கட்டுரைகள்
Published:Updated:

ராதிகா சொன்ன அட்வைஸ்...

நிரோஷா
பிரீமியம் ஸ்டோரி
News
நிரோஷா

``சீரியல் ஷூட்டிங் இருந்தா கால்ல சக்கரம் கட்டாத குறையா ஓடிட்டே இருப்போம். அதனால இப்ப நல்லா ரெஸ்ட் எடுக்கறேன். - நிரோஷா

சினிமா ஓய்வு கொடுத்துவிட்டால், சின்னத்திரையை சீசன்-2 ஆக்கி இரண்டாவது இன்னிங்சைத் தொடர்வது ஹீரோயின்கள் மத்தியில் எப்போதோ டிரெண்ட் ஆகிவிட்டது. ராதிகா, குஷ்புவிலிருந்து மீனா, ரேகா, சிம்ரன், லைலா எனப் பட்டியல் நீண்டு ப்ரியா ராமன் வரைக்கும் வந்து நிற்கிறது. இவர்களில் வெறுமனே சீரியலில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.

ராதிகா, குஷ்பு எனச் சிலரோ நடிப்பு, தயாரிப்பு எனப் பல களங்களிலும் சாதிக்கிறார்கள். `சித்தி’யிலிருந்து சித்தி-2 வரைக்கும் ராதிகாவின் பயணம் தொடர, தற்போது அவரின் தங்கை நிரோஷாவும் சீரியல் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். ‘உயிரே’, ஒரு தயாரிப்பாளராக இவரது முதல் சீரியல்.

நிரோஷா
நிரோஷா

‘`சின்னதா சொந்த அனுபவம். அதுகூட, வெற்றிகரமான சீரியல் தயாரிப்பாளரா இருக்கிற அக்காவின் வழிகாட்டுதல்களும் நிறைய கிடைக்க, `முயற்சி பண்ணலாமே’ன்னு அடியெடுத்து வெச்சிருக்கேன். 50 எபிசோடுகளைக் கடந்திருக்கோம். தினமொரு அனுபவம் கிடைக்குது. நிறைய கத்துக்கிட்டு வர்றேன். ஒருசமயத்துல அக்கா தந்த சில அறிவுரைகள் எனக்குக் கசந்திருக்கு. இன்றைக்கு அதற்கான நியாயங்களை உணர முடியுது’’ என்றவரிடம் கேள்விகளை முன்வைத்தேன்.

‘`சீரியல்கள் டி.ஆர்.பி பின்னால் ஓடுகிற சூழலில் சீரியல் தயாரிப்பாளர் அனுபவம் எப்படி இருக்கு?”

‘`அக்கா சீரியல் தயாரிக்கறதைப் பக்கத்துல இருந்தே பார்த்திருக்கேன். அவங்க சீரியல்ல அவங்க கூடவே நடிச்சிருக்கேன். எவ்ளோதான் இருந்தாலும், தனியா களத்துல இறங்கின பிறகுதான் இதுல இருக்கிற நெளிவுசுளிவு, ரிஸ்க் எல்லாத்தையும் உணர முடியுது. ஒருகாலத்துல சன் டிவி மட்டுமே இருந்தது. இன்னைக்கு எக்கச்சக்கமா சேனல்கள் வந்திடுச்சு. சீரியல்களும் அதேபோலத்தான். சீரியல்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கை வச்சு அந்த சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகுமா இல்லையாங்கிற முடிவுக்கு வந்திடுறாங்க. அந்த ரேட்டிங் தெரிகிற வியாழக்கிழமையை நினைச்சாலே வயித்துல புளியைக் கரைக்குது. ஸ்கூல் நாள்கள்ல பரீட்சை எழுதிட்டு ரிசல்ட் வர்ற தேதியை எப்படி ஒருவிதப் பதற்றத்தோடு எதிர்பார்த்திட்டிருப்போம். அந்த பயத்தையெல்லாம் தாண்டி விட்டது இந்த டி.ஆர்.பி எதிர்பார்ப்பு. எப்படியோ எங்க சீரியலை மக்கள் ஓரளவு ஏத்துக்கிட்டாங்கன்னு தெரிய வந்திருக்கு. ஆனா தினம் தினமும் ஜெயிச்சிட்டே இருக்க வேண்டியிருக்கே, மக்கள் ஆதரவு எப்பவும் கிடைக்கும்னு நம்பறோம்’’

நிரோஷா
நிரோஷா

``ராதிகாவின் முக்கியமான ஒரு அட்வைஸ்?’’

‘`என் வாழ்க்கையைப் பொறுத்தவரைக்கும் கோடு போட்டது, ரோடு போட்டது எல்லாமே என் அக்காதான். சினிமாவுல இருந்தப்ப என்னுடைய நடிப்புல ஏதாச்சும் தப்பு இருந்தா அவ்வளவு திட்டியிருக்காங்க. அதுக்காகக் கோபிச்சிட்டு நான் அவங்களோடு பேசாம இருந்திருக்கேன். ஆனா அதே அக்கா ‘சந்திரகுமாரி’ சீரியல்ல என் நடிப்பைப் பாராட்டவும் செஞ்சாங்க. நான் அவசரப்பட்டு படபடன்னு பேசிவிடுகிற டைப். ’அது கூடாது’ன்னு சொன்னாங்க. `சீரியல் தயாரிப்புல மட்டுமில்ல, எல்லா நேரத்துலயும் நான் சொல்ற இந்த ஒரு விஷயத்தை மட்டும் கேளு’ன்னு சொல்லியிருக்காங்க. நான் அவங்களை என்னுடைய அம்மாவாகவே நினைக்கிறதால, அவங்களோட இந்த அறிவுரையைக் கேக்க முயற்சி பண்ணிட்டிருக்கேன்’’

நிரோஷா, ராதிகா
நிரோஷா, ராதிகா

‘`மறுபடியும் நீங்களும் ராம்கியும் சேர்ந்து நடிப்பீங்கன்னு பார்த்தா, ரெண்டு பேரும் சேர்ந்து கொரோனா விளம்பரப் படத்துல வர்றீங்களே?’’

``அந்த விளம்பரம் அவர் டைரக்ட் பண்ணியது. அவரோட ‘விளம்பரப் பட டைரக்டர் ரோல்’ அவ்வளவா வெளியில தெரியாது. அரசு விளம்பரங்களைப் பண்ணித் தர்றார். நடிகர் விவேக் நடிச்ச `கொரோனா’ விளம்பரமுமே இவர் பண்ணினதுதான்.

சினிமாவுல மறுபடியும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வராதான்னு நாங்களும் எதிர்பார்த்துட்டுதான் இருக்கோம். அப்படியான கேரக்டர் வந்தால் பண்ணத் தயாராகவே இருக்கோம்.’’

 ராம்கி, நிரோஷா
ராம்கி, நிரோஷா

``க்வாரன்டீன் நாள்கள் எப்படி நகர்கின்றன?’’

``சீரியல் ஷூட்டிங் இருந்தா கால்ல சக்கரம் கட்டாத குறையா ஓடிட்டே இருப்போம். அதனால இப்ப நல்லா ரெஸ்ட் எடுக்கறேன். அவருக்கும் எனக்கும் பிடிச்சதை சமைச்சு சாப்பிடுறோம். தயாரிப்பு தொடர்பா வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய சின்னச் சின்ன வேலைகளைப் பண்றேன். என்னைப் பொறுத்தவரைக்கும் கட்டிப்போட்டது மாதிரியெல்லாம் இல்ல. அதனால ஒருபக்கம் என்ஜாய் பண்ணக் கிடைச்சது மாதிரிதான் நினைக்கத் தோணுது. அதேநேரம் `கொரோனா’ எப்ப ஒழியும், மக்கள் எப்ப சகஜ நிலைக்குத் திரும்புவாங்கன்னும் மனசு நினைக்கத் தொடங்கிடுச்சு.’’