சினிமா
தொடர்கள்
Published:Updated:

“முத்தம் வேண்டாம்னு போராடினேன்!”

ஆரவ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரவ்

“ஹீரோவா பண்ற முதல் படமே ஆக்‌ஷன்தான்.

க்‌ஷனுக்காகவே இந்தக் கதைக்கு ஓகே சொன்னேன். படத்துக்காக நிறைய பயிற்சி எடுத்துக்கிட்டு டூப் போடாம நடிச்சிருக்கேன்!” என்கிறார், ஆரவ். இவரது நடிப்பில் இந்த வருடம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘ராஜபீமா’ ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸுக்காகக் காத்திருக்கின்றன.

“ ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு உங்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்திருக்கும். சரணின் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?”

‘`நிறைய கதைகள் வந்தது. அதுல பல நல்ல கதைகளும் இருந்தது. ஆனா, அதையெல்லாம் திரைக்கதையா எப்படிக் கொண்டு வருவாங்கன்னு எனக்கு சந்தேகம். அப்போதான் சரண் சாரோட ஸ்க்ரிப்ட் என்கிட்ட வந்தது. அவரோட திரைக்கதை எப்படியிருக்கும்னு எல்லோருக்கும் தெரியும். நானும் அவருடைய படங்களைப் பார்த்து வளர்ந்த பையன். தவிர, இந்தப் படத்தோட கதையைக் கேட்கும்போதே வேற லெவலில் இருந்தது. ‘ஜெமினி’ போல முழுக்க முழுக்க சிரிக்கிற மாதிரி ஒரு ஜாலியான கதை. என்கவுன்டர் லிஸ்ட்டுல இருக்கிற சென்னை ‘டான்’ கேரக்டர்ல நடிச்சிருக்கேன். யாருக்கும் வராத ஒரு பிரச்னை, ஒரு டானுக்கு வர்றப்போ அவன் என்ன செய்யறான்ங்கிறதுதான் கதை. ‘மார்க்கெட் ராஜா’தான் படத்துல என் பெயர். ‘எம்.பி.பி.எஸ்’ ஏன்னு படம் பார்க்கிறப்போ புரியும்.’’

“சீனியர் நடிகை ராதிகாவுடன் நடிச்ச அனுபவம்?”

‘`படத்துல என் அம்மா ‘சுந்தரி பாய்’ கேரக்டர்ல நடிச்சிருக்காங்க ராதிகா மேடம். ஒரு ரியல் ‘லேடி டான்’ கேரக்டரா வர்றாங்க. ஒரு சீன் கொடுத்தா, அதை எப்படி வித்தியாசமா பண்ணலாம்னு யோசிக்கிற சின்சியர் நடிகை. வழக்கமான அம்மா, பையன் கேரக்டர்களா இந்தப் படத்துல நானும் அவங்களும் இல்லை.”

 “முத்தம் வேண்டாம்னு போராடினேன்!”

“டீஸர்ல முத்தக்காட்சி இருந்ததே?”

“ஒரே ஒரு முத்தக்காட்சி படத்துல இருக்கு. சரண் சார் அந்தக் காட்சியைச் சொன்னப்போ, பழைய படங்கள்ல வர்ற மாதிரி பூவைக் காட்டி எடுத்திடுவார்னு நினைச்சேன். ஆனா, அவர் நான் சொல்றதைக் கேட்கிறமாதிரி இல்லை. சரின்னு, ஹீரோயின்கிட்ட ‘நீங்களே இந்தக் காட்சி வேண்டாம்னு சொல்லிடுங்க’ன்னு கேட்டுக்கிட்டேன். ஆனா, அதுவும் வொர்க் அவுட் ஆகல. வேற வழியில்லாம அந்த முத்தக் காட்சியில நடிச்சேன். ரெண்டாவது டேக்ல அந்தக் காட்சி ஓகே ஆகிடுச்சு.”

“ ‘ராஜபீமா’ படத்துல என்ன கேரக்டர்?”

“அறிமுக இயக்குநர் நரேஷ் சம்பத் படத்தை இயக்கியிருக்கார். அமைதியான பொள்ளாச்சிப் பையனா நான் இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். என் கேரக்டர் பெயர் ராஜா, யானையின் பெயர், பீமா. அந்த யானை படத்துல எனக்குத் தம்பி மாதிரி. யானைகூட நடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல சமயத்துல அதுக்கு மதம் பிடிக்கும். யானை மேல உட்கார்ந்திருந்தப்போ, அது கத்திக்கிட்டு ஓட ஆரம்பிச்சிருக்கு. முக்கியமான கேரக்டர்ல கே.எஸ்.ரவிகுமார் சார், எங்க அப்பாவா நாசர் சார் இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க.”

“ஓவியாகூட இன்னும் தொடர்பில் இருக்கீங்களா?”

‘`பேசிக்கிட்டிருக்கேன். ரெண்டுபேரும் நல்ல நண்பர்களா இருக்கோம். என் பிறந்தநாளுக்கு ஓவியாவும், அவங்க பிறந்தநாளுக்கு நானும்னு ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுக்கிட்டோம். லிவிங் டுகெதர், காதல்னு எங்களுக்குள்ள எதுவும் இல்லை. அப்படி எங்களுக்குள்ள ஏதாவது இருந்தா, நிச்சயம் சொல்வோம்.”

“உங்க ‘பிக் பாஸ் மேட்’ ஹரீஷ் கல்யாண் ஹிட் படங்கள் கொடுக்கிறார்... அது பற்றி?”

“ஹரீஸ் நல்ல நண்பர். அவருடைய ரெண்டு படங்களையும் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. மத்தவங்கதான் எங்க ரெண்டுபேரையும் போட்டியாளர்களா நினைச்சுக்கிட்டிருக்காங்க. நாங்க அப்படி இல்லை. ரொம்பக் கஷ்டப்பட்டு உழைக்கிறார்; அவரை நினைச்சு நான் ரொம்பவே சந்தோஷப்படுறேன்.”