Published:Updated:

“அப்பா மாதிரி என்னால் பேச முடியாது!”

ஸ்ருதிஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ருதிஹாசன்

திரும்பவும் எப்போ வேலைக்குப் போவேன்னு இருக்கு.

‘`மூணு மாசத்துக்கு முன்னாடிதான் மும்பைல புதுவீட்டுக்கு ஷிஃப்ட் ஆனேன். செல்லமா நான் வளர்த்துட்டு வர்ற பூனைக்குட்டி கிளாராவும் என்கூட இருக்கா. ரெண்டு பூனைக்குட்டி வளர்த்துட்டு வந்தேன். அதுல ஒண்ணு வெளியே ஓடிப்போயிருச்சு. பாவம் அவ இப்போ எங்க இருக்கான்னு தெரியல. அவ ஞாபகம் வந்தா ஒரே ஃபீலிங்ஸ் ஆகிடும். மிச்சம் இருக்கிற கிளாராவை ரொம்ப பத்திரமா பார்த்துட்டு வரேன்’’ க்யூட்டாகப் பேசுகிறார் ஸ்ருதிஹாசன்.

‘`புது வீடு எப்படியிருக்கு?’’

‘`இந்த வீடு என் ரசனைக்கு ஏத்த மாதிரியிருக்கும். வீட்டுல இருக்குற ஒவ்வொரு பொருளும் ஆசை ஆசையாய் பார்த்து வாங்கி செட் பண்ணியிருக்கேன். லாக்டௌன் ஆரம்பிச்சதுல இருந்து வீட்டை மாத்தி மாத்தி டெகரேட் பண்ணிட்டிருக்கேன். வேலையாளுங்க யாரும் இல்லாததனால, சமைக்குற நேரம் போக தரையைத் துணியால துடைச்சிட்டு வரேன். இருக்குறதுலயே பெரிய எக்சர்ஸைஸ் வீட்டைத் தொடைக்குறதுதான். இதுதான் உண்மையான வொர்க் அவுட்.’’

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

‘‘வீடு துடைக்கிறது தவிர, குவாரன்டைன் நாள்கள் பொழுதுபோக்கு என்ன?’’

‘`இப்பதான் ரொம்ப பிஸியா இருக்கேன். கொஞ்சம் கூட போர் அடிக்கல. இன்ஸ்டால வித்தியாசமான துறையில் இருக்குற ஏழு பெண்களைப் பேட்டி எடுத்தேன். அதுல, புதுசா சில விஷயங்களைக் கத்துக்கிட்டேன். இந்த நேரத்துல ஏதாவது பாட்டு எழுதலாம்னு யோசிச்சா எதுவும் வரமாட்டேங்குது. ‘உலகம் இப்படியொரு சூழல்ல இருக்கே, நிறைய பேர் சாப்பாடு இல்லாம இருக்காங்களே’ன்னு ஃபீல் ஆக ஆரம்பிச்சிடும். உலகமே உறைஞ்சுபோய் நின்னுட்டிருக்கு. எப்போ இந்த நிலைமை சரியாகும்னு யாருக்கும் தெரியல. இந்த நேரத்துல எல்லோரும் பாசிட்டிவா இருக்கணும்னு நினைக்குறேன்.’’

‘`நீங்க பயங்கரமா ட்ராவல் பண்ற ஆள். நண்பர்களை ரொம்பவே மிஸ் பண்ணுவீங்களே?’’

‘`ஆமாம். என் ஃபிரெண்ட்ஸ் நிறைய பேர் அமெரிக்காவில இருக்காங்க. அவங்க கூட வீடியோ கால் மூலமா இரவு நேரத்துல ரெக்கார்ட்டிங் செக்‌ஷன் போகும். நாங்க எல்லாரும் சேர்ந்து ட்யூன் போடுறது, பாடல் வரிகள் எழுதுறதுன்னு பிஸிதான். நள்ளிரவு மூணு மணி வரைக்கும் இதுலயே போயிரும். மியூசிக் புரொடியூசரும் எங்க சாட்ல இருப்பார். நிறைய பேசுவோம். டிஸ்கஷன் நடக்கும். அமெரிக்காவுல இருக்குற ஃபிரெண்ட்ஸும் கொரோனாவால ரொம்ப கஷ்டப்படுறாங்க. இப்ப நியூ யார்க்ல இருக்கிற என்னோட ஸ்கூல் ஃபிரெண்ட் ஒருத்தி கர்ப்பமா இருக்கா. ரொம்ப பயமா இருக்கு. அவளுக்கு நல்லபடியா பிரசவம் நடக்கணும். அதே மாதிரி சினிமால என்னோட க்ளோஸ் ஃபிரெண்ட் தமன்னா. மும்பைல, என் வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும் ரெண்டு தெருதான் இடைவெளி. இருந்தும் நாங்க மீட் பண்ணமுடியல. டெக்னாலஜி வசதிகள் இப்போ எல்லார்கிட்டயும் இருக்குறதனால அதிகமா யாரையும் மிஸ் பண்ற மாதிரி தெரியல. ஆனா, திரும்பவும் எப்போ வேலைக்குப் போவேன்னு இருக்கு. எனக்குத் தேவையான எல்லா சந்தோஷத்தையும் வேலைதான் கொடுக்கும்.’’

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

‘`சமீபத்துல பார்த்த சினிமா?’’

‘`லாக்டௌன் தொடங்குறதுக்கு முன்னாடில இருந்தே எனக்கு வெப்சீரிஸ் பார்க்குற பழக்கம் இருக்கு. ஏற்கெனவே வந்த சீரிஸ்லாம் பார்த்து முடிச்சிட்டேன். சமீபத்துல ‘violet’னு மலையாளப் படம் பார்த்தேன். நல்லாருந்தது. இப்போ, ஜியோகிராஃபி டாக்குமென்ட்ரீஸ் நிறைய பார்த்துட்டிருக்கேன்.’’

‘`உங்களை, நீங்களே குவாரன்டைன் பண்ணிக்கிட்டீங்கன்னு கேள்விப்பட்டோமே?’’

‘`ஆமாம்... நான் வெளிநாட்ல இருந்து வந்திருந்ததனால என்னை நானே தனிமைப்படுத்திக்கிட்டேன். மும்பை கார்ப்பரேஷன்ல இருந்து வந்து என்னை செக் பண்ணுனாங்க. ஸ்டாம்ப் போட்டுட்டுப் போனாங்க. எல்லாமே முறையா பண்ணுனாங்க. அக்‌ஷராவும் சென்னை வீட்டுல தனியாதான் இருக்கா. அப்பாவும்கூட. அம்மா மும்பைல அவங்க வீட்ல இருக்காங்க. எல்லார்கூடவும் தொடர்புல இருக்கேன். தினமும் போன்ல பேசிட்டிருக்கோம்.’’

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

‘`கொரோனா விவகாரத்தில் பிரதமரின் செயல்பாடுகளை விமர்சித்து கமல்ஹாசன் எழுதியிருந்ததைப் படிச்சீங்களா... உங்க கருத்து என்ன?’’

‘`ஒரு முக்கியமான விஷயத்துக்காக அப்பா அவரோட குரலை உயர்த்திப்பேசியிருக்கார். ஆனா, அப்பா மாதிரியே என்னால குரலை உயர்த்திப்பேச முடியாது. ஏன்னா, இதைப் பற்றிய அறிவு இன்னும் எனக்கு வரலைன்னு நினைக்கிறேன். மக்களைப் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. எனக்குன்னு வீடு இருக்கு. சாப்பாடு கிடைக்குது. ஆனா, நிறைய பேர் பாலத்துக்கு அடியில் படுத்திருக்காங்க. சாப்பாடு இல்லாம கஷ்டப்படுறாங்க. ஊருக்குப் போக ட்ரெயின் இல்லாம அவஸ்தைப்படுறாங்க. மும்பையில எத்தனையோ மக்களை இப்படிப் பார்க்க முடியுது. இப்படிப்பட்ட சூழல்ல இந்த மக்களுக்காக அப்பா பேசுனது, கேள்வி கேட்டது ரொம்ப சந்தோஷம். பெருமையா நினைக்குறேன். இவங்களுக்கு நம்பிக்கையான வார்த்தைகளை மட்டும் நாம சொல்ல முடியாது. எந்த அளவுக்கு என்னால இவங்களுக்குப் பணம் உதவி செய்ய முடியுமோ அதைப் பண்ணிட்டு வரேன். ஆன்லைன்ல சிலருக்குப் பணம் அனுப்பி வெச்சிருக்கேன்.’’

‘`சமீபத்தில் நீங்க பாடி வெளியிட்ட ‘தென்பாண்டி சீமையில’ பாட்டுக்கு வந்த கமென்ட்ஸ் பற்றி?’’

‘` ‘தென்பாண்டி சீமையில’ பாட்டு எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும். ரொம்ப வருஷமா இந்தப் பாட்டை நண்பர்கள் இருக்குறப்போ வாசிப்பேன். அவங்க, ‘இதை இன்ஸ்டால போஸ்ட் பண்ணு’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ஆனா, வெளியே இருக்குற நிறைய பேருக்கு, இப்படிப் பண்ணுனா பிடிக்காதுன்னு தெரியும். ஏன்னா, இந்தி அல்லது தமிழ்ப்பாட்டை இப்படிப் பாடுனா திட்டி நிறைய கமென்ட்ஸ் வரும். அதனால எந்த சோஷியல் மீடியாவுலயும் போஸ்ட் பண்ணாம இருந்தேன். ஆனா, இப்போ ‘நமக்குப் பிடிச்ச விஷயத்தைப் பண்ணியிருக்கோம். அதை ஷேர் பண்ணுனா என்ன தப்பு’ன்னு தோணுச்சு. போஸ்ட் பண்ணிட்டேன்.’’

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

‘`சின்ன வயசுல இருந்தே சினிமாவுல இருக்கீங்க. எப்படிப்பட்ட அனுபவத்தை சினிமா உங்களுக்குக் கொடுத்திருக்கிறதா நினைக்கிறீங்க?’’

‘`வாழ்க்கைல நடக்குற ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவமா எடுத்துப்பேன். சில விஷயங்கள் சரியா பண்ணியிருப்பேன். சில விஷயங்கள் தப்பா பண்ணியிருப்பேன். நடுவுல, ஒரு சின்ன இடைவெளி எடுத்துட்டு திரும்ப சினிமாவுக்கு வந்தேன். இந்த பிரேக் எனக்கு ரொம்ப உதவியா இருந்திருக்கு. எந்த விஷயத்தையும் வேறொரு பாசிட்டிவ் கண்ணோட்டத்தில் பார்க்கச் சொல்லிக் கொடுத்திருக்கு. இப்ப, தமிழில் ‘லாபம்’ பண்ணிட்டு இருக்கேன். நல்ல டீம். இந்த யூனிட்ல தினமும் ஏதாவதொரு விஷயத்தைப் புதுசா கத்துக்குறேன். நிறைய இளம் இயக்குநர்களோடு இன்னும் வேலை பார்க்கல. இதெல்லாம் பண்ணணும். சீக்கிரம் வித்தியாசமான கதைகளில் நடிக்கணும்.’’