Published:Updated:

``இவரை மட்டும் இன்னொருமுறை நான் பேட்டி எடுக்கவே கூடாது!" டிடியின் டெரர் அனுபவம்

திவ்யதர்ஷினி
திவ்யதர்ஷினி

20 வருடங்களைக் கடந்து தன்னுடைய ஆங்கரிங் பாதையில் வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறார் டிடி. அவருடன் ஒரு சின்ன சாட்...!

``டி.வி ஆங்கரிங்ல உங்களைப் பார்த்து நிறைய பேர் இன்ஸ்பையர் ஆகியிருக்காங்க. நீங்க இன்ஸ்பையர் ஆன டி.வி ஆங்கர்னா யாரைச் சொல்வீங்க?"

``எனக்கு எல்லா டி.வி ஆங்கரும் ஒவ்வொரு வகையில இன்ஸ்பிரேஷன்தான். காரணம், ஏதாவது ஒண்ணு அவங்ககிட்ட ஸ்பெஷலா இருக்கும். அது என்னனு தெரிஞ்சிக்கிறதுல எனக்கு ஆர்வம் அதிகம். எங்க அக்கா ஆங்கரிங் பண்ணிட்டிருந்த சமயத்துல ஜேம்ஸ் வசந்தன் சார், உமா பத்மநாபன் மேம், பெப்சி உமா, ஷாகுல் ஹமீத் சார்னு எல்லோரும் பெஸ்ட்டான ஆங்கரா இருந்தவங்க. அவங்ககிட்டலாம் எங்க அக்கா மூலமா க்ளோஸா பேசுற வாய்ப்பு கிடைச்சது. ஸோ, அவங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்கள் இன்ஸ்பையர் ஆகியிருக்கேன்.''

இனிமேல் இன்டர்வியூ பண்ணவே கூடாதுனு நினைக்கிற பிரபலம், இன்னொரு முறை இன்டர்வியூ பண்ணலாம்னு நினைக்கிற பிரபலம் யார்?

``இன்னொரு முறை பண்ணணும்னு நினைக்கிற பிரபலங்கள் நிறைய பேர் இருக்காங்க. சில பர்சனல் காரணங்களை வெச்சு சொல்லணும்னா ஏ.ஆர்.ரஹ்மான் சாரைச் சொல்வேன். ஏன்னா, ஒரு நாள் கூட நான் ரஹ்மான் சார் பாடல்களைக் கேட்காம இருந்ததே இல்லை. அதனால கண்டிப்பா ரஹ்மான் சாரை இன்னொரு முறை இன்டர்வியூ பண்ணணும். இனிமேல் இவரை இன்டர்வியூ பண்ணவே கூடாதுனு சொல்றதுக்குப் பெருசா காரணம் இல்லை. ஆனா, ஒரு முறை மிஷ்கின் சாரை இன்டர்வியூ பண்ணும்போது ரொம்பவே கஷ்டப்பட்டேன். பேசுறப்போ நல்லா பேசுவார். ஆனா, கேள்வி கேட்கும்போது ரொம்ப சீரியஸா பார்ப்பார். எனக்கு என்ன ரியாக்‌ஷன் கொடுக்கிறதுன்னே தெரியாது. இந்தக் காரணத்துக்காக இன்டர்வியூ பண்ணக்கூடாதுங்கிற லிஸ்ட்டுல அவரை வைக்கலாம். ஒருவேளை மிஷ்கின் சார் அன்னைக்கு என்கிட்ட கம்ப்ஃபர்ட்டபிளா இல்லைனு நினைக்கிறேன். ''

டிடி
டிடி
Vikatan

``ரஜினி - கமல்னு ரெண்டு பேரு கலந்துகிட்ட நிகழ்ச்சியை நீங்க தொகுத்து வழங்கியிருக்கீங்க. அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்க?"

``என் வாழ்க்கையில அந்தத் தருணத்தை மறக்கவே முடியாது. ஒரு ரூம்ல ரஜினி சார், கமல் சாரோடு சேர்த்து நிறைய பேர் உட்கார்ந்திருந்தாங்க. நிகழ்ச்சிக்காக அங்க இருந்தவங்க எல்லார்கிட்டயும் கேள்வி கேட்டுட்டு இருந்தேன். ரஜினி சார்கிட்ட கேட்கும்போது `நான் ஸ்டேஜ்ல பேசிக்கிறேன்மா'னு சொல்லிட்டார். அப்புறம் கமல் சார் கிட்ட ரொம்ப நாள் கேட்கணும்னு நினைச்ச கேள்வியைக் கேட்டேன். ரொம்பவே யோசிக்க வைக்கிற ஒரு பதில் சொன்னார். ரஜினி சார் அதைக் கேட்டதும் பயங்கரமா சிரிச்சார். இப்படி கமல் சார்கிட்ட பேசும்போது வாழ்க்கைக்குத் தேவையானது ஏதாவது ஒண்ணு கிடைக்கும். அதை நம்ம வாழ்க்கையில எப்போ வேணாலும் அப்ளை பண்ணிக்கலாம். ''

``டாக்பேக் பரிதாபங்கள் பத்திச் சொல்லுங்க?"

``டாக்பேக் இல்லாத காலத்துல இருந்தே நான் ஆங்கரிங் பண்றேன். ஜோடி, சூப்பர் சிங்கர்னு இப்போதான் டாக்பேக் நிறைய யூஸ் பண்றாங்க. முன்னாடிலாம் ஷோ டைரக்டர்ட பேசிட்டு சின்னதா ஒரு ப்ரிப்பரேஷன் இருக்கணும், அவ்வளவுதான். நானும் ஸ்டேஜ் ஏறுறதுக்கு முன்னாடி இதெல்லாம் கேட்கணும்னு பிளான் பண்ணிடுவேன். இப்போ வரைக்கும் நான் பிளான் பண்ணி வெச்சிருந்த எல்லாத்தையும் கேட்டு முடிச்சிட்டுதான் ஸ்டேஜை விட்டு இறங்குவேன். விருது நிகழ்ச்சியில ஆரம்பிச்சு எந்த நிகழ்ச்சியா இருந்தாலும் டாக்பேக்கை ரொம்ப அவசரமா இருந்தா மட்டும்தான் யூஸ் பண்ணுவேன். மத்தபடி என்னுடைய ஸ்க்ரிப்ட், அது என்னுடையதா மட்டும்தான் இருக்கணும். சமீபத்துல ஒரு விருது விழாவுக்குக்கூட கெஸ்ட்டாதான் போயிருந்தேன். திடீர்னு மேடையேறி தொகுத்து வழங்கச் சொன்னாங்க. அப்படியே ஃப்ளோல பண்ணி முடிச்சிட்டேன். இப்படித்தான் எந்த நிகழ்ச்சியா இருந்தாலும் இருப்பேன். இந்த மாதிரி நிகழ்வுல எடுத்துகிட்ட ஒரு செல்ஃபியை மட்டும் என்னால மறக்கவே முடியாது. ஆனா, அந்த செல்ஃபி எடுக்க பட்ட கஷ்டம் என்னோட சேர்த்து ஷாரூக் சாருக்கு மட்டும்தான் தெரியும். ஷங்கர் சார், ரஹ்மான் சார், கமல் சார், சூர்யா சார், விஜய் சார், ஷாரூக் சார்னு நிறைய ஜாம்பவான்கள் அங்க இருந்தாங்க. ஷங்கர் சாருக்கு போட்டோ எடுக்குறதே பிடிக்காது, இதுல எங்க இருந்து நான் போய் செல்ஃபி எடுக்கக் கேட்குறதுனு ஸ்டேஜ்லே தயங்கிக்கிட்டு இருந்தேன். அப்போ ஷாரூக் சார்கிட்ட, ``சார் ஒரு செல்ஃபி எடுக்க ஹெல்ப் பண்றீங்களா''னு கேட்டேன். ``ஓகே பேட்டா கமான்''னு சொல்லி அவர்தான் எல்லோரையும் அழைச்சிட்டு வந்தார், செல்ஃபி எடுத்துக்கிட்டோம். அந்த மொமன்ட்தான் என்னுடைய வாழ்க்கையில பெஸ்ட்..''

டிடி
டிடி

`` `விசில்', `நளதமயந்தி' போன்ற படங்களுக்கு அப்புறம் `பவர் பாண்டியி'லதான் டிடியைப் பார்க்க முடிஞ்சது. வெள்ளித்திரையில டிடிக்கு இன்ட்ரெஸ்ட் இல்லையா?"

``அப்படியெல்லாம் இல்லைங்க. யாரும் என்னைக் கூப்பிடலை அதனால போகலை. நானும் ஆங்கரிங்ல ரொம்ப பிஸியா இருந்ததால நடிப்பு பக்கம் எட்டிப் பார்க்க ட்ரை பண்ணலை. `பவர் பாண்டி' சமயம் தனுஷ் சார் போன் பண்ணி, `ஒரு நல்ல ரோல் இருக்குடா. ஷூட் வர்றீங்களா'னு கேட்டார். `என்னை நடிக்க வைக்கிறதுல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா சார்'னு கேட்டேன். `எனக்கு இருக்குடா. நீ வர்றியா இல்லையானு மட்டும் சொல்லு'னு சொன்னார். வர்றேன்னு சொல்லிட்டேன். என்னுடைய போர்ஷன் ரொம்பவே கம்மிதான். ஆனா, அவ்வளவு அழகா இருந்தது. என் மனசுக்கும் ரொம்ப நெருக்கமான கதாபாத்திரமா அமைஞ்சது.''

``நம்ம ஊர்ல காஃபி வித் ஷோவை சில பேர் தொகுத்து வழங்கினாலும் காஃபி வித் டிடினு டிரேட்மார்க் அமைய என்ன காரணம்?"

``அந்த ஷோவைப் பண்றதுக்கு முன்னாடி நானும் நிறைய முறை யோசிச்சேன். `நீ பண்ணு. செட்டாச்சுன்னா பார்ப்போம், இல்லைனா விட்டுடலாம்'னு டிவி பாஸ்ல இருந்து நிறைய பேர் சொன்னாங்க. எனக்கு முன்னாடி அனு மேம், சுச்சினு ரெண்டு பேரும் சினிமா துறையில கனெக்ட்ல இருக்க ஆளுங்கதான் பண்ணாங்க. `அவங்க பண்ண ஷோவை நம்ம கரெக்ட்டா பண்ணிட முடியுமா'னு எனக்கு யோசனையா இருந்தது. நேஷனல் லெவல்லேயும் அது ரொம்ப ஹிட்டான ஷோ. இப்படிப் பல குழப்பங்களைக் கடந்துதான் அந்த ஷோவைப் பண்ணேன். நயன்தாராதான் நான் தொகுத்து வழங்கின ஷோவுடைய முதல் விருந்தினர். அது மட்டுமல்ல. இப்போ அவங்களுக்கு இருக்கிற `லேடி சூப்பர் ஸ்டார்' பட்டத்தை நான்தான் அந்த ஷோவுல முதல் முறையா சொன்னேன். சமீபத்துலகூட அவங்களுடைய பிறந்தநாள் பார்ட்டிக்குப் போயிருந்தேன். `நீதானே முதல் தடவை என்னை லேடி சூப்பர் ஸ்டார்னு கூப்பிட்ட'னு சொன்னாங்க. ரொம்ப நெகிழ்ச்சியாகிடுச்சு. இப்படியெல்லாம் ஆரம்பிச்சதுதான் அந்த ஷோ. அதே மாதிரி சின்மயி தொகுத்து வழங்கின சூப்பர் சிங்கர் ஷோவை என்னை ஆங்கர் பண்ணச் சொன்னாங்க. அவங்க சிங்கர்... அதனால அவங்க பண்ணாங்க. எனக்குப் பாடல்கள் பத்தி என்ன தெரியும். சரி ஒருவேளை பண்ணா அதுக்கு நம்ம சார்பா எவ்வளவு நியாயம் சேர்க்க முடியும்னு என்னை நானே கேள்வி கேட்டுக்கிட்டேன். இப்படிப் பல கேள்விகளை எனக்கு நானே கேட்டுக்கிட்டுதான் ஒரு ஷோவைத் தொகுத்து வழங்குவேன்'' என்கிறார் டிடி.

அடுத்த கட்டுரைக்கு