Published:Updated:

“கடைசியா எந்தப் படம் நடிச்சேன்னே மறந்துடுச்சு!”

பிரியாமணி
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியாமணி

அவுட்புட் பார்த்துட்டு திருப்தியா இருந்ததும் ஷூட்டிங் ஆரம்பிச்சாங்க.

இத்தனை ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பலரின் நினைவில் நிற்கும் பெண் கதாபாத்திரங்கள் மிகக் குறைவு. `முத்தழகு’ தமிழ் சினிமா என்றும் மறக்காத பெயர். பிரியாமணியைவிட முத்தழகு என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும். ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் பாரதிராஜாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் பிரியாமணி. அவரின் முதல் பட அனுபவத்தில் இருந்து இப்போது நடிக்கும் ‘நாரப்பா’ வரை சினிமா அனுபவங்கள் பேசினேன்.

“பிறந்து வளர்ந்தது பெங்களூர்லதான். ஸ்கூல் படிக்கும்போதே மாடலிங் வாய்ப்பு வந்தது. மாடலிங்ல கரியரை ஆரம்பிச்சு மாடலிங்லயே முடிக்கணும்னுதான் ஆசைப்பட்டேன். சினிமாக்குள்ள நுழைஞ்சது நானே எதிர்பார்க்காதது. ‘கண்களால் கைது செய்’ படத்தோட கதையாசிரியர் பிரேம் சார் என்னை ஒரு விளம்பரத் துக்காக கமிட் பண்ணியிருந்தார். அந்தச் சமயத்துல என்னுடைய போட்டோஸைப் பார்த்துட்டு பாரதிராஜா சார், ‘இந்தப் பொண்ணைக் கூப்பிடுங்க. படத்துக்கு ட்ரை பண்ணிப் பார்க்கலாம்’னு சொல்லியிருக்கார். அதுக்குப்பிறகு பாரதிராஜா சாரைச் சந்திச்சு ஃபோட்டோ ஷூட் பண்ணினோம். சரியா இருந்ததும் படத்துல கமிட் ஆனேன்.

தமிழ்ல முதல் படமே பாரதிராஜா சார் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, சுஜாதா வசனம்னு ஒரு கனவு மாதிரியும், பெருமையாவும் இருந்துச்சு. ‘கண்களால் கைது செய்’ படத்துல ஓரளவுக்காச்சும் நான் நல்லா நடிச்சிருக்கேன்னு நீங்க நினைச்சா அதுக்கு முழுக்காரணமும் பாரதிராஜா சார்தான்.

பிரியாமணி
பிரியாமணி

அந்தப் படத்துல நடிக்கும்போது நான் ஸ்கூல் படிச்சிட்டிருந்தேன். ரொம்ப வெகுளி; விஷயம் தெரியாது. ஆனா, பொறுமையா எனக்கும் அந்தப் படத்துல நடிச்ச மற்ற நடிகர்கள் எல்லாருக்கும் பாரதிராஜா சார் நடிப்பு சொல்லிக் கொடுத்தார். இலங்கை, சுவிட்சர்லாந்து, ஊட்டினு பல இடங்கள்ள ஷூட் நடந்துச்சு. படம் வெளியானதும் ரிசல்ட் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்ல. ஆனா, தமிழ் சினிமாவுல எனக்கான விசிட்டிங் கார்டா அந்தப் படம் அமைஞ்சதுல எனக்கு எப்பவும் சந்தோஷம்தான்.

பிரியாமணியின் படங்கள்
பிரியாமணியின் படங்கள்

‘`முதல் படம் பாரதிராஜா இயக்குநர். அடுத்த படம் பாலுமகேந்திரா இயக்குநர்.’’

‘`ஆமாம்... ரெண்டாவது படமே பாலு மகேந்திரா சார் டைரக்‌ஷன்ல, தனுஷுடன் `அது ஒரு கனாக்காலம்’ படத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பு வந்தது. அடுத்தடுத்து சினிமா லெஜண்ட்ஸ் கூட வேலை பார்க்கற வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்னு தெரியலை. ஆனா, இந்தப் படமும் எதிர்பார்த்த அளவு சரியா போகலைன்னாலும் நிறைய பேர் என்னை கவனிக்க ஆரம்பிச்சாங்க. என் நடிப்புக்கும் நல்ல விமர்சனம் வந்தது. அதுக்குப் பிறகு சினிமாவுல எத்தனையோ படங்கள் பண்ணிட்டேன். பெரிய இயக்குநர்கள், நடிகர்கள், நிறைய மொழிகள்னு. ஆனா, என்னுடைய சினிமாப் பயணத்துல எனக்கான குரு யாருன்னு கேட்டா நிச்சயம் அது பாரதிராஜா சாரும், பாலுமகேந்திரா சாரும்தான்.

‘`முத்தழகு அனுபவம் சொல்லுங்க?’’

‘` ‘அது ஒரு கனாக்காலம்’ முடிச்சதும் ஒரு நாள் அமீர் சார் ஆபீஸ்ல இருந்து எனக்கு போன் வந்துச்சு. போனேன். கார்த்தி, நான்னு அந்தக் கதைக்கான போட்டோஷூட் ஒரு நாள் முழுக்க நடந்துச்சு. அவுட்புட் பார்த்துட்டு திருப்தியா இருந்ததும் ஷூட்டிங் ஆரம்பிச்சாங்க.

பிரியாமணி
பிரியாமணி

நான் கதை எதுவும் கேட்க வேயில்லை. அமீர் சார் மேல இருந்த நம்பிக்கையில நடிக்க ஒப்புக்கிட்டேன். தேனி, மதுரை, சிவகங்கைன்னு கதைக்களம், நடிப்புன்னு எல்லாமே என்னுடைய முந்தைய படங்களைவிட வித்தியாசமாவும் சவாலாவும் இருந்தது. கிட்டத்தட்ட 100 நாள்களுக்கு மேல ஷூட்டிங் நடந்தது.

“கடைசியா எந்தப் படம் நடிச்சேன்னே மறந்துடுச்சு!”

ஷூட்டிங் போயிட்டிருந்தபோதே, படத்துக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள்கிட்ட நிறைய இருந்தது. அதுக்கேத்த மாதிரி படம் வெளியானதுக்குப் பிறகு படக்குழுல எல்லோருக்குமே அந்தப் படம் ஒரு அடையாளமா மாறிப்போச்சு. அதுவும் எனக்கு இத்தனை வருஷங்கள் கழிச்சும் முத்தழகு கதாபாத்திரம்தான் பெயர் சொல்லக்கூடியதா இருக்கு. இந்தப் படத்துல என்னுடைய நடிப்புக்காக தேசிய விருது கிடைச்சது வாழ்க்கையில மறக்கவே முடியாத ஒண்ணு.

பிரியாமணி
பிரியாமணி

அந்தப் படத்துக்குப் பிறகு முத்தழகு மாதிரியே நிறைய கதாபாத்திரங்கள் வந்துச்சு. ஆனா, எனக்கு அந்த வட்டத்துக்குள்ள சிக்க விருப்பமில்லை. கமர்ஷியல் ஹீரோயினாவும் படங்கள் பண்ண ஆசை இருந்தது. அதனால், முத்தழகை அந்தப் படத்தோட விட்டுட்டு அடுத்து சில கமர்ஷியல் படங்கள் தமிழ்ல பண்ணினேன். ஆனா, அந்தப் படங்கள் எதுவும் பெரிய அளவுல ஹிட் ஆகலை. நடிப்புக்கு தேசிய விருது வாங்கியும் எனக்கான இடம் தமிழ் சினிமால கிடைக்கலைங்கற வருத்தம் எனக்கு இப்பயுமே இருக்கு. உண்மையைச் சொல்லணும்னா, தமிழ்ல கடைசியா எந்தப் படம் நடிச்சேன்கிறதுகூட எனக்கு சரியா நினைவுல இல்லை.’’

`` ‘அசுரன் தெலுங்கு வெர்ஷன், பாலிவுட், வெப் சீரிஸ்ன்னு இப்பவும் செம பிஸிபோல?’’

‘`ஆமாம்... இப்போ தெலுங்குல வெங்கடேஷ்கூட ‘நாரப்பா’, இந்தியில அஜய்தேவ்கன்கூட ‘மைதான்’னு ரெண்டு முக்கியமான படங்கள்ள நடிச்சிட்டு இருக்கேன். ‘நாரப்பா’ல என்னோட போர்ஷன் முடிஞ்சிடுச்சு. இன்னொரு பக்கம் வெப் சீரிஸும் போயிட்டிருக்கு. தமிழ் சினிமாவுல சில நல்ல படங்கள்ள நடிக்கறதுக்கான வாய்ப்பு வந்தது. ஆனா, வேற சில படங்கள்ள பிஸியா இருந்ததால நடிக்க முடியாமப்போயிருச்சு. சீக்கிரமே தமிழ் சினிமாக்குள்ள திரும்ப வரணும்னு ஆசை இருக்கு. பார்ப்போம்.”

பிரியாமணி
பிரியாமணி

முத்தழகு சொன்னால் செய்துவிடுவார் என்பது தமிழ் ரசிகர்களுக்குத் தெரியாதா? சீக்கிரம் வாங்க.