாய்ப்பு வந்துச்சு. அந்தப் பட ஸ்டில் பார்த்துட்டு அடுத்த வாய்ப்பு வந்துச்சு. நடிக்க ஆரம்பிச்ச முதல் வருஷத்திலேயே என் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகிடுச்சு. பாலசந்தர் சார், பாபு சார், விஸ்வநாத் சார்னு பெரிய இயக்குநர்கள் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிட்டேன். ‘காளி’ படம்தான் நான் நடிச்ச முதல் தெலுங்கு - தமிழ்ப் படம். அப்புறம், ‘நீ நேரடித் தமிழ்ப் படத்துல நடிச்சே ஆகணும். ரஜினிக்கு நண்பன் கேரக்டர்’னு சொல்லி ‘ராணுவவீரன்’ படத்துல நடிக்க வெச்சார் எஸ்.பி.முத்துராமன் சார். அடுத்து என்னுடைய மச்சான் அல்லு அரவிந்த் தயாரிப்புல ரஜினி நடிச்ச படம் ‘மாப்பிள்ளை.’ ‘உங்க பேனர்ல நான் நடிக்கிறேன். நீ இந்தப் படத்துல நிச்சயம் நடிக்கணும்’னு ரஜினி கேட்டார். அதனால நானும் அந்தப்படத்துல கேமியோ ரோல் பண்ணினேன். தெலுங்குல நான் ரொம்ப பிஸியா நடிச்சிட்டிருந்ததால மற்ற மொழிகள்ல நேரடியா நடிக்க முடியலை. இயக்குநர்கள், என் நண்பர்கள் கேட்டதுக்காக மட்டுமே சில படங்கள் பண்ணினேன்.”

‘`தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு எல்லாத் தென்னிந்திய சினிமாக்களும் சென்னையை மையமா வெச்சு இயங்கிட்டிருந்த நாள்கள் பத்திச் சொல்லுங்களேன்...’’
“என்னுடைய வாழ்க்கையில மறக்கமுடியாத நாள்கள்னு சொல்லலாம். நினைச்சுப் பார்க்கும்போதே அவ்ளோ சந்தோஷமா இருக்கு. ஒரு ஸ்டூடியோவுக்குள்ள வந்தா ரஜினி படம், கமல் படம், இன்னொரு பக்கம் மம்மூட்டி - மோகன்லால் படம், அந்தப்பக்கம் தெலுங்குப் படங்கள்னு எல்லா வேலைகளும் ஒரே இடத்துல நடந்துகிட்டிருக்கும். பிரேக் கிடைக்கும்போதெல்லாம் எல்லா மொழி நடிகர்களும் ஒரு இடத்துக்கு வந்து ஜாலியா பேசிக்கிட்டே சாப்பிடுவோம். ராஜ்குமார் சார்கிட்ட ஆசீர்வாதம் வாங்குனது, சிவாஜி சாரைச் சந்திச்சது, நானும் ஸ்ரீதேவியும் நடிக்கிறதா இருந்த படத்துக்கு எம்.ஜி.ஆர் சார் க்ளாப் அடிச்சது, நானும் கமலும் ‘ஏக் துஜே கேலியே’ படத்துடைய ஃபர்ஸ்ட் காப்பி பார்த்ததுன்னு நிறைய சம்பவங்கள் மனசுக்குள்ள வந்து போகுது. அஜித்துடைய முதல் படமான ‘பிரேம புஸ்தகம்’ படத்துக்கு நான்தான் க்ளாப் அடிச்சேன். அதேபோல விஜய் படத்துக்கு நானும் ரஜினியும் க்ளாப் அடிச்சு கேமரா ஆன் பண்ணித் தொடங்கி வெச்சோம். அப்பவே, இவங்க ரெண்டு பேரும் பெரிய இடத்துக்கு வருவாங்கன்னு எனக்குள்ள ஒரு எண்ணம் இருந்துச்சு. இன்னைக்கு ரெண்டு பேரும் பெரிய ஸ்டார்ஸ் ஆகிட்டாங்க.”
‘`தென்னிந்திய மக்களின் சினிமா ரசனை பற்றி என்ன நினைக்கிறீங்க?’’
“கொண்டாடுவாங்க. உலகத்துல இருக்கிற எல்லா நாட்டுக்கும் விளையாட்டுதான் முதல் பொழுதுபோக்கு. ஆனா, இந்திய மக்களுக்கு சினிமாதான். குறிப்பா, தென்னிந்திய மக்கள் சினிமாவை அவ்ளோ நேசிச்சுக் கொண்டாடுறாங்க. ‘கைதி நம்பர் : 150’ படம் எனக்கான ரீ என்ட்ரி. நான் நடிக்காமல் இருந்த இடைவெளியில ஆடியன்ஸ் மாறியிருப்பாங்க, எனக்கு ஆரம்பத்துல கிடைச்ச வரவேற்பு இப்பவும் கிடைக்குமான்னு ரொம்ப பயமும், சந்தேகமும் இருந்துச்சு. ஆனா, அந்தப் பட விழாவுக்கு வந்த லட்சக்கணக்கான கூட்டத்தைப் பார்த்ததும் எனக்கு பயம் போயிடுச்சு. வந்த கூட்டத்துல பாதிப்பேர் 20 வயசுப் பசங்க. அவங்களுக்கு அவங்க அப்பா அம்மா சொல்லித்தான் என்னைப் பத்தித் தெரிஞ்சிருக்கும். ஆனா, கூட்டம் கூட்டமா வந்தாங்க. மக்களுக்கு ஒரு ஹீரோவை ஒருமுறை பிடிச்சிட்டா, வாழ்நாளுக்கும் விடமாட்டாங்க. ரொம்ப எமோஷனலா அவ்ளோ அன்பு காட்டுவாங்க. ரசிகர்கள் இல்லைன்னா நான் இல்லை. அவங்க எல்லோரும் கடவுள் கொடுத்த வரம்.

‘`மத்திய அமைச்சர் அளவுக்கு உயர்த்திய அரசியலை ஏன் விட்டு விலகிட்டீங்க?’’
“ஒன்பது வருஷ அரசியல்ல நிறையவே கத்துக்கிட்டேன். எனக்கு அரசியல் சரிப்பட்டு வராதுன்னு கொஞ்சம் லேட்டாத்தான் புரிஞ்சது. இந்தச் சமூகத்துக்கு ஏதாவது பண்ணணும்னு முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தேன். ஆனா, ஒவ்வொரு முறையும் அரசியல் நன்றிகெட்ட தொழில்னு உணர்த்திக்கிட்டே இருந்துச்சு. அந்த ஒன்பது வருஷங்கள்ல அரசியல்னா என்ன, அரசியல்வாதி எப்படி இருப்பாங்க, அவங்க மனநிலை எப்படி இருக்கும்னு நல்லாத் தெரிஞ்சுகிட்டேன். தப்பே பண்ணாம நம்ம மேல குற்றம் சொல்லுவாங்க. அதை மீடியா வேற மாதிரி கொண்டுபோகும்னு அதிக மன உளைச்சலைக் கொடுத்த நாள்கள் அவை. என்னைப்போல எமோஷனலானவர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது.”

‘`கமலின் ஒரு வருட அரசியல் பயணம், ரஜினியின் அரசியல் அறிவிப்பு... இரண்டையும் எப்படிப் பார்க்கிறீங்க?’’
“இப்போ அரசியல்ல எல்லாமே பணம்தான். உண்மையா நல்ல அரசியல் பண்ணணும்னு வருவோம்; ஆனா பண்ணமுடியாது. சினிமாவுல நான் நம்பர் ஒன் இடத்துல இருந்தேன். அதையெல்லாம் விட்டுட்டு, அரசியலுக்கு வந்தேன்னா அப்போ எவ்வளவு ஆர்வத்தோட வந்திருப்பேன்னு பாருங்க. ஆனா, என் சொந்தத் தொகுதியில என்னைத் தோற்கடிக்கக் கோடிக்கணக்குல செலவு பண்ணுனாங்க. என்னைத் தோற்கடிச்சாங்க. அப்போ நான் ரொம்ப நொந்துபோயிட்டேன். இதேதான் என் தம்பி பவன் கல்யாணுக்கும் நடந்தது.
இந்த முறை கமல் ஜெயிப்பார்னு எதிர்பார்த்தேன். ஆனா, அது நடக்கலை. தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்கள்னு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தால் யார்வேணாலும் அரசியலுக்கு வரலாம். முன்னாடி சொன்ன மாதிரி என்னைப்போல சென்சிட்டிவா இருக்குறவங்களுக்கு அரசியல் சரிப்படாது. கமல், ரஜினி என்னை மாதிரி இருக்கமாட்டாங்கன்னு நம்புறேன். என் நண்பர்களான ரஜினி, கமல் ரெண்டு பேருக்கும் என்னோட வேண்டுகோள் ஒண்ணுதான். அரசியல் வேண்டாம். It’s Not worth it. ஆனா, இதையெல்லாம் மீறி எவ்வளவு தோல்விகள், ஏமாற்றங்கள், கெட்ட பெயர்கள் வந்தாலும் அசராமல் மக்களுக்காக ஏதாவது செஞ்சே ஆகணும்னு நினைச்சா, அரசியலுக்கு வாங்க; அரசியல்ல தைரியமா செயல்படுங்க. ஒருநாள் காலம் உங்களுக்கானதா மாறலாம்.’’