Published:Updated:

"ஜோதிகாவைப் பார்க்க அடிக்கடி ஸ்பாட்டுக்கு வருவார் சூர்யா!" - நிகிலா விமல்

Nikhila Vimal
Nikhila Vimal

மலையாளத்துல நடிக்கிறது நம்ம குடும்பத்தோடே இருக்கிற மாதிரி இருக்கும். ஆனா, தமிழ் சினிமா ரொம்ப புரொஃபஷனலா இருக்கு.

ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான் என மலையாளத்தில் டாப் ஹீரோக்களுடன் ஜோடிபோட்டுவிட்ட நிகிலாவுக்கு தமிழில் கொஞ்சம் அமைதியான அறிமுகம்தான். 'வெற்றிவேல்', 'கிடாரி' படங்களுக்கு அடுத்து சிபிராஜுடன் 'ரங்கா', கார்த்தி-ஜோதிகா படம், இரண்டு மலையாளப் படங்கள் என மீண்டும் நிகிலா பிஸி. அவரிடம் பேசினேன்.

'ரங்கா' பட அனுபவம் எப்படி இருந்தது?

"தமிழ்ல நான் கிராமத்துப் படங்கள்லதான் நடிச்சிருக்கேன். அதுக்குப் பிறகு, எனக்கு வந்த கதைகளும் அதே ஜானர்லதான் இருந்தது. ஆனா, இந்தப் படத்துல நான் சிட்டி பொண்ணு. அதனாலதான் இதைக் கமிட் பண்ணேன். கணவன் - மனைவி ரெண்டு பேரும் திருமணமாகி ஹனிமூனுக்குக் காஷ்மீர் போவாங்க. அங்கே அவங்களுக்கு ஒரு பிரச்னை வரும். அதுல இருந்து எப்படித் தப்பிச்சு வெளியே வர்றாங்க அப்படிங்கிறதை சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர்ல சொல்லியிருக்கார் இயக்குநர் வினோத். நான் முதல்முறையா இந்தப் படத்தோட ஷூட்டிங்காகத்தான் காஷ்மீர் போனேன். வெறும் பாடல்களை மட்டும் காஷ்மீர்ல ஷூட் பண்ணாம, இந்தப் படத்துல நிறைய ஆக்‌ஷன் சீக்வென்ஸை காஷ்மீர்ல எடுத்திருக்கோம். அதுவே ரொம்ப சவாலா இருந்தது."

ஜீத்து ஜோசப் இயக்கத்துல கார்த்திகூட நடிச்ச அனுபவம்?

Karthi, Nikhila Vimal
Karthi, Nikhila Vimal

"இந்தப் படத்துக்கு முன்னாடி மலையாளத்துல ஜீத்து சார் இயக்கின ஒரு படத்துல நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனா, அந்த நேரத்துல அதுல நடிக்க முடியாமல் போயிடுச்சு. அந்த ஒரு வருத்தம் மனசுக்குள்ள இருந்துகிட்டே இருந்தது. அதுக்குப் பிறகு, இந்தப் படத்துல அவர் நடிக்கக் கூப்பிட்டவுடன், 'இந்த முறை மிஸ் பண்ணிடக்கூடாது'னு ஓகே சொல்லிட்டேன். இதுல நான் கார்த்தி சாருக்கு ஜோடியா நடிச்சிருக்கேன். என் கேரக்டர் கவனிக்கப்படும். ஜோதிகா மேடம் - கார்த்தி சார் போர்ஷன் சூப்பரா இருக்கும். இதுவும் ஒரு த்ரில்லர் ஜானர் படம்தான். கார்த்தி சார் உதவி இயக்குநரா இருந்து கத்துக்கிட்ட நிறைய விஷயங்கள் அவருக்கு நடிக்கிறதுல ரொம்ப உதவியா இருக்கு. நான் நடிக்கும்போதும் நிறைய கரெக்‌ஷன் சொல்லி என்னைச் சரி பண்ணுவார். நாம நல்லா நடிக்கணும்னு மட்டுமே யோசிக்கிற பலபேர் மத்தியில நம்மகூட நடிக்கிறவங்களும் நல்லா நடிக்கணும்னு நினைக்கிற நல்ல மனிதர்."

ஜோதிகா சூப்பர் சீனியர். அவங்களோடு நடிச்ச அனுபவம் சொல்லுங்க?

''ஜோதிகா மேடம்கூட நடிச்சதுல நிறைய கத்துக்கிட்டேன். ஒவ்வொரு நாளும் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அவங்களுக்கு அவங்க குடும்பம்தான் எல்லாம். ஸ்பாட்ல சூர்யா சார், குழந்தைகள்னு ஃபேமிலி பத்திதான் நிறைய பேசுவாங்க. அவங்களைப் பார்க்க சூர்யா சார் அடிக்கடி ஸ்பாட்டுக்கு வருவார். ஜோதிகா மேடத்தின் தம்பிதான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். அவங்க குடும்பப் படங்கிறதுனால அவங்க ஃபேமிலியில இருந்து நிறைய பேர் ஸ்பாட்டுக்கு வருவாங்க. என்னையும் அவங்க குடும்பத்துல ஒருவராதான் ட்ரீட் பண்ணாங்க. இந்தப் படம் கோயம்புத்தூர், ஊட்டி மாதிரியான இடங்கள்ல நடந்ததனால குழந்தைகளை அவங்க ரொம்பவே மிஸ் பண்ணாங்க. ஒருநாள் அவங்களுக்கு ஷூட்டிங் இல்லைன்னாகூட சென்னைக்குப் போய் குழந்தைகளைப் பார்த்துட்டு வந்திடுவாங்க. எல்லா எமோஷனையும் அழகா வெளிக்காட்டுற நடிகை. டைரக்டர் ஒரு கரெக்‌ஷன் சொன்னால் அதை உடனே சரி பண்ணி அசத்திடுவாங்க."

Vikatan

சத்யராஜ் மாதிரியான சீனியர் நடிகர்கூட நடிச்சது எப்படி இருந்தது?

Nikhila Vimal
Nikhila Vimal

" 'ரங்கா' படத்திலேயே சத்யராஜ் சாரை சந்திக்கணும்னு சிபிகிட்ட கேட்டிருந்தேன். இந்தப் படத்துல அவருடன் நடிக்கிற வாய்ப்பே அமைஞ்சது. ரொம்ப ஜாலியான நபர். ஸ்பாட்டை கலகலப்பா வெச்சிக்குவார். அதேபோல நடிப்புனு வந்துட்டா அவ்ளோ டெடிகேஷன். சொன்ன டைமிங்கை மிஸ் பண்ணமாட்டார். இது எல்லாம்தான் அவர் மாதிரியான ஆட்களை நமக்கு இன்ஸ்பிரேஷனா இருக்க வைக்குதுன்னு நினைக்கிறேன். அவருடைய பிறந்தநாளை ஸ்பாட்ல கொண்டாடினோம்."

படங்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீங்க?

Nikhila Vimal
Nikhila Vimal

"படம் நல்லாப் போகும் போகாதுங்கிறது நம்ம கையில இல்லை. ஆனா, நம்ம வேலையை சரியா செய்யணும்னு நினைக்கிறேன். அதிக உழைப்பைப் போட்டு ஒரு படம் பண்ணியிருப்போம். ஆனா, அது ரிலீஸாகாமலேயே போயிரும். அப்போ நம்முடைய உழைப்பு வீணாகுதேனு வருத்தமா இருக்கும். சின்ன கேரக்டரா இருந்தாலும் பரவாயில்லை, அதுல நம்மை நிரூபிச்சுக்கலாம். ஆனா, படம் ரிலீஸாகிடும்கிற நம்பிக்கை இருக்கிற படங்கள்ல நடிக்கணும்னு நினைக்கிறேன். படம் முழுக்க எனக்கு முக்கியத்துவம் இருக்கணும்னு நினைக்கிறதும் தவறு. ஒரு படம் பண்ணா அதுல ஒரு சீன்லயாவது நான் ஸ்கோர் பண்றதுக்கான ஸ்கோப் இருக்கணும். அதேபோல எவ்வளவு பெரிய படமா இருந்தாலும் ஒரு பாட்டுக்கு மட்டும் வர்றதுல எனக்கு விருப்பமில்லை."

மலையாளம் - தமிழ்னு ரெண்டு சினிமாவுலயும் நடிக்கிறதுல என்ன வித்தியாசம்?

Nikhila Vimal, Fahadh Faasil
Nikhila Vimal, Fahadh Faasil

"மலையாளத்துல ஆசிஃப் அலி, ஃபஹத் பாசில், துல்கர் சல்மான்னு நிறைய பேருடன் நடிச்சிருக்கேன். எல்லோரும் நெருக்கமான நண்பர்கள். மலையாளத்துல நடிக்கிறது நம்ம குடும்பத்தோடே இருக்கிற மாதிரி இருக்கும். ஆனா, தமிழ் சினிமா ரொம்ப புரொஃபஷனலா இருக்கு. கோலிவுட்ல ஆபீஸ் போற மாதிரி 9 மணி முதல் 6 மணி வரை ஷூட்டிங் நடக்கும். ஆனா, மலையாளத்துல காலையில 6 மணிக்கு ஆரம்பிச்சு இரவு 10 மணி வரைக்கும்கூட ஷூட்டிங் நடக்கும். அவ்ளோ நேரம் ஸ்பாட்ல இருக்கிறதனால குடும்பம் மாதிரியாகிடும். தவிர, மலையாள படம் கேரளாவுக்குள்ளேயே அதிகம் எடுக்கிறதுனால இயக்குநர் குடும்பம், ஹீரோ குடும்பம்னு எல்லோருடைய குடும்பமும் அப்பப்போ ஸ்பாட்டுக்கு வந்திடுவாங்க. யார் ஊர்ல ஷூட்டிங் நடக்குதோ அவங்க வீட்டுல இருந்து சாப்பாடு வந்துடும். தமிழ் படம் பண்ணும்போது குறிப்பிட்ட நேரத்துக்குள்ள எடுத்து முடிக்கணும்னு வேகமா ஷூட்டிங் நடக்கும். ஆனா, மலையாள படம் பண்ணும்போது 6 மணிக்கு மேல எல்லோரும் ரிலாக்ஸா உட்கார்ந்து நிறைய விஷயங்கள் பேசுவாங்க. இப்படி ஆறேழு வித்தியாசம் இருக்கு."

தமிழ்ல எந்த இயக்குநர்களுடைய படத்துல நடிக்கணும்னு நினைக்கிறீங்க?

Nikhila Vimal
Nikhila Vimal

"நான் நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன். இப்போ தமிழ்ல நிறைய மாற்று சினிமாக்கள் வர ஆரம்பிச்சிருக்கு. கார்த்திக் சுப்புராஜ், ராஜுமுருகன், நலன் குமாரசாமி இவங்க மாதிரியான இயக்குநர்கள் படத்துல நடிக்கணும்னு ஆசை. அதே மாதிரி, தனுஷ், விஜய் சேதுபதி இவங்க ரெண்டு பேரும் அந்தக் கேரக்டரா எப்படி மாறுறாங்க அப்படிங்கிறதைக் கூட இருந்து பார்த்து கத்துக்கணும்னு ஆசைப்படுறேன்."

அடுத்த கட்டுரைக்கு