கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

சினிமா விகடன்: "படத்தில் எல்லாப் பாட்டுமே கானாப் பாட்டுதான்!"

பாரிஸ் ஜெயராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
பாரிஸ் ஜெயராஜ்

‘A1’ படத்திற்குப் பிறகு மீண்டும் சந்தானத்தோடு இணைந்திருக்கும் இயக்குநர் ஜான்சன்.கே.

`` ‘பாரிஸ் ஜெயராஜ்’ பட ஷூட்டிங்கை ஆரம்பிச்ச ரெண்டாவது நாள் லாக் டெளனும் ஆரம்பமாகிடுச்சு. மறுபடியும் எப்போ ஷூட்டிங் போவோம்னு ஆறு மாசமா காத்திட்டிருந்தோம். ஷூட்டிங் ஆரம்பிக்கலாம்னு சொன்னதும் உடனே ஆரம்பிச்சு, பிரேக்கே இல்லாமல் முழுப்படத்தையும் எடுத்து முடிச்சிட்டோம். ஜனவரிக்கு அப்புறம் படத்தை ரிலீஸ் பண்ணலாம்கிறதுதான் ஐடியா...” - என பக்கா பிளானோடு பேச ஆரம்பித்தார், ‘A1’ படத்திற்குப் பிறகு மீண்டும் சந்தானத்தோடு இணைந்திருக்கும் இயக்குநர் ஜான்சன்.கே.

சினிமா விகடன்: "படத்தில் எல்லாப் பாட்டுமே கானாப் பாட்டுதான்!"

`` ‘பாரிஸ் ஜெயராஜ்’ - பெயரைக் கேட்டதுமே இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான் ஞாபகத்துக்கு வருகிறார். படத்துக்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்கா?’’

``படத்தோட பெயரைக் கேட்டதும் கேட்சிங்கா இருக்கணும்னு யோசிச்சப்போ, `பாரிஸ் ஜெயராஜ்’னு வைக்கலாம்னு தோணுச்சு. உடனே அதை ஹாரிஸ் ஜெயராஜ் சார்கிட்டேயும் சொல்லிட்டோம். அவரும் அதுக்கு ஒண்ணும் சொல்லலை. ஏன்னா, படத்தில் அவரைக் கலாய்க்கிற மாதிரியெல்லாம் எதுவுமே பண்ணலை. பாரிஸ் ஏரியாவில் இருக்கிற கானாப் பாடகர் ஜெயராஜ்தான் படத்தோட ஹீரோ. அவரை எல்லாரும் பாரிஸ் ஜெயராஜ்னு கூப்பிடுவாங்க; அவ்வளவுதான்.”

சினிமா விகடன்: "படத்தில் எல்லாப் பாட்டுமே கானாப் பாட்டுதான்!"

`` ‘A1’ படத்திற்குப் பிறகு மீண்டும் சந்தானத்தோடு இன்னொரு படம்; அமைந்தது எப்படி?’’

`` ‘A1’ படம் முடிஞ்சதுக்கு அப்புறம் நானும் சந்தானம் சாரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்னு பேசிக்கிட்டோம். ஆனால், அதை அடுத்த படமாகவே பண்ணணும்னு நாங்க முதலில் நினைக்கலை. ‘A1’ படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்ததும், ரெண்டாவது படத்தை உடனே ஆரம்பிக்கலாம்னு சந்தானம் சார் தயாரிப்புல இந்தப் படத்தை ஆரம்பிச்சோம். அந்தச் சமயத்தில்தான் ‘லார்க் ஸ்டூடியோஸ்’ வந்தாங்க. `உங்ககிட்ட கதை இல்லைன்னாலும் பரவாயில்லை; முதலில் கமிட் பண்ணிக்கலாம், அப்புறமா கதையை எழுதிக்கோங்க’ன்னு சொல்லி படத்தை கமிட் பண்ணினாங்க. முதல் படம் காமெடி ஜானர்ல பண்ணிட்டோம்; அடுத்த படத்தை வேற ஜானரில் பண்ணலாம்னு முடிவு பண்ணி, மலேசியாவில் நடக்கிற கேங்ஸ்டர் கதை ஒண்ணை எழுதினோம். அந்தப் படத்துக்கு `அண்ணாத்த’ன்னு டைட்டில் வெச்சிருந்தோம். கதையெல்லாம் ஓகே ஆனதும், படத்தோட தலைப்பைப் பதிவு பண்ணலாம்னு போனப்போ, `சமீபத்தில்தான் இயக்குநர் சிவா இந்த டைட்டிலைப் பதிவு பண்ணினார்’னு சொன்னாங்க. அதுக்கப்பறம் படத்தோட பெயரை மாத்தலாம்னு முடிவு பண்ணி, கடைசியில படத்தோட கதையையே மாத்திட்டோம். கதையை மாத்துறது எங்க காம்போவில் புதுசு இல்லை. ஏன்னா, ‘A1’ படக்கதையை சந்தானம் சார்கிட்ட 2016-ம் ஆண்டில் சொன்னேன். ஆனால், படம் எடுத்தது 2019-ம் ஆண்டு. 2016-ல நான் சொன்ன கதையை 2019-ல படமாக எடுத்தப்போ, படத்தோட இரண்டாம் பாதியை மாத்தலாம்னு முடிவு பண்ணி ரெண்டே நாளில் அதை எழுதினோம். அதே மாதிரிதான் இந்தப் படத்திலும் நடந்துச்சு. நாங்க ரெண்டு பேருமே கொஞ்சம் கலாய் கேரக்டரா இருக்கிறதால, எங்களுக்குள்ளேயும் கெமிஸ்ட்ரி செட்டாகிடுச்சு. அதனால, அவருக்காகக் கதை எழுதணும்னு உட்கார்ந்தா டக்குனு முடிச்சிடுவேன். ‘A1’ படத்தோட கதையை ’தில்லுக்கு துட்டு’ சமயத்தில் சந்தானம் சார்கிட்ட சொன்னபோதே, ‘இப்போ நான் கமிட் பண்ணி வெச்சிருக்கிற படங்களை முடிச்சிட்டு, இந்தப் படத்தைப் பண்ணலாம். அதுவரைக்கும் என் டீம்ல வொர்க் பண்றீங்களா?’ன்னு கேட்டார். அப்போ அவர் என் மேல வெச்ச நம்பிக்கையில் கொஞ்சம்கூட குறையாமல் இப்போவரைக்கும் அதைக் காப்பாத்திட்டு இருக்கேன்னு நம்புறேன்.”

சினிமா விகடன்: "படத்தில் எல்லாப் பாட்டுமே கானாப் பாட்டுதான்!"

`` ‘பாரிஸ் ஜெயராஜ்’, சந்தானத்தோட கரியரில் எப்படிப்பட்ட படமாக இருக்கும்?’’

``சினிமாவையே புரட்டிப் போடுற மாதிரியான படத்தை நாங்க எடுத்திருக்கோம்னு சொல்லப்போறது இல்லை. படத்தைப் பார்க்கிற ஆடியன்ஸ் ஜாலியா என்ஜாய் பண்ணிப் பார்க்கணும். இதிலும் ஆக்‌ஷன் இருக்கு; ஆனால், அந்த ஆக்‌ஷனுக்கான நியாயமும் இருக்கும். சந்தானம் சாரைப் பொறுத்தவரைக்கும் அவருக்கு ஆக்‌ஷன் படங்களில் நடிக்கணும்னு ஆசை இருக்கு. ஆனால், ‘சந்தானம் படத்தில் காமெடி அதிகமா இருக்கணும்’னுதான் மக்கள் நினைக்கிறாங்க. அவர் ஹீரோவாக நடிச்ச சில படங்கள் சரியாகப் போகாததற்கு என்ன காரணம்னா, அவர் நடிச்ச ஆக்‌ஷன் படங்களில் காமெடி கொஞ்சம் கம்மியா இருந்திருக்கும். அதனால இப்போ தன்னோட ரூட்டை மாத்தியிருக்கார்.”

``படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள்...?’’

‘‘ ‘காவியத் தலைவன்’ படத்தில் ஹீரோயினா நடிச்சிருந்த அனைகாவும் `சன் மியூசிக்’ சேனலில் வி.ஜே-வாக இருக்கிற சஷ்டிகாவும் இதில் ஹீரோயினா நடிச்சிருக்காங்க. சந்தானம் படத்தில் `லொள்ளு சபா’ டீம் ஆள்கள்தான் அதிகமா இருப்பாங்கன்னு ஒரு பேச்சு இருக்கு. அதனால, இந்தப் படத்தில் முழுசாகவே புது ஆள்களை நடிக்க வெச்சிருக்கேன். நான் வடசென்னையில பிறந்து வளர்ந்தவன்கிறதனால என் ஏரியாவில் கானா பாடுற பசங்களையும் இதில் நடிக்க வெச்சிருக்கேன்.”

சினிமா விகடன்: "படத்தில் எல்லாப் பாட்டுமே கானாப் பாட்டுதான்!"

`` ‘A1’ படத்தில் பாடல்களும் பேசப்பட்டன; இதில் சந்தோஷ் நாராயணன் எப்படிப் பண்ணியிருக்கிறார்?’’

``எனக்கும் சந்தானம் சாருக்கும் எப்படி ஒரு கெமிஸ்ட்ரி செட்டாச்சோ, அதே மாதிரிதான் சந்தோஷ் நாராயணனுக்கும் எனக்கும் செமையா செட்டாகிடுச்சு. தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் ஒரு படத்தின் எல்லாப் பாட்டுமே கானாப் பாட்டாஇருந்திருக்கான்னு தெரியலை; ஆனா, இந்தப் படத்தில் எல்லாப் பாட்டுமே கானாதான்.”

சினிமா விகடன்: "படத்தில் எல்லாப் பாட்டுமே கானாப் பாட்டுதான்!"

``பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் அவர்களது படங்களில் பேசும் ஜாதி அரசியலைத்தான், இயக்குநர் ஜான்சனும் ‘A1’ படத்தில் சொல்லியிருக்கார். ஆனால், அதை ஜாலியாகச் சொல்லியிருக்கார்’ என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உங்களைப் பற்றி சில பேட்டிகளில் சொல்லி யிருக்கிறார். அவருடைய இந்தப் பாராட்டை எப்படிப் பார்க்கிறீங்க..?’’

‘‘நாம சொல்லணும்னு நினைக்கிற கருத்தை படத்தில் நேரடியா சொல்லாம, ஜாலியா சொல்லும்போது, யாராலும் நம்மைக் கேள்வியே கேட்க முடியாது. ‘A1’ படம் முழுக்க சந்தோஷ் நாராயணன் என்கூடவே ட்ராவல் பண்ணுனதால, அந்தப் படத்தில் நான் சொல்லியிருந்த கருத்து அவருக்குத் தெரிஞ்சிருக்கு. ஆனால், அந்தக் கருத்து மக்களுக்கு சரியா போய்ச் சேரலைன்னும் தோணுது. அந்தப் படத்தில், ‘தப்பே செய்யாமல் இருந்தால் அது கடவுள்; தப்பு செய்றவன்தான் மனுஷன். அந்தத் தப்பை நாம திருத்திக்கணும்’னு சொல்லியிருப்பேன். ஏன்னா, இங்க வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு நம்பிட்டு இருக்காங்க. எல்லாருக்குள்ளும் குறைகள் இருக்கு. இதை ‘A1’ படத்தில் காமெடியா சொல்லவேண்டி இருந்ததனால, காமெடியா சொன்னேன். அடுத்தடுத்த படங்களிலும் அதையே பண்ணுவேன்னு சொல்ல முடியாது.

நான் வடசென்னைக்காரனா இருக்கிறதனால, தமிழ் சினிமாவில் வடசென்னையைக் காட்சிப்படுத்துற முறையை மாற்றணும்னு நினைக்கிறேன். அதை என்னால காமெடியா சொல்ல முடியாது. ஏன்னா, வடசென்னையில கால்பந்து, குத்துச்சண்டை, கேரம் போர்டுன்னு எல்லா விளையாட்டுகளையும் நல்லா விளையாடக்கூடிய ஆசிய லெவல் பிளேயர்ஸ் இருக்காங்க; டாக்டர்ஸ் இருக்காங்க. அவங்களைப் பற்றியெல்லாம் படம் எடுக்காமல், அங்க இருக்கிற கேங்ஸ்டர்களை வெச்சு மட்டுமே படம் எடுக்கிறாங்க; அதுதான் ஏன்னு தெரியலை. நான் வளரும்போது வடசென்னையில் பார்த்ததையெல்லாம் வெச்சுப் படம் எடுக்கலாம்கிற ஐடியாவும் எனக்கு இருக்கு.”