சினிமா
Published:Updated:

“சாதிப் பட முத்திரை பத்திக் கவலையில்லை!”

கௌதம் கார்த்திக்
பிரீமியம் ஸ்டோரி
News
கௌதம் கார்த்திக்

எனது நிறம் படங்கள் பண்ணுறதுக்குத் தடையா இல்லை. ஆனால், சிரமமா இருந்திருக்கு.

மணிரத்னத்தின் அறிமுகம். ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’ போன்ற படங்களில் கவனிக்க வைத்தாலும் சடாரென்று ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற படங்களிலும் நடிக்கத் தயாராக இருக்கிறார் கெளதம் கார்த்திக். சினிமாவில் எட்டு ஆண்டு களைக் கடந்திருக்கும் அவரோடு ஒரு சின்ன உரையாடல்.

கௌதம் கார்த்திக்
கௌதம் கார்த்திக்

‘`தாத்தா, அப்பா போலவே நீங்களும் நடிகராகணும்னு முதல்லயே முடிவு பண்ணிட்டீங்களா?’’

“சின்ன வயசுல என்கிட்ட நிறைய பேர், ‘நீ உங்க அப்பா, தாத்தா மாதிரி நடிகனாகணும்’னு சொல்லுவாங்க. அதைக் கேட்கும் போதெல்லாம், `அவங்க பண்ணுனதையே நான் ஏன் பண்ணணும். நாம வேற ட்ராக்ல போகலாமே’ன்னுதான் தோணும். அதனால சினிமாவை ஓரமா வெச்சிட்டுப் படிக்க ஆரம்பிச்சிட்டேன். ஒரு நாள் அப்பா , ‘மணிரத்னம் சார் உன்னை மீட் பண்ணணும்னு சொன்னார். போய்ப் பாருடா’ன்னு சொன்னார். மணிரத்னம் ஆடிஷன் வெச்சிட்டு, ‘நீதான் என் படத்தோட ஹீரோ’ன்னு சொல்லிட்டார். அதுக்கப்புறம்தான் நடிக்கலாம்னு முடிவே பண்ணினேன்.’’

‘`மணிரத்னம் ஹீரோவா அறிமுகமான நீங்க திடீர்னு அடல்ட் காமெடி, குறிப்பிட்ட சாதியை மையமா வெச்சு எடுக்குற படங்கள்னு ரூட்டை மாத்திட்டீங்களே?’’

‘` ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ கதையை முதலில் சந்தோஷ் சொல்லவே இல்லை. படத்தோட பாடல்களைப் போட்டுக் காட்டினார். எல்லாமே இப்போ இருக்கிற ஜெனரேஷனுக்கு ஏற்ற மாதிரி இருந்ததால நடிக்கலாம்னு முடிவு பண்ணினேன். அதுக்கப்புறம்தான் படத்தோட கதையைச் சொன்னார். ஜாலியா இருந்துச்சு. இருந்தாலும் ரிஸ்க் எடுக்குறோமோன்னு தோணுச்சு. அடல்ட் காமெடியை அதுக்கான மீட்டருக்குள்ள எடுக்கணும். கொஞ்சம் அதிகமானாலும் தப்பாப் போயிடும். ஆனாலும், ஒரு நடிகரா எல்லாவிதமான ஜானர்களிலும் படம் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். குறிப்பிட்ட ஒரு சாதி சார்ந்துதான் படங்கள் பண்ணுறேன்னு சிலர் முத்திரை குத்துறாங்க. அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஒரு நடிகரா நான் எல்லா ஆடியன்ஸையும் ரீச் பண்ணணும், அவ்வளவுதான்.’’

கௌதம் கார்த்திக்
கௌதம் கார்த்திக்

‘`அப்படியானால் உங்களுக்கான கதைகளை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறீங்க?’’

‘`நான் ஒரு நல்ல படம் பண்ணணும்னு ஆசைப்படுறேன். அது பார்க்கிறவங்களுக்குப் பிடிக்கணும்னு நினைக்கிறேன். பிடிச்சிருந்தா சந்தோஷம்; பிடிக்கலைனா, அது ஏன் பிடிக்கலைன்னு தெரிஞ்சுக்கிட்டு அடுத்த படத்தில் அதைச் சரிசெய்ய முயற்சி எடுப்பேன். நான் சைக்காலஜி படிச்சிருக்கிறதால, கதை கேட்டதும் இந்த கேரக்டரை எப்படி உருவாக்கலாம்னு யோசிப்பேன். அந்தக் கேரக்டரை எனக்குள்ள கொண்டு வந்திடுவேன். அதுக்கான எமோஷனையும் என்னால ஈஸியா கொடுக்க முடியுது. அதனாலேயே, வேற வேற மாதிரியான கேரக்டர்களா தேர்ந்தெடுத்து நடிக்கணும்னு ஆசைப்படுறேன்.’’

‘`எல்லாவிதமான ஜானர்களிலும் படம் பண்ணணும்னு சொல்றீங்க. ஆனால், உங்களோட கலர், லுக் அதுக்குத் தடையா இருக்குன்னு நினைக்கிறீங்களா?’’

``எனது நிறம் படங்கள் பண்ணுறதுக்குத் தடையா இல்லை. ஆனால், சிரமமா இருந்திருக்கு. `கடல்’ படத்துல கமிட்டானதுமே மணி சார் என்னை மீனவர்களோடு பழகச்சொன்னார். `அவங்களோடு அடிக்கடி பீச்ல போய் சுத்தி, வெயிலில் கொஞ்சம் கறுத்துட்டு வா’ன்னு சொன்னார். இதுவரைக்கும் நான் பண்ணின படங்களிலேயே, `ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’, `இந்திரஜித்’ படங்களில் மட்டும்தான் என் ஒரிஜினல் கலரில் நடிச்சிருக்கேன். மற்ற எல்லாப் படங்களிலுமே மேக்கப் மூலமா கலரைக் குறைச்சுட்டுத்தான் நடிச்சிருக்கேன். மேக்கப் போட்டு நடிக்கும்போதும், வியர்வையால அது அழிஞ்சு ஒரிஜினல் கலர் தெரிய ஆரம்பிச்சிடும். உடனே, மேக்கப் மேன் ஓடி வந்து டச்சப் பண்ணுவார். இதுதான் எனக்கு ரொம்ப சிரமமா இருக்கும்.’’

‘`சிம்புகூட நீங்க சேர்ந்து நடிச்ச ‘மஃப்ட்டி’ பட ரீ-மேக்கின் ஸ்டேட்டஸ் அப்டேட் என்ன?’’

‘`செம ஜாலி அனுபவமா இருந்துச்சு. சிம்பு ஸ்பாட்டுக்கு வந்துட்டார்னா, பட்... பட்னு எல்லா சீனையும் முடிச்சிட்டுக் கிளம்பிடுவார். அது எப்படி அவரால முடியுது, அதோட டெக்னிக் என்னன்னு தெரிஞ்சுக்கவே முடியலை. எல்லாரும் இந்தப் படம் டிராப் ஆகிடுச்சுன்னு பேசிக்கிறாங்க. ஆனால், சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார்கிட்ட பேசும்போது, ‘நிச்சயம் திரும்பவும் ஆரம்பிப்போம்’னு சொன்னார். அப்போ சிம்புவோட டெக்னிக்ஸைக் கத்துக்கணும்.’’

‘`அர்ஜுன், அர்விந்த் சுவாமி, பிரபு, விவேக், விஜய் சேதுபதி, உங்க அப்பா கார்த்திக் வரைக்கும் பல சீனியர் நடிகர்களோடு நடிச்சிருக்கீங்க. இந்த அனுபவம் எப்படி இருந்தது?’’

‘`நான் சீனியர் நடிகர்களோடு நடிச்ச படங்களில் அவங்ககிட்ட இருந்து எதாவது ஒரு விஷயத்தை உள்வாங்கி நடிச்சிருக்கிறது தெரியும். இது எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய ப்ளஸ். ஒவ்வொரு படத்துக்கும் சீனியர் நடிகர்களோட சப்போர்ட் இருந்துச்சுன்னா, என்னை மாதிரி வளர்ந்து வர நடிகர்களுக்கு அது ரொம்பவே பயன்படும். `என்னமோ ஏதோ’ படத்துல பிரபு அங்கிளோடு நடிக்கும்போது, ‘உங்க அப்பா மாதிரியே பண்ணுற’ன்னு அடிக்கடி சொல்லுவார். ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படத்துல விஜய் சேதுபதி அண்ணாகூட நடிக்கும்போது, அவர் எப்படி ஒவ்வொரு சீனையும் அப்ரோச் பண்ணுறார்னு பக்கத்துல இருந்து பார்த்தேன். அவர்கூட நடிக்கிறது ஒரு பிலிம் ஸ்கூல்ல இருக்கிற ஃபீல் கொடுக்கும்.’’